periyar 355அன்பர் திரு. ஜார்ஜ் ஜோசப் அவர்களை காங்கிரஸ் “பக்தர்”களில் யாரோ ஒருவர் வெட்டிப் புதைத்து விடுவதாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி யிருப்பதாகவும் அது திரு.ஜோசப் அவரது மனைவியாரால் போலீசில் ஒப்புவிக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் பார்த்தோம்.

இக்கடிதம் எழுதக் காரணம் ‘குடி அர’சில் வார வாரம் வெளியான திரு.ஜோசப் அவர்களின் “காந்தியின் இராமராஜியம்” என்பது பற்றிய வியாசங்களின் காரணமாகவே இருக்கலாம். இருந்தாலும், இம்மாதிரி கடிதம் நமக்கும் பல வந்து கொண்டிருக்கின்றன. நண்பர்கள் திரு.ஏ.இராமசாமி முதலியார், திரு.பி.வரதராஜுலு நாயுடு ஆகியவர்களுக்கும் பல வந்ததாக நாம் சென்னையில் இருக்கும்போது பத்திரிகைகளில் பார்த்தோம். நமக்கு வந்த கடிதங்கள் 100க்கு மேற்பட்ட தாகும். வசவு கடிதங்கள் வர்ணிக்க முடியாத கருத்துக்களால் எழுதப்பட்டவைகளும் இரத்தத்தினால் துவைத்து கையெழுத்துப் போடப்பட்டவைகளும் ஆபாசமான சித்திரம் எழுதிக் காட்டியவைகளுமாக அநேக கடிதங்களுண்டு. இவை பெரிதும் பார்ப்பனர்களால் எழுதப்பட்டவைகள் என்று கருதக் கூடியவைகளானாலும் சில பார்ப்பனர்களல்லாத வாலிபர்களாலும் இருக்கலாம். ஒன்றிரண்டு மதப் பைத்தியம் (அதுவும் சைவ மதப் பைத்தியம்) காரணமாகவே யிருக்கலாம் என்றும் எண்ணக்கூடியவைகளாகும்.

இவைகள் எல்லாமுமே நம்மை அவர்கள் (எழுதினவர்கள்) கொல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதோ அல்லது கொன்று விடலாம் என்கின்ற தைரியத்தின் மீதோ எழுதப்பட்டவைகள் அல்ல என்பதுதான் நமது அப்போதையதும் இப்போதையதுமான அபிப்பிராயமுமாகும்.

ஆனால் நம் பேரிலுள்ள கோபத்தின் வேகம் அந்த வழியில் (அந்தப்படி ஒரு கடிதம் எழுதி) ஒரு விதம் தணித்துக் கொள்ளப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் நமது நடவடிக்கைகள் அவர்களுக்கு அவ்வளவு ஆத்திரத்தைக் கொடுக்கின்றது என்பதாக தெரிகின்றது. அதற்கு யார் என்ன செய்யக்கூடும்?

கொன்று விடுவதாக எழுதின வீரனுடைய வீரத்தனத்திற்கு பயமுறுத் தப்பட்டவர்களுடைய வீரம் சிறிதாவது குறைந்து இருந்தால் அவர்கள் தங்களது குரலைக் கொஞ்சம் தளர்த்தியிருக்கலாம் - பேனாவை சற்று குறுக்கியிருக்கலாம் - சரீரத்தை சற்று மறைத்தாவதிருக்கலாம்.

ஒருவனைக் கொல்வதின் மூலம் ஒருவன் வீரனாகப் பார்ப்பது போலவே ஒருவனால் கொல்லப்படுவதின் மூலமும் ஒருவன் வீரனாகப் பார்க்க உரிமையுண்டு - வழியுண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

எப்படியெனில் சாமி சிரத்தானந்தாவைக் கொன்றவன் தனது “வீரத் தினாலேயே கொன்று வீரனானான்” என்று வைத்துக்கொண்டாலும் கொல்லப் பட்ட சிரத்தானந்தஜீயும் வீரராகாமல் போகவில்லை.

பகத்சிங்கை தூக்கிலிட்டு சர்க்காருக்குக் கிடைத்த வீரப்பட்டத்திற்குச் சிறிதும் குறைந்ததல்ல பகத்சிங்குக்குக் கிடைத்த வீரப்பட்டம். உண்மை யிலேயே ஒரு மனிதனுடைய லட்சியத்திற்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்று கருதுகின்ற மனிதனுக்கு அவன் ஆசை நிறைவேற வேண்டுமானால் அந்த லட்சியத்திற்கு அவனது உயிரைக் கொடுத்ததாய் அதாவது அந்த லட்சியத்தின் பயனாய் அவனது உயிர் இழக்கப்பட்டதாய் ஏற்பட்டால் அது உண்மையில் பயனளிக்கக்கூடியதேயாகும்.

ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் சாவு உறுதி. அந்த சாவு 1000ல் 999 நோயிக்கும் அகஸ்மாத்தான சம்பவத்திற்கும் தன்னை அறியாமலும் தான் பறி கொடுக்கப்படத் தக்கதாய் நடைபெற்று வருகின்றனவே தவிர ஒரு மனிதன் தனது சாவை தக்க விலைக்குக் கொடுத்ததாகக் காணப்படுவது மிக்க அரிதாகவே யிருக்கின்றது.

பகத்சிங் காரியம் சரியா? தப்பா? என்பது சிலருக்காவது விவ காரத்திற்கிடமானதாயிருந்தாலும் அவரது சாவு அவரது லட்சியத்திற்குத் தக்க பயனளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதுபோலவே காங்கிரஸ் லட்சியத்திலோ மத லட்சியத்திலோ நம்பிக்கை இருக்கின்றவர்கள் தங்களது சாவை தக்க விலைக்கு பயன்படுத்து வது என்று கருதிய முடிவினால் ஒருவனைக் கொல்ல எண்ணுவதில் ஏதாவது குற்றமிருக்கின்றதென்று நாம் சிறிதும் கருத மாட்டோம். அதாவது தமது லட்சியத்திற்கு விரோதமானவன் - தடையானவன் என்று கருதப் படுகின்றவனை சாகடிப்பதின் மூலம் தனது சாவை பயன்படுத்தலாம் என்று எண்ணுவதில் இயற்கைக்கு விரோதம், அனுபவத்திற்கு விரோதம், ஞாயத் திற்கு விரோதம் இருப்பதாகக் காணமுடியவில்லை.

அதுபோலவே சாகடிக்கப் படுகின்றவனும் தனது லட்சியத்திற்காக அந்த லட்சியம் கைகூடுவதால் யாரொருவர் நஷ்டமடையக் கூடியவரோ, கஷ்டமடையக் கூடியவரோ அல்லது லட்சியமே நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல வென்றோ கருதப்படுபவரோ ஆகியவர்களால் சாக டிக்கப்பட நேருவதிலும் அதிசயமோ இயற்கைக்கு விரோதமோ, நடப் பிற்கு விரோதமோ, நியாயத்திற்கு விரோதமோ இருப்பதாய் கருதவும் முடியவில்லை.

எந்த மனிதனாவது தனது லட்சியத்தைப் பிரதானமாய்க் கருதி அதற்கே உழைத்துத் தீர வேண்டுமென்று முடிவு கட்டிக் கொண்டு இருப்பானேயானால் அவன் அதற்காக உயிரை இழக்க நேருவதுதான் அவனது லட்சியத்தில் அவனுக்குள்ள உறுதியையும் அவன் அடைய வேண்டிய வெற்றியையும் காட்டுவதாகும். அதோடு அந்த லக்ஷியத்திற்கும் அவன் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துவிட்டதான தனது கடமையையும் நிறைவேற்றியதாகும்.

அன்றியும் லக்ஷியக்காரன் உயிருடன் இருந்து லக்ஷியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பதில் எவ்வளவு பயன் ஏற்படுமோ அதைவிட கண்டிப்பாய் பல மடங்கதிகமான பலனும் ஏற்படக்கூடும். அறிவாளிகளின் வேலையும் அதுவேயாகும்.

ஆதலால் சாவுக்கு பயந்து யாரும் தங்கள் லக்ஷியங்களின் வேகத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இதை எழுதினோம்.

தவிர “நான் செத்துப் போனால் என் பெண்டுபிள்ளை என்ன கதி யாகும்?” என்கின்ற ஒரு மனப்பான்மை தான் இந்தியர்களை சுயமரியாதை யற்ற கோழைகளாகச் செய்து கொண்டு வந்திருக்கின்றது. இந்த மனப் பான்மை இந்தியாவில் தான் அதிகம் உண்டு. சௌகரியமிருப்பவன் இம் மாதிரி காரியங்களில் பிரவேசிக்கும் போதே பெண்டுபிள்ளைகளது உயிர் வாழ்க்கைக்கு ஏதாவது செய்துவிட வேண்டியது அறிவுடைமையாகும். சௌகரியமில்லாதவன் அதற்காகவே உயிர் வாழ வேண்டும் என்று கருது வானேயானால் அப்படிப்பட்டவன் தயவு செய்து இம்மாதிரியான பொது நல காரியங்களில் பிரவேசிக்காமல் இருப்பதே நலமாகும். ஏனெனில், இம் மாதிரி லட்சியக்காரர்களாலேயே அதாவது “பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்ற இருக்கின்றோம்”. அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது லக்ஷியம் அல்லது கடமை” என்று கருதிக் கொண்டிருக்கிறவர்கள் பொதுக் காரியங்களில் பிரவேசிப்பதாலேயே உண்மையான லட்சியங்கள் - பொதுக்காரியங்கள் பாழாகின்றன. அன்றியும் அவர்களுடைய பொதுநல சேவையும் நாணயக் குறைவானது - ஹம்பக்கானதும் என்று கருதப்பட வேண்டியதுமாகி விடுகின்றன. ஆகையால் அதைப்பற்றி யாரும் கவலைப்படக்கூடாது.

நிற்க இந்தப்படி நாம் எழுதுவதில் லக்ஷியத்திற்காக ஒருவனை சாகடிப்பது அல்லது ஒருவன் சாவது என்கின்ற இரண்டு காரியங்களையும் நாம் ஒன்றாகவே கருதி இருப்பதாக யாரும் கருதிவிடக் கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். சுயமரியாதை இயக்கத் தைப் பொறுத்த வரையில் அதன் லக்ஷியம் நிறைவேற ஒருவனை சாகடிப் பதை விட லட்சியத்தின் எதிரி ஒருவனால் சாவதே மேல் என்று தான் இன்று கருதுகின்றோம். ஏனெனில் செத்தவனை இருவரும் போற்றுவார்கள். செத்தவனிடத்தில் இரு கூட்டத்தாரும் அனுதாபம் காட்டுவார்கள். அதன் மூலம் லட்சியத்திற்கு ஆக்கம் ஏற்படும். சாகடித்தவனை ஒரு கூட்டம்தான் போற்றலாம். அதுவும் தைரியமாய் வெளிப்படையாய் போற்ற மாட்டார்கள். அதிலி ருந்தே எதிர்ப்பின் ஆக்கமும் குன்றலாம். அதுவும் தவிர கொல்லுபவன் ஒளிந்திருந்து பயந்து வேலை செய்ய வேண்டும். கொல்லப்படுபவன் தைரியமாய் வெளிப்படையாய் இருந்து உயிர் கொடுக்கலாம். மற்றும் சில நன்மைகள் உண்டு. ஆதலால் சாவுக்கு துணிந்து லட்சியங்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டியது உண்மை லட்சியக்கார மனிதனின் கடமை என்பதை வலியுறுத்துகின்றோம்.

திரு.ஜோசப் அவர்களின் மனைவியார் அக்கடிதத்திற்குப் பயந்தது பெண்கள் உலகத்திற்கே ஒரு ‘மாசு’ என்றுதான் சொல்லுவோம். அவ் வம்மையார் தனது புருஷன் கொல்லப்பட்டு விட்டால் ‘ராட்டினம் சுற்றி’ பிள்ளைக்குட்டிகளைக் காப்பாற்ற வேண்டுமே என்று பயந்திருக்கலாமோ அல்லது தனது வாழ்க்கையின் மேன்மை குன்றி விடுமே என்று பயந்திருக் கலாமோ என்று நாம் நினைக்கவில்லை. ஆனாலும் தமது அன்புள்ள காதலன் பிரிந்துவிட்டால் என்ன செய்வது என்று காதலை உத்தேசித்து பயந்திருக்கலாம் என்றே கருதினாலும் அதுவும் சரியல்ல என்றே சொல்லுவோம். தனது காதலனுக்கு அவரது லட்சியத்திற்காக அவரது உயிரைக் கொடுக்க நேர்ந்தது என்னும் ஒரு மேன்மையும் அவரது லட்சியம் நிறைவேறுவதற்கு அனுகூலமாக அது பயன்பட்ட லாபத்தை விட காதலனை இழந்து விட்ட நஷ்டம் சிறிதும் அதிகமல்ல என்றே சொல்லுவோம். சாப்பாட்டிற்கு ஏதாவது ஒரு வழி வேண்டுமானால் பள்ளிக்கூட உபாத்தியாயராகலாம். முடியா விட்டால் சரீரத்தில் வலுவிருக்கின்றவரை ரோட்டில் கல் உடைக்கலாம். மற்றபடி தனக்கு வேண்டிய பெருமையையோ கௌர தையைப் பற்றியோ யோசிப்பதானாலும் இந்தக் காரணங்களால் அம்மை யாரின் கௌரவத்திற்கு எவ்வித குறைவும் ஏற்பட்டுவிடாதென்றே தைரிய மாய்ச் சொல்லுவோம், சொல்லுவோம்.

திரு. ஜார்ஜ் ஜோசப் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகோ வெட்டிப் புதைக்கப்பட்ட பிறகோ திருமதி ஜோசப் அம்மையாருக்கு மாஜி முதல் மந்திரியான டாக்டர் சுப்பராயன் அவர்களது மனைவியாருக்கும் இப்போதைய முதல் மந்திரியான திவான்பகதூர் முனுசாமி நாயுடு அவர்களது மனைவியாருக்கும் இந்திய நிர்வாக சபை சட்டமெம்பரான சர்.சி.பி. இராமசாமி அய்யர் அவர்களது மனைவியாருக்கும் இந்நாட்டில் உள்ள கௌரதையில் - பெருமையில் - தன் மதிப்பில் அனேக பாகம் அதிக மாகத்தான் இருக்குமே தவிர எள்ளளவாவது சிறிதாயிருக்கும் என்று கருதுவதற்கு இடமிருக்காது என்று உறுதியாய் சொல்வோம். ஆகையால் அம்மையார் பயப்படாமல் தனது காதலனை அலங்கரித்து யுத்த களத்திற்குத் தைரியமாய் நல்லதொரு பேனாவைக் கையில் கொடுத்து “எனக்காகக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி அனுப்பிப் கொடுக்க வேணுமாய்ப் பிரார்த்திக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 30.08.1931)

Pin It