குடியானவன் : என்ன சார், தங்களிடம் தனித்து சற்று நேரம் பேச வேண்டும் என்கின்ற எண்ணம். ஏனென்றால் நாம் இருவரும் வெகுநாளைய சினேகமல்லவா? ஆதலால் சில விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு உண்டு.

ஆபீசர் : ஆ! ஆ!! பேஷா பேசலாம். இப்பொழுதே வாருங்கள். என்ன விசேஷம்!

periyar and karunanidhi 430குடியானவன் : விசேஷம் ஒன்றும் இல்லை; தாங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. சிநேகித விஷயத்தில் மனம் பொறுக்கவில்லை. ஆதலால் தங்களிடம் சொல்லித் தீர வேண்டும் என்கின்ற கவலை கொண்டு விட்டேன்.

ஆபீசர் : என்ன இவ்வளவு யோசிக்கின்றீர்கள். கோபம் என்ன வந்தது? தாராளமாய்ச் சொல்லுங்கள். என்ன விசேஷம்.

குடியானவன் : கொஞ்ச காலமாகத் தங்களுடைய சம்சாரத்தின் நடத்தை சரியாய் இல்லை. என்னேரம் பார்த்தாலும் நம்ம வீட்டுக்கு அடுத்த வீட்டுத் தையல்காரனிடமே சாகவாசம் வைத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. சில சமயங்களில் அந்த தையல்காரன் அந்த அம்மாளை அடிக்கின்றதாகவும் தெரிய வருகின்றது. இதைப் பற்றி ஊரிலும் பலவிதமாகப் பேசிக் கொள்ளுகின்றார்கள். இதைத் தங்களிடம் தெரிவித்து விட வேண்டும் என்று துணிந்து விட்டேன்; மன்னிக்க வேண்டும்.

ஆபீசர் : இதில் மன்னிக்க வேண்டிய சங்கதி ஒன்றுமில்லையே. தாங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஏனென்றால் அந்தக் கழுதையை என் சம்சாரம் அல்ல என்று விலக்கி பல வருஷமாகிவிட்டது. எப்பொழுது ஒரு கான்ஸ்டேபிளை இழுத்துக் கொண்டு போய் இரண்டு மாதம் வரையில் காணாமல் இருந்தாளோ அன்று முதலே நான் “இனி அவள் என்னுடைய சம்சாரமல்ல” என்பதாக தீர்மானித்து விட்டேனே. இது தங்களுக்குத் தெரியாதா?

குடியானவன் : இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. தாங்கள் சொல்லத் தான் தெரிய வருகின்றது. ஆனால் அந்தம்மாள் தங்கள் வீட்டில் தங்களுடன் தானே இருக்கிறார்கள்?

ஆபீசர் : அதனாலென்ன? முன்பு அவளை அடித்துக் கொண்டு போன கான்ஸ்டேபிள் அவளிடம் இருந்த நகையைப் பிடுங்கிக் கொண்டு விரட்டி விட்டு விட்டான். அவள் இந்த ஊர் சத்திரத்தில் வந்து திண்டாடுவதாக கேள்விப்பட்டேன். நேரில் போய்ப் பார்த்தேன். அவள் அழுதாள். அதற்கு நான் “நீ என்றைக்கு ஊரை விட்டு ஓடினாயோ அன்று முதலே உன்னை என் சம்சாரமல்ல என்று தீர்மானித்து விட்டேன்; இனிமேல் எனக்கும் உனக்கும் புருஷன் பெண்ஜாதி என்கிற பாத்தியமும் இல்லை” என்று கண்டிப்பாக சொல்லி விட்டேன். பிறகு அவள் வருத்தப்பட்டதைப் பார்த்து மறுபடியும் “உனக்கு என்னிடம் வர பிரியமிருந்தால் உன்னை நான் ஒரு தாசி மாதிரியாகக் கருதி உன்னிடம் நேசம் வைத்துக் கொள்ளுகின்றேன். இஷ்டமிருந்தால் என்னோடு வா” என்று சொன்னேன். அவளும் அதற்கு சம்மதித்து என்னோடு வந்தாள். நானும் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டேன். இப்போது அவளை ஒரு தாசி மாதிரியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தாசி வீட்டிற்கு நான் போவதற்குப் பதிலாக என் வீட்டிற்கு அவளை வரவழைத்துக் கொள்கிறேன். அடிக்கடி அவள் போய்விட்டு வருவதற்குப் பதிலாக என் வீட்டிலேயே இருக்கும்படி சொல்லி விட்டேன். குழந்தைகள் விஷயத்திலும், ஓடுவதற்கு முன் பிறந்த குழந்தைகளை என் சொந்தக் குழந்தைகள் மாதிரிதான் வைத்திருக்கின்றேன். திரும்பி வந்ததற்குப் பின் பிறந்த குழந்தைகளை தாசிக்குப் பிறந்த குழந்தை மாதிரி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தவிர, என் குழந்தைகளையும் அவளையே பார்த்துக் கொள்ளும்படியாய்க் கேட்டுக் கொண்டேன். அவளும் தன் குழந்தைகள் மாதிரியே பார்த்துக் கொள்ளுகின்றாள். அந்த விதத்தில் அவள் உத்தமி என்றே சொல்ல வேண்டும்.

குடியானவன் : அப்படியானால் அடிக்கடி டெய்லர் (தையல்காரன்) வீட்டில் இருக்கக் காண்கின்றேனே, அதன் காரணம் என்ன?

ஆபீசர் : என்னமோ காரணம் இருக்கலாம். அதைப் பற்றி நமக்கு ஏன் கவலை? நாமே அவளை ஒரு தாசி போல் நினைத்து தாசியை வைத்துக் கொண்டிருக்கிறது போலவே கருதிக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க நமக்கு அனாவசியமான கவலை எதற்கு? அவள் எங்கு போனால் நமக்கென்ன? என்று தான் அதில் என் நேரத்தை ஒரு சிறிதும் வீணாக்குவதே யில்லை. ஆனால் அந்த டெயிலரிடம் அடிபடுவதாக சொல்லுகின்றீர்களே, அதைக் கேட்க நமக்கு சற்று பரிதாபமாகத்தான் இருக்கின்றது; என்ன செய்யலாம்? பாவம் அந்த டெயிலர். ஒரு சமயம் இவளை தன் சம்சாரமாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அவளும் அவனை தன் புருஷனாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அப்படியிருந்தால் அடிக்க வேண்டியதும் அடிபட வேண்டியதும் நியாயந்தானே. நானும் அவளை என் சமுசாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது நன்றாய் உதைத்துக் கொண்டுதான் இருந்தேன். அதற்கு நாம் என்ன செய்யலாம்.

குடியானவன் : சரி சார், இப்போதுதான் தங்களுடைய கொள்கை (பிரின்சிபிள்) எனக்கு விளங்கிற்று. அனாவசியமாய் தங்கள் நேரத்தை கெடுத்ததற்காக மன்னிக்க வேண்டும். நான் போய் வருகிறேன்.

ஆபீசர் : சரி போய்விட்டு வாருங்கள். இதைத் தவிர வேறு விஷயமில்லையே.

குடியானவர் : இல்லை.

(சித்திரபுத்திரன், குடி அரசு - உரையாடல் - 29.07.1928)

Pin It