சுயமரியாதை இயக்கம் தோன்றிய சுமார் மூன்று வருஷ காலத்திற்குள் தமிழ்நாட்டில் அது அநேகமாக ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுத்திருப்பதோடு இவ்வியக்க விஷயமாய் அநேகரை கூர்ந்து கவனிக்கும் படிக்கும் கவலைப்படும் படிக்கும் செய்து வந்திருக்கின்றது என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்வியக்கம் ஆரம்பமானது முதல் இதற்கு அநேக தத்துக்கள் ஒன்றின்பின் ஒன்றாய் வந்து கொண்டே இருந்தாலும் ஒருவாறு அவ்வளவையும் சமாளித்து வளர்ந்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

periyar anna 350இதற்கு உதாரணம், இவ்வியக்க ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் துவேஷமென்றும், பிறகு பார்ப்பன துவேஷ இயக்கமென்றும், பின்னால் தேசத்துரோக இயக்கமென்றும், பிறகு சர்க்கார் பிரசார இயக்கமென்றும், பிறகு வைணவ துவேஷ இயக்கமென்றும், பிறகு சைவத் துவேஷ இயக்கமென்றும், பிறகு நாஸ்திக இயக்கமென்றும், பிறகு நிரீச்சுவரவாத இயக்கமென்றும் மற்றும் அநேகர் அநேக விதமாய் அதன்மீது பழி சுமத்தி அதற்கு பொது ஜனங்களிடம் எவ்வளவு தூரம் வெறுப்பும் துவேஷமும் ஏற்படச் செய்ய வேண்டுமோ அவ்வளவு தூரம் ஏற்பட வேண்டி, பலவழிகளிலும் பெரு முயற்சிகள் செய்தாய் விட்டது என்றாலும் இவ்வளவு செய்தும், இதன் முன்னேற்றம் சிறிதும் குந்தகப்படாமல் மேலும் மேலும் முன்னேறுவதைப் பார்க்கின்றபோது இவ்வியக்க எதிரிகள் வேறு சமாதானம் சொல்ல முடியாமல் “இது இனி எத்தனை நாளைக்கு நிற்கப் போகின்றது, அப்பேர்ப்பட்ட ஒத்துழையாமை இயக்கமே பழங்கதையாய் விட்டது, இதுதானா வாழப் போகின்றது? ஏதோ பார்ப்பனர்கள் மீது நமது நாட்டு மக்களுக்கு இருக்கும் துவேஷத்தினால் சிலர் ஆதரிக்கின்றார்கள். நாயக்கருக்கு இருக்கும் சொந்த செல்வாக்குக்கும் அரசாங்க செல்வாக்குக்கும் பயந்து சிலர் ஆதரிக்கின்றார்கள், இதெல்லாம் எத்தனை நாளைக்கு நிற்கும்?” என இம்மாதிரியாக சொல்லிக் கொள்வதன் மூலம் தங்கள் பொறாமைகளை ஒருவாறு திருப்தி செய்து கொள்வதோடு இரகசியமாய் தங்களால் கூடிய கெடுதியையும் செய்து கொண்டே வருகிறார்கள் என்பதும் இவ்வளவையும் தாண்டித் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு முக்கிய இடங்களிலும் மற்றும் வெளியிடங்களிலும் சுயமரியாதைச் சங்கங்களும் மகாநாடுகளும் பிரசாரங்களும் நடந்து வருவதும் அதன் கொள்கைகளில் பல சற்றும் எதிர்ப்பின்றி காரியத்தில் அனுஷ்டிக்கப்படுவதுமே போதுமான உதாரணமாகும்.

அதுமாத்திரமல்லாமல், இப்போது எந்தவிதமான மகாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களேதான் நிறைவேற்றப்பட்டு வருவதும் சமூக மகாநாடு, சமரச மகாநாடு, பெண்கள் மகாநாடு, பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு ஏன் சில அரசியல் மகாநாடுகள் - ஆகியவைகளில் எல்லாம் மேல்கண்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இவ்வியக்கத்திற்கு ஆதாரமாக ருஷியா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கனிஸ்தானம் முதலிய நாடுகள் வழிகாட்டியும் வருகின்றதைப் பார்த்தால் இவ்வியக்கம் தளர்ந்து விடும் என்றோ, மறைந்து விடும் என்றோ, நினைப்பவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து விடுவார்கள் என்பது தெளிவாகாமல் போகாது. அன்றியும் நமது நாட்டு அரசியல் தலைவர்கள் என்பவர்களும் அநேகமாக இக்கொள்கைகளை உச்சரிப்பதன் மூலமாகவே செல்வாக்கு பெறுவதையும் பார்க்கும்போது இக்கொள்கைகளின் தத்துவம் எவ்வளவு மேன்மையானது என்பதும் விளங்காமல் போகாது.

இவ்வளவும் இருந்தாலும் இவ்வியக்கத்திற்கு ஒரு நிலையான ஸ்தாபனமும் பிரசார பலமும் ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான வேலை என்று நமக்குப் படுகின்றது. மேல்நாடுகளிலும் ஒவ்வொரு தேசத்திலும் இக்கொள்கைகள் கொண்ட இயக்கம் அதிக பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டு வெகு விரிவான முறையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. உதாரணமாக, லண்டனில் R.P.A. என்னும் பகுத்தறிவாளர்கள் சங்கமும் அமெரிக்காவில் பிரீ திங்கர்ஸ் அசோசியேஷன் என்னும் தாராள எண்ணக்காரர்கள் (அறிவு எவ்வளவு தூரம் செல்லுமோ அவ்வளவு தூரம் செலுத்துவது) என்கிற சங்கமும், ருஷியாவில் ஆண்டி காட் சொசைட்டி (கடவுள் உற்சவம் வணக்கம் ஆகியவைகள் அவசியமில்லை) என்கின்ற (ருஷிய கவர்ன்மெண்டாராலும் ஆதரிக்கப்பட்ட) சங்கமும் சைனாவில் யங் சைனீஸ் அதாவது வாலிப சைனாக்காரர்கள் என்கின்ற சங்கமும் மற்றும் ஆப்கானிஸ்தானம் துருக்கி முதலிய சர்க்காரால் அநேக இடங்களில் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அதுபோலவே நமக்கும் நமது அரசாங்கம் அடியோடு நமது இயக்கத்தின் சுவாதீனத்திற்கு வருமளவும் அதாவது சுயமரியாதை அரசாங்கம் ஏற்படும்வரை நமக்கு தக்க ஆஸ்பதம் வேண்டியிருக்கின்றது. அநேகமாய் இவற்றை உத்தேசித்தே அடுத்த மாதம் 2-வது 3-வது வார வாக்கில் செங்கல்பட்டில் தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அம்மகாநாட்டுக்கு சைமன் கமீஷனும் அழைக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் இம்மகாநாட்டில் அநேக பெரியார்களும் செல்வாக்குக்காரர்களும் உண்மைத் தொண்டர்களும் செல்வந்தர்களும் பங்கெடுத்துக் கொள்ள சம்மதித்தும் இருக்கின்றார்கள். இதுவரை சுமார் 10 ஆயிரம் ரூபாய் போல வசூலும் செய்யப் பட்டிருக்கின்றது.

திருவாளர்கள் ராவ் பகதூர் எம்.கெ.ரெட்டியார், சி.ஜயராம நாயுடுகார், கே.வி. மேனன், கண்ணப்பர் முதலியவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் இவ்வேலையில் பூரணமாய் ஈடுபட்டு உழைத்தும் வருகின்றார்கள். சுமார் இருபத்தைய்யாயிரம் மக்களுக்குக் குறையாமல் கூடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மகாநாட்டிற்கு வந்து சில தீர்மானங்களை எதிர்க்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சிலர் இரகசியமாய் கக்ஷி சேர்ப்பதாகவும் தெரிய வருகின்றது. எப்படியானாலும் சரி, நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நமது நிலைமையையும் உண்மை என்று நாம் நினைப்பதையும் வெளிப்படுத்தி அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் நடத்த ஒரு பலமான ஸ்தாபனமும் பிரசாரமும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நமது கவலை. ஆதலால் நாட்டின் nக்ஷமத்திலும் மக்களின் முன்னேற்றத்திலும் கவலையுள்ள மக்கள் யாவரும் அங்கு வந்து கூடி தங்கள் கடமையைச் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தங்கள் மனைவி மக்களுடனேயே வரவேண்டியது மிகவும் அவசியமானது என்பதை மிகவும் அழுத்தமாய் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள் என்றோ வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். தவிர, அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அதிகாரிகளும் கண்டிப்பாய் வர வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று தெரிவிப்பதோடு இந்த மகாநாடு எவ்வழியிலும் அரசியல் மகாநாடு என்பதல்ல என்றும் அவர்களுக்கு உறுதி கூறுகின்றோம். அன்றியும் அரசாங்க சட்டமெம்பர் திவான்பகதூர் கனம் கிருஷ்ண நாயர் அவர்களும் மற்றும் பல பெரிய அதிகாரிகளும் வரச் சம்மதித்து இருக்கின்றார்கள்.

முக்கியமாக இம்மகாநாட்டில் யோசித்து தீர்மானிக்கப்படும் விஷயங்கள் என்னவென்றால், சமத்துவம், சமஉரிமை, சமசந்தர்ப்பம், சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் ஆகியவைகள் ஏற்படவும், குருட்டு நம்பிக்கை, மூடப் பழக்க வழக்கம், தீண்டாமை, பெண் அடிமை ஆகியவைகள் எடுபடவும் எளியோரை வலியோர் அடக்கி ஆளாமலும், பாமரர்களை படித்தவர்கள் ஏமாற்றாமலும், ஏழைகளை செல்வந்தர் கொடுமைப்படுத்தாமலும் இருப்பதற்கும் பகுத்தறிவு வளர்ச்சி பெறவும் தன் முயற்சியில் நம்பிக்கை உண்டாகவுமான தன்மைகள் போன்ற விஷயங்களே தான் அங்கு நடைபெறும். ஆகையால் இவைகளை அரசியல் விஷயமென்று யாரும் சொல்ல முடியாது. அரசியல் விஷயம் என்று ஏதாவது சொல்ல வந்தால் அது மேல்கண்ட விஷயங்கள் நிறைவேறி அமுலுக்கு வர அரசாங்கத்தின் உதவி ஏதாவது வேண்டியிருந்தால் அந்த அளவுக்கு அதுவும் அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏதாவது பேசப்படுமே ஒழிய வேறு ஒன்றும் நடை பெறாது என்று உறுதி கூறுவோம்.

இந்த 3,4 வருஷத்திய மகாநாடுகளில் இதுவே முக்கியமான மகாநாடாக இருக்கும். அன்றியும் இனி நமது பிரசாரமும் வேலைத் திட்டமும் எப்படி இருக்க வேண்டும் என்பதும் இம்மகாநாட்டில் தான் முடிவு செய்யப்படும். ஆதலால் செங்கற்பட்டு மகாநாட்டிற்கு எல்லோரும் முக்கியமாய் வாலிபர்களும், பெண்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அவசியம் வர வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 13.01.1929)

Pin It