periyar 288உயர்திருவாளர் கோவை ஆர். கே. ஷண்முகம் அவர்களை இந்தி யரில் அறியாதார் யாரும் இருக்க முடியாதென்றே கருதுகின்றோம். மேல் நாட்டவர்களும், அவரைப்பற்றி விசேஷமாக அறிந்திருப்பார்கள். சிறப்பாக தமிழ் நாட்டில் தெருவில் விளையாடும் குழந்தைகள் முதல் அரசர் வரை அவரைப் பற்றி நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள்.

அன்றியும் சுயமரியாதை உலகத்திலும், சீர்திருத்த உலகத்திலும் திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்களைப் போலவே - சில விஷயங்களில் அவருக்கு மேலாகவே திரு. ஷண்முகம் அவர்கள் பெயரும் ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக தங்கள் தங்கள் வீட்டு நபர்களைப் போலவே வழங்கப்பட்டு வருகின்றது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

திரு. ஷண்முகம் அவர்கள் அறிவு, திறன், ஆராய்ச்சி, அனுபவ ஞானம், முயற்சி, கல்வி, செல்வம் ஆகிய அருங்குணங்களும், தன்மை களும் ஒன்று போலவே அமையப் பெற்றவராவார். அப்பேர்ப்பட்டவரின் சேவையானது பொதுவாக சீர்திருத்த உலகத்திற்கும், அரசியல் என்கிற உலகத்திற்கும் மிக்க இன்றியமையாதது என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

ஆகவே அவர் சமீபத்தில் நடைபெறப்போகும் இந்திய சட்ட சபைத் தேர்தலுக்கு (எம். எல். ஏ)க்கு மறுபடியும் ஒரு அபேக்ஷகராக நிற்கின்றார் என்ற சேதி கேட்டு இந்திய நாட்டில் மகிழ்ச்சியடையாதார் யாருமே இருக்க முடியாது.

சென்ற அதாவது நான்கு வருஷத்திற்கு முந்திய தேர்தலில் அவர் இந்தியாவில் இல்லாமல் இருக்கும் போதே அதாவது அவர் ஆஸ்ட் ரேலியா கண்டத்தில் இருக்கும் போதே போட்டியன்னியில் ஏகமனதாய் தெரிந்தெடுக்கப்பட்டவராவார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்டளைப்படி தனது ஸ்தானத்தை ராஜினாமா கொடுத்துவிட்டு சுதாவில் மறுபடி நின்றபோதும் போட்டியன்னியில் தெரிந்தெடுக்கப்பட்டவராவார்.

அப்படிப்பட்டவருக்கு இம்முறை தேர்தலில் போட்டி ஏற்பட்டதானது வருந்தத்தக்கதேயாகும். அப் போட்டியும் சாதாரணமாகப் பொது நலத்தை பொறுத்தோ ஸ்தானத்தைப் பொறுத்தோ அல்லது பதவியை அபேக்ஷித்தோ அல்லாமல் கக்ஷியையும், சொந்த அபிப்பிராய பேதங்களையும் கட்சி பேதத்தையும் கருதி திரு. ஷண்முகம் “போட்டியன்னியில் தெரிந்தெடுக்கக் கூடாது” என்கிற எண்ணத்தின் மீது அவருக்குத் தொந்திரவுக் கொடுக்க ஆசைப்பட்டு ஏற்படுத்தப்பட்ட போட்டியாக நமக்கு காணப்படுவதால் அதற்காக நாம் பெரிதும் வருந்த வேண்டியிருக்கின்றது.

திரு. ஷண்முகம் அவர்கள் சீர்திருத்தத் துறையில் வேலை செய்ய வேண்டும் என்கின்ற ஆசை யினாலேயே இந்திய அரசாங்கத்தில் பெரிய சம்பளமாகிய µ 3000, 4000 ரூ, போன்ற வருமானம் கிடைக்கக் கூடிய டாரிப் போர்ட் (வரிவிதிக் கும் சபை) மெம்பர் பதவியையும் லக்ஷியம் செய்யாமல் தனக்கு வேண்டா மென்று விட்டு விட்டார். இந்த விபரங்களை பொது மக்கள் இந்து, சுதேச மித்திரன் ஆகிய பார்ப்பன பத்திரிகைகளிலும் பார்க்கலாம்.

நிற்க, சென்னை மாகாணத்திலிருந்தும் சிறப்பாக தமிழ் நாட்டிலிருந்தும் இந்திய சட்டசபைக்கு 10க்கு 9 ஸ்தானங்களுக்கு பார்ப்பனர்களாகவே அதிலும் அய்யங்கார்களாகவே சிறப்பாக சீர்திருத்த விரோதியும் வருணா சிரமக் கொள்கையுடையவருமான பார்ப்பனர்களாகவே போய்க் கொண்டி ருப்பது வழக்கம்.

அவற்றுள் திரு. ஷண்முகம் ஒருவர் மாத்திரம் பார்ப்பரல்லாதாராகவும், சிறப்பாக வர்ணாசிரம எதிரியாயும் சீர்திருத்தக் கொள்கை உடையவருமாக போய் கொண்டிருந்தார்.

அது மாத்திரமல்லாமல் நமது நாட்டுப் பார்ப்பனர்கள் சென்னை மாகாணத்துப் பார்ப்பனரல்லாதார்கள் “போதிய அறிவும், ஞானமும், செல்வாக்கும் இல்லாதவர்கள் என்றும் அவர்கள் தேசத்துரோகிகள், சிறப்பாக தேசீயத்திற்கு விரோதிகள்” என்றும் வெளி மாகாணக்காரருக்கு பிரசாரம் செய்து பார்ப்பனரல்லாதார் மீது அலக்ஷியமும் அசூயையும் ஏற்படும்படி செய்திருந்த விஷமக் கூற்றுகள் யெல்லாம் திரு. ஷண்முகம் இந்திய சட்ட சபைக்குச் சென்ற பிறகு தான் உடைத்துப் பொடியாக்கி குழி வெட்டிப்புதைக்கப்பட்டதை பார்ப்பனர்களே ஒப்புக் கொண்டு அவர் மறுபடியும் இந்திய சட்டசபைக்கு செல்ல முடியாமல் முயற்சிக்கிறார்கள் என்றால் மற்றபடி பார்ப்பனரல்லாதார்க்குத் தெரியாமல் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

திரு.ஷண்முகம் அவர்கள் இந்திய சட்டசபைக்கு சென்றதின் பயனாய் பார்ப்பனரல்லாதார் பெருமையையும், திறமையையும் இந்தியாவும் உலக மும் அறிய முடிந்தது என்பது மாத்திரமல்லாமல் சென்னை மாகாணத்துப் பார்ப்பனர்கள் தேசீயவாதி, மிதவாதி, அமிதவாதி உட்பட எல்லோருடைய யோக்கியதையும் வெளிப்படுத்தப்பட்டதானது எல்லாவற்றையும் விடப் போற்றத்தக்கதும் பாராட்டத்தக்கதுமான காரியமாகும்.

இன்றைய தினமும் திரு. ஷண்முகம் இந்திய சட்டசபையில் இருந்ததின் மூலம் வெளிமாகாணத் தலைவர்களின் சம்மந்தம் வைத்துக் கொண்டிருப்பதாலேயே தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் எல்லா இந்திய தேசியத் தலைமை ஸ்தானங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு அவர்களும் மூலையில் உட்காரப்பட வேண்டியவர்களாகி விட்டார்கள் என்பதை எவரும் நாம் சொல்லித் தெரிய வேண்டியவர் களாயிருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றோம்.

இவ்விஷயங்கள் எல்லாம் பொது மக்கள் நன்றாய் உணர்ந்திருந்தாலும் இன்றைய தினமும் இந்திய சட்டசபைக்குத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாதார்கள் சிறிதும் ஆபேட்சிக்காமல் அலக்ஷிய மாகவே இருந்து கொண்டு பார்ப்பனர்களே பெரிதும் அங்குப் போய்ச் சேரும்படி செய்வது முன்னும் வழக்கமாய் இருந்தாலும் இப்போதும் வழக்கமாய் இருக்கிறது.

உதாரணமாக கோவை, சேலம், வட ஆற்காடு ஆகிய மூன்று ஜில்லாக்களும் சேர்ந்த தொகுதி தவிர மற்றத் தொகுதிகளில் எல்லாம் பார்ப்பனர்களே இருந்துவருகின்றார்கள் என்பதோடு வரப்போகும் தேர்தல் களுக்கும் சென்னை, கோவைத் தவிர மற்றவைகளில் எல்லாம் பார்ப்பனர்கள் அபேக்ஷகர்களாய் இருக்கிறார்கள்.

அன்றியும் இதில் மற்றும் ஒரு ஆபத்து என்ன வென்றால் மேல் கண்ட பார்ப்பன அபேக்ஷகர்கள் எல்லாம் வருணாசிரமக் கொள்கையின் மீதும் சாரதா சட்டத்தை அழிப்பது அல்லது திருத்துவது என்கின்ற கொள்கையின் மீதுமே தான் நிற்கின்றார்கள். இது செங்கற்பட்டு, தென் ஆற்காடு ஜில்லாத் தொகுதிக்கு நிற்கும் பெரிய “சீர்திருத்தவாதி”யான திரு. டி. ரங்காச்சாரியின் விளம்பரத்தைப் பார்த்தால் தெரியும்.

ஆகவே வருணாசிரமத்தை அடியோடு எதிர்க்கும் பார்ப்பன ரல்லாதார் அபேக்ஷகர்கள் இன்றைய தினம் சென்னை மாகாணத்திலாகட் டும், தமிழ் நாட்டிலாகட்டும் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்றும் உறுதியாகச் சொல்லுவோம்.

அது மாத்திரமல்லாமல் அவர் வருணாசிரமத் தருமத்திற்கு விரோதமாய் இருக்கின்றார் என்று சொல்லி அந்தக் காரணத்தால் அவரை பாமரமக்களிடம் குற்றமும், பழியும் சுமத்தி தோற்கடிக்கச் செய்து விடலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே திரு. ஷண்முகம் அவர்களுடன் போட்டிப் போட எதிர் அபேக்ஷகருக்கு தைரியம் ஏற்பட்டதென்பதே நமது அபிப்பிராயமாகும்.

ஆகவே அவரது தேர்தலில் அவர் வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும் தமிழ்நாடும் பார்ப்பனரல்லாத மக்களும் வருணாச் சிரமத்தை விரும்பி அதன் கொள்கைப்படி தாங்கள் சூத்திரர்களாக விரும்புகிறார்களா அல்லது அப்பட்டத்தை வெறுக்கின்றார்களா என்கிற பரீக்ஷை முடிவாகத்தான் இருக்கின்றது.

நிற்க திரு. ஷண்முகம் அவர்களுக்கும், போட்டி அபேக்ஷகருக்கும் உள்ள தாரதம்மியமும், வெற்றிக்குள்ள சவுகரிய மும் இத்தேர்தலில் பொது மக்கள் கடமையும் பின்னால் தெரிவிக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 10.08.1930)

Pin It