தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த தூதர்களுக்கு சென்னை மந்திரிகள் ஒரு விருந்து நடத்தியிருக்கிறார்கள். அவ்விருந்தில் அத்தூதர்களை பனகால் ராஜா பாராட்டிப் பேசுகையில், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்பட்ட பல நன்மைகளைப் பற்றியும், தென்னாப்பிரிக்கா போன்ற பல குடியேற்ற நாட்டின் சம்பந்தத்தைப் பற்றியும் சில வார்த்தைகளும் சொல்லி விட்டு, இந்தியாவிலிருக்கும் சில பண்டைக்கால நாகரீகத்தின் வேறுபாடுகளுக்காக எங்களைத் தாழ்வாய் கருதக்கூடாது, தற்கால சமூக சம்பிரதாயங்களுக்கு அதுகள் பிடிக்காமல் இருப்பது வாஸ்தவம்தான், ஆனால் அவை துரிதமாக மறைந்து வருகிறது என்று சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன் என்று பேசியிருக்கிறார். (இது சுதேசமித்திரனிலேயே இருக்கிறது) இந்த வார்த்தைகளுக்காக மித்திரன் ‘பனகால் ராஜாவின் உளறல்’ என்று போக்கிரித்தனமான தலையங்கமிட்டு இதைக் குறிப்பிட்டிருப்பதுடன் ‘தேசாபிமானமற்ற மந்திரி’ என்கிற தலையங்கங் கொண்ட வியாசமும் எழுதியிருக்கிறான். அதோடு தென்னாப்பிரிக்காவில் உள்ள தங்கள் கோவில்களில் ‘நாய்களும், கருப்பு மனிதர்களும் உள்ளே வரக்கூடாது’ என்று விளம்பரம் எழுதி ஒட்டியிருப்பதற்காக மிகவும் வருந்துவதாக நீலிக்கண்ணீர் விட்டு இந்தக் காரணங்களால் குடியேற்ற நாட்டு சம்பந்தத்தால் இந்தியா கவுரவக் குறைவை அடைந்திருக்கிறது என்றும் எழுதியிருக்கிறான்.
திரும்பவும் இந்தியாவிலிருக்கும் பல கெடுதலான நாகரீகத்திற்கும் சமாதானமாக இங்கிலாந்தில் எல்லோரும் மிதமாய் குடிக்கிறார்களாதலால் அந்த நாகரீகத்திற்கும் இந்த நாகரீகத்திற்கும் சரியாய் போய்விட்டதென்றும் கொஞ்சமும் வெட்கமில்லாமல் எழுதுகிறான். இன்னும் இதுபோல் பலதுகள் எழுதிவிட்டு பனகால் ராஜா தன்னை வெகுஜனப் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டது தப்பிதம் என்றும், இனி அப்படிச் சொல்லிக் கொள்ளச் செய்யாமல் செய்துவிட வேண்டும் என்றும் எழுதி முடித்திருக்கிறான். இதில் எவ்வளவு அயோக்கியத்தனமும், ஆணவமும், இழிகுணமும் இருக்கிறதென்பதை வாசகர்கள் நன்றாய் கவனிக்க வேண்டும்.
நமது மக்களின் அறியாமையால் தங்களுடைய பத்திரிகை பாமர மக்களை ஏமாற்றத்தக்கதாக இருக்கிறது என்கிற ஒரு காரணத்தினாலேயே நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாராகிய நம்மை அடியோடு அழுத்துவதற்கு என்ன என்ன சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம் . இந்தியாவுக்குப் பார்ப்பனர் கொடுமையில் ஏற்பட்ட ‘நாகரீகத்தை’ கனம் பனகால் ராஜா எடுத்துச் சொல்லாவிட்டால் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரருக்குத் தெரியாமல் போகுமென்று ‘மித்திரன்’ நினைத்துக் கொண்டு ஆத்திரப்பட்டிருக்கின்றான் போலும். இது எவ்வளவு அறிவீனம். ஐரோப்பாவில் குளிருக்காகவும், ஜீரண சக்திக்காகவும், சிறு அளவாகக் குடிக்கும் சாராயத்திற்கும் நமது நாட்டு நாகரீகத்திற்கும் ஒப்பிட்டிருப்பது எவ்வளவு மோசமானது என்பது நாம் சொல்லாவிட்டாலும் வாசகர்களுக்கு விளங்காமல் போகாது. இந்த நாட்டுக்கு பிச்சை எடுக்க வந்த ஒரு கூட்டத்தார் தங்களை பிராமணர்கள் என்றும், உயர்ந்த ஜாதியார் என்றும், லோக குரு என்றும், மகந்துகள் என்றும், ஆச்சாரியார்கள் என்றும் இந்நாட்டுவாசிகளை ஏமாற்றி தங்கள் கால்களை கழுவின தண்ணீரை வெள்ளியும் தங்கமும் கொடுத்து வாங்கிக் குடித்தால் மோட்ச வீடு திறக்கப்படுமென்று ஏமாற்றும் அயோக்கியத்தனம், ஐரோப்பாவில் குளிருக்காகவும் ஜீரண சக்திக்காகவும் என்று அந்த நாட்டு சீதோஷ்ண ஸ்திதியை அநுசரித்து சிறு அளவாகக் குடிக்கும் சாராயத்திற்கு ஒப்பு ஆகுமா?
இந்நாட்டுப் பார்ப்பனர் தாங்கள் எவ்வளவு அயோக்கியர்களாக இருந்தாலும் திருடர்களாக இருந்தாலும் தாங்கள் ஒரு வகுப்பில் பிறந்து விட்ட காரணத்தினாலேயே தங்களை உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொண்டும், மகாத்மாவானாலும் எவ்வளவு யோக்கியர்களானாலும் தர்ம ஸ்ரேஷ்டர்களானாலும் தியாகிகளானாலும் ஒரு வகுப்பில் பிறந்தார்கள் என்கிற காரணத்திற்காகவே சூத்திரன், வேசி மகன், அடிமை என்று கூப்பிடும் அக்கிரமத்திற்கும் ஐரோப்பியர்கள் சிறு அளவாய் குடிக்கும் சாராயத்திற்கும் ஒப்பாய் விடுமா? தவிர தென்னாப்பிரிக்கா கோவில்களில் நாய்களும் கருப்பு மனிதர்களும் போகக்கூடாது என்று போர்டுகள் போட்டதினாலேயே கருப்பு மனிதருக்கு அவமானம் வந்து விட்டதாகவும், இதினாலேயே இப்படிப்பட்ட குடியேற்ற நாட்டு சம்பந்தத்தை பனகால் ராஜா வெறுக்காதது தேசாபிமானமற்றது என்றும் எழுதி இருக்கிறான். வெள்ளையர்கள் தங்கள் சொந்தக் கோவிலில் நாய்களையும் கருப்பு மனிதர்களையும் விடாததற்காக அவர்களை வெறுக்க வேண்டுமானால் நமது பார்ப்பனர் நமது பணத்தைச் செலவு செய்து போடப்பட்ட நமது ரோட்டில் நாயும், பன்றியும், கழுதையும், மலமும், மூத்திரச் சட்டியும் போகலாம், ஆனால் இந் நாட்டு மக்கள் நடக்கக் கூடாது என்று சொல்லுபவர்களை என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறோம்?
பூனை, செத்துப் புழுத்த எலியைத் தூக்கிக் கொண்டு புழு கீழே உதிர உதிர உள்ளே போகலாம், பார்ப்பனர் குஷ்டரோகியானாலும் விபசாரி வீட்டு மாமாவானாலும் கோவிலுக்குள் திருடவும், புரட்டுப் பண்ணவும், சுவாமி சொத்தைக் கொள்ளையடிக்கவும் சுவாமியிடம் போகலாம், சுவாமியைத் தொடலாம், ஆனால் நமது பணத்தைச் செலவு செய்து கட்டிய கோவிலுக்குள் நாம் மாத்திரம் பக்தியோடு பரிசுத்தத் தன்மையோடு சுவாமியைக் கும்பிடக் கூட சுவாமி பக்கத்தில் போகக்கூடாது என்றால் இவர்களை என்ன செய்ய வேண்டும்? தங்கள் பெண்கள் எல்லாம் பிராமண ஸ்திரீகள்; நமது பெண்களை எவ்வளவு பதிவிரதைகள் ஆனாலும் சூத்திரச்சிகள் என்று ஒரு கூட்டத்தார் சொல்வதானால் அவர்களை என்ன செய்ய வேண்டும்? இம்மாதிரி கொடுமை செய்பவர்களையெல்லாம் வைத்துக் கொண்டும், அவர்களோடு உறவாடிக் கொண்டும், அவர்களை வணங்கிக் கொண்டும், மலையாளம் முதலிய இடங்களில் அவர்களுக்கு நமது ஸ்ரீகளை அனுபவத்திற்கு விட்டுக் கொண்டும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் மித்திரனுக்கு, தென்னாப்பிரிக்கா தூதுவர்களை வரவேற்கையில் அவர்களைப் புகழ்ந்து பேசிய நமது பனகால் ராஜாவின் பேச்சுக்கள் தேசாபிமானமற்றதாகிவிட்டதென்றால் இம்மித்திரன் கூட்டத்தாரோடு உறவாடிக் கொண்டும், அவர்கள் அக்கிரமங்களையும் அயோக்கியத்தனங்களையும் சகித்துக் கொண்டும் இருப்பவர்களுடைய செய்கை தேசத்துரோகம் ஆவதோடு, இப்படிப்பட்ட பார்ப்பனர் சம்பந்தத்தால் இந்தியா சுயமரியாதை அற்றுக் கிடக்கிறதா இல்லையா? என்று நமது பார்ப்பனரையும், மித்திரனையும் கேட்கிறோம்.
தவிர பனகால் ராஜா அவர்கள் இந் நாட்டுப் பிரதிநிதி என்று சொல்லுகிறார் என்றும், இனி அப்படிச் சொல்லிக் கொள்ள செய்யக்கூடாது என்றும் சொல்லுகிறான். இதிலிருந்து இதுவரை பனகால் ராஜாவை பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள பொது ஜனங்கள் உரிமை கொடுத்திருக்கிறார்கள் என்பதை மித்திரன் ஒப்புக் கொள்ளுகிறான் என்பது வெளியாகிறது. ஆனால் இனிமேல் அவரைத் தள்ளிவிட வேண்டுமென்கிறான். அப்படியானால், மற்றபடி யாரை பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்ல வேண்டுமென்று மித்திரன் ஆசைப்படுகிறான் என்பது நமக்கு விளங்கவில்லை. நாயுடு, நாயக்கர் முதலியோர் காங்கிரசை விட்டு ஒழிந்ததால் காங்கிரஸ் பரிசுத்தமாய் விட்டது என்றும், நாயக்கரையும் ஆரியாவையும் ஏன் இன்னமும் ஜெயிலில் பிடித்து அடைக்கவில்லை என்று சர்க்காரையும் பார்ப்பன உத்தியோகஸ்தரையும் கெஞ்சும் ஸ்ரீமான் அய்யங்காரையா? பார்ப்பனரல்லாதாரை ஒழிக்கவும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டவும், பணங்காசு செலவு செய்து பிரசாரம் செய்து மகாத்மா காங்கிரசின் யோக்கியதையையும் கெடுத்து, தன்னை காங்கிரஸ் தலைவராக்கிக் கொண்ட ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரையா? ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொன்ன ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரையா?
சென்னை பார்ப்பனரல்லாத மகாநாட்டுக்குத் தலைமை வகித்து வந்த கனம் யாதவர் என்கிற பார்ப்பனரல்லாத பம்பாய் மந்திரியை ஏன் சிறையிலடைக்கக் கூடாது என்று கேட்ட ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளையா? மக்கள் பிறவியில் உயர்வு, தாழ்வு இல்லை என்று சொன்னவுடன் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ராஜினாமா கொடுத்துத் தன்னுடைய இஷ்டர்களையும் ராஜினாமா கொடுக்கச் செய்து தொழிலாளர்கள் வயிற்றில் மண்ணைப் போட்டுக் கொண்டிருப்பவரும் கள்ளு உற்பத்தி செய்பவருமான பார்ப்பனருக்கு ஓட்டுவாங்கிக் கொடுக்க கிராமம் கிராமமாய்த் திரிந்த ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியாரையா? கல்பாத்தி பொதுத் தெருவில் யார் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சட்டசபைத் தீர்மானத்தின் பேரில் சர்க்கார் உத்திரவு போட்டிருந்தும், வேலையிருந்தால்தான் போகலாம் என்று வியாக்யானம் செய்த சட்டமெம்பர் ஸ்ரீமான் சி.பி.ராமசாமி அய்யர் அவர்களையா? மகாத்மாவை சிறையிலடைத்து ஆறு வருஷம் தண்டிப்பதற்கு உதவியாயிருந்து சர்க்காருக்கு தைரியம் சொல்லி தன் மக்களுக்கு பெரிய பெரிய உத்தியோகம் சம்பாதித்துக் கொண்ட ஸ்ரீமான் மகா மகாகனம் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளையா? ரௌலட் ஆக்டுக்கு கையொப்பமிட்ட ஸ்ரீமான் குமாரசாமி சாஸ்திரிகளையா?
சுதேசமித்திரன் பத்திரிகை ஒழுங்காயில்லை; மகாத்மா காந்திக்கும் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கும் விரோதமாய் எழுதி வருகிறது; ஆதலால் காங்கிரசிலிருந்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் பொதுவாகவும் சத்தியமாகவும் எழுதி வருகிறோம் என்று சொல்லிப் பொதுப் பணத்திலிருந்து பத்தாயிரம் பெற்று “அவன் போனால் கலகமாகி விடும்; நான் போனால் செருப்பாலடித்து விட்டு வருகிறேன் என்று ஒருவன் சொன்னானாம்” அதுபோல் சுதேசமித்திரனை விட கேவலமாய் பார்ப்பனரல்லாதாருக்கு துரோகம் செய்துவரும் ஸ்ரீமான் பிரகாசம் அவர்களையா? சென்னை நகரப் பொதுமக்கள் பிரதிநிதியாக இந்தியா சட்டசபைக்குப் போய் அதன் பலனாய் படிக்காத தன் மக்களுக்கு எல்லாம் 400, 500 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்களை சம்பாதித்துக் கொண்ட ஸ்ரீமான் டி. ரங்காச்சாரியார் அவர்களையா? பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்கென்றே பார்ப்பனர் அல்லாதார் பணத்திலேயே பத்திரிகை நடத்தும் .........ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார் அவர்களையா? அல்லது வேறு அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சர்மா, சாஸ்திரியார் முதலியவர்களையா? என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரல்லாத மக்களின் ஒற்றுமையற்ற நிலையையும், தங்கள் பத்திரிகை பலத்தின் ஆணவத்தையும், பாமர ஜனங்களின் அறியாமையையும் அறிந்த பார்ப்பனர்கள் இவ்வளவு தான் சொல்லுவார்களா? இன்னமும் அதிகமாய்ச் சொல்லுவார்களா? என்பதைப் பற்றி நாம் யோசிக்கவே வேண்டியதில்லை.
(குடி அரசு - கட்டுரை - 03.10.1926)