கனம் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தமிழ் நாட்டுக் கலைச் செல்வங்களை யெல்லாம் வீணாக டில்லியில் வாரி இறைக்கிறார்!

பட்ஜெட் விவாதத்தின் போது, ‘கிராமப் புனருத்தாரண வேலை ஒன்றுமே நடக்கவில்லையே’ என்று ஓர் உறுப்பினர் புகார் செய்தார். “அதற்குள்ளாக அவசரப்படுகிறீர்கேள! சமீபத்தில்தானே அதிகாரத்தை ஏற்றுக் கொண்டோம். அரச மரத்தை மூன்று சுற்று சுற்றிவிட்டு கர்ப்பம் தரித்திருக்கிறதா என்று அடிவயிற்றைத் தடவிப் பார்க்கும் பெண்மணியைப் போல அவசரக் குடுக்கைகளாக இருக்கிறீர்களே! சற்றுப் பொறுங்கள்,” என்று பதில் கூறினார்.

kuthoosi gurusamy“முதலாளி மாது மட்டும் இதற்குள்ளாக கர்ப்பந்தரித்து விட்டாளே, அது எப்படி?” என்று கேட்டார் விடாக் கண்டரான உறுப்பினர்.

நல்ல வேளையாக டாக்டர் லட்சுமணசாமி முதலியார் டில்லி சட்டசபையில் இல்லை! பலே நிபுணர், இந்தத் துறையில்! ஆனால் இங்கே சிக்கிக் கொண்டு விட்டார். அங்கே மட்டும் இருந்திருந்தால் உடனே ஓடிப் போய் நிதி மந்திரியின் வயிற்றைத் தடவிப் பார்த்திருப்பார்! நிதி மந்திரியார் ஒரு முதலாளி! அவர் கர்ப்பம் கலைந்திருக்கிறதா இல்லையா, என்பதை டாக்டர்தான் கூற வேண்டும்!

“முதலாளி மாதுதான் கர்ப்பந்தரித்து விட்டதாக நினைத்திருக்கிறாள்! ஆனால் ‘கருகலைந்து விட்டது’ என்கிறார் பிள்ளைப்பேறு டாக்டர் ஆர்.கே. ஷண்முகம்! கரு கலைந்துவிட்டதா இல்லையா என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதானே! உலகப் போருக்குப் பிறகு பல முதலாளி சிசுக்கள் பிறந்து விட்டன. தாயாரோ இளமை மாறாமலிருக்கிறாள்! காங்கிரஸ் தங்க பஸ்பம் சாப்பிட்டுக் கொண்டே யிருக்கிறாள்! மேனி மினுமினுப்புடன் 18 வயது பெண் மாதிரியே நடமாடும் தங்கப் பதுமை போலிருக்கிறது! பிரிட்டிஷ் கணவன் போய்விட்டால் பரவாயில்லையென்று அமெரிக்கனைப் புதுக் கணவனாகப் பெற்றிருக்கிறாள். (பிள்ளைக் பேறுக்காக ஒரு பெண் தன் கணவனின் சகோதரனையும் கூடச் சேரலாம் என்பது யாக்ஞவல்கியர் கூற்று! (தவறு என்று நிரூபித்தால் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயார்) ஆரிய தர்மத்தை முதலாளி மாது பின்பற்றுவதில் ஆச்சரியமென்ன?

முதலாளி மாதுவின் கர்ப்பம் சிதைந்துவிட்டது என்று கூறுவது தவறு. கம்யூனிஸ்ட் கால் உதைக்கே தப்பித்துக் கொண்டிருக்கிறதே அந்தக் கரு! ஆர்.கே.எஸ். பூச்சாண்டிக்கா கலைந்துவிடப் போகிறது? கலைந்துவிட்டது போலப் பாசாங்கு செய்கிறாள் முதலாளி மாது! அது கலையவுமில்லை; கலையும். வழியையும் காணோம். பிரபல பிரசவ டாக்டர்களான ஆர்.கே.எஸ்ஸும், சர்தார் பட்டேலும் பக்கத்திலேயே இராப் பகலாகக் காத்திருக்கும்போது அவள் கர்ப்பம் சிதையுமா? காங்கிரஸ் திட்டம் என்நும் பென்சிலின் சஞ்சீவி மருந்து கையிலிருக்கும் போது முதலாளி மாதின் வயிற்றுக் கருவுக்கு எந்த ஆபத்தும் வராது!

ஆனால் பசியும், வறுமையும், வேலையின்மையும், சுரண்டலும், அந்நியன் ஆதிக்கமும் அதிகமானால் என்னவாகும்? தாய் பிழைப்பதே கஷ்டமாகிவிடும்! உலகத்திலேயே பிரசவ மரணம் இங்குதான் அதிகம் என்பதையும் ஞாபகமூட்டி வைக்கிறேன்!

அரசமரம் - அடி வயிறு - கர்ப்பம் - சிதைவு - காங்கிரஸ் பென்சிலின் - பிரசவ டாக்டர் பட்டேல்! இவைகளல்ல, நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டியவை. சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It