கனவான்களே! சென்னை சட்டசபையிலுள்ள வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி எனக்கு கொஞ்சமாவது கவலையில்லை. அதில் கவலை செலுத்துவதில் ஏதாவது பிரயோஜனம் உண்டாகுமா? என்கிற விஷயத்திலும் அதிகமான பிரயோஜனமிருக்காது என்கிற முடிவுக்கு வந்தவன். ஏழை மக்களிடம் வசூலித்த கோடி கோடியான வரிப் பணத்தை அம்மக்களுக்கு யாதொரு கிரமமான உபயோகமும் செய்யாமலேயே வெள்ளைக்காரரும் நமது படித்தக் கூட்டத்தாரும் எப்படி பங்கு போட்டுக் கொள்ளுவது என்பது தான் பட்ஜெட் (வரவு செலவு திட்ட) விவாதம் என்பது எனது முடிவான அபிப்பிராயம். சட்டசபை மாத்திரமல்ல இந்திய சட்டசபை, அரசாங்க சபை ஆகிய எதுகளின் யோக்கியதையைப் பற்றியும் இம்மாதிரிதான் நினைக்கிறேன்.

periyar and mr radha

பெரிய பெரிய திட்டம் என்பதெல்லாம் கூட இப்படியே ஜால வேடிக்கையாகத்தான் முடிகிறது. உதாரணமாக மேட்டூர் திட்டம் முதலிய யானை விழுங்கிப் பிசாசு போன்ற திட்டங்களின் சூதுகளை கவனித்துப் பார்த்தால் மற்ற சூதுகளைப் பற்றி யாருக்குமே சுலபமாய் விளங்கிவிடும். அத்திட்டங்களால் என்ன லாபம் என்பதை இப்பொழுதுதான் தஞ்சை ஜனங்கள் கூட உணர்ந்து வருகிறார்கள். இத் திட்டத்தின் பேரால் கோடி கோடியாய் நமது பணம் வெளிநாட்டிற்கு யந்திரங்களுக்காகவும், சிமெண்ட்டு முதலிய வெளிநாட்டு சாமான்களுக்காகவும் லக்ஷ லக்ஷமாக வெளிநாட்டார் உத்தியோகத்தில் சம்பாதிக்கவும் கொள்ளை போகவும் நம்நாட்டு அதிகாரிகளுக்கும் லக்ஷ லக்ஷமாய் கொள்ளை போகவுமே உண்டாக்கப்பட்ட திட்டமாய் ஏற்பட்டு விட்டதே என்று எல்லோரும் சந்தேகப்படும்படியாய்விட்டது. இச் சந்தேகங்களுக்கு யாரும் இன்னமும் பதில் சொல்பவரே இல்லை. கோபம் மாத்திரம் வருகிறது. இந்தக் கொள்ளையை பற்றி ஜஸ்டிஸ் கட்சியார் பேரிலும் கூடத் தான் ஜனங்கள் குற்றம் சொல்லுகிறார்கள். இவர்கள் ஏன் அதிகாரத்தில் இருந்த காலங்களில் இவற்றை வெளியிட்டிருக்கக்கூடாது? என்பதற்கு தக்க சமாதானம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி கோடி கோடியாய் செலவாகும் பணத்தின் யோக்கியதையே இப்படி இருந்தால் ஆயிரம், பத்தாயிரம் ரூபாய் செலவுகளில் சண்டை பிடிப்பதில் பயன் என்ன? நமது நாட்டு பட்ஜட் சண்டையே வெட்கக் கேடான காரியம். எப்படியாவது அரசாங்கத்தார் அவர்கள் பிடித்த காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இதில் தலையிட்டு சத்தம் போடுவதின் மூலம் நமது படித்தவர்கள் தங்களுக்கு ஒரு பங்கு அதில் கிடைக்க வழி தேடுவதே அல்லாமல் ஜனங்களுக்கு நன்மை செய்வது என்பது பூஜ்ஜீயம்தான். பட்ஜட்டில் உண்மையான சண்டை போடுவதென்றால் அரசாங்கச் செலவைக் குறைப்பதின் மூலம் மக்களின் வரியைக் குறைக்கக் கூடியதாய் இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் வரி வசூல் செய்த பிறகு செலவைக் குறைப்பதற்கு சண்டை போடுவதில் லாபம் என்ன? உதாரணமாக மந்திரி சம்பளம் குறைப்பது என்பதில் சிலர் சண்டை போட்டு விட்டால் பெரிய தேசப் பக்தர்களாகி விடுகிறார்கள். மந்திரிகள் சம்பளம் குறைவுபட்டால் யாருக்கு லாபம்? சம்பளம் குறைந்த விகிதத்திற்கு ஏதாவது வரி குறைக்கப்படுகிறதா? “சுடுகாட்டிற்குப் போன பிணம் சுட்டுத்தான் ஆக வேண்டும், திரும்பி வரமுடியாது” என்பதுபோல் மந்திரிகள் சம்பளம் ஆளுக்கு மூவாயிரம், மூவாயிரம் குறைத்து விட்டாலும் அந்த மீதிப் பணத்திற்கும் இன்னும் இரண்டு உத்தியோகமோ, திட்டமோ போட்டு பார்ப்பனர்களுக்கும், படித்தவர்களுக்கும் அந்த பணம் போய் சேரும்படி செய்து விடுவார்களே தவிர, வரி கொடுத்தவர்களுக்கு ஒரு லாபமும் கிடைக்காமல் போவதோடு அந்த உத்தியோகஸ்தர்களையும் திருப்தி செய்ய ஏழைகள் அதிகம் பணம் செலவு செய்ய வேண்டித்தான் வரும்.

மந்திரிகள் நிறைய சம்பளம் வாங்கினாலாவது சட்டசபையில் தங்களை உபத்திரவிக்கின்றவர்களுக்கு மாதம் 400, 500 கொடுக்கலாம்; அதனால் அவர்களும் பிழைக்கலாம். நான் நேற்றுகூட ஒரு விசேஷம் கேள்விப்பட்டேன். அதாவது, ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் தங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் தங்கள் கட்சி பிரச்சாரங்களுக்காக, பத்திரிகைகளுக்காக மாதம் 3000 ரூபாய் கொடுத்து வந்தார்களே அதுபோல் சில மந்திரிகள் தங்களை சட்டசபையில் உபத்திரவிக்காமல் இருக்கும்படி செய்வதற்காக சில வாயாடி ஆசாமிகளுக்கு 400,500 கொடுக்கலாமா என்று கூட நினைத்தார்களாம்! இது பொய்யோ நிஜமோ எனக்கு உண்மை தெரியாவிட்டாலும் வேடிக்கையாக பார்ப்போமேயானால் இதில் தப்பிதமில்லை என்றே சொல்லலாம். என்னவென்றால் ரூ 5533-5 - 4 வீதம் ஒவ்வொரு மந்திரி சம்பளம் வாங்கி இவ்வளவையும் தானே சாப்பிடுவதற்கு என்ன பாத்தியம்? ஏன்? மற்றவர்களுக்கும் அதில் ஒரு பங்கு கொடுக்கட்டுமே; ஒரு கட்சி மந்திரிகள் தங்கள் பேரில் ஒரு கட்சியார் ஏற்படுத்தும் கெட்டப் பெயரை மாற்றுவதற்காக பத்திரிகைப் பிரசாரத்திற்கு ஆளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுத்தால், மற்றொரு கட்சி மந்திரிகள் தங்கள் பெயரில் கெட்ட பெயர் ஏற்படுத்த எண்ணி உபத்திரவம் செய்ய வருபவர்களுக்கோ 500, 500 ரூபாயாக கொடுத்து அதை முளையிலேயே கிள்ளி விடுவது, பின்னும் லாபகரமான காரியமே அல்லாமல் வேறல்ல.

தற்கால நாகரீக அரசியல்களில் இதெல்லாம் ஒரு அதிசயமும் அல்ல குற்றமும் அல்ல என்றே தோன்றும். ஆனால் இதுகள் ஒருவழியில் சிரமம் என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியார் இந்த தர்ம நியாயத்தை நினைத்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது. ஜஸ்டிஸ் கட்சி அதிகாரப் பதவியில் இருந்த காலத்தில் அதன் எதிரிகள் உருப்படியான யாதொரு காரியத்தையும் செய்யவில்லை. ஆனாலும், செய்பவர்களையும் கெடுத்துக்கொண்டு தேசம் எப்படி போனா லும் சரி என்று அதிகாரப் பதவிகளை மாத்திரம் கைப்பற்றச் செய்து வந்த பல சூழ்ச்சிகளில் சட்டசபையில் வெறும் கூப்பாடு போட்டு பாமர ஜனங்கள் ஏமாறும்படி பத்திரிகைகளில் விஷமப் பிரசாரங்கள் செய்து வந்ததும், அதற்கு அனுகூலமாக சில அரசியல் பிழைப்புக்காரர்கள் ஒத்தாசை புரிந்து வந்ததும், அதனால் பாமர மக்கள் உண்மை அறியமுடியாமல் போய் ஏமாற்றம் அடைந்ததும் நாம் எல்லோரும் நேரில் அறிந்த விஷயமே. அவ்விதப் பொய் பிரசாரத்தின் காரணமாகவே ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்த பலர் தங்களைவிட எவ்விதத்திலும் யோக்கியதை, உயர்வு இல்லாதவர்களாலும், தாழ்ந்த சாதாரண மக்களாலும் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டதும் நாம் யாவரும் அறிந்த விஷயமே.

ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியாரும் இப்போது பதிலுக்குப் பதிலாய் அந்த கொள்கையை எடுத்துக்கொள்ளக் கூடாதானாலும் பார்ப்பனக் கூட்டத்தார் செய்தது புரட்டான காரியங்களென்றும், அது தங்கள் தங்கள் சுயநலத்திற்காக செய்து வந்த ஆரவாரங்களேயல்லாமல் அதில் உண்மையான தேசபக்தியோ, நல்ல எண்ணமோ இல்லை என்றும், இவ்வித முயற்சிகள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தைத் தடுக்க எண்ணங்கொண்டு செய்த சூழ்ச்சிகள் என்றும், இதை அறியாமல் பாமர மக்கள் ஏமாந்து போய்விட்டார்கள் என்றும், வெளிக்குக் காட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் அதை விட்டுவிடாமல் எந்தெந்த கிரமமான வழிகளில் அவற்றை வெளிக்கு காட்டக்கூடுமோ, அந்தந்த வழிகளுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் விட்டுவிடக்கூடாது என்றே சொல்லுகிறேன். இவ்வித காரியங்களாலும் தேசத்திற்கு ஒரு நன்மையும் ஏற்படாதென்பது உறுதி. ஆனாலும் பொய்யர்களின் யோக்கியதையை வெளிப்படுத்துவதின் மூலமாய் தேசத்திற்கு நன்மைகள் ஏற்படலாம் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

உதாரணமாக மந்திரிகளின் சம்பளத்தைக் குறைப்பதில் யாதொரு விதமான லாபம் இல்லையானாலும் நாம் குறைக்கத் தீர்மானம் கொண்டு வந்தாலும், அப்போது பார்ப்பனக் கட்சியாகிய சுயராஜ்ஜியக் கட்சியாரின் யோக்கியதை என்ன என்பதை பாமர மக்கள் அறியச் செய்யலாமல்லவா? அன்றியும் ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்கார் என்கிற ஒரு அய்யங்கார் பார்ப்பனர் ஸ்ரீரங்கத்தில் சொன்னதாக “சுதேசமித்திரன்” பத்திரிகையில் வெளியாயிருக்கிறபடி பார்த்தாலே பார்ப்பன சூழ்ச்சிகள் இன்னது என்பது யாவருக்கும் விளங்கும். அதாவது:- தாங்கள் மந்திரிகளை எதிர்க்கப் போவதில்லை என்றும், ஏதாவது திட்டங்களை எதிர்த்து சட்டசபையில் வெற்றி பெற்றாலும் அவ்வெற்றியை நிராகரித்துவிட கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆதலால் அநாவசியமாய் எதிர்ப்பதில் பயனில்லை என்று கருதி மந்திரிகளுடன் ஒருவிதமான ராஜி செய்து கொண்டதாகவும் பேசியிருக்கிறதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றது. சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றி வெற்றிபெற்றால் அதை கவர்னர் நிராகரித்துவிடலாம் என்கிற விஷயத்தை ஒரு மனிதன் உணருவதற்கு சட்டசபை தேர்தலுக்கு 30000, 40000 செலவு செய்து பொய்யும் புளுகும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி சட்டசபைக்குப் போன பின்புதான் தெரிந்துகொள்வதென்பது யாராவது நம்ப முடியுமா? இந்த உண்மை ஒரு பங்கா இழுப்பவனுக்கும் கூடத் தெரிந்திருக்கும். அப்படியிருக்க ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்கார் அவர்கள் இப்போதுதான் தெரிந்துகொண்டவர் போல் பேசியிருப்பதிலுள்ள புரட்டு யாவருக்குமே எளி தில் விளங்கலாம்.

அல்லாமலும் மந்திரிகளிடம் பார்ப்பனர்கள் ராஜி செய்து கொண்டார்களாம். என்ன ராஜி என்று பார்ப்போமானால் “பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு மந்திரிகள் இடையூறாய் இருக்க வேண்டும். ஜில்லா போர்டு முனிசிபாலிடி முதலிய ஸ்தானங்கள் பார்ப்பனர்கள் சொல்லுகிறபடி தாங்களும் தங்களுடைய நிபந்தனையில்லாத அடிமைகளுக்குமே விநியோகிக்க வேண்டும். மந்திரிகளின் ஆதிக்கத்திலுள்ள உத்தியோக போகங்கள் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்குமே விநியோகிக்க வேண்டும் - இதற்கு நன்றி காட்டுவதற்காக மந்திரிகளுக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் நடந்து கொள்ளுவதோடு மற்றவர்கள் யாராவது இடைஞ்சல் செய்தாலும் தாங்கள் முன்னின்று அதை நிவர்த்தித்துக் கொடுப்பது” என்பது அல்லாமல் வேறு ராஜி என்னமாய் இருக்கக்கூடும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

உதாரணமாக மந்திரிமார்கள் போகிற பக்கங்களிலெல்லாம் சுயராஜ்ஜிய கட்சி, ஒத்துழையாமைக் கட்சி முதலிய கட்சி பார்ப்பனர்கள் வரவேற்பளிப்பதும், அவர்கள் வாலை பிடித்துக் கொண்டு பின்னால் திரிவதுமான காரியங்களிலிருந்தே பார்க்கலாம். முன் மந்திரிகளுக்கு எந்த முனிசிபாலிட்டியாராவது வரவேற்பு செய்தால் “இது யாருடைய பணம்” என்று கேட்பதும், முன் மந்திரிகள் சுற்றுப்பிரயாணம் செய்தால் “எதற்காக இப்படி பொது மக்கள் பணத்தில் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்கள். இதற்கு செலவு என்ன ஆயிற்று” என்று கேட்பதுமாயிருந்தார்கள். முன் மந்திரிகளாவது தாங்கள் தனியாய் சுற்றுப் பிரயாணம் செய்தார்கள். இப்போதைய மந்திரிகள் நியமனமான காலந்தொட்டு பெண்டு பிள்ளைகள், சம்சார சகிதமாய் (எத்தனை நாளைக்கு இந்த பதவி வாழப்போகிறதோ என்கிற கவலையின் பேரில்) மாமியார் வீட்டு விருந்து சாப்பிடுவது போல் ஊர் தவறாமல் சுற்றிக்கொண்டு தங்கள் பதவி நிலைப்பதற்கு ஆங்காங்குள்ள ஆள்களுக்கு நல்ல வார்த்தை சொல்லுவதும், ஸ்தல சுய ஆட்சி முதலிய பதவி உத்தியோகங்கள் கொடுப்பதுமான காரியத்தில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் யாருமே பார்த்திருக்கலாம். இதற்காக இந்த “தேசீயப் பார்ப்பனர்களும்”, “முட்டுக்கட்டைப் பார்ப்பனர்களும்”, “ஒத்துழையாப் பார்ப்பனர்களும்” ஏதாவது பேசுகிறார்களா? திருடனை தேள் கடித்தது போல் வாயை மூடிக் கொண்டிருப்பதுடன் இவர்களும் இதற்கு உதவி செய்து வருகிறார்கள். இதை பார்க்கிறபோது ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்கார், “மந்திரிகளிடம் ராஜி செய்து கொண்டோம்” என்று சொன்னதற்கு ஆதாரமில்லாமல் போகவில்லை. நாமும் இவற்றையெல்லாம் அடியோடு கூடாது என்று சொல்ல வரவில்லை. இப்போதைய அரசியல் முறையில் யார் மந்திரி வேலை பார்த்தாலும் இப்படித்தான் நடக்கச் செய்யும் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் இந்த போக போக்கியம் பார்ப்பனர்களுக்குத்தான் சொந்தமா என்றுதான் கேட்கிறோம்? ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் இந்த பார்ப்பன புரட்டுகளை பாமர மக்களுக்கு சட்டசபையின் மூலம் எவ்வளவு தூரம் வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் வெளிப்படுத்த வேண்டுமென்றுதான் நான் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். அதற்கேற்ற நல்ல சமயம் கிடைத்திருக்கிறது. இனி இம்மாதிரி சமயம் கிடைப்பது அரிது.

மந்திரிகள் நமக்கு தனி முறையில் சிநேகிதர்கள் என்றோ வேண்டியவர்கள் என்றோ அல்லது பார்ப்பனர்களுக்கு பத்து எலும்பு போட்டால் நமக்கு ஒன்றாவது போடமாட்டார்களா என்றோ நினைத்து பார்ப்பன புரட்டுகளுக்கு நாம் அனுகூலமாய் இருப்பது மிக மிக கேவலமும் மானக்கேடும் ஆகும் என்றே சொல்லுகிறேன். இரண்டு, மூன்று வருஷ காலத்திற்குதான் நாம் உத்தியோகமில்லாமல் இருந்தால் செத்துப் போய்விடுவோமா? ஆயிரக்கணக்கான வருஷ காலமாய் பார்ப்பனர்களால் அழுத்தப்பட்டு கிடக்கும் நாம் நல்ல சந்தர்ப்பம் வந்து பாமர ஜனங்களும் கண் விழித்துக்கொள்ள தயாராயிருக்கும் இச்சமயத்தை சரியானபடி உபயோகித்துக்கொள்ள வேண்டுமென்றே கோருகிறேன். ஸ்ரீமான் பனகால் அரசருக்கும், ஞ.கூ.ராஜனுக்கும் டாக்டர் சுப்பராய மந்திரிகளிடமும் அன்பும் சினேகிதமும் இருக்கலாம். அதுபோலவே நமக்கும் முதல் மந்திரி விஷயத்தில் அய்யோ பாவம் ஒரு கொங்கு வேளாள மந்திரியாவது கொஞ்ச காலத்திற்கு போக போக்கியமனுபவிக்கட்டுமே என்கிற ஆசை இருக்கலாம். ஆனால் அதைக் காட்ட இது சமயமல்ல. பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு மானக்கேட்டை உண்டாக்கும்படியான நிலைமையை விருத்தி செய்வதற்கு அனுகூலமாயிருக்கும் மந்திரிசபையிடம் இம்மாதிரி சொந்த சிநேகிதமும், அன்பும், ஆசையும், வைத்து அனுமதிப்பது மிகவும் முட்டாள்தனமான காரியமென்றே சொல்லுவேன். மந்திரிகளின் கொடுமைக்கும் அவர்கள் பார்ப்பனக் கொள்கையையே உடையவர்கள் என்பதற்கும் ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன். தமிழ்நாட்டில் ஒன்று இரண்டு தவிர ஏறக்குறைய எல்லா ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளும் பார்ப்பனரல்லாதாராயிருக்கிறார்கள். இதனால் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு எவ்வளவு நன்மை ஏற்பட்டிருக்கிறதென்பது அந்தந்த ஜில்லா போர்டுகளில் பார்ப்பனர்கள் பிரசிடெண்டாயிருந்த காலத்தில் எப்படி இருந்தது என்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். இப்போது பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படிக்கவும், பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் உத்தியோகஸ்தர்கள் ஏற்படவும் எவ்வளவோ நன்மை ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பளமே பிரதானமாயில்லாவிட்டாலும் பார்ப்பனரல்லாதாருக்கும் புத்தி உண்டு, மூளை உண்டு என்று ருஜு செய்யவாவது சந்தர்ப்பம் கிடைத்தது. இப்போது இதை ஒழிக்க பார்ப்பனர்கள் யோசனை சொன்னால் முதல் மந்திரி அதற்கு இடம் கொடுப்பதானால் இதைவிட மோசமாக பார்ப்பனரில்கூட ஒருவரை எதிர்பார்க்க முடியாது.

என்னவெனில் திருநெல்வேலி, தஞ்சை, தென்னாற்காடு, சேலம், செங்கற்பட்டு ஆகிய ஜில்லாக்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளுக்கு உத்தியோகம் காலாவதியானால் மறுபடியும் அவர்கள் தேர்தலில் நிற்பதற்கு யோக்கியதை அளிக்கக்கூட மறுப்பதானால் இம்மந்திரியின் கொள்கையையும் பார்ப்பனரல்லாதார் அபிமானத்தையும் பற்றி சொல்ல வேறு என்ன ஆதாரம் வேண்டும்? பொள்ளாச்சி முனிசிபாலிட்டியில் வெகு காலமாய் கட்சிகள் இருந்து வருவதும் அங்குள்ள உத்தியோகஸ்தரல்லாத சேர்மனை எடுத்துவிட்டு உத்தியோகஸ்தர்களே சேர்மனாய் இருந்து வந்ததும் யாவருக்கும் தெரியும். இந்த ஊருக்கு உத்தியோகஸ்தரல்லாத சேர்மன் முறை வழங்கும்படி பொது ஜனங்கள் வெகு காலமாய் கேட்டு வந்தவர்களுக்கு தவளைகள் தங்களுக்கு ராஜாவாக இருக்க மரக்கட்டை வேண்டாமென்று கேட்டதற்கு பாம்பை கொடுத்ததைபோல் திடீரென்று ஒரு பார்ப்பன சேர்மனை நியமிப்பதென்றால் அதுவும் தனக்கு மீட்டிங்கு நடத்த கோரம்கூட சேர்த்துக்கொள்ள லாயக்கில்லாத அவ்வளவு “செல்வாக்கு” உள்ள ஒரு பார்ப்பனரை நியமிப்பதானால் மந்திரியின் கொள்கைக்கு இதைவிட வேறு பரீட்சை என்ன வேண்டும்? ஜமீன்தார் பிரதிநிதியான மந்திரி யோக்கியதையே இப்படி இருந்தால் மற்ற மந்திரிகளைச் சொல்லவேண்டுமா?

மற்றபடி ஒரு கிருஸ்தவ பிரதிநிதியாய் வந்த மந்திரி வகுப்புவாரி திட்டத்தின் மூலமாய் பதவி அடைந்து விட்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தப்பு என்கிறார். “இது உண்ட கலத்தில் இரண்டுக்கு இருந்தது” போல் அல்லவா இருக்கிறது. இது மாத்திரமல்ல கள், சாராயம் குடிப்பது கெடுதியா என்று கூட இனிமேல் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமாம். இதை பள்ளிக் கூடத்திலேயே படித்துவிட்டு வராமல் ஏழை வரி செலுத்துவோர் பணத்திலா மாதம் 5500 வாங்கிக்கொண்டு மந்திரியாகித் தானா படிக்க வேண்டும்? கள், குடி நின்றால் சர்க்கார் நடக்காதாம். சர்க்காரை நடத்திக் கொடுக்கத்தான் இவர்களை சுயராஜ்ஜியக் கட்சியார் மந்திரிகளாக்கினார்கள் என்பது இப்போதாவது விளங்கவில்லையா? இன்னமும் இவர்கள் ஊருக்கு ஊர் முன்னுக்கு பின் புரண்டு பேசுவதைப் பற்றி வண்டி வண்டியாய் எடுத்துச் சொல்லலாம்.

இந்த மந்திரிகள் தங்கள் கட்சிக்கு 15 பேர்கள்தான் இருக்கிறார்கள் என்று சொல்லுவது சுத்த பொய் என்றே சொல்லுவேன். சுயராஜ்யக் கட்சி மெம்பர் 40 பேரும் சட்ட மெம்பர் தயவால் நியமனம் பெற்றவர்களும் ஒத்துழையா பார்ப்பனர் தயவால் சட்டசபைக்கு வந்தவர்களும் பின்பலமாயிருக்கிறார்கள். இதை வெளியாக்கக்கூட ஜஸ்டிஸ் கட்சிக்கு யோக்கியதை இல்லை என்பதானால் இதை விட நமது சமூகத்திற்கு வேறு அவமானம் வேண்டியதில்லை. ஆதலால், இந்த புரட்டுகளையும் சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்த எங்கெங்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றதோ அதை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன். இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் இருந்தால் இருக்கலாம். ஒரு சமயம் சர்க்கார் நிஷ்டூரமோ மந்திரிகளின் சொந்த சிநேகிதத்திற்கு கெடுதியோ வரும் என்பதாக பயப்படுவதாய் இருந்தால் கவுன்சில் பதவியை ராஜினாமா கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிடுவது சுயமரியாதைக்கு அழகல்லாமல் சுயராஜ்யக் கட்சியாரின் சுயநலத் திட்டத்தை நடத்திக் கொடுக்கும் மந்திரிகளுடன் சரிசமமாய் உட்கார்ந்திருப்பது மிகவும் கேவலமானதாகும். மதுரை மகாநாட்டில் தலைவர் பனகால் அரசர் சட்டசபையில் மந்திரிகளையும் சர்க்காரையும் எதிர்க்க சந்தர்ப்பம் கிடைக்கிற காலத்தில் கொஞ்சமும் தயவு தாக்ஷண்யமில்லாமல் எதிர்ப்போம் என்றும், உத்தியோகம் ஏற்பதில்லை என்றும் சொன்னார். இதை பார்ப்பனர்கள் வாக்குத்தத்தம் போலும், பார்ப்பன காங்கிரஸ் வாக்குத்தத்தம் போலும் செய்து விடாமல் பார்ப்பனரல்லாதார் வாக்குத்தத்தம் போல் செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

(குறிப்பு: சென்னை தியாகராய மெமோரியல் கட்டிடத்தில் பி.டி. ராஜன் தலைமையில், பனகால் அரசர், பாத்ரோ ஆகியோர் முன்னிலையில் பேசியது.

குடி அரசு - சொற்பொழிவு - 20.03.1927)

Pin It