இனி எந்த மந்திரியும் சுயமரியாதைக்காரர்கள் தயவால் தான் வாழ முடியும், ஏனெனில் அவர்களிடமிருந்த இரண்டு முக்கியமான அதிகாரங்கள் ஒழிந்து விட்டன. என்னவெனில்,
1. நாமினேஷன் அதிகாரம், 2. உத்தியோகம் கொடுக்கும் அதிகாரம் இந்த இரண்டு அதிகாரமும் சாதாரணமாக ஒரு... இருந்தால் கூட மக்களில் பணக்காரரும், பிரபுவும், ஜமீன்தாரர்களும், ராஜாக்களும், மிராஸ் தாரர்களும், வியாபாரிகளும், பண்ணைகளும், பிரசிடென்டுகளும், சேர்மென்களும், ஹ க்ஷ ஊ னு படித்த வாலிபர்களும், மந்திரிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு தாசானுதாசனாகக் கும்பிடு போட்டுக் கொண்டு அவர்களது மூக்கு சளியையும், கண் பீழையையும் வர்ணித்து சித்திரக் கவி பாடி பஜனை செய்து கொண்டு வலம் வருவார்கள்.
ஆனால், இப்பொழுதோ மேற்கண்ட அதாவது நாமினேஷன் அதிகாரமும் உத்தியோகம் கொடுக்கும் அதிகாரமும் “முண்டச்சிகள் கெர்ப்பம் கரைவது போல்” நாளுக்கு நாள் கரைந்து கொண்டே போய் கடைசியாக உதிரக் கட்டியாக மாறி ஒன்றுமில்லாமல் போய் விட்டது.
ஆதலால் அவர்களிடத்தில் இந்த மாதிரி கூட்டத்தார்களுக்கு இனி வேலையோ, மரியாதையோ கூட இருக்க அவசியமில்லை.
ஆனாலும் சட்டசபை மெம்பர்கள் தயவு வேண்டும் என்கின்ற ஹோதாவில் சிலருடைய தயவு மந்திரிகளுக்கு வேண்டியிருக்கும் என்பதில் ஆக்ஷபணை இல்லை.
அந்த சட்டசபை மெம்பர்களும், சுயமரியாதை இயக்கமும் கூடிய சீக்கிரத்தில் அதாவது “காங்கிரஸ்காரர்கள்” தேர்தல்களுக்கு நிற்க ஆரம்பமானவுடனே ஒன்றாய் விடுவார்கள், ஒன்றாகிதான் தீரும்.
ஆகவே வெகு வேகத்தில் சுத்த சுயமரியாதைக் கொள்கை ஆட்சியே பூரண மந்திரி ஆட்சியாகித் தீரும் என்பதில் சந்தேகமில்லை. அந்தப்படி ஆகும் போதுதான் நாட்டுக்கு, மனித சமூகத்திற்கு உண்மையான நன்மை ஏற்படும்.
எப்படி எனில் தீண்டாமை ஒழித்தல், பெண்கள் விடுதலை, ஜாதி ஒழித்தல், எல்லோரும் படித்தல்., மூட பக்தியும் பழக்க வழக்கமும் ஒழித்தல், பகுத்தறிவை வளர்த்தல், சுயமரியாதை உணர்ச்சி ஏற்படுத்தல், பணக்காரர்கள் கொடுமை ஒழித்தல் முதலான காரியங்கள் நடைபெறும். இக்காரியங்கள் இந் நாட்டு மக்களில் 100க்கு 90 மக்களுக்கு பயன்படக் கூடியதும், அவசியமானது மாயிருப்பவைகளாகும்.
(குடி அரசு - கட்டுரை - 21.12.1930)