நாடெங்கும் மண் பிள்ளையார் உருவ உடைப்பு – அதாவது உருவ வழிபாடு வெறுப்புக் கிளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு மேல் வெற்றிகரமாக நடந்தது குறித்து எனது உளமகிழ்ந்த மகிழ்ச்சி.

சில இடங்களில் சிறிய கலவரங்களும், ஒரளவுக்குப் பலாத்காரமும் நடந்ததாகப் பத்திரிகைகளில் சேதிகள் காணப்படுகின்றன. ஆனால் நமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து இவை மிகைப்படுத்தி வெளியிட்ட செய்திகளாகத் தோன்றுகிறது.

periyar with his familyசில இடங்களில் எனது உருவப்படங்கள் கொளுத்தப்பட்டதாகவும், எனது உருவம் என்று சொல்லி புல் உருவம் கொடும்பாவி கட்டிக் கொளுத்தியதாகக் காணப்படுகின்றன. இவை உண்மையாயிருக்கலாம். இதை வரவேற்கிறேன். கொடும்பாவி கட்டி இழுக்கும் செயலுக்கு இச்செய்கை புத்திக் கற்பிக்கும் என்றே கருதுகிறேன். அன்றியும் இப்படிப்பட்ட செய்கை உருவ வணக்கத்தை ஒழிக்கக் கருதும் உண்மையான மக்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும் என்றே கருதுகிறேன்.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் 28-ந் தேதி பிற்பகல் திருச்சிக்கு 55–மைல் தூரமுள்ள பாபநாசத்தை அடுத்த கோயில் தேவராயன்பேட்டைக்கு கழகத் திறப்பு விழாவிற்குச் சென்று விட்டு அன்று இரவு சுமார் 11-30 மணிக்கு திருச்சிக்கு – என் ஜாகைக்கு வரும் போது கழகக் காம்பவுண்டிற்குள் சுமார் 1000-பேர்கள் வரை தடிகள், கத்திகளுடன் இருந்து உற்சாகமாக ஆத்திரப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தனர். நான் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தினேன். ஆனால் "பெரியார் வாழ்க!" என்ற ஆரவாரத்துக்கிடையே என்னை வரவேற்றனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு வாலிபனை இழுத்துக் காட்டி, அவனிடமிருந்த நெருப்புப் பற்ற வைக்கத்தக்க ஒரு நெருப்புப் பந்தத்தைக் காட்டினார்கள்.

விஷயம் என்னவென்றால், என் மாளிகையைக் கொளுத்த ஒரு கூட்டம் திட்டமிட்டு வந்ததாகவும், அப்போது சிலர் ஒடி விட்டதாகவும், இந்த வாலிபனை ஓடிப் பிடித்ததாகவும் சொல்லியதுடன், போலீசாருக்குத் தகவல் தெரியப்படுத்தியிருப்பதாகவும் சொன்னார்கள்.

இது ஒரு பார்ப்பன மிராசுதார் ஏற்பாடு என்றும், சில பார்ப்பன வக்கீல்களின் மூளை வேலையென்றும் சொல்லி என்னை உடனே மாடியில் படுத்துக் கொள்ளும்படி தட்டிக் கொடுத்து அனுப்பிவிட்டனர்.

பின்னர் போலீசு வந்தவுடன் அவர்களை வைத்து எதிரிகள் ஓடிய வழியை எதிர் காம்பவுண்டுக்குள் போய் பார்த்தனர். எதிர் காம்பவுண்டு சுவரில் உட்புறம் மற்றும் 2, 3-பந்தங்களும் ஒரு பாட்டில் பெட்ரோலும் இருக்கக் கண்டு எடுத்தார்கள். போலீசார் அந்த வாலிபனை அழைத்துக் கொண்டு இவைகளையும் எடுத்துப் போய் விட்டனர்.

இதன் விளைவு என்னமோ ஆகட்டும்.

புத்தருக்கும் புத்தர் ஸ்தாபனங்களுக்கும் ஏற்பட்ட நிலைமைகள் நமக்கும் ஏற்பட்டே தீரும். அது எதிர்பார்த்ததுதான். நாம் இந்தத் தொழிலில் இறங்கியிருப்பதால் நமக்கு இதில் ஏமாற்றமொன்றுமில்லை!

கொலை, இரத்தக்களரி, கொளுத்தல் இல்லாமல் ஒரு கொள்கை எதுவும் புரட்சிகரமான மதக் கொள்கை ஏற்படுவது என்பது என்றுமே முடியாத காரியமாகும்.

ஆதலால் இது கழகத்திற்கு ஒரு சோதனை. கழகத் தோழர்கள் இதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நம்மால் எங்கும் எவ்வித சிறு பலாத்காரமான காரியமும் ஏற்படக்கூடாது.

இது விஷயத்தில் அரசாங்கத்தின் ஆதரவையும், அனாதரவையும் ஒன்றுபோலவே பாவிக்க வேண்டும்.

இதற்குத் தயாராகயிருக்க முடியாதவர்கள் ஒதுங்கிக் கொள்வது வரவேற்பதாகும்.

எனக்குப்பின் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி துணிவுடன் சிந்தித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

(29.05.1953- 'விடுதலை' இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா)

Pin It