கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

kuthoosi gurusamy2கருப்புச் சட்டைக்காரன் கலையத்தில் மொண்டு தந்தால், அது வெறும் தண்ணீர்! அதையே ‘கல்கி’ ஆசிரியர் கெண்டியில் கொண்டு தந்தால் தீர்த்தம்!

மாட்டுக் கொட்டிலில் கிடப்பது சாணி அதையே கூம்பாச்சியாகப் பிடித்து மிட்டாய்ப் பொட்டலம் மாதிரி வீட்டுக்குள் வைத்தால் பிள்ளையார்!

நம் வீட்டு அரிசியையும் மஞ்சள் தூளையும் கலந்து எதிர் வீட்டு அய்யர் நம் தலையில் போட்டால் அது அட்சதை!

நம் வீட்டுப் பெண்கள் நாட்டியம் ஆடினால், தேவடியாள் சதிர்! அதே நாட்டியத்தை அக்கிரகாரப் பெண்கள் ஆடினால் நடனகுமாரியின் பரத நாட்டியம்!

நாம் பிச்சையெடுத்தால் பிச்சை! சங்கராச்சாரியார் பிச்சையெடுத்தால் பிட்ஷை!

நாம் சிரைக்கிற தொழில் செய்தால் நம்மைத் தீண்டக்கூடாது!

அவர்கள் தினசரி காலையில் அதே தொழிலைச் செய்தால் அதற்குப் பெயர் ஸெல்ஃப் ஷேவ்!”

நாம் வைத்திருப்பது மளிகைக் கடை; அவர்கள் அதே கடை வைத்தால் அது ப்ரொவிஷன் ஸ்டார்!

நம் வீட்டுப் பெண்களில் யாராவது ஒழுக்கக் கேடாக நடந்தால் அவள் விபசாரி! ஆனால் அதே தொழிலை அவர்கள் உயர்ந்த ரகத்தில் செய்தால் சினிமா ஸ்டார்!

நாம் ஒரு வேலை செய்துவிட்டுப் பணம் கேட்டால் அதற்குப் பெயர் கூலி! அவர்கள் சோம்பேறி வேலை செய்துவிட்டுப் பணம் கேட்டாலும் அதற்குப் பெயர் தட்சணை! இவைகளைப்போல் இன்னும் எத்தனையோ உண்டு! அவர்கள் கை பட்டாலே அதில் தனி மகிமையுண்டு!

பழங்காலத்தில் மலையாளத்தில் நம்பூதிரிகளுக்கு இருந்த உடற்சேர்க்கை உரிமையை மட்டும் நினைத்தே இப்படிச் சொல்லவில்லை. பொதுவாகவே சொல்கிறேன்!

அவர்கள் மாவிலையினால் தோய்த்து நம் வீட்டில் தெளிக்கும் தண்ணீர் “பினாயில்” மாதிரி கிரிமிகளைக் கொல்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் அதிபுத்திசாலிகள் எத்தனையோ ஆயிரம் இன்றைக்கும் இருக்கிறார்களே!

“இந்தியாவில் ஹிந்தி ஏகாதிபத்தியத்தையே நிலை நாட்டிவிடப் பிரியப்படுகிறார்கள். மற்ற பாஷைகளையும் மற்ற பாஷைக்காரர்களையும் ஹிந்தி பாஷைக்கு அடிமையாக்கிவிடவே எண்ணுகிறார்கள்”

“தாய் மொழியையன்றி வேறொரு மொழியின் உதவி நமக்கு அவசியம் என்று ஏற்படும் பட்சத்தில், ஹிந்தியைக் காட்டிலும் ஆங்கிலத்தையே நாம் ஒப்புக்கொள்ளலாம்.”

“ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஹிந்தியை உபயோகிப்பது என்பது முழு மடமையேயாகும்.”

“மற்றப்படி அறிவைத் தேடுவதற்கோ பண்பாட்டை வளர்ப்பதற்கோ ஹிந்தி பாஷையினால் பயன் ஒன்றுமில்லை” -இப்படியெல்லாம் “சதிர்” ஆடியிருப்பது தாசி குலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணல்ல.

அக்கிரகாரத்தைச் சேர்ந்த நடனக்கலை நங்கை! அதாவது, “கல்கி” 7-5-50 “கல்கி” யில் “ஹிந்தி ஏகாதிபத்தியம்” என்ற தலைப்பில் வந்திருக்கும் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவை!

இதையே நாம் கூறினால் தேசத்துரோகி! இங்கிலீஷ் அடிமை! வெள்ளைக்காரன் குலாம்!

ஹிந்தி ஏகாதிபத்தியம் கூடாதென்றால் சும்மாவே இப்படி எழுதி விட்டால் போதாது! எதை எதை ஏகாதிபத்தியத் திட்டம் என்று “கல்கி”க் கூட்டம் கருதுகிறதோ, அதையெல்லாம் ஒழிப்பதற்கு முன்வரவேண்டும்.

பள்ளிகளில் கட்டாய ஹிந்தி வைப்பது “ஏகாதிபத்தியத் திட்ட” மல்ல வென்றால், தமிழ்நாட்டு ரயில் நிலையப் பலகைகளில் ஹிந்திப் பெயரை எழுதியிருப்பதாவது ஏகாதிபத்தியத் திட்டம் என்றுதானே ஒப்புக்கொள்ள வேண்டும்? அதை அழிப்பதற்கு ஒரு டின் ‘தாரும்’ ஒரு ‘பிரஷும்’ எடுத்துக் கொண்டு “கல்கி” யார் ஏன் புறப்படக்கூடாது? நானும் வேண்டுமானாலும் துணைக்கு வருகிறேன்! “கல்கி” யார் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமுமாக அழிக்கலாமே!

இதுவும் பிரியமில்லையென்றால், ஹிந்தி ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்கு வேறு என்ன திட்டம் வகுத்திருந்தாலுஞ்சரி, என்னைப் போன்றவர்கள் பலர் அதில் ஈடுபடத் தயாராயிருக்கிறார்கள்!

போகட்டும்! வசிஷ்டர் வாயினால் (கையினால்?) வந்ததே! அதுவே இந்த நாட்டு அசுரர்கள் செய்த தவப்பயன் அல்லவோ?

“ஹிந்து” பத்திரிகை இனிமேல் “ஹிந்தி” யில் தான் வெளி வரும் என்ற என் நம்பிக்கை, இதன்மூலம் சிறிது ஆட்டங் கண்டிருக்கிறது!

- குத்தூசி குருசாமி(16-5-50)

நன்றி: வாலாசா வல்லவன்