நவம்பர் 10 – பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு சவால்விட்டு போர் தொடுத்தால், கொல்லப்பட்ட “மைசூரு சிறுத்தை” திப்பு சுல்தானின் நினைவு நாள் ஆகும். ‘கர்நாடக அரசு திப்பு ஜெயந்தியை நடத்தும்’ என முதல்வர் சித்தராமைய்யா அறிவித்தார். உடனே பாஜக, இந்துத்துவா அமைப்புகள் “திப்பு மதவெறியர், கொலைகாரர்” என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கும் என மிரட்டல் விட்டன; இறங்கின.
இன்று அங்கு ‘இந்து ஜாக்ரண் வேதிகெ’ என்ற அமைப்பு முழு அடைப்பை நடத்தியது. பாஜக தலைவர் எடியூரப்பா உட்பட கர்நாடக முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட 2000 பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கடை அடைப்புகள், வன்முறைகள் அரங்கேறின.
திப்பு மதவெறியரா?
திப்புவின் மீது பரப்பப்படும் அவதூறுகள் பின்வருமாறு :
1)திப்பு ஆட்சியில், முஸ்லீம்களாக மாற வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
2)கூர்கில் ஆயிரக் கணக்கான கொடவர்களை திப்பு கொன்றார்.
3)மங்களூரில் உள்ள கிறித்துவர்களை பலவந்தமாக முஸ்லிம்களாக மதமாற்றம் செய்தார்.
4)மைசூரில் 8000 இந்துக் கோவில்களை இடித்தார்.
இவை அனைத்தும் இப்போதுதான் ஆர்.எஸ்.எஸ்- பாஜக பரப்புரை செய்யும் புதிய பொய்கள் ஆகும்.
ஏனென்றால் …..
1) 1970 ல், ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட சுருக்கமான திப்புவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கூட அவரை தேசபக்தராகவும், மாவீரராகவும் புகழ்ந்துள்ளது. அதில் எந்தவிதமான திப்புக்கு எதிரான மதவெறி விமர்சனங்களையும் முன் வைக்கவில்லை.
2)பாஜக’வை விட்டு 2012 ல் வெளியேறிய எடியூரப்பா, திப்புவை போல தலைப்பாகை கட்டிக் கொண்டு, ஒரு வாளையும் கையில் வைத்துக் காட்சி தந்து திப்புசுல்தானை பாராட்டினார். மீண்டும் பாஜக சென்று தலைவரான உடன் எடியூரப்பா தற்போது மத வெறுப்பை உமிழ்கிறார்; மதவெறியராக சித்தரிக்கிறார்.
எது உண்மை?
18 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் பொதுவாகவே, மன்னராட்சிகளில் பிராமணர்களே மந்திரிசபைகளில் முக்கிய இடம் பெற்று இருந்தனர். மைசூரு திப்பு ஆட்சியிலும் அதுதான் நிலைமையாகும். இந்து மத நம்பிக்கைகளை மதிப்பது, கோவில்களுக்கு நிதி வழங்குவது என்பதாகத் தான் அவரது ஆட்சி இருந்ததாக வரலாறு உள்ளது.
திப்பு சுல்தான் பற்றி தற்போது பாஜக பரப்பும் கருத்துக்கள் அனைத்தும், ‘மதவெறி, பிளவுவாத அரசியல்’ அவதூறுகள் ஆகும். மாறாக, திப்புவின் அரசியல்
பொருளாதாரத்திற்கு இந்திய வரலாற்றில் முக்கியமான பாத்திரம் உண்டு.
திப்பு-மார்க்ஸ்-முதலாளித்துவம்!
உலக வரலாற்றில், (அய்ரோப்பிய) முதலாளித்துவத்தின் வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டு ஆகும். ஆனால், திப்புவின் காலகட்டம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி(1750-1799) ஆகும்.
பிரிட்டிஷ் வருகைக்கு முன்னரே, இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியை உருவாக்கியவர் திப்பு என்பதுதான் இந்திய வரலாற்றில் பதிவு ஆக வேண்டிய முக்கியமான மதிப்பீடு ஆகும்.
1757-1813 காலகட்டம், பிரிட்டிஷ் வணிக முதலாளித்துவம், குறிப்பாக கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை சூறையாடியக் காலகட்டம் ஆகும். இந்தியாவின் பருத்தி, பட்டு ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி கொடிகட்டிப் பறந்த காலகட்டமாகும்.
இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்ப் புரட்சியின் விளைவாக, 1813-1858 காலகட்டத்தில் தான், பிரிட்டிஷ் தொழில் முதலாளிகள், ஒருபுறம் பருத்தி கொள்முதல், மற்றொரு பக்கத்தில் மான்செஸ்டர் ஜவுளித் துணிகளை இந்தியாவில் விற்பதை மேற்கொண்டனர். நிதி மூலதனமும் இறக்குமதி ஆனது.
மார்க்ஸ் (1853,1859,1881) காலங்களில் இந்தியாவைப் பற்றிய குறிப்புகளை எழுதினார்.
அவருக்கு கிடைத்த பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து அன்றைய இந்தியா பற்றி பின்வருமாறு கருதினார் : ‘ இந்தியாவானது பாரம்பரியமான சாதிய அடிப்படையில் வேலைப் பிரிவினைகளைக் கொண்ட, தேங்கிப் போன, மாறாநிலையில் உள்ள, எளிய கிராம சமூகங்களைக் கொண்ட ஆசிய உற்பத்தி முறை ஆகும்.’
இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களை மார்க்ஸ் எதிர்த்த போதும், ” ….இங்கிலாந்து இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சிக்கு ஒரு சமூகப் புரட்சிக்கு காரணமாயிருக்கிறது ” என்று கருதினார்.
ஆனால், பிரிட்டிஷ் வருகையால், தொழிற்சாலை மையங்களாக மும்பையும், குசராத்தும் உருவாவதற்கு முன்னரே, மைசூரு சமஸ்தானத்தில் தொழிற்துறை வளரச்சி ஏற்பட்டு இருந்தது.
பிரிட்டிஷ் வரவில்லை என்றாலும் கூட, இந்தியா தனது சொந்தமான தொழிற்துறை /தேசிய முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கிச் செல்லும் ஆற்றலை, அடிப்படைகளைக் கொண்டிருந்தது.
திப்புவின் பொருளாதாரம் :
1)திப்புவின் ஆட்சியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. நிலப்பிரபுத்துவம் நிலவினாலும் கூட, நீர்ப்பாசன முன்னேற்றம், நீர்நிலை மராமத்து பணிகளுக்கு முக்கியத்துவம், கெடுபிடியற்ற வரி வசூல் முறை, விளைச்சல் குறைந்த காலத்தில், தக்காவி கடன்களை வழங்குதல், பண்ணையடிமைகள்/படியாட்கள் விடுதலை பெறும் வாய்ப்புகள் எனப் பல்வேறு விவசாய சீர்திருத்தங்களை திப்பு மேற்கொண்டார்.
2)விவசாயம் சார்ந்த தொழில்களை உருவாக்கினார். வெல்லம், சர்க்கரை தயாரிக்கும் ஆலைகள் ஏற்படுத்தினார். சர்க்கரை தயாரிக்க சீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தினார்.
3)விவசாயிகள் மல்பெரி மரங்கள் அமைத்து பட்டுப் புழு வளர்ப்பதற்கு ஊக்குவித்தார். பட்டுத் துணி நெய்யும் 21 மையங்களை/கார்கானாக்களை சமஸ்தானத்தில் உருவாக்கினார். வங்காளத்தில் இருந்து தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றார்.
4)பெங்களூருவை ஜவுளி மையமாக உருவாக்கினார். கம்பளி தயாரிக்கும் ஆலைகள் உருவாக்கப்பட்டன.
5)அரசாங்கம் சார்பில் சுரங்கங்கள் முதல் ஆலைகள் வரை, இரும்பு, வெள்ளி, வைரங்கள், சர்க்கரை, சந்தனம், ஆயில் என பல்வேறு துறைகளில் உருவாக்கினார்.
6)கனகபுரா, தரமண்டல்பெட் ஆகிய இடங்களில், பத்துக்கும் மேற்பட்ட பீரங்கி, வெடிமருந்து தொழிற்சாலைகளை அமைத்தார். நவீன போர்க் கருவிகளை உருவாக்கினார்.
7)கப்பல் கட்டும்,நாணயம் அச்சடிக்கும் தொழிற்சாலைகளை அமைத்தார். தச்சு, இரும்பு பட்டறைகளில் பிரெஞ்சு தொழில்நுட்பம் பயன்படுத்தினார்.
8) மாநில வர்த்தக வலைப் பின்னல், மத்தியப்படுத்தப் பட்ட நிர்வாகம் அமைத்தார்.
மொத்தத்தில், இந்திய தேசிய முதலாளித்துவத்தின், நவீன தொழிற்துறையின் விற்பன்னராக திகழ்ந்தார்.
பிரிட்டிஷ் எதிர்ப்பில் திப்பு
திப்பு உருவாக்கி வளர்த்த பொருளாதாரம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து முதலாளிகளுக்கு எதிராக இருந்தது. அங்கு மான்செஸ்டரில், லங்காசயரில் உருவான ஜவுளிகளை இந்தியாவில் விற்க வேண்டும். அதற்கு தேசிய தொழில்களை ஒழிக்க வேண்டும்.
அவர்களுக்கு மலிவான விலையில் பருத்தி வேண்டும். அதற்குப் பொருத்தமான தரகு/ஏகாதிபத்திய சார்பு வர்க்கம் வேண்டும். தேசிய முதலாளிகள் கூடாது. தேசிய தொழிற்துறை வளர்ச்சிக் கூடாது.
பிரிட்டிஷ் நலனுக்கு திப்பு ஆபத்தான தடையாக திகழ்ந்தார். பிற சமஸ்தான ஆட்சியாளர்களையும் அணிதிரட்டினார். எனவே தான், திப்புவையும் அவர் உருவாக்கிய தொழில்களையும் பிரிட்டிஷ் ஆட்சி நிர்மூலமாக்கியது. மன்னர் என்றாலும், குறிப்பிட்ட மத நம்பிக்கை உள்ளவர் என்றாலும் கூட, நவீன இந்தியாவின் சொந்தமான தேசிய தொழிற்துறையை கட்டி எழுப்பிய சிற்பி திப்பு சுல்தான் ஆவார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சரணடைந்த காவிப் பாசிஸ்டுகளின் அவமானகரமான வரலாற்றுக்கு முன்னால், திப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாகத் திகழ்கிறார்.
திப்பு நினைவுகள் நீடுழி வாழட்டும்!
காவிப் பாசிஸ்டுகளின் பொய் பிரச்சாரங்கள் சரிந்து போகட்டும்!
- சந்திரமோகன், CPI ML தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர்