10-14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நடனஞ்செய்தாலே சர்வ ஆபாசமாயிருக்கிறது! அதிலும் ஆண்கள் சதிர் (பார்ப்பனப் பேச்சுப்படி பரத நாட்டியம்) ஆடுவதென்றால் எப்படியிருக்கும்?

kuthoosi gurusamy 268“விட்டலே! விட்டலே! பாண்டு ரெங்க விட்டலே!” என்று பாடிக் கொண்டு 20-30 வயது ஆண்கள் கையில் தாளத்துடன், கழுத்தில் துளசி மாலையுடன், நெற்றியில் நாமத்துடன் நடுத்தெருவில் நின்று ஆடும்போது, “இது ஏன், இந்தத் தடியன்கள் இப்படிக் குதிக்கிறான்கள்? இவன்களுக்கு மானம்-ஈனம் கிடையாதா? பக்தி என்றால் இப்படித்தானா? எந்தக் குடிகாரப் பார்ப்பானாவது இப்படிக் குதிக்கிறானா? அடிமுட்டாள்கள்!’ என்று எத்தனை பேர் தெருவில் பேசிக்கொண்டு போவதைக் கேட்கிறோம்!

இவர்கள் சொல்வதும் சரிதான் என்று தானே தோன்றுகிறது? நம்மவர்களில் படித்தவனும் பட்டதாரியும் காவடி தூக்கி ஆடுகிறான், கிறுக்கனைப்போல; ஆனால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள ஒரு பார்ப்பானைக் கொண்டு வந்தால்கூட அவன் காவடி தூக்கி ஆட மாட்டான்! அவனுக்கு அந்தப் புத்தி! நமக்கு இந்தப் புத்தி! அது கிடக்கட்டும்!

நான் நாளைக்கு பரத நாட்டியம் ஆடப் போகிறேன் என்றால் உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கும்? ஆச்சரியம் மட்டுமா? திடுக்கிட்டுப் போய் மூர்ச்சியாகி விடமாட்டீர்களா?

உலகத்தில் பல அதிசயங்கள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. நான் பரத நாட்டியம் ஆடப் போவதும் அவைகளில் ஒன்றாக ஏன் இருக்கக் கூடாது?

குப்பு தீட்சதர் சாமி தூக்குகிறார்! அவினாசி லிங்கனார் கர்ப்ப கிருகத்தில் “ஆண்டவனுக்கு”க் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்! சுப்பய்யர் கோபுரத்தின் உச்சியில் வர்ணந்தீட்டுகிறார்! சாம்பான், கோவில் மடைப்பள்ளிக்குள் புளியோதரை செய்கிறார்! ராமசாமி அய்யங்கார் க்ஷவரக் கடை வைத்திருக்கிறார்! வைத்திநாத சர்மாவின் மனைவி விசாலாட்சி அங்காடி விற்கிறாள்! புருஷோத்தம சாஸ்திரியின் தங்கை நிர்மலா நாற்று நடுகிறாள்!

இவைகள் போன்ற செய்திகளைக் கேட்டாலோ, படித்தாலோ உங்களில் யாராவது நம்புவீர்களா? நேரில் பார்த்தால் உங்கள் கண் பார்வையில் ஏதோ கோளாறு இருப்பதாகத்தானே சந்தேகப்படுவீர்கள்?

நான் நாட்டியமாடினாலும் அப்படித்தான்! நம்பவே மாட்டீர்கள்! அதுவும் மூக்குக் கண்ணாடி, ரிஸ்ட் வாட்ச் சகிதம், ஜிப்பா போட்டுக் கொண்டு பரத நாட்டியம் ஆட மேடை மீது ஏறினால், அடாடா! உங்களுக்கு எப்படித்தான் இருக்கும்!

இவைகளைக் காட்டிலும் ஆச்சரியமான சங்கதி நம் நாட்டில் நடந்து கொண்டு தானிருக்கிறது! ஆனாலும் நீங்கள் பார்த்துக் கொண்டு தானிருக்கிறீர்கள்! நானுந்தான்; திடுக்கிடுவதுமில்லை! “சே! சே! அசிங்கம் வேண்டாம்! வேண்டாம்!” என்று சொல்வதுமில்லை!

சுந்தரமய்யர் ‘போர்ட்டரா’ யிருந்தாலோ, துரைசாமி அய்யர் தோட்டி வேலை செய்தாலோ அதிசயப்படக் கூடிய நீங்கள், இவர்கள் இரண்டு பேரும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் டிப்டி சூப்பரிண்டெண்ட்டாகவும் இருந்தால் ஏன் அதிசயப்படுவதில்லை?

போலீசுக்கும் ஆரியருக்கும் என்ன தொடர்பு? சி.பி.ராமசாமி அய்யர் போலீஸ் மந்திரியாக இருந்த காலத்தில் வலுக்கட்டாயமாக இந்த இலாகாவில் பார்ப்பனர் நுழைக்கப்பட்டதைத் தவிர, இவர்களுக்குப் பரம்பரை வீரமோ பொதுஜனத் தொடர்போ ஏது? பூனை குறுக்கிட்டால் திரும்பிச் செல்கிற சம்பிரதாயத்தையும் மதத்தையும் கொண்ட இந்த ஆரியக் கும்பலிடம் நெஞ்சுத் துணிவை எப்படி எதிர்பார்க்க முடியும்? தர்ப்பை தாங்க வேண்டிய கையில் துப்பாக்கியைக் கொடுத்தால் காந்தியாரைப் போன்ற பரம சாதுக்களைச் சுடுவதைத் தவிர இவர்களுக்கு வேறென்ன தெரியும்?

இன்ன பெரிய கலகத்தையடக்கினார்; இந்த ஊர் குழப்பத்தில் தன்னந்தனியாக ஈடுபட்டுச் சமாளித்தார்; இன்ன கொள்ளைக் கூட்டத்தை மடக்கினார்; இன்ன போக்கிரியைத் தனியாக விரட்டிப் பிடித்தார்-என்று இதுவரையில் எந்தப் பார்ப்பன பெரிய போலீஸ் உத்தியோகஸ்தரைப் பற்றியாவது யாராவது கேள்விப்பட்டதுண்டா? வேண்டுமானால் நமது போலீஸ் கான்ஸ்டபில் தன் உயிரை வெறுத்துக் கண்டுபிடித்த திருடனை, தான் கண்டு பிடித்ததாகப் பொய் சொல்லி, ‘ப்ரமோஷன்’ வாங்கியிருப்பார்! திராவிட சப் இன்ஸ்பெக்டர் சிரமப்பட்டுக் கண்டுபிடித்த கொலையைத் தான் கண்டுபிடித்ததாக மேலே எழுதி நல்ல பெயர் வாங்கியிருப்பார்!

பரீட்சையில் நல்ல மார்க் வாங்கியிருப்பதைப் பார்த்தும், பேட்டி கண்டு பேசும்போது தைரியமாகப் பேசுவதைப் பார்த்தும் பொறுக்கி யெடுக்கப் பட்டவர்கள் தானே இன்றுள்ள பார்ப்பன போலீஸ் உத்யோகஸ்தர்கள் அத்தனை பேரும்? பீ.ஏ. பரீட்சை மார்க்கும் சாதுரியப் பேச்சும் கடைத் தெருக் கலவரத்தில் என்ன செய்யலாம்? எந்தச் சந்து வழியாகத் தப்பியோடலாம் என்றுதானே பார்க்கச் சொல்லும்?

உடையைக் கழற்றியவுடனே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சாம்பமூர்த்தி அய்யர் சர்வ சாதாரணமான புரோகிதர் தானே? தம் வீட்டுக்கு வெளியே கூச்சல் கேட்டால், “டேய் 275! என்ன கூச்சல் பாரு! அடீ! கமலு! கதவைத் தாள் போடு!” என்று தானே சத்தம் போடுவார்? அவர்மீது குற்றமில்லை! ராகுகாலம் - சகுனம் - சாஸ்திரம் பார்க்கும் இனம்தானே அது?

- குத்தூசி குருசாமி (23-12-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It