10, 12 வருஷங்களாக உழவு வேலை செய்து கொண்டிருந்த மண்ணாங்கட்டி (இது மனிதன் பெயர்தான்; தென்ஆற்காடு ஜில்லாவில் அதிகம்! நேற்று ஒரு மாதிரியாக வந்தான், என்னிடம்! அவன் முகத்தில் ஒரு ‘க்ஷத்திரியகளை’ வீசிற்று!

kuthoosi gurusamy“இந்தாங்கய்யா! நீங்கதானே பேப்பர்லே எழுதுறவுங்கோ? என் பெயரையும் எழுதிப் பிடுங்கோ! இனிமேலே நான் கதிர் அறுக்கப் போறதில்லை. இன்னையோடே விட்டுட்டேன்!”

“ஏனப்பா விட்டுவிட்டே? பட்டாளத்தில் சேரப் போகிறாயா?” என்று கேட்டேன்.

“பட்டாளத்திலேயா! அந்தச் சனியன் எனக்கெதுக்கு? என் தம்பிதான் பட்டாளத்திலே நாலு வருஷம் இருந்துட்டு இப்போ வந்து ஈ ஓட்டிகிட்டு குந்திக் கிடக்கிறானே! நான் ஏன் பட்டாளத்தில் சேரப் போறேன்? அதுதான் “பட்டாளத்தில் சேராதே! பாங்கியில் பணம் போடாதே!” அப்படின்னு காந்தி கட்சிக்காரங்க சொல்லியிருக்கிறாங்களே!”

“அது அப்போது சொன்னதப்பா! இப்போத்தான் பட்டாளத்திலே சேரச் சொல்லி கூப்பிடுறாங்களே! அது கிடக்கட்டும்! நீ என்னதான் பண்ணப் போறே? சொல்லித் தொலையேன்!”

“நானா? கம்பி அறுக்கப் போறேன்; தந்தியில்லே, தந்தி; அந்தத் தந்திக் கம்பி அறுக்கப் போறேனுங்க! இதோ பாருங்கோ கத்தரிக்கோல்; இரும்பைக்கூட ஒரே வெட்டிலே ‘டப்’புன்னு நறுக்கிப் புடுங்கோ! நல்ல கத்திரிக்கோல்!” என்று கூறி இடுப்பில் சொருகியிருந்த கத்திரியை எடுத்துக் காட்டினான், மண்ணாங்கட்டி.

“டேய் மண்ணாங்கட்டி! வேண்டாம்! வேண்டாம்! ஜெயிலுக்குள்ளே தள்ளிப் புடுவாங்க! தடியாலே அடிச்சு மண்டையைத் தூளாக்கிப் புடுவாங்க! வேண்டாம், இந்தக் கெட்ட புத்தி!”

‘எனக்கா கெட்ட புத்தி? என்னை ஏமாத்தப் பாக்கிறீங்களா? இதோ இதைப் படிச்சுப் பாருங்கோ!” என்று சொல்லி ஒரு பத்திரிகை வெட்டுத் துண்டை நீட்டினான். வாங்கிப் படித்தேன். அதில் இருந்தது, இது:-

தியாகிகளுக்கு இனாம் நிலங்கள்
திருநெல்வேலி, ஜனவரி 11-

“கம்யூனிஸ்டாக இருந்தாலும் சரி, சோஷ்யலிஸ்டாக இருந்தாலும் சரி, ஆகஸ்ட் தியாகிகளுக்கு ஆளுக்கு 5 ஏக்கர் நிலம் இனாமாகத் தரப்படும். ரிமாண்டில் இருந்தவர்களுக்கும் அடிபட்டவர்களுக்கும் கஷ்ட நஷ்டமடைந்தவர்களுக்கும் நிலம் தரப்படும்,” என்று ரெவின்யூ மந்திரி ஸ்ரீ காளா வெங்கட்ராவ் அறிவித்தார்.”

இதைப் படித்தேன். “ஆமாப்பா, மண்ணாங்கட்டி! நீ என்ன செய்யப் போறே?” என்று கேட்டேன்.

“தந்திக் கம்பியை அறுத்துத்தான் இவங்களெல்லாம் ஜெயிலுக்குப் போனாங்களாம்! நானுந்தான் 12 வருசமா கதிர் அறுக்கிறேன்; ஒரு குழி நிலமாவது எனக்கு சொந்தமா கொடுக்கறாங்களா, யாராவது? தந்திக் கம்பியை அறுத்தவுங்களுக்குக் கதிர் அறுக்கத் தெரியாதே! உழத் தெரியாதே! அவுங்களுக்கு மட்டும் 5 ஏக்கர் நிலம் கொடுக்கிறாங்களே ஏன்? அதனாலே இனிமே தந்திக் கம்பியைத் தான் அறுக்கப் போறேன்!” என்று சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

“அப்பா மண்ணாங்கட்டி! இங்கே வா! போகாதே; அப்போது அறுத்த தந்திக் கம்பி வேறே! இப்போ இருக்கிறது வேறேயப்பா! இதை அறுத்தா உனக்கு நிலம் குடுக்க மாட்டாங்க! உதைதான் குடுப்பாங்க! இப்போ இருக்குதே, இது பட்டேல் தந்திக்கம்பி, தெரியுமா” என்று பயமுறுத்தினேன்.

“அதெல்லாம் முடியாது! உங்களுக்கு என்மேலே பொறாமையோ? பாருங்களேன், 5 ஏக்கர் வாங்குறேனா, இல்லையான்னு!” என்று சொல்லிக் கொண்டே ஓட்டம் பிடித்து விட்டான்!

கறுத்த உருவம்; நடுத்தரமான உயரம்; கொஞ்சம் பரட்டைத்தலை வலது கையிலே காந்தியார் உருவத்தை பச்சை குத்தியிருப்பான்! யாராவது கண்டால் புத்தி சொல்லுங்கள்! பாவம்! நல்லவன்தான்! ஏமாற்றத்தால் இந்தப் புத்தி ஏற்பட்டிருக்கலாம்! அவன் மேலும் அதிகத் தப்பு இல்லையே! நடக்கிறதும் அப்படித்தானே இருக்கிறது?

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It