சுற்றும் குதிரைகள் குளம்படி

சுற்றிலும் கேட்கிறது - அதில்

பற்றும் நெருப்புப் பொறியினிலே

ஓர் பாதை தெரிகிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் சாதியமும் பணநாயகமும், சனநாயகமாகிப் போன காலம். தற்போது நாட்டை ஆண்ட பேராயக் கட்சி (காங்கிரசு) மதவாத நெருப்பை அணைக்கவில்லையானாலும் மதச்சார்பு அற்ற கொள்கை கொண்டிருப்பதாய்ப் பறைசாற்றியது.

காந்தியார் படுகொலைக்குப் பிறகு பல்வேறு வடிவெடுத்த மதவாதம், படிப்படியாய் ஏற்றம் கண்டு பாசிசப் பெருவடிவாய் மத்தியில் கோலோச்சுகிறது. கலப்புப் பொருளாதாரமென தொடங்கிய நேரு ஆட்சி, பின்னர் சோனியா காலத்தில் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என உருக் கொண்டது. முகவரை மாற்றும் மக்களாட்சியில், “பொருள் உங்களுக்கு-இந்துத்துவம் எங்களுக்கு” எனும் பெரு முதலைகளின் பேரத்தில், ‘மோடி’ முகவராய் அடையாளம், பெற்றார். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே அடையாளம் என்ற முழக்கத்தோடு இலட்சிய பாசிசம் நீட்டும் நச்சுக்கரங்களில் பட்டும் படாமல் தமிழ்நாட்டு (நடைமுறை) அரசியல் அமைப்புகள் நல்லுறவு பேணுகின்றன.

தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, சமூக நீதி என்பவை கொலைக் களத்திற்குக் காத்திருக்கின்றன. உலகமயம், அனைத்திற்கும் தீர்வல்ல. பன்முக சமுதாயத்தின் வேர்களைக் கெல்லியெறியும் கோடரி என்று பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் உணரும் நிலையில் இல்லை. ஒரு சமுதாயம் பட்டினி கிடப்பினும் உயர்ந்த விழுமியங்களைக் கொண்டி ருப்பின் அதனை அடிமைப்படுத்த முடியாது. எனவே, விழுமியங்களை விழுங்கும் பாசிச மதவாதம், தமிழ் மண்ணில் வேரூன்ற, கிளை பரப்ப அனுமதித்தலாகாது என்று உணரச் செய்ய வேண்டும். இதனை யார் செய்ய வல்லவர் எனில், மார்க்சியப் பெரியாரியக் கோட்பாட் டாளர்களே என்று தெளிவுற முடியும்.

பெரியார் ஒரு கலகக்காரர்

அறிவு உயர்வு தரும் என அனைவருக்கும் கல்வி வேண்டினோம். பின் கல்வி கடைச்சரக்கு ஆயிற்று. வாங்கிய பொருளை விற்க முடியாத சிறு வியாபாரி போல, படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத இளைஞர்க்கு உலகமயம் வழிகாட்டும் என்றனர். தேசம் துறந்த - மக்களை மறந்த - மானுடமற்ற எந்திர வாழ்வு கிட்டியோர் போக, எஞ்சியோர் எட்டாத உயரத்து, கிட்டாத வேலைக்கு ஆலாய்ப்பறந்து பொழைக்கத் தெரியாத பசங்களாய்ப் பரிதவிக்கும் மண்ணி தில், கண்ணீர்த்துளிகளும் காட்டாத சமத்துவத்தை, காணப் பெரியாரியம் வழிகாட்டும்,

ஆர்க்கின்ற முரசங்கள், விம்முகின்ற தாரைகள், கொம்பு, குழல், மத்தளங்கள் இசையெழுப்ப, காவித் தோரணங்கள் கருப்பு, சிவப்பு பதாகைகளோடு உயரப் பார்க்கின்றன. தன்னையே நோக்கியப் பார்வையைத் திருப்ப வேண்டிய தமிழரினம், வடவருக்கு வால் பிடிக்கும் காலமிது. கிளர்ச்சிப் பெரியார், கலகப் பெரியார், கருத்துப் பெரியார், களம் கண்ட பெரியார், முன்னெப்போதைக் காட்டிலும், இப்போது தேவைப் படுகிறார்.

அம்பேத்கரியப் பெரியார்

பெரியாரியச் சிந்தனைகளை. அம்பேத்கரியத்தைப் பின்பற்றும் சிந்தனையாளர்களும் மற்றும் இயக்கங்களும் ஏற்றுக்கொள்வதில் இன்னமும் தயக்கமிருப்பினும், அம்பேத் கரது பங்களிப்பை அவர் தம் கருத்துகளைப் பெரியார் காலந்தொட்டே திராவிடர் கழகம் ஏற்றுக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. ‘இரட்டை வாக்குரிமையை’க் கைவிடக் கோரி காந்தி நடத்திய உண்ணாநோன்புக்காக, பெற்ற உரிமையை இழக்க வேண்டாம் என அம்பேத்கருக்குத் துணிவுடன் சொன்னவர் தந்தை பெரியார் என்ற உண்மை யிலிருந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையூறு அற்ற சம வாய்ப்பு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முனைப்புக் காட்டியவர் என்பதை யாரும் மறக்க இயலாது.

பெரியாரது இரஷிய நாட்டுப் பயணமும் அதற்கென அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் அங்கிருந்த தொழிற் சாலைகளையும், தொழிலாளர் உணவுக் கூடங்களையும் நேரில் பார்த்தறிந்த அவர், 1932 ‘மே தின’ விழாவில் சிறப்புப் பார்வையாளராகப் பங்கேற்று நாடு திரும்பினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும் வெளியிட்டார். பின்னாளில் “பகத் சிங்கின்” “நான் ஏன் நாத்திகனானேன்” எனும் கட்டுரையையும் வெளியிட்டார். இவற்றினின்று அவருக்கிருந்த பொதுவுடைமை அமைப்புப் பார்வை வெளிப் படுகிறது. பெரியாரின் மறைவுக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து, பொதுவுடைமைக் கட்சியினர் பெரியார் ஒரு ‘கலகக்காரர்’ எனப் பெயர் சூட்டி ஏற்றுக் கொண்டனர்.

காங்கிரசு பல பிரிவுகளான போதும் அதற்கான பெரி யாரின் பங்களிப்பை யாரும்  மறுப்பது இல்லை. சங்கப் பரிவார் அமைப்புகளைத் தவிர்த்த அனைத்துத் தமிழ்நாட்டுக் கட்சிகளும், தன்னாட்சி கோரும் தமிழ்த்தேசிய இயக்கங் களும் பெரியாரை ஏற்கின்றன; பாராட்டுகின்றன; ஆனால், பெரியாரின் சாதி ஒழிப்பு, சமற்கிருத எதிர்ப்பு, பெண் விடுதலை இவற்றை முன்னெடுத்துச் செல்வதில், நடைமுறை அரசியல் பார்வை கொண்டிருப்பதால் தயங்கித் தவிர்த்து விடுகின்றனர். இருபெரும் திராவிடக் கட்சிகள், அண்ணாவை மேற்கோள் காட்டவே தயங்குகிற சூழலில், கலைஞருக்குப் பிறகு பெரியார் எனும் கருத்துப் பிம்பம் காப்பாற்றப்பட வேண்டிய வரலாற்றுக் கடமை பெரியாரிய இயக்கங்களை நம்பியிருக்கிறது.

பெரியாரின் பெரும் பற்றாளர்

ஆனால் பெரியாரிய இயக்கங்கள் கருத்தளவில் ஒன்றுபட்டாலும், செயலளவில் வேறுபட்டிருக்கின்றன. தந்தை பெரியாரது திராவிடர் கழகத்தை வழிநடத்தும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 80 அகவை கடந்தவர். வாய்ப்பும் வசதி களும் பெற்ற அமைப்பின் முன்னோடியான அவர் மற்றவர் களை அழைக்க வேண்டிய அவசியமில்லாமிருக்கலாம்.

பெரியாரது மிகச்சிறந்த தோழர் சிந்தனையாளர் அய்யா வே. ஆனைமுத்து அவர்கள், சமூக நீதிச் சுடரை வடபுலத்து மாநிலங்களில் ஏற்றி வைத்து, மண்டலை நடைமுறைப் படுத்தி, கமண்டலத்தைக் கதறச் செய்தவர். அகவை 93-ஐத்தாண்டி இன்றும் அயராது பணியாற்றுபவர். சிறியதொரு அறக்கட்டளை வழி பெரியாரியல் கல்வி வகுப்புகளை நடத்தி, இளையோரிடம் பெரியார் பற்றிய புரிதலையும், பற்றுதலை யும் உருவாக்கி வருபவர். மார்க்சிய, அம்பேத்கரியப் புரிதலோடு, பெரியாரது சிந்தனைகளுக்கு வலுவூட்டுபவர்.

பல்வேறு இடர்ப்பாடுகள், தளைப்பாடுகள் இருப்பினும், தமிழ், தமிழர், பெரியார் எனும் பேராண்மையோடு தனித்து இயக்கம் கண்டவர் பெரியாரியத் தொண்டர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள். விடுதலைப் புலிகள் பெயரை உச்சரிக்க அஞ்சிய காலத்தில், புலிகளுக்கு உற்ற துணையாய் நின்று, “தடா” சட்டம் கண்டு மீண்டவர். இளைஞர்கள் ஏற்கும் தோழராய் இன்றும் வலம் வரும் இவரை  எல்லாக் கட்சியினரும் அடையாளங்கண்டு அங்கீகரிக்கின்றனர்.

செயல்பாட்டு வடிவில் தன்னுணர்வோடு, நினைத்ததை நடத்திக் காட்டும் திறம் படைத்த அரசியல் செயல் வீரர் தோழர் கு.இராமகிருஷ்ணன், மக்கள் விரோத நடவடிக்கைகளை மற்றவர்கள் அறிக்கை வழியே கண்டிக்கும் வேளையில், உடனடிப் போராட்டத்தின் வழியே தமது இயக்க எதிர்ப்பை உணர்த்திடும் தடுமாற்றமில்லாச் சிந்தனையாளர்.

விடுதலைக் களம்

இவர்களது அனைவரது களமும், பெரியாரியப் போராட்டச் சிந்தனைக்களம். எது வரினும் அஞ்சாத விழுமியங் கொண்ட பெரியார் வீழ்ந்து விடவில்லை. தமிழ்க் களப் போராட்டத்தில் உயிர் வாழ்கிறார் என ஒவ்வொருவரும் உணர்த்தும் உயிர்ப் பொருள் எனலாம். இவர்களது களங்கள் வெவ்வேறாயினும், எண்ணிக்கை எத்தனையானாலும் தமிழர் நலம், அறிவியல் சார்ந்த அணுகுமுறை, வீழ்த்த முடியாத விவேகம், இவற்றால் இவர்கள் தாம் இன்று பெரியாரின் வழித்தோன்றல்கள். இவர்களை ஒட்டித்தான் பெரியாரியம் இம்மண்ணில் உயிர்த்திருக்க முடியும். முத்துக் குமாரும், செங்கொடியும் இன்னும் பல இளங்குருத்து களும் ஈகம் செய்த இம்மண்ணில் இன்றைய சூழலில் பெரியாரியமே வலிமை மிக்க ஆயுதம். மாறிய சூழலில் அது கூர்மைப்படுத்தப்பட வேண்டும்; பல்கிப் பெருக வேண்டும்.

வரலாற்றுக் கடமை

காலம் உங்களிடம் ஒன்றைக்கோரும் போது அதனைத் தட்டிக்கழித்துப் புறக்கணித்துவிட முடியாது. மகத்தான மனிதர்கள் மகத்தான கனவுகள் கொண்டிருந்தால் மட்டும் போதாது. மகத்தான காரியங்களை நிகழ்த்திக் காட்டி, வரலாற்றில் பதிவு பெற வேண்டும். பெரியார் எனும் மகத்தான ஆளுமையின்றி, இருபதாம் நூற்றாண்டு தமிழ் நாட்டுச் சரித்திரம் அமையாது. இருபத்தி ஓராம் நூற்றாண்டு கூட, பெரியாரது கருத்தாளுமையைக் கோருகிறது. பெரியார் வழித்தோன்றல்களும் அவர்களது செயல்பாட்டு ஒற்றுமை யின்றியும் பெரியாரின் கொள்கைகள் நிறைவுறா.

எனவே, பெரியாரிய இயக்கங்கள் மன வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைந்திடல் காலத்தின் கட்டாயம். எல்லா இயக்கங் களும் இணைந்து ஓரியக்கமாக, உரத்தக் குரலில் இக்காலத் திற்கேற்ற, மதவாத, பாசிச அமைப்புகளுக்கு முடிவு கட்டவும், நடைமுறை அரசியலாளர் நடை திருத்தவும், தமிழகத்து மண்ணில் நாட்டோர் நலம் காக்கும் நல்லரசியலுக்கு மட்டுமே இடமுண்டு எனும் புதிய பிரகடனம் ஒன்றை வெளியிட வேண்டும். அந்த நாள் நாட்டை பீடித்திருக்கும், நச்சுக்கிருமிகளுக்கு முடிவு கட்டும் முதல் நாளாய் இருக்க வேண்டும். அதற்கு மார்க்சியப் பெரியாரிய இயக்கத்தார் நால்வரும் மற்றும் பெரியார் பெருந்தொண்டர்களும் இதற்கான கருத்தொரு மித்தலைத் திட்டமிடுங்கள் என, பெரியாரின் பெயரால் தலை தாழ்த்தி வேண்டுகிறேன்.

எனவே பெரியாரியச் சிந்தனையாளரின் பார்வையும் பரிசீலனையும் வேண்டி இந்த வேண்டுகோளை விடுக்க விழைகின்றேன்.

Pin It