ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்த சர்ச்சை ஒன்று மேலுக்கு வந்துள்ளது. மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையருள் சமூக அடிப்படையிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முதலானவற்றை அளித்து மேம்படுத்துவது என்பது அய்க்கிய முன்னணி அரசின் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு கொள்கை. அதன்படி, “இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளைக் கண்டறிவதற்கான பிரதமரின் உயர்மட்டக் குழு” ஒன்று சென்ற மார்ச் தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. முன்னாள் டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஜிந்தர் சச்சர் உட்பட இக்குழுவில் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர்.

இக்குழு எல்லா மாநிலங்களுக்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்த தகவல்களைத் திரட்டுகிறது. 11 மாநிலங்களுக்கு அது இதுவரை நேரில் சென்றுள்ளது. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் முஸ்லிம்கள் பற்றிய தரவுகள் கோரப்பட்டுள்ளது. மனித உரிமைகளில் மிகுந்த அக்கறை உள்ள நீதியரசர் சக்சார் இதனை மிகக் கவனத்துடன் செய்து வருகிறார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் முதலான மாநிலங்களில் முஸ்லிம்கள் நிலை குறித்த அறிக்கைகளை இக்குழு வெளியிட்டுள்ளது. நம்பிக்கையூட்டத்தக்கதாக முஸ்லிம்களின் நிலை இல்லை. எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலை, பாதுகாப்பின்மை என்பனவே இவ்வறிக்கைகளிலிருந்து வெளிவரும் தகவல்கள்.

ராணுவத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்த தகவல்களைத் தருமாறு சென்ற ஆகஸ்டு மாதத்தில் சச்சார்குழு ராணுவத் தலைமைகளுக்குக் கடிதம் அனுப்பியது. விமானப் படை உடனடியாக உரிய விவரங்களை அளித்தது. கப்பற்படை சிவிலியன்களின் விவரத்தை மட்டும் அளித்தது. பாதுகாப்பு அமைச்சகம் தலையிட்ட பின் இதர விவரங்களையும் அளித்தது. தரைப்படை மட்டும் தகவல் அனுப்ப மறுத்தது. இரு கடிதங்களுக்குப் பதிலில்லாமல் போகவே சச்சார்குழு, பாதுகாப்பு அமைச்சகம் தலையிட வேண்டுமென்று சென்ற ஜனவரியில் கோரியது.

இந்தத் தலையீட்டை ராணுவம் கடுமையாக எதிர்கொண்டது. தரைப்படைத் தலைவர் ஜே.ஜே. சிங் சார்பாக மேஜர் ஜெனரல் கே.பி.டி. சமந்தா என்பவர் சென்ற ஆகஸ்டில் அளித்த முதல் மறுப்பில் கூறியதையே சிங் மீண்டும் (பிப்ரவரி 13, 2006) வற்புறுத்தினார். அதாவது, “இத்தகைய தரவுகளை வெளிப்படுத்துவது படை மத்தியில் தவறான சிந்தனையை உருவாக்கும் சிறப்பான முறையில் படை அணிகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமையையும், அணி உணர்வையும் இது சிதைக்கும். நாங்கள் எல்லோருக்கும் சம வாய்ப்பை அளிக்கிறோம். மத நம்பிக்கை, மொழி அல்லது மாநிலம் என்பவை எங்களுக்கு முக்கியமல்ல.”

இப்படியான மறுப்பு ராணுவத்திடமிருந்து வெளிப்பட்டவுடன் எதிர்பார்த்தது போல இந்துத்துவ சக்திகள் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்துக் கொண்டு ஊளையிடத் தொடங்கினர். குடியரசுத் தலைவரைச் சந்தித்து “இராணுவத்தில் இப்படித்தலைகளை எண்ணுவது தடுக்கப்பட வேண்டும்” என்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸில் குருமூர்த்தி கண்டனக் கட்டுரை எழுதினார்.

மஜ்லித் - ஏ - முஷாவரத் போன்ற முஸ்லிம் அமைப்புகளும் டெல்லி ஜும்மா மசூதியின் ஷாஹி இமாமும் இராணுவத்தில் முஸ்லிம்கள் குறைவாக உள்ள உண்மையை மறைப்பதற்கு பா.ஜ.க. இவ்வளவு தீவிரமாக இருப்பதேன் எனக் கேள்வி எழுப்பினர்.

ராணுவம் சொல்வது உண்மைதானா? ஆளெடுப்பில் மதம், மொழி, மாநிலம் என்பன கவனிக்கப்படுவதில்லையா? சீக்கியப் பிரிவு, குமாயூன், டோக்ரா மற்றும் ஜாட் பிரிவுகள், மெட்ராஸ் ரெஜிமண்ட், ராஜ்புதானா ரைஃபில்ஸ் என்றெல்லாம் மத, மொழி வாரியான படைப்பிரிவுகள் ராணுவத்தில் இருக்கவே செய்கின்றன. சீக்கியப் பிரிவின் தாக்குதல் முழக்கம் ‘சபாத்’ என்கிற குர்பானி வாசகம். ஜாட் பிரிவு காளிதேவியின் புகழ்பாடி களத்தில் இறங்கும். வெவ்வேறு மதப்பிரிவினருக்கான வழிபடு தலங்கள் ராணுவத்தில் உண்டு.

பிரிட்டிஷ் ஆட்சியில் ராணுவத்தில் தொடக்கத்தில் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களும் தலித்துகளுமே. 1806 வேலூர் கலவரத்தில் பங்கு பெற்றவர்களின் பெரும்பான்மையோர் தலித்களும் முஸ்லிம்களும் தான் போகப் போக உயர் சாதி இந்துக்கள் ராணுவத்தில் சேர்ந்த பின் அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து படையில் இருக்கச் சம்மதிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தனித்தனிப்பிரிவுகள் பல்வேறு காரணங்களால் உருவாக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதியில் மொத்தப் படையினரில் 36 சதம் பேர் முஸ்லிம்கள் எனினும் நாட்டுப் பிரிவினையின் போது பாகிஸ்தான் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பெரும் படைப்பிரிவுகள் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டதால் இந்தியப் படையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

1953இல் பிரதமர் நேரு மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து நான் சில கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அதிகரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாததைக் குறித்து அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மகாவீர் தியாகி ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 சதமாகக் குறைந்துவிட்டது எனவும் இதைச் சரிகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் நிலைமையில் பெரிய மாற்றமில்லை. இராணுவத்தில் உள்ள முஸ்லிம்களின் சரியான புள்ளிவிவரம் இன்று யாருக்கும் தெரியாது. ஜே.ஜே.சிங் எட்டு சதத்திற்கும் குறைவாக இருக்கும் என்கிறார். எட்டு சதத்திற்குக் குறைவு என்றால் அது ஏழாகவும் இருக்கலாம். ஒன்றாகவும் இருக்கலாம். அரை ராணுவப் படைகளிலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்து சிறுபான்மை ஆணையத்திடம் விவரங்கள் உள்ளன. அஸ்ஸாம் ரைஃபில்சில் 2.5சதம் முஸ்லிம்கள். எல்லைப் பாதுகாப்புப் படையில் 4.54 சதம். இந்தோ - திபெத் எல்லைப் படையில் 1.81சதம். கிட்டத்தட்ட இதே அளவுதான் ராணுவத்திலும் இருக்கக்கூடும். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முலாயம் சிங் யாதவ் கூட ராணுவத்தில் முஸ்லிம்கள் 1சதத்திற்கும் குறைவாகவே இருப்பர் என ஊகமாகத்தான் சொல்ல முடிந்தது.

இராணுவத்திடம் இது குறித்த தகவல்கள் இல்லாமலில்லை. எல்லா வேலைகளுக்குமான விண்ணப்பங்களிலும் உள்ளதைப் போலவே ராணுவம் விண்ணப்பத்திலும் மதம் பற்றிய கேள்வி இருக்கத்தான் செய்கிறது. ராணுவம் சச்சார் குழு கேட்டத் தகவலை அமைச்சகத்திடம் கொடுத்துள்ளது எனவும், எனினும் இதை சச்சார் குழுவிடம் அளிக்கக்கூடாது எனக் கோரியுள்ளது என்றும் பத்திரிகைகளில் (இந்து, பிப்ரவரி 15) செய்தி வந்துள்ளது. ராணுவத்தின் எதிர்வினைக்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில் மோசமானது. சச்சார் குழுவின் செயல்பாட்டிற்கு தமது அலுவலகம் பொறுப்பல்ல என்று அது வழுக்கிக் கொண்டது.

ராணுவம் காட்டியுள்ள எதிர்வினை ‘ரொம்ப ஓவர்’ தான். விமானப்படையும், கப்பற்படையும் உரிய தகவல்களை அளித்தது போல இவர்களும் கொடுத்திருக்க வேண்டியதுதான் நியாயம். இப்படியான ஒரு பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் இந்துத்துவ சக்திகளுக்கு வலுசேர்ப்பதற்கே ராணுவத்தின் எதிர்வினை இன்று பயன்பட்டுள்ளது.

விமானப்படை, கப்பற்படைகளைப் போலல்ல தரைப்படை. இது மதக்கலவரங்கள் முதலானவற்றை நேரடியாகச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே மதவாரியான புள்ளி விவரம் அளிக்கக் கூடாது என இந்துத்துவ சக்திகள் கூறுகின்றன. மதக் கலவரங்களை நேரடியாகச் சந்திக்கும் நிலையில் உள்ளதாலேயே தரைப்படையிலும் (பிறவற்றிலும்) முஸ்லிம்களின் எண்ணிக்கை உரிய அளவில் இருக்க வேண்டும் என்கிறோம் நாம்.

மிருட் கலவரத்தின்போது ‘புராவின்சியல் ஆர்ம்ட் கான்ஸ்டபுளரி’ என்றும் அரை ராணுவப் படை அப்பாவி முஸ்லிம்களை ஆற்றோரத்தில் நிறுத்தி சுட்டு ஆற்றுக்குள் வீசியெறிந்ததை ஆம்னஸ்டி உட்பட உலக அளவில் மனித உரிமை அமைப்புகள் கண்டித்த செய்தியை நாம் அறிவோம். அடுத்த நாள் இந்துத்துவ சக்திகள் ‘பி.ஏ.சி. ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டு தெருக்களில் ஊர்வலம் போனதையும் நாம் மறவோம். இந்நிலை தொடராமல் தடுக்க ராணுவத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தேவை.

Pin It