kuthoosi gurusamyதிருப்பதியை ஆந்திர மாகாணத்தின் தலைநகராக வைத்துக் கொள்ள வேண்டமென்று ஆந்திரத் தலைவர்கள் கேட்கிறார்கள். தமிழ்நாட்டுத் தலைவர்களோ, “திருப்பதி” என்ற பெயர் உட்பட, எத்தனையோ ஆதாரங்களைக் காட்டி திருப்பதி தமிழ் மகாணத்தைச் சேர்ந்ததே என்று வாதாடுகிறார்கள். ஆந்திரர்களோ “அந்தப் பழங்கதையெல்லாம் எங்களுக்கு வேண்டாம்! திருப்பதியில் உள்ள தெலுங்கர் எத்தனை பேர் - தமிழர் எத்தனை பேர் - என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்கிறார்கள்.

இந்தச் சச்சரவு முற்றிக் கொண்டே போனால், ஆந்திரர் சென்னை நகரத்தைப் பற்றிக் கூறுவதுபோல, “இரண்டு பேருக்கும் பொதுவாக திருப்பதியைத் தனி கமிஷனர் மாகாணமாக ஆக்கி விடுங்கள்” என்று தமிழர்கள் சொன்னாலும் சொல்லி விடுவார்கள்! அல்லது ஆறு மாதத்துக்குத் தெலுங்கரிடமிருக்கட்டும்; ஆறு மாதத்துக்குத் தமிழரிடமிருக்கட்டும், என்று சொன்னாலும் சொல்வார்கள்! அல்லது தற்காலிகமாகத் தமிழர்களிடமிருக்கட்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்!

இந்தச் சண்டையே வேண்டாம்! திருப்பதி வெங்கடாசலபதிக்கு முன்பு பூக்கட்டி வைத்துப் பார்த்து விடலாம்; அவர் எப்படித் தீர்ப்பளிக்கிறாரோ அப்படியே செய்து விடலாம், என்று தமிழ் ஆஸ்திகர்கள் ஒப்புக் கொண்டாலும், ஆந்திர ஆஸ்திகர்களில் ஒருவர் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள் - கடவுள் மீது அவ்வளவு சந்தேகம்!

என்னைப் பொறுத்தமட்டில் திருப்பதியைத் தெலுங்கர் வசம் விடு வதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் இருக்கிறது! நானும் தமிழன்தான். அப்படியிருந்தும் ஒரே ஒரு நிபந்தனை மீது திருப்பதியை ஆந்திரர் வசத்தில் விட்டு விடுவதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்று, தமிழர்களாகிய நீங்கள் வருத்தப்பட்டாலும் சரி! என் மனத்திலுள்ளதைக் கூறத்தான் போகிறேன். இதுவரையில் யாருமே சொல்லாத புது யோசனையாதலால் நேரு முதல் வாஞ்சு வரையில், ம. பொ. சி. முதல் சி. ஆர். வரையில், எல்லோருமே கூர்ந்து கவனிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை!

அதாவது திருப்பதி வெங்கடாசலபதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் லஞ்சப் பணம் (அதாவது பக்தர்கள் அகராதிப்படி காணிக்கை!) முழுதும் அநேகமாகத் தமிழ்நாட்டுப் பக்தர்களால் கொடுக்கப்பட்டதேயாகும். சந்தேகமிருந்தால் நாளை முதல் ஒரு வாரத்துக்கு இரகசியமாக தினசரிக் கணக்கு எடுத்துப் பார்க்கட்டும்!

ஆதலால் அவருடைய வைரக் கிரீடம் (பத்து லட்ச ரூபாய்) உட்பட எல்லா அசையும் பொருள், அசையாப் பொருள்களையும தமிழ் மாகாண சர்க்காரிடம் கொடுத்து விட்டு -  எழுமலையையும் அதில் வீற்றிருக்கின்ற ஏழுமலையானையும் மட்டும் (அவருக்கு ஒரு புது வேட்டியும் நல்ல புது ஜிப்பாவும் போட்டு நிர்வாணமில்லாதபடி ஒப்படைக்கத் தயாராயிருக்கிறோம்!) தெலுங்கர் வசத்தில் விட்டு விடலாம்! இப்படிச் செய்து விட்டால் அதன் பிறகு ஆஸ்திகத் தமிழர்களுக்குக்கூட கடுகளவு பகுத்தறிவு வந்தாலும் வரலாம்! இனிமேல் தெலுங்கு நாட்டுக் கடவுளுக்கு எதற்காக நாம் காணிக்கை தர வேண்டும்? அவர்தான் நம்மை ஏமாற்றிவிட்டு அவர்கள் பக்கம் போய்விட்டாரே, என்று கருதினாலும் கருதலாமல்லவா?

ஆகையால் இந்த நிபந்தனை மீது திருப்பதியை ஆந்திர மாகாணத்துக்கே விட்டுவிட்டால் பரவாயில்லை என்பதே என் கருத்து.

“அற்பக் காசுக்காக ஆசைப்பட்டு நமது வெங்கடேசனையா விட்டு விடுவது?” என்று தமிழ் பக்தர்கள் பதறலாம்! என்ன செய்வது? வெங்கடேசனும் போய், அவனுடன் பலகோடி ரூபாயும் போய்த் தொலைவதைக் காட்டிலும் என் யோசனை எவ்வளவோ மேலல்லவா?

தயவு செய்து எல்லோரும் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் இந்தப் பிரச்னையில் அவரை மட்டும் நம்பியிருக்காதீர்கள்! அவர் கோவிந்தா! கோவிந்தா! என்று உங்களுக்கெல்லாம் நாமம் போட்டுவிட்டுத் தெலுங்கர் பக்கம் போனாலும் போய்விடுவார்! அதன் பிறகு நீங்கள், “கோவிந்தா! கோவிந்தா!” என்று தலையில் கைவைத்து அழ வேண்டியதுதான்!

குத்தூசி குருசாமி (15-1-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It