நேற்றுவரை டில்லியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சியம் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இயக்கங்களும், தலைவர்களும் இன்றைக்கு அப்படியே தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை, இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற ‘இந்தியா கூட்டணி’ என்று ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டில் வளர்ச்சி என்கிற முழக்கத்தோடும், 2019 ஆம் ஆண்டில் பாதுகாப்பு என்கிற முழக்கத்தோடும் வடநாட்டு மக்களை ஏமாற்றி அரியணை ஏறிய மோடிக்கு இப்போது அந்த இரண்டு முகமூடிகளும் கிழித்து எறியப்பட்டுவிட்ட நிலையில் , 2024 தேர்தலை எதிர்கொள்ள வழி தெரியாமல் போய்விட்டது.

இந்த இக்கட்டான சூழலில் தான் ஜனநாயக வழிமுறைகளை மீறி, ஏதேச்சதிகாரத்தால் எதிர்க்கட்சிகளை சட்டத்தின் துணையோடும், அதிகாரத்தின் வலிமை கொண்டும் ஒடுக்கி, அழித்து விட்டு, ஆர் எஸ் எஸ் இன் ‘சர்வாதிகாரப் பாசிச ஒற்றை ஆட்சி ‘ எனும் திட்டத்திற்கு மகுடம் சூட்டத் துணிந்திருக்கிறார்கள் மோடி வகையறாக்கள்.

ஈடி, அய்ட்டி, சிபிஐ, என்ஐஏ போன்ற விசாரணை அமைப்புகளை முடுக்கிவிட்டு எதிர்க்கட்சிகளை எல்லாம் விசாரணை வளையத்திற்குள்ளும், சிறைக் கொட்டடியிலும் அடைத்து விட்டு ஆளில்லா பந்தயக் களத்தில் ஆடி முடிசூட முயற்சிக்கிறார் மோடியானவர்.

india allianceதமிழ்நாட்டில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் ‘ஒரு பர்சன்ட் கட்சி ‘ என்கிற அளவிற்கு பாஜகவை அடித்து வீழ்த்தியவர் தமிழ்நாடு அரசின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த திரு.செந்தில் பாலாஜி.

தலைநகர் டெல்லியில் இருந்து பஞ்சாப் அரியானா மாநிலங்களைத் தாண்டி குஜராத் வரை பாஜகவின் ஊழல், வன்முறை, மதவெறி அரசியலை நேருக்கு நேராக எதிர்கொண்டு மக்களிடமிருந்து பாஜக கும்பலை அந்நியப்படுத்தியவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பட்டியல் பழங்குடிச் சமூகத்திற்கு மட்டுமல்ல, ஓபிசி மக்களுக்கும் கூட பாஜக விரோதி தான் எனச் சொல்லி சிறுபான்மையினர் மற்றும் ஓபிசி - பட்டியல்- பழங்குடியின சமூக கூட்டமைப்பையே பாஜகவிற்கு எதிர் திசையில் நிறுத்தியவர் ஹேமந்த் சோரன்.

அரசியல் சாசன சட்ட எல்லைகளுக்கு அப்பால் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் ஏதேச்சதிகாரத்தின் உச்சத்திற்கே சென்று, இரண்டு மாநில முதலமைச்சர்களையும், தமிழ்நாட்டின் அமைச்சரையும் சிறைப்படுத்தி இருக்கிறார் நரேந்திர மோடி.

திமுக , காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஓரணியில் நின்று , கூட்டணி அமைத்து ஜனநாயக வழியில் தேர்தலை எதிர்கொள்ளக் களம் காண்கிறார்கள். ஆனால் , ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு விரோதமாக, இரண்டு பெரும் கார்ப்பரேட்டு களுக்காகவும், ஆர்எஸ்எஸ் என்கிற ஒரு சமூக விரோத ஆரிய கூட்டத்தின் அதிகார மையத்திற்காகவும், தமது பத்தாண்டு கால ஆட்சியை ‘காணிக்கை’ யாக்கிய நரேந்திர மோடியால், 2024 தேர்தலில் ஜனநாயக வழியில் மக்களைச் சந்திக்க முடியவில்லை. எனவே, சர்வாதிகாரத்தின் துணையோடு எதிர்க்கட்சிகளை பந்தயக் களத்திற்கு வெளியே தள்ளிவிட்டு ஊடகம், அரசு எந்திரம், தேர்தல் ஆணையம், நீதி பரிபாலனங்கள் என ஒட்டு மொத்த நிர்வாக அமைப்புகளையும் மிரட்டியோ, விலை பேசியோ வளைத்துக் கொண்டு, இப்போது ஒழுக்கசீலர் என்கிற முகமூடியோடு தேர்தல் களத்தில் எட்டிப் பார்க்கிறார் மோடி.

இறந்து போனவர்களுக்கு வைத்தியம் பார்த்து ஆயுஷ்மான் காப்பீட்டுப் பணத்தைச் சுருட்டிய மோடி ஈடி, அய்ட்டி சோதனைகளில் கோடிகளைச் சுருட்டிக் கொண்ட மோடி, காண்ட்ராக்டர்களுக்குத் தேர்தல் பத்திரங்களில் பேரம் பேசிய மோடி இன்றைக்கு ஒழுக்கசீலர் என்கிற பொருந்தாத முகமூடியை அணிந்து கொண்டு மீண்டும் அரசாட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்.

அரசியல் என்பது சமூகத்திற்கானது. ஜனநாயகம் அரசியலுக்கானது. சர்வாதிகாரம் அல்லது எதேச்சதிகாரம் என்பது அரசியல் அழிவின் எல்லைக்கோடு என்பதை உணர்ந்திருக்கிற இந்திய மக்கள், குறிப்பாகத் தென்னிந்திய மக்கள், இன்னும் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்கள் 2024 இல் மோடிக்கு விடை கொடுக்கத் தயாராகி விட்டார்கள்.

எப்போதும் ஹிட்லர்களின் முடிவுகளை ஸ்டாலின்களே எழுதுவார்கள் என்கிற கடந்த நூற்றாண்டின் வரலாறு இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. அது இந்தியாவிலிருந்து தொடங்குகிறது. குறிப்பாகத், தெற்கிலே இருந்து தொடங்குகிறது.

வீழ்த்துவோம் மோடியின் பாசிச சர்வாதிகாரத்தை.

வாக்களிப்போம் தி.மு.கழகத் தலைமையிலான ‘இந்தியா கூட்டணி’க்கு!

- காசு.நாகராசன்

Pin It