சகோதர சகோதரிகளே, நமது நண்பரும் சகோதரருமான திரு. ஆரியா அவர்களால் துவக்கப்பட்ட இந்த பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கமானது இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகின்றது.

periyar ambedhar 600எனது இயக்கத்தையும் தொண்டையும், எனது உடல் நலிவும் சரீரத் தளர்ச்சியும் எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலு மேலும் உற்சாகப்படுத்தி வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது இந்த வாலிப இயக்கமே யாகும்.

உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருந்திருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும் விடுதலையும் சுயமரியாதையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசீயத் தலைவனோ, மதத் தலைவனோ, பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மையான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திரக் காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக்கின்றது.

ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக்கின்றது. கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர்களால்தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தியப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர்களையே மனப்பூர்வமாக நம்பி இருக்கின்றேன். அவர்கள் இயக்கமும் கிளர்ச்சியும், வெகு சீக்கிரத்தில் உலகை நடத்த முன்வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டுக் கொண்டு இம்மகாநாட்டைத் திறக்கின்றேன்.

(குறிப்பு : 4.1.1929 இல் இராயவேலூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாட்டைத் திறந்து வைத்து உரை

குடி அரசு - சொற்பொழிவு - 13.01.1929)

***

வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மகாநாடு

சகோதரி சகோதரர்களே!

இந்த மகாநாட்டின் திறப்பு விழா நடத்த என்று நான் இங்கு வந்தவன். இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி இவ்வளவு காரியங்கள் நடக்குமென்றும் இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசப்படும் என்றும் நான் நினைக்கவில்லை. ஊர்வல மூலமாகவும், வரவேற்புப் பத்திர மூலமாகவும், எனது படத்திறப்பு மூலமாகவும், அளவுக்கு மீறிய உற்சாகமும் வரவேற்பும், புகழ்ச்சி உரைகளும் காணவும் கேட்கவும் நான் மிகுதியும் சந்தோஷமடைகிறேன். எனது தொண்டில் உள்ள இடையராத கஷ்டங்களிடையே இம்மாதிரியான சில வைபவங்கள் ஏற்படுவதால் சில சமயங்களில் பரிகாசமாகவும் சில சமயங்களில் உற்சாகமாகவும் இருக்கச் செய்கின்றது.

என்னைப் பற்றிய ஆடம்பர வரவேற்பும் புகழுரைகளும் நான் உங்களிடம் ஒரு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் இத்துடன் உங்கள் கடமை தீர்ந்து விட்டதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.

நாம் பிரவாகமான எதிர் வெள்ளத்தில் நீந்துகின்றோம் என்பதையும், நமக்கு எதிரிகளும் எதிர்ப்பிரசாரங்களும் வெளிப்படையாயும், திரை மறைவிலும் சூழ்ச்சிகளுடனும் நடைபெற்று வருகின்றதை கருத்தில் வையுங்கள். அவற்றிற்குத் தலை கொடுக்கத் தயாராயிருங்கள். நமது தலைவர் பனகால் அரசர் காலமான ஒரு நெருக்கடியான சமயமானதால் இந்த சமயத்தில் உங்கள் விழிப்பும் தியாகமும் அதிகம் தேவை இருக்கின்றது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களுக்கும் சிறப்பாக திருமதி மார்த்தா ஆரியா அம்மையார் அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

(குறிப்பு : 04,05-01-1929 நாட்களில் இராயவேலூர் லட்சுமணசாமி முதலியார் நகர மண்டபத்தில் கூடிய வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாட்டில் தமது படத்திறப்பு நிகழ்ச்சியின் போது ஆற்றிய நன்றியுரை.

குடி அரசு - சொற்பொழிவு - 13.01.1929)

Pin It