periyar 355கோவையில் கூடிய நடு வகுப்பு உத்தியோகஸ்தர்கள் மகாநாட்டில் தலைமை வகித்த திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எம்.எல். சி. அவர்கள் செய்த தலைமை உபன்யாசத்தில் கண்ட ஒரு விஷயத்தை நாம் பாராட்டுகின்றோம்.

அதாவது “உயர்ந்த சம்பளம் வாங்குபவர்கள் சம்பளத்தைக் குறைத்து குறைந்த சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தை உயர்த்தி எல்லோருடைய சம்பளத்தையும் ஒருவிதமாய் நிர்ணயிக்க வேண்டும்” என்று பேசி இருக்கின்றதானது மிகுதியும் போற்றத்தக்கதாகும்.

குடிகளுக்கு வரிப்பளுவு அதிகமாயிருப்பதும் சர்க்கார் வேலையில் இருப்பவர்களில் அநேகருக்குச் சரியான ஜீவனத்திற்குப் போதாத சம்பளமிருப்பதற்குக் காரணம் சில உத்தியோகஸ்தர்களுக்கு ஏராளமான சம்பளங்களும் தகுதிக்கும் தேவைக்கும் அதிகமான சவுகரியங்களும் ஏற்பட்டிருப்பதே யாகும்.

என்றைய தினம் அரசியல் புரட்டு நமது நாட்டில் தோன்றிற்றோ அன்று முதலே பெரிய பெரிய உத்தியோகமும் அவற்றிற்குக் கொள்ளை கொள்ளையான சம்பளமும் அதிகப் பட்டுக்கொண்டும் உயர்த்திக் கொண்டுமே வந்திருக்கின்றது. இனியும் உயருகின்றது.

இவை முதலான கொடுமைகளை யெல்லாம் யோசித்தே ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் எந்த உத்தியோகத்திற்கும் அதாவது எவ்வளவு பொறுப்புள்ள உத்தியோகத்திற்கும் மாதம் 1000 ருபாயுக்கு மேற்பட்ட சம்பளம் இருக்கக்கூடாது என்பதாக ஒரு தீர்மானமும் நிறை வேற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் அது எப்போது அமுலுக்கு வரும் ?

(குடி அரசு - கட்டுரை - 26.10.1930)

Pin It