"பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானம் செய்து கொண்ட பிறகு பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினை ஏன் தேர்தலில் உபயோகப்படுத்தப்பட்டது?" என்று சிலர் கேழ்வி கேட்கிறார்கள்.

இதற்கும் சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற பிரச்சினை வந்த காலங்களில் அதாவது ஜஸ்டிஸ் கட்சியாரின் ஒரு சாதாரண கூட்டத்திலும், ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு கூட்டத்திலும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் எதற்காக சேர்த்துக் கொள்ளப்படுகின்றது என்றும், எப்படிப்பட்டவர்களை சேர்த்துக் கொள்வது என்றும், இதுவரை ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதைப் பற்றியும், சேர்த்துக் கொண்ட பிறகும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விபரமாய் பேசியிருக்கின்றார்.periyar 614அதை ஒரு தரமாவது படித்துப் பார்ப்பவர்களுக்கு பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினை அடியோடு போய்விட வேண்டியது தானா அல்லது இன்னமும் இருக்க வேண்டியது தானா என்பது நன்றாய் விளங்கும்.

ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது என்பதில் ஒரு முக்கியமான நிபந்தனை இருக்கின்றது என்பதை யாவரும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது மக்களுக்கு சமுதாயத் துறையில் சகல வகுப்புகளுக்கும் சம சுதந்திரமும், அரசியலில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் அளிக்க சம்மதப்படும் பார்ப்பனர்களைத்தான் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை இருக்கிறது. இதையே பார்ப்பனர்களுக்காக இப்போது சிபார்சு பேசும் தர்மவான்கள் மறந்து விட்டதாகத் தெரிகின்றது.

எல்லோரையும் காங்கிரசில் சேர்த்துக் கொள்வது என்று காங்கிரசுக்காரர்கள் தீர்மானம் செய்து கொண்ட பிறகு ஏன் இந்தப் பார்ப்பனர்கள் காங்கிரசின் பெயரால் ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்க வேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிக்கவேண்டும் என்றும் பேசுகிறார்கள் கருதி இருக்கின்றார்கள்? என்று கேட்டால் இந்தப் பார்ப்பனர்களுக்காக சிபார்சு பேசும் மேதாவிகள் என்ன பதில் சொல்லுவார்களோ அதைத்தான் "பார்ப்பனர்களை சேர்த்துக் கொண்ட பிறகு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் பார்ப்பனர் அல்லாதார் என்பதைப் பற்றி ஏன் பேசுகின்றார்கள்" என்று கேட்கின்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது.

சகல வகுப்பாருக்கும் சமுதாயத் துறையில் சமசுதந்திரம் கொடுக்கவும் சகல வகுப்பாருக்கும் அரசியல் துரையில் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் கொடுக்கவும் சம்மதித்து ஒரு பார்ப்பனராவது இதுவரையில் ஜஸ்டிஸ் கட்சியில் வந்து சேர்ந்திருக்கின்றார்களா என்று கேட்கின்றோம்.

காங்கிரசை ஒப்புக் கொள்ளாத பார்ப்பனர்களோ அல்லது மிதவாதம் பேசும் பார்ப்பனர்களோ அல்லது சர்க்காரை ஆதரிக்கும் பார்ப்பனர்களோ யாராவது ஒரு பார்ப்பனராவது இதுவரை வந்து சேர்ந்து இருக்கின்றார்களா என்று பார்த்தால், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினை பார்ப்பனர்களிடத்திலேயே இருக்கின்றதா அல்லது போய் விட்டதா என்று கேட்கின்றோம்.

ஆகவே பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவது என்பது ஒரு நிபந்தனையின் பேரில் என்றும், அந்த நிபந்தனையை இதுவரை எந்தப் பார்ப்பனரும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், நிபந்தனையில் பற்றுள்ளவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை அடியோடு கைவிட்டுவிட முடியாதென்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

(பகுத்தறிவு கட்டுரை 02.12.1934)