periyar 283ஈரோடு மகாநாடு விஷயமாய் சென்ற வாரம் எழுதி இருந்த தலையங்கத்தில் அரசியல் விஷயமாய் நம்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு அடுத்த வாரம் சமாதானம் சொல்லுவோம் என்று எழுதி இருந்தோம்.

அதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை பல தடவைகள் சொல்லியும் எழுதியும் இருந்தாலும் மகாநாட்டின் நடவடிக்கை விஷயமாய் பொறாமை கொண்டவர்களுக்கும் வேறு மார்க்கம் இல்லாமல் இந்த சமயத்தில் அதாவது.

“வெள்ளைக்காரர்கள் இந்திய ராஜ்ய பாரத்தை மகாத்மாவிடம் ஒப்புவித்து விட்டு மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு பெண்டு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறுகின்ற சமயத்தில் சுய மரியாதைக்காரர்கள் அவர்களை (வெள்ளைக்காரர்களைப்) போகாதீர்கள்! போகாதீர்கள்!! என்று கையைப் பிடித்து இழுத்து தேசத் துரோகம் செய்கிறார்கள்”.

என்று சுமத்தப்படும் குற்றத்திற்கு சமாதானம் சொல்ல வேண்டி இருக்கிறதால், சிலவற்றை அதாவது முன் சொல்லி வந்தவைகளையே திரும்பவும் சொல்லுகின்றோம்.

அதாவது இந்த சத்தியாக்கிரகமாகிய உப்புச் சட்டத்தை மீறுவது என்பதே அர்த்தமற்றதும் மூடத்தனமானதுமாகும் என்பது நமது அபிப்பிராயம். இதை திரு. காந்தியே ஒப்புக் கொண்டு விட்டார். இதை 24-5-30 ² தினசரி பத்திரிகைகளில் காணலாம்.

அன்றியும் மேற்கொண்டு இதற்கு ஏதாவது சமாதானம் சொல்லக்கூடு மென்றால் இதனால் சர்க்காருக்கு ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவு கொடுக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் ஞாயமிருப்பதாக ஒரு மேதாவியும் இதுவரையிலும் சமாதானமும் சொல்லவரவில்லை.

வாசகர்களே! இரண்டு வருஷத்திற்குமுன் பூர்ண சுயேச்சையை முட்டாள்தனம் என்றும், விளையாட்டுப் பிள்ளைத்தனம் என்றும் சென்னையில் சொன்ன திரு. காந்தி லாகூரில் பூரண சுயேச்சைத் தீர்மானத்தை ஆதரித்தார் என்பதை ஒரு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

நேரு திட்டம் என்பதாகிய குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்பதைப் பற்றி எட்டுக் கோடி மகமதியர்களும் ஆறு கோடி தீண்டாதவர்கள் என்பவர்களும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதையும் வாசகர்களே மற்றொரு பக்கத்தில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றபடி திரு. காந்தியின் இறுதிக் கடிதத்தில் கண்ட பதினொருத் திட்டங்களும் அனுபவசாத்தியமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

மேற்கண்ட மூன்றிலும் தீண்டாமை விலக்குவதற்கும், மக்கள் ஒற்றுமைக்கும் சகலருக்கும் சம சந்தர்ப்பம் கிடைப்பதற்கும் ஏதாவது வழி இருந்ததா? இருக்கிறதா? என்பதையும் யோசியுங்கள். இது நிற்க இந்த சத்தியாக் கிரகத்தில் கலந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கவனிப்போம்.

வடநாட்டுத் தலைவர்கள் தொண்டர்கள் என்பவர்களில் ஒவ்வொரு வரையும் பற்றி தெரியாவிட்டாலும் நன்றாய்த் தெரிந்த தென்னாட்டு தேச பக்தர்கள் என்பவர்களையும் தேசீயவாதிகளென்பவர்களையும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது தென்னாட்டில் சத்தியாக்கிரகத்தை இப்போது நடத்துவது கதர் இயக்கமாகும்.

கதர் இயக்கத் தென்னாட்டுத் தலைவர் திரு. ராஜகோபாலாச்சாரியாவார். இவர் மனுதர்ம சாஸ்திரத்திற்கு வக்காலத்து பேசியவர். காங்கிரஸ் கொள்கையில் ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்பது இருக்கக்கூடாது என்பவர். இதற்காக ராஜிநாமா கொடுத்தவர்.

சென்ற வருஷ வேதாரண்ய மகா நாட்டில் பூரண சுயேச்சையை எதிர்த்து தோற்கடித்தவர். இது தவிர கதர் இயக்கத்தில் உள்ளவர்கட்கெல்லாம் ஜெயிலில் இருந்தாலும் சம்பளம் உண்டு. அந்தச் சம்பளப் பணமும் கதருக்கென்று பொது ஜனங்களிடத்திலிருந்து வசூல் செய்த பணமாகும்.

மற்றபடி திருவாளர்கள் குப்புசாமி, அண்ணாமலை... போன்ற தேசபக்தர்கள் காங்கிரஸ் நிதியிலிருந்து பயன்பெற்று வந்த வர்கள். இது தவிர சில வக்கீல்களும், டாக்டர்களும், மருந்து வியாபாரிகளும், ஷாப்பு சாமான் வியாபாரிகளும் பத்திரிகையிலேயே ஜீவனக்காரர்களுமாவார்கள்.

இவர்கள் உண்மையான தேச பக்தர்களாயிருந்தால், தேசீயவாதிகளாய் இருந்தால், முதலில் தங்கள் தொழிலில் இருக்கிற மோசத்தை நிறுத்திவிட்டு, வந்து பிறகு தேச பக்தியைக் காட்டலாம். ஒரு வக்கீல் தன்னை தேசபக்தன் என்று சொல்லுவானேயானால் அவனைவிட கொள்ளையடிக்கிற அரசாங்கம் ஆயிரம் பங்கு தேசபக்தராயிருக்க முடியும்.

ஒரு பேட்டண்டு மருந்து விற்கிற மருந்து வியாபாரி தேசபக்தனாக ஆவானேயானால், அவனை விட ஜனங்களை “நாய் போல் சுட்டு வீழ்த்துகிற” “ராட்சஷ அரசாங்கம்” ஆயிரம் பங்கு நீதியுடையதாகும்.

ஒரு டாக்டர் ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும் படிக்கு லாயக்கில்லாத மக்கள் வாழும் தேசத்திலே மாதம் இரண்டாயிரம், மூவாயிரம், கொள்ளையடிக்கும் ஒரு வைத்யன் பெரிய தேசபக்தர் ஆவானேயானால் அந்த நாட்டில் எந்த அன்னிய அரசாங்கமும் நீதியுள்ளதாகவே இருக்க முடியும்? உதாரணமாக திரு. நாகேஸ்வரராவ் என்கின்ற தேச பக்தர் இந்திய ஜனங்களிடத்திலேயே மருந்து விற்று மாதம் பதினாயிரக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கிறார் என்றால், இந்த தேச பக்தர் இந்த நாட்டின் ஏழை மக்களிடத்தில் காட்டிய பக்தியினாலா? அல்லது இந்த தேசத்து மக்களுடைய தரித்திரத்தை அறிந்து அவர்கட்கு நன்மை செய்கிற மாதிரியில் குறைந்த விலைக்கு இந்த மருந்து விற்கிற தயாள குணத்தினால் தேச பக்தரானாரா? இப்படியே இப்பொழுது இருக்கும் தேசபக்தர், தேசீயவாதிகள், தேசியப் பத்திரிகையாளர் என்கிறவர்கள் நிலைமைகளை எல்லாம் அவர்கள் சொந்தத் தொழிலைக் கொண்டும், சொந்த நடவடிக்கைகளை கொண்டுமே இது போலவே சொல்லிக் கொண்டு போகலாம்.

இவைகளிலிருந்து ஒருவர் இருவர் மிச்சப்படுவாரானால் அவர்கள் அடுத்தத் தேர்தலுக்கு அஸ்திவாரம் போடப் போனவர்களே தவிர மற்றபடி அவர்கள் நாணயம் நாம் அறியாததல்ல.

இதிலும் தவறி ஒன்றிரண்டு பேர் மீதிப்படுவாரேயானால், அவர்கள் மாரியம்மன் உத்சவத்திற்கு செடில் குத்திக் கொண்டு ஆடுகின்றவர்களை சேர்ந்து கொள்வார்களே தவிர உண்மையில் பெரிய தேசீயவாதிகள் ஆகி விடமாட்டார்கள்.

இந்த இருபதாவது நூற்றாண்டில் இந்த அர்த்தமில்லாத ஒரு காரியத்திற்கு ஒருவர் பேரை வைத்துக் கொண்டு எத்தனையோ பேர்கள் செய்கிற சூழ்ச்சிகளை அறியாமல் கோவிந்தா! போடுகிற மக்கள் இருக்கும் போது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் சாமியின் முகத்தில் ஒருவன் பிறந்தான், தோளில் ஒருவன் பிறந்தான், காலில் ஒருவன் பிறந்தான் என்று சொன்னதும் அதை மக்கள் நம்பினதும், இன்னும் நம்பிக் கொண்டிருப்பதும் ஆச்சரியம் என்று நமக்குத் தோன்றவில்லை.

அதிலுள்ள ஏமாற்றமும், மூடநம்பிக்கையுமே இந்த அரசியலிலும் அரைக்கால் மாற்றுக் கூட குறையாமல் பிரதிபலித்துக் கொண்டு வருகிறது. அவைகளைச் சொன்ன முனிவர் களுடையவும், ரிஷிகளுடையவும் யோக்கியதையே அரசியல் தத்துவங் களைச் சொல்லும் மகாத்மாக்களிடத்தும் பிரதிபலித்துக் கொண்டு வருகிறது.

ஆகையால் இன்றைய உண்மையான கஷ்டத்திற்கும் இந்த நாட்டின் அவசியமான தேவைக்கும் அந்த ரிஷிகளின் தத்துவங்களும், இந்த மகாத்மாக்களின் உபதேசங்களும் கடுகளவு கூட பயன்படாது என்பதே நமது முடிவான அபிப்பிராயமாகும். நமக்கு வேண்டியதெல்லாம் மனிதன், மனிதனாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதே.

இதற்கு நேர் விரோதமாய் மனிதனை மனிதன் நாய், கழுதை, பன்றியிலுங் கேடாய் மதிப்பதும், தெருவில் நடக்க மறுப்பதும், தண்ணீர் அருந்தத் தடுப்பதும் சர்வ வல்லமையும், சர்வ தயாபரத்துவத்தையும் கொண்ட கடவுள் என்பவர் இருப்பதாய் சொல்லப்படும் இடத்திற்குச் செல்ல எதிர்ப்பதும் இந்த நாட்டு மக்களாலேயே நடைபெறுவதை பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவர், “உப்பு இயற்கைப் பண்டம், எல்லார்க்கும் பொதுவான சொத்து, அதற்காக உயிரைவிட வேண்டும்” என்று சொல்வாரானால் அதில் கடுகளவு உண்மையாவது யோக்கியப் பொறுப்பாவது இருக்க முடியுமா? என்பதை வாசகர்கள்தான் யோசித்து முடிவு கட்ட வேண்டும்.

அன்றியும் அந்த நிலையான பழைய இழிவை மறைக்கத்தான் புது இழிவைப் பற்றிப் பிரமாதமாக தென்னாட்டில் பேசப்படுகிறதென்றும் சொல்லுவோம். இரண்டாயிரம் வருஷமாகவே நமக்கு இருந்து வருகிற இழிவும் வாழ்க்கையில் நிமிஷத்திற்கு நிமிஷம் அவமானப்படுத்தும் கொடுமையுமான காரியங்கள் எல்லாம் 1999 வருஷத்துக்கு முன்னேயே அறிந்திருந்தும் அதைப்பற்றிச் சிறிதும் லட்சியஞ் செய்யாமல் அதற்கு ஆதாரமான சாமியையும், மதத்தையும், சாஸ்திரத்தையும், கோயில் கட்டி வைத்து வலம் வந்து பூஜை செய்து கும்பிட்டுக் கொண்டு இருக்கிற சுயமரியாதையற்ற மனிதர்களாகிய நமக்கு, உப்புக்கு விலை கொடுப்பதும், உப்புச் சட்டத்திற்கு கீழ்படிவதும் நஷ்டமும் அவமானமும் என்றால் எந்த அறிவாளி இதை நம்புவான் என்று தான் கேட்கின்றோம்.

இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு இந்த நாட்டு மக்களால் இழைக்கப்படும் இழிவும் கொடுமையும் நீங்குவதற்கு முன்னால், இந்த இழிவை கொள்கையாகக் கொண்டிராத எந்த அரசாங்கமானாலும் இந்த நாட்டை விட்டுப் போக வேண்டுமென்றால் ஒருக்காலும் நாம் அதில் கலந்து கொள்ள முடியாது.

நம் நாட்டு மக்களே நம்மை மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் செய்யும் இழிவைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்று யாராவது நம்மிடம் சொல்லுவார்களேயானால், அவர்கட்கு நாம் சொல்லும் பதில் என்னவென்றால், அப்படியானால் வெளிநாட்டு மக்கள் அரசியலின் பெயரால் ஒற்றுமையற்றவர்களும் மூட மதியர்களுமான நம்மை செய்யும் இழிவைப்பற்றி நமக்கு இப்போது கொஞ்சங்கூட கவலை இல்லை என்பதேயாகும். இன்றைய நமது நிலையில் அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதும் முட்டாள்தனமும் பயனற்றதும் என்பதுமாகும்.

ஆகவே யார் என்ன சொல்லுவதாயிருந்தாலும், உப்புச் சத்தியாக் கிரகம் வெற்றி பெறுவதின் மூலம், நாளைய தினமே வெள்ளைக்காரர்கள் அரசாங்கம் நாட்டைவிட்டு கொடியையும், முத்திரையையும், கஜானா சாவியையும் திரு. காந்தியிடமே கொடுத்து விட்டு பெண்டு பிள்ளைகளுடன் கப்பல் ஏறுவதாயிருந்தாலும் ஒருக்காலும் நாம் அதில் பங்கு பெற முடியாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறோம்.

ஏன் இவ்வளவு தூரம் நாம் இந்தப்படி எழுதுகிறோம் என்றால், நமது நாட்டு மக்களைப் பிடித்திருக்கும் அரசியல் மூடநம்பிக்கை வியாதிக்கும், அதனால் போகும் கொள்ளைக்கும் இவ்விதம் எழுதினால்தான் கொஞ்சமாவது உணர்ச்சி கொடுக்கக் கூடும் என்று கருதியே தவிர வேறல்ல.

இதற்காக வழக்கம் போல் நம்மை திட்டுகிறவர்களோ, தூற்று கிறவர்களோ அல்லது வேறு ஏதாவது செய்கிறவர்களோ செய்து கொள்ளட் டும். அதைப்பற்றி ஒரு சிறிதும் நமக்குக் கவலை என்பதே இல்லை.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.05.1930)

Pin It