மகாத்மா காந்தி பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயத்தைப் பற்றி ராஜிபேசி ஏதாவது ஒரு முடிவு செய்ய பார்ப்பனரல்லாதார் தலைவர் என்கிற முறையில் உங்களை கூப்பிட்டால் வருவீர்களா என்பதாக சில பத்திராதிபர்களும் சமாச்சார வியாபார பிரதிநிதிகளும் வந்து நம்மைக் கேட்கிறார்கள்.

தவிர, மதுரையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டி மகாத்மாவைத் தலைமையாக வைத்து பேசுவதானால் வரத் தயாராயிருக்கின்றீர்களா என்று பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் சிலரும் கேட்கிறார்கள். இவற்றிற்கு பதில் சொல்லவேண்டியது அவசியமாகின்றது. முதலில் மகாத்மா கூப்பிட்டால் என்பதற்கு பதில் சொல்லிவிட்டு மகாநாட்டுக்கு பதில் சொல்லுவோம்.

periyar tho pramasivan 640மகாத்மா கூப்பிடுகிறாரா இல்லையா என்பது தெரியாமல் கூப்பிட்டால் வரத் தயாராயிருக்கிறேன் என்று சொல்ல நாம் தயாராயில்லை.

அல்லாமலும் எதற்காக கூப்பிடுகிறார் என்பதும், பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ஒற்றுமைக் குறைவாயிருக்கும் விஷயங்களில் மகாத்மா அவர்களின் சொந்த கொள்கை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாமலும், மகாத்மா அழைப்புக்கு வரும் பார்ப்பனர்கள் மகாத்மா சொல்லும் முடிவை ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளாமலும், அந்தப் பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ளுவதை பார்ப்பன சமூகம் ஒப்புக் கொள்ளுகிறதா என்பதை அறியாமலும், திடீரென்று மகாத்மா கூப்பிட்டால் வருகிறேன், மகாத்மா சொல்வதை ஒப்புக் கொள்ளுகிறேன் என்று சொல்லுவது ஒருக்காலும் பொறுப்பை உணர்ந்தவர்கள் சொல்லும் வார்த்தை ஆகாது என்பதே நமது அபிப்பிராயம். அல்லாமலும் குருகுல விஷயத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட தகராறைப் பற்றி மகாத்மாவால் ஒருவித பைசலும் செய்ய முடியாததோடு “இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இது தான் சரி”என்பதாக தமது அபிப்பிராயத்தைக் கூட தைரியமாய் சொல்ல முடியாமல் வழ வழ என்று பேசிவிட்டுப் போய்விட்டார். தவிர இங்கு பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ஏற்பட்டுள்ள பிரிவினைக்கு ஆதாரமானது என்ன என்று பார்ப்போமானால் முக்கியமாய் மூன்று விஷயங்கள் என்று கருதுகிறோம், அவைகள் மத இயல், சமூக இயல், அரசியல் என்பவைகளாகும்.

மத இயலில் பார்ப்பனர்களுக்கும் மகாத்மாவுக்கும் எந்த நிலையிலும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயம்.

சமூக இயலில் மகாத்மா அபிப்பிராயத்தைப் பார்ப்பனர்கள், சாஸ்திரிகள், பண்டிதர்கள் முதலியவர்கள் மகாத்மாவின் நேரிலேயே ஒப்புக் கொள்ள முடியாது என்றும், மகாத்மாவை “உனக்கு ஒன்றும் தெரியாது நீ சொல்லுகிறபடி செய்விக்க உன்னாலும் முடியாது உங்கள் பாட்டனாலும் முடியாது” என்றும் சொல்லி விட்டார்கள். அதோடு மகாத்மாவின் பகுத்தறிவிற்கும் சத்தியத்திற்கும் வேத சாஸ்த்திரங்கள் இடம் கொடுக்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். அன்றியும் தகப்பன் குணம் மகனுக்கு பிறவியில் வருகிறது என்று முடிவு கட்டிக் கொண்டிருக்கிற மகாத்மாவானவர் சமூக நிலையில் எல்லோரும் சமம் என்று சொல்வதென்றால் அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. தவிர, குருகுலத்தில் தைரியமாய் முடிவு சொல்ல மகாத்மாவுக்கு முடியாமல் போனதின் காரணமே இதுதான்.

மற்றபடி மூன்றாவதான அரசியலைப் பற்றியோவென்றால் “ நான் ஒத்துழையாமைக்காரன் ஆனதால் எனக்கு உத்தியோகம், பதவி, அரசாங்க நிர்வாகத்தில் பங்கு ஆகியவைகள் எல்லாம் மிகக் கேவலம். ஆகையால் அதைப்பற்றி நான் ஒன்றும் பேச முடியாது” என்கிறார். ஆகவே “முள்ளு முனையில் மூன்று குளம் வெட்டினேன். அவற்றில் இரண்டில் தண்ணீரில்லை, ஒன்று வற்றிப்போய்விட்டது” என்று சொல்வதுபோல் மூன்றும் மூன்றாய்ப் போய்விட்டது. இனி அந்த விஷயத்தில் மகாத்மாவின் அபிப்பிராயம் நமக்கு தெரிய வேண்டியிருக்கிறது. எந்த விதத்தில் அவரது பைசல் நமக்கு செல்லுபடி உள்ளதாகும் என்பதை யோசித்தால் நாம் போகலாமா போக வேண்டாமா என்பது விளங்காமல் போகாது. மகாத்மா பெரியவர் என்கிற முறையில் மகாத்மாவை மதிப்பதைப் பற்றி நமக்கு பிரமாதமான ஆட்சேபனை ஒன்றும் இல்லை. அவருக்கு வேண்டிய சவுகரியம் உபசாரம் செய்வதிலும் ஆnக்ஷபனை இல்லை. ஆனால் இப்போழுதோ மகாத்மாவுக்கு எங்கு பார்த்தாலும் சங்கராச்சாரிக்கும் கவர்னருக்கும் இருக்கிற கவுரவம் போல் எங்கள் வீட்டுக்கு வாருங்கள், எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்பதாக 1000, 500 கொடுத்து கூப்பிட்டு மரியாதை செய்ய ஆள்கள் மலிந்து இருக்கும்போது, நாம் மேலே விழுந்து அவருக்குச் செய்து கொடுக்க வேண்டிய சவுகரியங்களாவது உபசாரங்களாவது பாக்கி இருக்கிறதா என்பது நமக்குப் புலப்பட வில்லை. நிற்க,

நாமும் மகாத்மாவுடன் பேசியதாக இருக்கட்டும் என்பதாக கருதி எதாவது காரணத்தின் பேரில் மகாத்மாவைக் காணப்போவதானது மகாத்மாவுக்கு மிகுதியும் தொந்திரவு கொடுப்பதாகும். ஏனென்றால் இது சமயம் யாரோ இரண்டு பேரிடம் தன்னை ஒப்படைத்து, அவர்களது திருப்திக்காக எவ்வளவோ காயாலாவுக்கு யிடையில் நமது நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்யும்போதும் அழைத்து வந்தவர்களும் சர்வ ஜாக்கிரதையாய் தங்கள் விஷயம் தவிர வேறு விஷயம் அவருக்கு தெரியப்படுத்தப்படாது என்ற பிரயத்தனத்தில் இருக்கும் போதும், வேறு யாரையும் தனியாய் பேச விடாமல் எப்போதும் காவல் காத்து வரும்போதும், நாம் ஏன் அனாவசியமாய் உள்ளே புகுந்து மகாத்மா பதில் சொல்ல கஷ்டப்படும் படியான பிரச்சினைகளை கேட்பதும், அவர் நமக்கு அனுகூலமாய்ச் சொல்லுவதா அல்லது அவர்களுக்கு அனுகூலமாய் சொல்லுவதா என்று தாக்ஷண்ணியத்திற்கு அடிமைப்பட்டு விழிப்பதும், கஷ்டப்படுவதுமான காரியங்களை நாம் ஏன் அவருக்கு உண்டாக்க வேண்டும்? இவற்றையெல்லாம் பார்க்கும்போது மகாத்மாவை பேசாமல் அவர் இஷ்டப்படி விட்டு அவரைக் கூட்டி வந்தவர்களாவது திருப்தி அடையும்படி விடுவதுதான் சகல விதத்திலும் நன்மை என்று தோன்றுகிறது. ஒற்றுமை மகாநாடு விஷயமும் இதுபோலத்தான், அதாவது மகாத்மா ஒரு இடத்தில் பேசும்போது, “பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் விஷயமாய் ஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கர் ஒருவிதமாய்ச் சொன்னார், வரதராஜுலு நாயுடு வேறுவிதமாய் கொன்னார். இன்னொருவர் இந்த இரண்டுக்கும் விரோதமாய் சொன்னார், நான் எதை நம்பட்டும்” என்று பேசியிருக்கிறார். மகாத்மாவுக்கு அவரது பாரிஸ்டர் படிப்பு இதைச் சொல்ல உதவி செய்திருந்தாலும் கூட, நம்மவர்களிலும் மதம், சமுதாயம், அரசியல் ஆகிய விஷயங்களில் எல்லோரும் ஒரே அபிப்பிராயமாய் இருக்கிறார்கள் என்று சொல்லி விடவும் முடியுமா?

கோயமுத்தூர் மகாநாட்டுக்குபிறகு திருப்பூரில் ஒரு மகாநாடு கூட்டி பார்ப்பனரல்லாதார் பேரால் அபிப்பிராயம் வெளியானது போலும், கோயமுத்தூர் மகாநாட்டில் இருந்து பேசி விட்டு வந்த கனவான்கள் வெளியில் வந்து பார்ப்பனரல்லாதார் தலைவர் என்கிற முறையில் அவற்றை அடியோடு திருத்தியும், மறுத்தும் மறந்தும் நேர் விரோதமாய் நடந்துகொண்டது போலும், ஜஸ்டிஸ் கட்சியாருக்குள்ளாகவே “அது நமக்கு பிடிக்கவில்லை” “நான் அதற்கு கட்டுபடவில்லை” என்று சொன்னது போலும், “ ஆரம்பத்திலிருந்தே எனக்கு பேர் பிடிக்கவில்லை, பார்ப்பானை நீக்குவது பிடிக்கவில்லை. இது சமயம் நமது நாட்டுக்கு சுயமரியாதை அவசியம் இல்லை” என்பதாக பலவிதமாய் பேசுவதுபோலும் உள்ள எத்தனை வித அபிப்பிராய பேதப்பட்டவர்கள் நம்மிலும் இருக்கிறார்கள். இவ்வளவு பேரையும் நம்மால் ஒன்று சேர்க்கத்தக்க அளவுக்கு நாம் நாட்டில் செல்வாக்கு பெற்றுவிட்டோமா? இம்மாதிரி ஆள்களுக்கு நாட்டில் மதிப்பில்லாமல் செய்து விட்டோமா? அப்படி ஒன்றுமில்லாமல் ஒரு மகாநாடு கூட்டி ராஜி பேசுவதென்பது இது சமயம் அவ்வளவு பொருத்தமான காரியம் என்று சொல்லிவிட முடியாது,

அல்லாமலும் இந்த பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் ராஜி செய்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் நிறைவேறக் காலம் வரும்போது இருசமூகத்திற்கும் இது சமயம் தலைவர்களாயிருப்பவர்கள் சர்க்காரே ஒழிய வேறில்லை. அவர்கள் சொல் லும் தீர்ப்புத்தான் அமுலுக்கு வரக்கூடும் அன்றியும் அத்தீர்ப்பை ஒப்புக் கொள்ளாவிட்டால், நிபந்தனையும் போடுவதற்கு அவர்களால் முடியும். அந்த தீர்ப்பு இல்லாமல் ராஜியாகக்கூடிய யோக்கியதை இது சமயம் நமது நாட்டிற்கு இல்லையென்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் வீணாக இம்மாதிரி காரியங்களில் காலத்தை கடத்தி, நமது லட்சியத்திற்கும் அடிக்கடி தடங்கல் ஏற்படுத்திக் கொள்ளுவதை அடியோடு மறந்துவிட்டு, முன் சொன்னது போல ஜனங்களுக்கு தைரியமாய் உண்மையை எடுத்துச் சொல்லி தாங்கள் அனுபவித்து வரும் இழிவிலிருந்து மீளுவதற்கு ஆசையையும் ஆற்றலையும் உண்டாக்க வேண்டியதே நமது முக்கிய கடமை.

(குடி அரசு - கட்டுரை - 02.10.1927)

Pin It