ஈரோடு முனிசிபாலிட்டி சேர்மென் தேர்தலானது முன் வைஸ்சேர்மென் அவர்கள் குறித்தது போலவே நவம்பர் மாதம் 1 -ந்தேதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாயிற்று. ஆனால் மாஜி சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் இந்த தேர்தலையும் நிறுத்துவதற்காக சர்க்காருக்கு எழுதியதில், சர்க்காரும் எலக்ஷனை நிறுத்த அனுமதி கொடுத்து விட்டார்கள். ஆனாலும் சேலம் ஜில்லா போர்டு எலக்ஷனை நடத்தக் கூடாது என்று சர்க்கார் உத்தரவு வந்தும் சேலம் ஜில்லா போர்டார் அதை லக்ஷியம் செய்யாமல் தைரியமாய் நடத்தினத் தேர்தல் நிலைத்து விட்டதைக் கண்ட ஈரோடு முனிசிபாலிட்டியாரும் சர்க்கார் உத்தரவை லக்ஷியம் செய்யாமல் தைரியமாய் நடத்தி விட்டார்கள். ஏனெனில் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அன்று பகல் 12 மணிக்கு மேல் முனிசிபல் ஆபிசுக்கு வரக்கூட யோக்கியதை இல்லாது போய்விட்டதால், மற்றபடி முதலியார் கக்ஷியைச் சேர்ந்த ஆள்களில் சிலர் தேர்தலை நடத்தக் கூடாது என்று மீட்டிங்கில் ஆnக்ஷபித்தும் அது யாராலும் லக்ஷியம் செய்யப்படாமல் போய் விட்டது.

periyar 306தவிரவும் முதலியாருக்கு அனுகூலமாயிருந்து, அனுகூலம் பெற்று வந்த சில கவுன்சிலர்களும் முதலியாருக்கு வேலை போனவுடனே அவரை கைவிட்டு விட்டுவிட வேண்டியதாகவும் ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் சேர்மென் தேர்தல் நடத்தலாமென்று கவுன்சில் மெஜாரிட்டியார் அபிப்பிராயப்படுவதை அறிந்த முதலியாரின் அத்தியந்த கூட்டாளிகளான நண்பர்களில் முக்கியமானவர்களில் சிலர் கவுன்சிலை விட்டு வெளியேறி விட்டார்கள். உடனே தேர்தல் துவக்கமானதும் முதலியார் கக்ஷியைச் சேர்ந்தவரும், முதலியாரின் முக்கிய பாதுகாப்பாளராயிருந்தவருமான ஸ்ரீமான் பிரப் துரை அவர்கள் தனது கேண்டிடேட்டாக ஸ்ரீடேவிட் என்பவரை பிரேரேபித்தார். கிறிஸ்தவ கவுன்சிலர்கள் எல்லோரும் ஸ்ரீமான் டேவிட்டுக்கே ஓட்டுக் கொடுத்தார்கள்.

கருங்கல்பாளையம் ஸ்ரீமான் பாலசுப்பராயலு நாயுடுகார் என்கிற ஒரு கனவானை மற்றொரு கவுன்சிலர் பிரேரேபிக்க, கிறிஸ்தவ நியமன கவுன்சிலர்கள் தவிர ஏறக்குறைய மற்றக் கவுன்சிலர்கள் எல்லாம் அவரை ஆதரித்து ஓட்டுக் கொடுத்ததால் மெஜாரிட்டி ஓட்டினால் ஸ்ரீமான் நாயுடு அவர்களே தெரிந்தெடுக்கப்பட்டார். ஆகவே இந்த தேர்தலின் மூலம் ஸ்ரீமான் நாயுடுகார் தெரிந்தெடுக்கப்பட்டார் என்கிற சந்தோஷத்தைவிட ‘ஸ்ரீமான் முதலியார் வருவதற்கில்லாமல் போய் விட்டாரே அதுவே போதும்’ என்கின்ற சந்தோஷமே அதிகமென்றுதான் சொல்ல வேண்டும். இந்த தேர்தல் பலனில் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தான் வருவதற்கில்லாமல் போய்விட்டதே என்பதாக அடைந்த விசனத்தைவிட ஸ்ரீமான் பிரப் என்கின்ற பாதிரி துரைக்குத்தான் அதிக விசனம் என்று சொல்ல வேண்டும்.

ஏனெனில் ஸ்ரீமான் முதலியாரை கொள்ளையடிக்க அனுமதிப்பதால் பாதிரி துரைக்கு தன் காரியம் எவ்வளவோ சாதகமாய்க் கொண்டு வந்தது.            இப்போது அவ்வளவு எதிர்பார்க்க முடியாது. ஆதலால் தன் மனுஷர் போய்விட்டாரே என்கின்ற விசனம் அவருக்கு இருப்பது அதிசயமல்ல. கடைசியாய் ஈரோடு முனிசிபாலிட்டியில் ஸ்ரீமான் முதலியார் ஆக்ஷியில் இதுவரை நடந்து வந்த ஊழல்களுக்கெல்லாம் இந்த பாதிரி துரை அவர்களே 100 -க்கு 75 பங்கு காரணஸ்தர் என்று சொல்லுவது மிகையாகாது. அவர் தனது மிஷின் காரியத்திற்காகவே ஸ்ரீமான் முதலியார் செய்து வந்த நாணயக் குறைவான காரியங்களுக்கெல்லாம் உதவியளித்து வந்ததுதான் இப்படிச் சொல்வதற்கு முக்கிய ஆதாரம். அல்லாமலும் ஸ்ரீமான். முதலியாருக்கு அண்ணனாகிய ஸ்ரீமான் டேவிட் அவர்களை பிரேரேபித்தது இரண்டாவது ஆதாரம்.                     

நிற்க, இனிமேலாவது முன் நடந்தது போன்ற காரியங்கள் நடவாமல் இருக்கும் என்று தைரியமாய் இருப்பதற்கு போதிய ஆதாரம் இருப்பதாகவும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில் முதலியார் சூழ்ச்சி மறைமுகமாக இன்னமும் கொஞ்ச காலத்திற்கு இருக்கும் என்று சந்தேகப்பட அநேக அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏனெனில் இந்த சேர்மென் தேர்தலையும் பலர் ஆnக்ஷபிக்க ஆசைக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் ஸ்ரீமான் பிரப் துரை சிபார்சு வெகுதூரம் பாயும். சர்க்காருடைய யோக்கியதையும் அதற்கேற்றது போல் தான் இருக்கிறது. எனவே யார் யார் சிபார்சு யார் யாரை என்னென்ன செய்ய சொல்லுமோ என்கின்ற பயம் ஜனங்களுக்கு இனியும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதலால் முன்னின்று வேலை செய்தவர்களுக்கு மூக்கு நிலைக்குமா என்கின்ற சங்கதி போகப் போகத்தான் தெரிய வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 06.11.1927)

Pin It