கொச்சி ஈழுவ சமுதாய வீரரும் பிராமணரல்லாதார் இயக்கத்தின் உயரிய மேம்பாட்டிற்கு ஆரம்ப கால முதல் பெரிதும் உழைத்தவரும் சமதர்ம லட்சியத்தில் தீவிர பற்றுடையவருமாகத் திகழ்ந்த சென்னை தோழர் O.C. சீனிவாசன் அவர்கள் 18134ல் பஸ் விபத்தால் அகோர மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். தோழர் O.C. சீனிவாசன் அவர்கள் பாழான வர்ணாச்சிரம தர்மத்தையும் அதைப் போன்றதான இன்றைய முதலாளி தொழிலாளி, பணக்காரன் ஏழை என்ற கொடுமைகளையும் அறவே அகற்றப் பெரிதும் துணிவோடு தொண்டாற்றிய வாலிப வீரராவார். வாலிப உலகம் ஆண்மை, தியாகம் என்ற இரு குணங்களையும் பின்பற்றுவதற்கு அவர் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

உதாரணமாகச் சென்ற மூன்று வருஷங்களுக்கு முன்பு கொச்சி சமஸ்தான S.N.D.P. யோகத்தில் தலைமை தாங்கி மதப் பிரசாரத்தையும் உயர்வு தாழ்வுக்கான பொல்லாத வர்ணாஸ்ரமத்தையும் பற்றி வடநாட்டு பெருத்த பழுத்த வைதீகப் பண்டித மதன் மோகன மாளவியா அவர்கள் நெஞ்சில் மான ஈனமில்லாது பேசியகாலையில் நமது அருங்குணங்களமைந்த வீரர் ஆண்மையோடு தீப்பொறி பறக்கத் தனது தொப்பியை (Hat) அவர் முகத்திற்கு நேரே வீசி அவரது பிரச்சாரம் சிறிதும் செலாவணியாக விடாமல் மாளவியை உடனே மலையாள நாட்டை விட்டு விரட்டிய பேராற்றல் மிக்கவரில் குறிப்பிடத்தக்க முக்கியஸ்தராவர்.

நாற்பது ஆண்டுகளே நிறைந்த வீர சீனிவாசனை வாலிப உலகம் இழக்கப் பெரிதும் துயருறுகிறது என்பதில் ஐயமில்லை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஆசார சீர்திருத்த மகாநாட்டில்தான் தமிழர்களின் உயரிய வாழ்க்கைக்கு வீரகர்ஜனை செய்து மைலாப்பூர் பார்ப்பனீயத்திற்குக் குழி தோண்டிப் புதைத்து, தமிழர்களின் ஆண்மைக்கு ஆக்கம் தேடிக் கொடுத்த சீரியராவார். இப்பேர்க்கொத்த நமது தோழர் சீனிவாசன் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறோமெனினும் இயற்கையின் போக்கை உணர்ந்த நாம் அதன் மூலமே ஆறுதலுறுவதோடு அவரது அருமை மனைவியாரும், குடும்பத்தாரும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகின்றோம்.

(புரட்சி துணைத் தலையங்கம் 21.01.1934)

Pin It