பெண் கல்வி, பெண்கள் வளர்ச்சி மற்றும் அதிகாரப்படுத்துதலுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்தாலும் குடும்ப வன்முறையில் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்படுவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணங்களை ஆராய்ந்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 4) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரையின் சுருக்கமான கருத்தை தமிழில் தருகிறோம். குடும்ப வன்முறைக்கு பட்டியலிட்டுள்ள காரணங்கள்:

1. கட்டாயத் திருமணம் : கட்டாயத் திருமணத்துக்கு பெண்கள் உள்ளாக்கப் படுவது ஒரு காரணம். நவீன குடும்ப வாழ்க்கைக்கான செலவுகளை சரி கட்ட பெண்கள் உழைப்பு ஊதியமில்லாமல் கட்டாயத் திருமண முறையில் சுரண்டப்படு கிறது. 20 முதல் 22 சதவீத பெண்களே திருமணத்துக்குப் பிறகு ஊதியம் பெறும் வேலைக்குப் போகிறார்கள். 60 சதவீத படித்த பெண்கள் குடும்பத்தைக் கவனிக்க வேலைக்குப் போகாமல் ஆணாதிக்கமும் ஜாதிக் கட்டமைப்பும் கொண்ட குடும்ப அமைப்புக்குள் ஆண்களின் ஆதிக்கத்துக்குள் உழலுகிறார்கள். மனைவியை கணவன் அடிப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற மனநிலையில் 79.8 சதவீதம் பெண்கள் இருப்பதோடு 81.1 சதவீத பெண்கள் உதவுவோர் இல்லாமல் குடும்ப வன்முறையை சந்திக்கிறார்கள்.

பட்டியல் இனப் பெண்கள் உயர்கல்வியில் அதேப் பிரிவு ஆண்களைவிட கூடுதலாக இருந்தாலும் (பெண்கள் 40.4 - ஆண்கள் 38.8) தொழிலாளர்களாக உழைக்கும் பெண்களே அதிகம்.

குடும்பத்தின் மதிப்பை சமூகத்தில் கூடுதலாக்கவும் நல்ல மாப்பிள்ளை கிடைப்பதற்கும் பெண்களின் உயர்கல்வி பெரிதும் உதவுகிறது. பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் திருமணத்துக்கு முன்பு வேலைக்குப் போவதை மேல்நோக்கி முன்னேறி வரும் நடுத்தர குடும்பங்கள் அனுமதித்தாலும் திருமணத்துக்குப் பிறகு இவர்களின் எதிர்காலத்தை குடும்பமே நிர்ணயிக்கிறது.

2. ஜாதி மறுப்புத் திருமணங்கள் : ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெண்கள், ஆண் இளைஞர்களாலும் ஜாதிக் குழுக்களாலும் வன்முறைகளைச் சந்திப்பதோடு இத்தகைய வன்முறைக்கு ஆண் இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரி காலத்திலிருந்தே பயிற்று விக்கப்படுகிறார்கள். உதாரணமாக தமிழ் நாட்டில் ஒரு பள்ளி நிர்வாகம் மாணவர் சேர்க்கையின்போது வேறு சாதியைச் சார்ந்தவர்களைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதி தர வேண்டும் என்று வற்புறுத்துகிறது. (செய்தி: ‘தி இந்து’, ஜூலை 12, 2013) ஜாதிக் கலப்பு வழியாக பெண்கள் வயிற்றில் பிற ஜாதி கரு வளரக் கூடாது என்பதே குடும்ப கவுரமாகக் கருதப்பட்டு, அதைக் காப்பாற்ற வன்முறை ஒரு ஆயுதமாக்கப்படுகிறது. கல்வியில் உயர்நிலை யிலிருக்கும் பெண்கள், சமூகத்தில் பெண்களின் சுதந்திரத்தை சகித்துக் கொள்ள முடியாத ஆண்களால் குடும்பத்திலும் சமூகத்திலும் வன்முறையை எதிர்கொள்கிறார்கள். உயர் கல்விக்கும் பெண்கள் சுதந்திரத்துக்குமான உறவு துண்டிக்கப்படுகிறது.

3. கட்டாய உடலுறவு : திருமணமான பெண்கள், கணவர்களின் கட்டாய உடலுறவுக்கு சம்மதித்தாக வேண்டும் என்பதும் பெண்கள் மீதான வன்முறைக்கு ஒரு காரணம். (அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம், கணவர்களின் கட்டாய உடலுறவு, பாலியல் குற்றம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. - ஆர்)

ஜெ.எஸ். வர்மா ஆணையம், கணவர்கள் மனைவியர்களிடம் திணிக்கும் கட்டாய உடலுறவை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஒன்றிய ஆட்சி இதை ஏற்கவில்லை. டெல்லி உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கில் 2017இல் ஒன்றிய ஆட்சி தாக்கல் செய்த மனுவில் இது குறித்து ஒருமித்த கருத்தை சமூகத்தில் உருவாக்க வேண்டுமே தவிர, அரசு தலையிட்டு சட்டமாக்க முடியாது என்று தெரிவித்திருந்தது.

குடும்ப நலத் திட்ட உதவிகள் , பேறுகால விடுப்பு நாள் அதிகரிப்பு போன்ற அரசின் திட்டங்கள், உண்மையில் பெண் உரிமைக்கான சொல்லாடல்கள் அல்ல. அவை அரசுக்கான சமூகநலத் திட்டங்கள். பெண் களுக்கான விடுதலையை - சுதந்திரத்தைப் பற்றிய கருத்துகளை உருவாக்குவதில்லை. மாறாக, இத்திட்டங்கள் அந்தக் கோட் பாடுகளைப் பின்னோக்கித் தள்ளிவிடு கின்றன. ஒரு பெண், தாய்மை அடைவதற்காக தன்னுடைய சுதந்திரத்தையும் சுயமரியாதை யையும் உயர் பதவியில் இருந்தாலும் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இறைவி என்ற திரைப்படத்தில் கடைசி காட்சியில் கதாநாயகன், “நான் ஆண்; அந்த ஆணவமே என்னை, இந்தக் கொலையை செய்யத் தூண்டியது. பொறுத்துப் போவதற்கு நான் என்ன பொம்பிளையா; ஆண்..... நெடில்” என்ற வசனத்தைப் பேசுவார். இந்த மனோ பாவமே பெண்கள் உயர்கல்வி பெற்றிருந்தாலும், வன்முறைக்கு உள்ளாவதற்கான காரணியாகி விட்டது என்று எழுதியுள்ளார் கட்டுரை யாளர்.

பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும் என்ற பெரியார் சிந்தனையை மய்யமாக வெளிப்படுத்துகிறது இந்த ஆய்வு.

கட்டுரையின் இறுதிப் பகுதியை இவ்வாறு முடித்துள்ளார்.

தமிழ்நாட்டில், பெரியார் பேசிய சுயமரியாதைக் கருத்துகளின்அடிப்படையில் திருமண முறையில் குடும்ப அமைப்பில், வாழ்க்கை முறையில் அவசரமான சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டில் உடனடி தேவையாகியிருக்கின்றன.

Tamil Nadu, certainly and urgently, needs a radical reform of marriage, familialism and domesticity along the lines of periyar's advocacy of self respect and women's freedom.

Pin It