periyar with cadre familyதஞ்சை ஜில்லா போர்டுக்கு சம்மந்தப்பட்ட ரயில்வே லைனை ரயில்வே போர்டாருக்கு கொடுத்துவிட சம்மதிப்பதாக இவ்வளவு காலம் பொறுத்தாவது ஒரு தீர்மானம் செய்ய முன் வந்ததைப் பற்றி அதன் தைரியத்தை நாம் பாராட்டுகின்றோம். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்த விஷயம் தஞ்சை ஜில்லா போர்டின் யோசனைக்கு வந்ததில் ஜில்லா போர்டார் ரயில்வே லைனை ரயில்வே போர்டாருக்கு கொடுக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார்கள். அது சமயம் அவர்கள் அப்படிச் செய்தது தப்பு என்ற சொன்னதுடன் ஜில்லா போர்டு தலைவரையும் சில அங்கத்தினர்களையும் நேரிலும் கண்டு பேசினோம். அப்படிப் பேசியதிலிருந்து லைனை ரயில்வே போர்டாருக்கு ஒப்புக் கொடுக்க மறுத்ததின் காரணம் எல்லாம் அப்போர்டிலுள்ள பார்ப்பன விஷமத்திற்கு பயந்தும் கட்சிப் பிரதிகட்சி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதைக் கருதியுமே அப்படிச் செய்ய வேண்டியதாக ஏற்பட்டது என்பதை அறிய நேர்ந்தது.

முதலாவதாக இதுவரை எந்த ஸ்தாபனமாவது சர்க்காரார் நடத்தி வந்ததை விட யோக்கியமாகவோ திறமையாகவோ பொது ஜனங்களின் பிரதிநிதித்துவ சங்கத்தால் நடத்தி வருவதாக நாம் ஒப்புக் கொள்ளவே முடியாது. சர்க்கார் ஆட்சி முறை மோசமானதும் நம்மால் சகிக்க முடியாததும் ஆனது என்பதைப் பொருத்தவரையில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்களிடமிருந்து நமது கைக்கு மாற்றப்பட்ட எந்த ஒரு சிறு முறையும் அதைவிட மோசமானதாகவும் பொறுப்பற்றதாகவும் நாணயக் குறைவானதாகவுமே நடைபெற்று வருகின்றதே ஒழிய வேறில்லை. இது நாம் எந்த இலாக்காவைப் பொருத்து வேண்டுமானாலும் ருசுச் செய்ய முடியும், அதிலும் ஸ்தல ஸ்தாபன இலாக்காக்களில் நடைபெற்று வரும் அயோக்கியத்தனங்களும் நாணயக் குறைவுகளும் ஒழுக்க ஈனங்களும் எழுதி முடியாததும் எல்லோருக்கும் தெரிந்ததுமான இரகசியமாகவே இருக்கின்றது. இதைப்பற்றி முன்னும் பல தடவை எழுதியும் பேசியும் இருக்கின்றோம்.

எனவே முதலாவதாக இக்காரணங்களாலேயே ரயில்வே போன்ற பெரிய பொறுப்புள்ள காரியங்களை ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, தாலூக்கா போர்டு போன்ற ஜனப்பிரதிநிதி சபை என்னும் பொறுப்பற்ற ஸ்தாபனங்களின் சுவாதினத்தில் விடுவது என்பது பெரிதும் ஆnக்ஷபிக்கத் தக்கது என்று தைரியமாய் சொல்லுவோம். ஆனால் எந்த நிலையிலானாலும் பார்ப்பனர்கள் கையில் இருப்பதைவிட பார்ப்பனரல்லாதார் கையில் இருப்பது மேல் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. உதாரணமாக திருவாளர் இராமானுஜாச்சாரியார் நிர்வாகத்தையும் திருவாளர் பன்னீர்செல்வம் அவர்களின் நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது தெரிய வரும்.

எனவே அரசாங்கத்தாரும் ரயில்வேக்காரரும் செய்வது மிகவும் மோசமாயிருக்கின்றதே என்று சொல்வதானால், நம்முடைய ஒற்றுமையையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டுப்பாட்டையும் சுயநலமற்ற தன்மையையும் பலப்படுத்திக் கொண்டு அரசாங்கத்தின் தலையில் பொறுப்பை சுமத்தி அதை நெருக்கி நம்மிஷ்டம்போல் செய்கின்றனையா இல்லையா என்று அதிகாரத் தோரணையில் கட்டளையிட்டு யோக்கியமாகவும் நாணயமாகவும் நடக்கச் செய்ய வேண்டும்; அப்படிக்கில்லாமல் “நீ போனால் கலகமாகிவிடும் நான் போய் செருப்பிலடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்று ஒரு சமாதானக்காரன் சொன்னான் என்கின்ற பழமொழி போல் அரசாங்கத்தைப் பார்த்து, “உன்னால் அதை நடத்த முடியாது, என்னிடம் ஒப்புவி, நான் அதை பாழாக்கி விடுகிறேன்” என்பதாகச் சொல்லி அதன் தலையில் சுமத்த வேண்டிய பொறுப்புகளையெல்லாம் நம்ம தலையில் சுமத்திக்கொண்டு, காரியமும் சரியாய்ச் செய்ய முடியாமல் நாணயமாயும், நடக்க முடியாமல் நிர்வாகத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் மாத்திரம் தம் தம் சுயநலத்திற்கு அவ்வுரிமைகளை உபயோகப்படுத்தி கொண்டு மக்கள் பணத்தையும் நலத்தையும் பாழாக்குவதில் என்ன பலன் என்றுதான் கேட்கின்றோம்.

இப்படி எழுதுகின்ற நாம் அனுபோகமில்லாமலாவது இது பெரும்பான்மையான விஷயமல்ல என்றாவது கருதி எழுதுகின்றோமில்லை முனிசிபல் சேர்மன் பதவி, ஜில்லா போர்டு மெம்பர், தாலூக்கா போர்டு மெம்பர், ஆனரரி மாஜிஸ்திரேட்டு மற்றும் சில சர்க்கார் சம்மந்தான பொது ஸ்தாபனம் ஆகியவைகளில் இருந்து கொண்டிருந்த போதும் சர்க்கார் அதிகாரிகள் அனாவசியமாயும் நாணயமற்ற தன்மையாயும் நமது ஆதிக்கத்தில் பிரவேசிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கண்டித்து அரசாங்கத்திற்கு எழுதியும், அரசாங்கத்தார் கவனிக்கவில்லை என்கின்ற காரணத்திற்காக மேல்கண்ட அவ்வளவு பதவிகளையும் ஒரே துண்டுத் தாளில் இராஜினாமா கொடுத்தோமானாலும், அந்த சர்க்கார் ஆக்கிரமிப்பு முதலிய அக்கிரமங்களைவிட ஜனப்பிரதிநிதிகளின் பெரும்பாலான நடவடிக்கைகள் குறிப்பிடதக்க அளவு மோசமாகவே இருக்கிறது. ஆதலால் ரயில்வே லைனின் நன்மையை பொருத்தவரையிலும் ஜனங்களின் நன்மையைப் பொருத்தவரையிலும் தஞ்சை ஜில்லா போர்டார் லைனை ரயில்வே போர்டுக்கு ஒப்புக் கொடுத்து விட்டதானது மிகவும் பாராட்டதக்க விஷயமேயாகும். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இதனால் போர்டாருக்கு பொருளாதார விஷயத்திலும் எவ்வித கஷ்டமும் ஏற்படவில்லை என்பது தெரிய வருவதால் தஞ்சை ஜில்லா போர்டார் பார்ப்பன விஷமப் பிரசாரத்திற்கும் பார்ப்பன பத்திரிகைகளின் அயோக்கியத்தனத்திற்கும் சற்றும் பயப்படாமல் தைரியமாய் இத்தீர்மானம் செய்ததை நாம் பாராட்டுகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 18.11.1928)

Pin It