செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

தி.க. கொடியை உருவக்கிய பெரியார், நடுவில் உள்ள சிவப்பு வட்டம் பெரிதாகி, சிவப்புக் கொடியாக மாறும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. மதுரை செஞ்சட்டை பேரணிக்குத் தலைமை யேற்ற கழகத் தலைவர் மாநாட்டில் ஆற்றிய உரை:

kolathoor mani at madurai rallyபெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் நோக்கத்தை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் விளக்கியிருக்கிறார். இந்த மூன்று பேரணிகள் நடந்ததும் இதன் முதன்மை மாந்தர்களாக காட்டப்படுகிற பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும் எளிய வஞ்சிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு தத்துவங்களை உருவாக்கிப் போராடியவர்கள். இந்த மண்ணில், சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த சூத்திரர்களும், பஞ்சமர்களும் தான் உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளானவர்களாக இருக் கிறார்கள். இந்த மூன்று பேரின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், தனித்தனியாக இயங்கி வந்திருக்கிறோம்.

இது இயங்கக் கூடாது என்ற கருத்து 30'களில் தோன்றியிருந்தாலும், இடையில் பிரிவு, உறவு இரண்டும் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த வேளையில், இந்த நாட்டில் வடபுலத்தில் தலைவிரித்தாடிய மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், தமிழ் மண்ணில் அதன் அரசியல் பிரிவை நுழையவிட்டு அதற்கு பின்னால் இந்த சித்தாந்தத்தை நிறுவ விரும்புகிறார்கள். களத்தில் அவர்கள் வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், சித்தாந்தத்தை உள் நுழைத்தலில் அவர்கள் வெற்றி பெற்றுதான் இருக்கிறார்கள். அவர்கள் மெல்ல மெல்ல நம்மையும் இந்துக்களாக மாற்ற முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது நடைமுறையில் வெற்றி பெற்று விடக்கூடும் என்ற சூழலில் தான், நாம் இணைந்து நின்று செயல்பட வேண்டிய நேரத்தில் இந்த பேரணிகளில் இணைந்து நின்றோம். அவர்களை அரசியலில் இருந்து மட்டுமல்ல, சித்தாந்த ரீதியிலும் முறியடிப்போம் என்ற ரீதியில் தான் இந்த பேரணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் இயக்கம் கண்ட போது அதன் கொடியை திராவிடர் கழகத்திற்கு உருவாக்குகிற போது, கருப்பு நடுவிலே சிவப்பு வட்டம் என்று கூறினார். அதோடு பெரியார் விட்டுவிடவில்லை, இந்த சிவப்பு வட்டம் விரிவடைந்து சிவப்பு கொடியாக மாறும் என்று கூறினார். இப்போது அதன் தேவை அதிகமாக இருக்கின்றது. பேரணிக்கான ஒற்றுமை என்று கருதாமல், இது கொள்கை ஒற்றுமை, ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்கள் பங்காளிகளாக ஆங்காங்கே செயல்பட்டு வருகிறோம்; இது கொள்கை அணியாக மாற வேண்டும்.

கொள்கை ஒற்றுமை கொண்ட நாம், கொள்கை எதிரியை அடையாளம் கண்டிருக்கிறோம். ஆனால், வீழ்த்துவதற்கான நெறிமுறைகளை, வழிமுறைகளை, போராட்டங்களை எடுப்போம். பெரியார் திருச்சி உறையூரில் 1972 இல் “கம்யூனிசம்” என்ற தலைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அவர் மறைவதற்கு முன்பு 1973 அக்டோபரில் “சமதர்மம்” என்ற கட்டுரையை எழுதுகிறார். அதில் பொதுவுடைமையின் தேவையை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

ஆனால், பெரியாரியிலர்களாகிய நாம் தான் அதை சரியாகப் பின்பற்றவில்லை. அந்த களங்கத்தையும் நீக்கிக் கொள்வோம். அனைவரும் இணைந்து, வர்க்க பேதமற்ற, வர்ண பேதமற்ற சமுதாயத்தை படைப்பதில் ஒன்றிணைவோம், ஒன்றிணைந்து போராடுவோம் என்று கூறிக் கொள்கிறேன்.

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் மே 29 அன்று நடந்த செஞ் சட்டைப் பேரணியால் மதுரை குலுங்கியது. கருஞ்சட்டைப் பேரணி, நீலச் சட்டைப் பேரணிகளைத் தொடர்ந்து செஞ் சட்டைப் பேரணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுதுமிருந்தும் இளைஞர்கள் பெண்களும் ஆண்களு மாய் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பார்ப்பபனிய பாசிசத்தை வீழ்த்துவோம்; இந்தியாவில் ஒற்றை ஆட்சியைத் திணிக்காதே; இது பெரியார் மண் - சனாதன சக்திகளை அனுமதியோம் என்று உணர்ச்சி முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக்கழக சார்பில் சென்னை, மேட்டூர், சேலம், நங்கவள்ளி, கொளத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து தனிப் பேருந்துகளிலும் வேன்களிலும் திரண்டு வந்திருந்தனர்.

madurai rallyகழகப் பெயருடன் கழகக் கொடி செஞ் சட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி, மே 17 இயக்கம், மக்கள் அதிகாரம், மார்க்சிய பெரியாரிய பொது வுடைமைக் கட்சி, திராவிடர் கழகம், நிமிர்வு பறை இசைக் குழு, நிகர்பறை இசைக் குழு, தமிழ்த் தேச விடுதலை முன்னணி, தமிழ்த்தேச நடுவம், தமிழக மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், செஞ்சட்டை அணிந்து தங்கள் அமைப்பின் கொடிகளுடன் பங்கேற்றனர்.

பழங்காநத்தம் பகுதியில் வர்க்க வர்ண ஆதிக்க ஒழிப்பு மாநாடு, நாகை திருவள்ளுவன் தலைமையில் வாலாஜா வல்லவன் வரவேற்புரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் மக்கள் அதிகாரம், கோவன் குழுவினரின் புரட்சிகர கலை நிகழ்ச்சி, கூட்டத்தினரை உணர்ச்சி மயமாக்கியது. மாநாட்டின் நோக்கத்தை விளக்கி, பொழிலன் உரையாற்றினார். தீர்மானங் களை முன் மொழிந்து கோவை இராம கிருட்டிணன் பேசினார். தொல். திருமாவளவன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி,

சு. வெங்கடேசன், எம்.பி., ஜி. இராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சந்தானம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), அதியமான் (ஆதித் தமிழர் பேரவை), ஜக்கையன் (ஆதித் தமிழர் கட்சி), வழக்கறிஞர் ப.பா. மோகன், பேராசிரியர் ஜெய ராமன், வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் உரையாற்றினர். கூட்டமைப்பு சார்பில் “வீழட்டும், பார்ப்பனியம், சாதியம், முதலாளியம்” நூலை வெளியிட்டு, குடந்தை அரசன் உரையாற்றினார்.

இரவு 11.30 மணி வரை மாநாடு நடந்தது. நிறைவுறையாற்றிய தொல். திருமாவளவன், நான்கு வர்ணம் என்ற சதுர்வர்ணத்தை வீழ்த்த கருப்பு, நீலம், சிவப்பு என்ற மூன்று வர்ணம் போர்ப் படையாகத் திரண்டிருக்கிறது என்றார். மோடியும் அமீத்ஷாவும் பிற்படுத்தப்பட்டோ ராக இருக்கலாம்; அவர்களை இயக்குவது பார்ப் பன மூளை. பிரதமராகும் மோடியால் ஆர்.எஸ். எஸ். தலைவராக முடியுமா என்று கேட்டார்.

இளைஞர்களின் ஒன்றுபட்ட இந்துத்துவ பார்ப்பன எதிர்ப்பின் வெளிப்பாடாக பேரணி எழுச்சியுடன் அமைந்தது.

Pin It