Periyarஇவ்வுயர் நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற விழாவில் நான் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் நான் யார், எனது கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் பொதுத் தொண்டு செய்கிறவன். நாட்டில் பலர் பொதுத் தொண்டு செய்கிறார்கள் என்றாலும், நான் மேற்கொண்டிருக்கிற தொண்டு மனிதத் தொண்டு – மக்கள் தொண்டாகும். நம் நாட்டைப் பொருத்தவரை, மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகிறேன். மனிதன் மனிதனாக இல்லை.

பகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக் கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன என்பதோடு, இந்த நாட்டில் பெண்கள் அடிமைகளாக, சமுதாயத்திற்குப் பயன்படாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள், ஆண்களுக்கு அடிமையாகி ஆண்கள் வசதிப்படி குழந்தைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்களே ஒழிய, சம உரிமை உடையவர்களாக இல்லை.

இவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்கா வண்ணம் கடவுள் என்ற பாறாங்கல்லும், அதன் மேல் மதம் என்ற பாழுங்கல்லும், அதன் மேல் சாஸ்திரங்கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை. எனக்கு மட்டும் இத்துணிவு எப்படி வந்தது என்றால் – கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர், மொழி, இலக்கியம், நாடு என்கின்ற எந்தப் பற்றும் எனக்கு இல்லை.

இலக்கியம் என்றால் அறிவு என்று தான் பொருள். ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து என்று ஒன்றும், தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்றும் பாடினார்கள். கடவுள் இங்கு எதற்கு? கடவுள் உங்களை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அல்லது கடவுளை நீங்கள் வாழ்த்தி வாழ வைக்கின்றீர்களா என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் வாழ்த்து எதற்கு? அதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏதோ சம்பிரதாயம், வழக்கம், மூடநம்பிக்கை என்பதைத் தவிர, வேறு அதனால் எந்தப் பலன் ஏற்படும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் "அ' வருமா என்று கேட்கிறேன்.

திராவிட இயக்கம் தோன்றுகிறவரை, தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது? அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ, அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன?

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்றுகூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை – முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்வர்கள் நாம்தான் ஆவோம்.

முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே, அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான்.

நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்தக் காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையவை அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். 

27.8.1971ம் தேதி மணப்பாறையில் ஆற்றிய உரை

(நன்றி : தலித் முரசு ஏப்ரல் 2009)