சாதாரணமாக, நம் நாட்டில் கடவுளுக்கு உருவங்கள் ஏற்படுத்தி, வழிபாடு செய்யத் தொடங்கிய காலம் 2000, 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகவே இருக்கலாம். அதாவது ஆரியர் நம் நாட்டிற்கு வந்து, அவர்களது (ஆரிய) மதத்தைப் புகுத்தி, அதன் மூலம் கடவுள்களைக் கற்பித்து, அவற்றிற்கு உருவங்கள் ஏற்படுத்தின காலத்தில் இருந்தே, நம் நாட்டில் உருவக் கடவுள்கள் காட்சியளித்து வருகின்றன எனலாம். அதற்கு ஆதாரம் என்னவெனில், எந்தக் கடவுளது உருவத்தை எடுத்துக் கொண்டாலும் ஆரிய மதக் கதை சம்பந்தமும், ஆரியத் தோற்ற சம்பந்தமும் இல்லாமல் காண்பது அரிதாகவே இருக்கிறது.

ஆகவே, இந்தப்படி 3000, 4000 ஆண்டுகளாகக் கடவுளை உருவமாக்கி, மக்களுக்குக் காட்டி, கடவுள் தன்மை ஊட்டி வந்தும், இன்றைக்கும் பாமர மூட ஜனங்கள் மாத்திரம் அல்லாமல் பண்டிதர்கள், ஞானிகள் என்பவர்கள் முதல், பெரும் மேதாவிகள் என்பவர்களுக்குக்கூட உண்மையான கடவுள் பக்தி, அவரவர் நடப்பில் கடவுள் தன்மை, பகுத்தறிவு ஆகியவை ஏற்படவில்லை என்றால் மூடர்களுக்குக் கடவுள் பக்தி ஏற்படுத்துவதற்காக உருவம் (விக்கிரகம்) கற்பிக்கப்பட்டது என்பதில்ஏதாவது உண்மையோ, பலனோ, அறிவுடைமையோ உண்டு என்று யாராவது கொள்ள முடியுமா?

மற்றும், நித்தியமான சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், கடவுள் என்பதாக ஒன்று உண்டா இல்லையா என்பதாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுவானேன்? சிலருக்குக் கடவுள் இல்லை என்றும் இருக்க முடியாதென்றும் தோன்றுவானேன்? ஏதோ "அறிவிலி'களுக்கு இப்படித் தோன்றுகிறது என்று கொள்வதானாலும், "அறிவாளி'களுக்குக் கடவுளைக் காப்பாற்ற வேண்டும், கடவுள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றுவானேன்? கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று குழந்தைகளுக்கும், பள்ளிப் பிள்ளைகளுக்கும் கற்பிக்க முயற்சி செய்வானேன்?

அவைதாம் போகட்டும் என்றாலும், கடவுள் அவதாரம் என்றும், கடவுள் தன்மை அடையப்பெற்ற பெரியார்கள் என்றும், கடவுள் மனித ரூபமாய், பன்றி ரூபமாய் மற்றும் ஏதேதோ ஆபாச ரூபமாய் காணப்படுவானேன்? கடவுளுக்குக் குமாரரும், தூதுவரும், அசரீரியும், மக்கள் மீது மருளும் அதாவது சாமியாடுதலும் ஏன்?

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மெய்யாய் இருந்தாலும், பொய்யாய் இருந்தாலும் இவை கடவுள் இருப்பதை ஊர்ஜிதம் செய்யவோ அல்லது மக்களுக்கு கடவுளால் பயன் ஏற்படவோ, அல்லது உலக நடப்புக்காவது, மனித சமுதாய நல்வாழ்வுக்காவது ஏதாவது பயன் ஏற்படுமா என்பது மிகவும் சிந்திக்க வேண்டியதாகும்.

இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும் இனிமேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்று, சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம்.

எப்படி எனில், மக்கள் இனி சுலபத்தில் சாகமாட்டார்கள். இதுவரை நம் மக்களுக்கு சராசரி ஆயுள் 25 என்றால், இனி மக்கள் சராசரி ஆயுள் வயது 50க்கும் மேற்பட்டுத்தான் இருக்க முடியும். சுகாதாரம் அதிகம்; வைத்திய வசதி அதிகம். மனிதன் நோய்களையும், துன்பங்களையும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அற்பாயுளாகப் போய்க் கொண்டு இருந்தவன், தன் முயற்சியில் நம்பிக்கை வைத்துப் பரிகாரம் தேடி மீளுகிறான். மனிதனுக்குப் பல துறைகளில் அறிவு உணர்ச்சி ஏற்பட்டு, வாழ்வை நீட்டிக் கொள்ள வசதி பெற்றுவிட்டான்.

இது போலவே, மக்கள் பிறப்பும் அதிகமாகிவிட்டது. கர்ப்பச் சிதைவு, சிசு மரணம், பிரசவ மரணம் இனி சுலபத்தில் ஏற்படாத மாதிரி பாதுகாப்புகள், பரிகாரங்கள் ஏற்பட்டு விட்டன. இனி மலடும் இருப்பதற்கு இல்லாமல் நிவர்த்தி மார்க்கங்கள் ஏற்பட்டு விட்டன. இனி விதவைகளாகவும் எவரும் காலம் கழிக்க முடியாமல் விதவை மணம், சுதந்திர காதல் முதலியன செலவாக்குப் பெற்று, சாதாரணமாய் நடப்பில் வருவதின் மூலம் அவற்றாலும் பிறப்பு அதிகமாகின்றது.

பொதுவாக, பிறப்பு விகிதங்களும் பலவகை சவுகரியங்களால் நபர் 1–க்கு 2,3,4 என்பதாகக் குழந்தைகள் இருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர் 6,8,10,12 என்பதாகக் குழந்தைகள் பிறப்பதும், அவைகளும் நீண்ட நாள் வாழ்வதுமாக இருக்கின்றன. இவர்களுக்கு எல்லாம் உணவு, போக போக்கியப் பொருள், பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன் உணவுப் பஞ்சம் ஏற்பட்டே தீரும். இவைகளில் பெரும் போட்டியும் அதன் பயனாய் வெறுப்பு, வஞ்சகம், துரோகம், கொள்ளை, கொலை முதலியவைகள் மலிந்துவிடும். சாதுவும் யோக்கியமுமான மக்கள் மிகமிகத் துன்பமடைய நேரிடும். அயோக்கியர்களும் காலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள். அதற்கேற்ற அரசாங்கந்தான் ஏற்பட முடியும்.

Pin It