சட்டசபைத் தேர்தலின் முடிவுகளைக் கண்டு பலர் பலவிதமாக அக்கட்சியை தாக்கிப் பேசவும் எழுதவும் ஆரம்பித்து விட்டார்கள். உலக வாசனை இன்னதென்றே அறியாது சமயத்துக்கு தக்கபடி மனிதர்களுக்குத் தக்கபடி இச்சகம் பேசி வயிறு வளர்ப்பவர்கள் இந்த சமயத்தில் பெரிய மேதாவிகளைப்போல் அக்கட்சிக்கு ஞானோபதேசம் செய்ய வந்து விட்டார் கள். இக்கூட்டத்தார் காங்கிரசுக்கென்று தங்கள் சுயநலம் கருதாமல் ஒரு காதொடிந்த ஊசியளவு உதவியும் செய்திருக்க மாட்டார்கள்; அல்லது ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் எவ்விதமான நன்மையுமாவது அடை யாமலும் இருந்திருக்க மாட்டார்கள். அல்லாமலும் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் சுவற்றுமேல் பூனையாகவும், சமயத்திற்கு தகுந்தபடியும், தங்களது சுயநலத்திற்கு ஆதாரமாகவும் அவ்வப்போது நடந்தும், பேசியும், எழுதியும் காலங்கழித்து வந்த இவர்கள் இப்போது “வகுப்பு வாதத்தால் ஜஸ்டிஸ் கட்சிக்கு தோல்வி என்றும் தேசீய வாதத்தால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி ஏற்பட்டது என்றும் ஆதலால் வகுப்பு வாதத்தை விட்டு விட்டு தேசீய வாதத்தில் சேருங்கள்” என்றும் பார்ப்பனர் மகிழும்படி பேசுகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சியார்கள் ஜெயித்து விட்டார்கள் என்று பார்ப்பனப் பத்திரிகை கள் கலம் போட்டு எழுதி இருக்குமானால் அப்போது இந்த சமய சஞ்சீவி கள் என்ன எழுதுவார்கள் பேசுவார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் இதற்கு மாறாக “காங்கிரஸ் தேச நன்மையை மறந்து ஒரு வகுப்பாருடைய அநுகூலத்திற்கு வசப்படுத்திக் கொள்ளப்பட்டது; காங்கிரஸினால் சுயராஜ்யக் கட்சி வகுப்புப் பூசல் கிளப்பிவிட்டது; அதனால் ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி ஏற்பட்டது; ஆதலால் காங்கிரஸ்காரர் வகுப்புகளுக்கு ஆதாரமான கொள்கைகளை விட்டு தேச காரியத்தில் பிரவேசிக்க வேண் டும்” என்று எழுதுவார்கள். அது போலவே இப்போது வேதாந்தம் பேசும் மேதாவிகள் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார்கள். இதைப் பற்றியும் ஆச்சரியப்பட வில்லை. உலகம் உள்ளவரை இப்படி ஒரு கூட்டம் இருந்து தான் வரும். ஆண்மையோடு வாழ முடியாத நிலைமையை அடைந்தவர் கள் தங்களுக் கோ ஒருவித கொள்கையும் அற்றவர்கள். ஓடுகிற மாட்டின் வாலைப் பிடித்து முறுக்குவார்களே தவிர ஓடாத மாட்டை ஓட்டுவிக்க முயலவே மாட்டார்கள்.
வகுப்புத் துவேஷமென்றால் என்ன? அது யாரிடம் இருக்கிறது?
உண்மையாக வகுப்புத் துவேஷம், வகுப்பு வாதம், தேசீயம், உரிமை என்பதற்கு இவர்களுடைய பொருள்தான் என்ன? பார்ப்பனர் தங்கள் சுயநலத்திற்கு ஒன்றைச் சொன்னால், இவர்களும் கூடவே கோவிந்தா போடுவதுதான் தேசீயமென்பதற்கு அருத்தமா? உண்மையாகவே வகுப்புத் துவேஷமும் வகுப்பு வாதமும் பார்ப்பனர்களிடம் இருக்கிறதா? ஜஸ்டிஸ் கட்சியினிடம் இருக்கிறதா? என்பதை இவர்கள் உணராதவர்களா? நான் உயர்ந்த ஜாதி, நீ தாழ்ந்த ஜாதி என்று சொல்லுபவனிடம் வகுப்புத் துவேஷ மும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? அல்லது நீயும் நானும் சமமான ஜாதிதான்; நம்மில் உயர்வு இல்லை; தாழ்வு இல்லை என்கிறவர்களிடம் வகுப்புத் துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? நான் கடவுள் தலை யில் பிறந்தேன்; நீ காலில் பிறந்தாய்; நான் உயர்ந்தவன் - பிராமணன், நீ தாழ்ந்தவன் - வேசி மகன், வைப்பாட்டி மகன், சூத்திரன் என்று சொல்லுபவ னிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? நீயும் நானும் ஒரே இடத்திலிருந்துதான் பிறந்தோம்; நீ பிராமணனுமல்ல, நான் வைப் பாட்டி மகனுமல்ல; நாம் இருவரும் சகோதரர்கள் என்று சொல்லுகிற ஜஸ்டிஸ் கட்சியில் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா?
அல்லது தெய்வம் என்றும் தீர்த்தம் என்றும் மோக்ஷமென்றும் புண்ணிய மென்றும் தர்மமென்றும் தானமென்றும் உன் சொத்தும் வரும்படியும் எங்களுக்கே கொடுக்க வேண்டும்; அதுகள் எல்லாம் எங்களுக்கேதான் சேர வேண்டும்; நாங்கள் உயர்ந்த ஜாதியாரானதால் அவற்றை எங்கள் இஷ்டம் போல் விநியோகித்துக் கொண்டு நாங்களே சாப்பிடுவோம்; நீங்கள் தாழ்ந்த ஜாதியாரானதால் உங்களுக்கு தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தாலும் தோஷம்; ஆதலால் அதில் ஒன்றும் பாத்தியமில்லை, கொடுத்ததிற்கும் நீங்கள் கணக்குக்கூட கேட்கக் கூடாது என்று சொல்லுகிறவர்களிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? நீ கேட்கிறபடியும் அதற்கு மேலும் உன் இழவுக்கு அழுது விடுகிறோம்; ஆனால் அதுகளுக்கு கணக்கு மாத்திரம் காட்டு என்று கேட்பவர்களிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? அல்லது எங்கள் கால் கழுவின தண்ணீரை தீர்த்தமாக சாப்பிடுவதுதான் உங்களுக்குப் புண்ணியம்; நாங்கள் உங்களைத் தொட்டால், கிட்ட வந்தால், தெருவில் நடக்க விட்டால், கண்ணால் கண்டால் கூட எங்களுக்குப் பாவம் என்று சொல்லுகிறவர்களிடம் வகுப்பு துவேஷ மும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? உங்கள் கால்களைக் கழுவின தண் ணீரை வேண்டுமானாலும் குடிக்கிறோம்; அதற்குப் பணம் வேண்டுமானா லும் கொடுக்கிறோம்; எங்களையும் உள்ளே விடுங்கள் ; தெருவில் நடக்க விடுங்கள் என்று கேட்பவர்களிடம் வகுப்பு வாதமும் வகுப்பு துவேஷமும் இருக்கிறதா?
பார்ப்பனரில் பெரிய தேசீயவாதியும் காங்கிரஸ்காரருமான ஸ்ரீமான் வி. கிருஷ்ணசாமி அய்யர் தர்மப் பள்ளிக்கூடம் வைத்தார். அதற்கு பெரிய பண்டும் வைத்தார். ஆனால் அதில் பார்ப்பனர்கள் மாத்திரம் படிக்கலாமே ஒழிய பார்ப்பனரல்லாதார்கள் படிக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக் கிறார். இவரிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? அல்லது திருப்பதியில் பார்ப்பனரல்லாதார் பணத்தில் ஒரு பள்ளிக்கூடம் ஏற்பட்டு இருந்தும் அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா என்று கெஞ்சுபவர்களிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா?
பார்ப்பனரல்லாதாரான தஞ்சாவூர் மகாராஜா சுமார் வருஷம் இரண்டு லட்சம் ரூபாய் வரும்படி வரும்படியான சொத்துக்களை தர்மமாக விட்டிருக்கிறார். அதை ஸ்ரீமான் எம்.கே. ராமாநுஜாச்சாரியார் ஜில்லா போர்டு அக்கி ராசனராயிருக்கும் வரை அய்யங்கார் பார்ப்பனப் பிள்ளை களே சாப்பிட்டுக் கொண்டும், பார்ப்பனப் பிள்ளைகளே சம்பளமில்லாமல் படித்துக் கொண்டும், அய்யங்கார் பார்ப்பன உபாத்தியாயர்களே உத்தியோ கம் பெற்றுக் கொண்டும் லட்சக்கணக்கான ரூபாயை அனுபவித்து வந்தார் கள். வாசல் பெருக்கவும் எச்சிலை எடுக்கவும் தவிர வேறு காரியத்திற்கு பார்ப்பனரல்லாதார்களை உள்ளே விடாமல் அடித்துக் கொண்டிருந்தாரே அவரிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருந்ததா? அல்லது இப்போது பார்ப்பனரல்லாத ஸ்ரீமான் பன்னீர்செல்வம் ஜில்லாபோர்டு பிரசி டெண்டாகவும் ஸ்ரீமான் உமா மகேஸ்வரம் பிள்ளை தாலூக்காபோர்டு பிரசி டெண்டாகவும் வந்ததால் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் சாப்பிடும் படியாகவும், சம்பளமில்லாமல் படிக்கும்படியாகவும், பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களும் உத்தியோகம் பெறும்படியாகவும் செய்தார்களே இவர்களிடம் வகுப்பு துவேஷமும் வகுப்புவாதமும் இருக்கிறதா?
பார்ப்பனரல்லாத பெண்கள் ருதுவானால் பார்ப்பனர்கள்தான் முதல் முதல் சாந்தி முகூர்த்தம் செய்ய வேண்டும்; பார்ப்பனர்களுக்கெல்லாம் பார்ப்பனரல்லாத பெண்கள்தான் வைப்பாட்டிகளாயிருக்க வேண்டும்; ஒரு பார்ப்பனர் பார்ப்பனரல்லாத பெண்ணை சம்போகத்திற்கு கூப்பிட்டால் உடனே அவள் புருஷன் கூட்டிக் கொண்டு வந்து படுக்கையை விரித்து படுக்க வைத்துவிட்டுப் போக வேண்டும். இல்லாவிட்டால் நரகம் கிடைக் கும்; நரகத்துக்கு பயப்படாவிட்டால் ஊரை விட்டு வெளியே ஓடிப்போக வேண்டும் என்கிற கொடுமை தீர மலையாளக் குடிவார மசோதா கொண்டு வந்தால் அதை ஒழிக்கப் பாடுப்பட்ட ஸ்ரீமான் சி.பி. ராமசாமி அய்யரிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? இக் கொடுமை ஒழிக்க மசோதா கொண்டு வந்த ஸ்ரீமான் சி.கிருஷ்ணன் நாயரிடம் வகுப்பு துவேஷ மும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? பொது ஜனங்கள் பணத்தால் ரிபேர் செய்யப்படுவதும் பொது ஜனங்களின் பணத்தால் நிர்வகிக்கப்பட்டு வருவதுமான அநேக முனிசிபல் தெருக்களில் பன்றி, நாய், மலச் சட்டி, மல வண்டி, பிணம் முதலியதுகள் போகலாம் மனிதன் மாத்திரம் ஏன் போகக் கூடாது. ஏனென்றால் நாங்கள் பிராமணர்கள், நீங்கள் தாழ்ந்தவர்கள் ஆதலால் நடக்கக்கூடாது என்று சொல்லுபவர்களிடம் வகுப்பு துவேஷ மும், வகுப்பு வாதமும் இருக்கிறதா? அல்லது நாங்களும் மனிதர்கள்தானே, நாய், கழுதை, பன்றியைப் போலாவது எங்களை நினைக்க வேண்டாமா என்று கேட்பவர்களிடம் வகுப்பு வாதமும், வகுப்பு துவேஷமும் இருக் கிறதா?
நீயும் நானும் இந்துமதம் ; இந்து மதத்திற்கு ஆதாரம் வேதம்; நான்தான் அதைப்படிக்க யோக்கியதை உள்ளவன்; நீ சூத்திரனானதால் அதைப் படிக்கக்கூடாது என்று சொல்லுபவர்களிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? எங்கள் மத ஆதாரத்தையாவது படிக்கக் கூடாதா? நாங்கள் என்ன அவ்வளவு தாழ்ந்தவர்களா? அது எதில் இப்படி சொல்லியிருக்கிறது; அதையாவது பார்க்கக் கூடாதா? என்று கேட்பவர் களிடம் வகுப்புத் துவேஷமும், வகுப்பு வாதமும் இருக்கிறதா? மக்களுக்கு சமத்துவமும் ஆண்மையும் சுயமரியாதையும் சம்பாதித்துக் கொடுப்பதாய் பார்ப்பனரல்லாதாரிலேயே மிகுதியும் கொடுக்கப்பட்ட பணத்திலும் காங்கிரஸ் பொதுப் பணத்திலும் குருகுல ஆச்சிரமம் வைத்து பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்தால் பாவம் என்று சொல்லுகிறவர்களிடம் வகுப்பு வாதமும் வகுப்புத் துவேஷமும் இருக் கிறதா? எங்கள் பணத்தையே வாங்கிக்கொண்டு எங்கள் குழந்தைகளுக்கே தாழ்வையும் சின்னத்தனத்தை யும் சிறு வயது முதலே படிப்பிக்கிறீர்களே இது தர்மமாகுமா என்று கேட்கிற வர்களிடம் வகுப்புத் துவேஷமும், வகுப்பு வாதமும் இருக்கிறதா?
ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொன்ன ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரிடம் வகுப்புத் துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? அவருக்குப் போட்டியாய் நின்ற ஸ்ரீமான் முத்தையா முதலி யாரிடம் வகுப்பு வாதமும் வகுப்புத் துவேஷமும் இருக்கிறதா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் “மக்கள் பிறவியில் வகுப்பு வித்தியாசம் இல்லை” என்கிற ஒரு தீர்மானம் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கராலும், எஸ். ராம நாதன் அவர்களாலும் கொண்டு வந்து நிறைவேற்றியவுடன் காங்கிரசை விட்டு வெளியே போன எம்.கே. ஆச்சாரியாருக்கும் காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ராஜீனாமா கொடுத்து விட்ட ஸ்ரீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், டாக்டர் சாஸ்திரி, சந்தானம், வரதாச்சாரி ஆகிய பார்ப்பனர் களிடமும் வகுப்புத் துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? அல்லது இத் தீர்மானம் கொண்டு வந்தவர்களிடமும் ஆதரித்தவர்களிடமும் இருக்கிறதா?
முனிசிபாலிட்டி பொதுக் குழாயில் தங்கள் வகுப்பார்களைத் தவிர மற்ற வகுப்பார் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்றும், இன்ன படித்துறையில் தங்கள் வகுப்பார்களைத் தவிர தண்ணீர் மொள்ளக் கூடாது, குளிக்கக் கூடாது என்றும், இன்ன படித்துறையில் தங்கள் தூரமான ஸ்திரீகளைத் தவிர வேறு யாரும் துணி துவைக்கக் கூடாது என்றும் சொல்லி இடம் ஒதுக்கி வைத்துக் கொள்ளுகிறவர்களிடம் வகுப்புத் துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? அல்லது எல்லோரும் தண்ணீர் மொள்ளலாம்; எல்லோரும் தண்ணீர் பிடிக்கலாம்; எல்லா பெண்டுகளும் குளிக்கலாம், துவைக்கலாம் என்று சொல்லுகிறவர்களிடம் வகுப்புத் துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா?
பார்ப்பனரல்லாதார் லட்சக்கணக்காய் செலவு செய்து கோவில் கட்டினால் நீ சூத்திரன், நீ வைசியன், நீ வாணியன், நீ நாடான், நீ பஞ்சமன், நீ இதுவரை வரலாம், நீ இதுவரை வரலாம், நீ வாசற்படி கிட்டக்கூட வரக் கூடாது, நீ தெரு மதிலைக்கூட தொடக் கூடாது, நீ தெரு வழிக் கூட நடக்கக் கூடாது என்று சொல்லுகிறவர்களிடம் வகுப்பு வாதமும் வகுப்பு துவேஷ மும் இருக்கிறதா? அல்லது சுவாமி, சுவாமி கொஞ்சம் கண்ணால் பார்த்து ஓடிப் போகிறோமே, கொஞ்சம் காலைத் தொட்டு கும்பிட்டு விட்டு ஓடிப் போகிறோமே என்று கெஞ்சுகிறவர்களிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? இன்னமும் ஜஸ்டிஸ் கட்சியையும் அதன் தலைவர் களையும் வகுப்புத்துவேஷக் கட்சி, வகுப்புவாதக் கட்சி என்கிறவர்கள் நன்றாய் யோசித்து சுயராஜ்யக் கட்சியிலோ, காங்கிரஸ் கட்சியிலோ, ஒத்து ழையாமைக் கட்சியிலோ எந்தப் பார்ப்பனத் தலைவராவது வகுப்புத் துவேஷமும் வகுப்பு வாதமும் இல்லாதவர்கள் இருக்கிறார்களா? என்பதை யும், சுயராஜ்யக் கட்சியிலோ காங்கிரசிலோ வகுப்புத் துவேஷமோ வகுப்பு வாதமோ நீங்கக்கூடிய ஏதாவது ஒரு திட்டம் நடைமுறையிலாவது எழுத்தி லாவது இருக்கிறதா? என்பதையும் சுயநலத்தையும் அறிவீனத்தையும் விட்டு நடுநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தார்களானால் அவர்களுக்கு உண்மை தெரியாமல் போகாது. ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புத் துவேஷம் வகுப்பு வாதம் என்று சொல்லுகிற - எழுதுகிற எத்தனையோ மேதாவிகள் தங்களது உண்மையான தாயும் தகப்பனுக்கும் பொதுவாய் தங்கள் நெஞ்சில் கையை வைத்துப் பார்ப் பார்களானால் தாங்கள் உண்மை பேசுகிறார்களா? பார்ப்பனர்கள் புன்சிரிப்புக்கோ, தங்களது வயிறு வளர்ப்புக்கோ, சுயநலத் திற்கோ பேசுகிறார்களா? அல்லது தேசத்திற்கோ தங்களது சமூகத்திற்கோ பேசுகிறார்களா? என்பது விளங்காமல் போகாது.
இவைகளுக்கு பயப்படக்கூடாது
இக்கூட்டங்களை நாம் கணக்கில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுகளை மதிக்காமலும் இதன் எதிர்ப்புகளுக்கு சளைக்காமலும் இருக்கத்தக்க நிலைமை எப்பொழுது பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு வருகி றதோ அன்றுதான் வகுப்புத் துவேஷமும்,வகுப்பு வாதமும், வகுப்பு ஆதிக்க மும் ஒழிந்து மக்களுக்கு சுயமரியாதை ஏற்படுமே அல்லாமல் இதுகளை மதித்துக் கொண்டும் இந்த எதிர்ப்புகளுக்குப் பயந்து கொண்டும் உள்ளவரை சுயமரியாதை உண்டாகாது. சுயமரியாதை என்பது கிள்ளுக்கீரை அல்ல. அதை அடைந்த சமூகமானாலும் தனி மனிதனானாலும் அவனுக்கு உலகமே தூசுக்கு சமானமாக இருக்கும். அச்சமூகத்தாரை எந்த அரசாங்க மும் அக்கிரமமாய் ஆளமுடியாது. அதன் மேல் எந்த வகுப்பும் ஆதிக்கம் செலுத்த முடியாது. பார்ப்பனரல்லாத மக்களின் அறிவீனத்தையும் சுய மரியாதையில் லக்ஷியமற்றிருக்கும் விலங்குத் தன்மையையும் விளக்க இத்தேர்தலின் முடிவை விட வேறு என்ன சாக்ஷி வேண்டும்?
சர்க்கார் தயவையும் எதிர்பார்க்க முடியாது
இதில் தோல்வியுற்றவர்கள் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்கும் சுயமரியாதைக்கும் உழைப்பவர்களானால் அவர்கள் சட்டசபையையும் சர்க்காரையும் லட்சியம் செய்வார்களா? எந்த உலகத்திலாவது அன்னிய அர சாங்கத்தார் - ஒரு தேச மக்களின் அறிவீனத்தாலும் சொரணையற்ற தன்மை யிலும் ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கத்தார் - மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே மானத்தையும், கற்பையும், மனசாக்ஷியையும் விற்கும் படியான நிலைமையில் தனது பிரஜைகளை வைத்திருந்தாலொழிய அரை நிமிஷமும் ஆளமுடியாத அரசாங்கத்தார் - அந்நாட்டு மக்களின் சுய மரியாதைக்கு உதவியாயிருப்பார்களா?
நமது தற்கால வாழ்வு நிலை பொய்யா?
அன்றியும் பார்ப்பனரல்லாதார் கட்சி, தங்களுக்கு இருப்பதாய்ச் சொல்லும் குறைகள் இல்லை என்றாவது தாங்கள் முன்னேற வேண்டு மென்று கோருவது குற்றமென்றாவது இப்போது அவர்கள் மற்ற வகுப்பார் களால் தாழ்வாய் மதிக்கப்படாமல் சமத்துவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கிறார்கள் என்றாவது யாராவது சொல்ல முடியுமா? முதலாவது சர்க் காராரே நம்மை காங்கிரஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பிற்பட்ட வகுப்பிலேயே சேர்த்து இருக்கிறார்கள். பார்ப்பனர்களோ நம்மை பஞ்சமர்கள் என்றும் சூத்திரர்கள் நாலாவது வகுப்பார் என்றும் சொல்லுவதோடு வைதீகத்தில் நம்மை சிஷ்யர்களாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதில் யாருக்காவது ஆnக்ஷபணை உண்டா? மற்றபடி ஜாதி வகுப்பு வைதீக நிலைமைகளை விட்டு விட்டு அரசியலிலும் லௌகீகத்திலும் நமக்குத் தக்க உரிமை வேண்டுமென்றால் நீ படிக்கவில்லை, உனக்குப் புத்தியில்லை, உங்களுக்கு வேலை பார்க்க சக்தி யில்லை, நிர்வாகத் திறமை இல்லை என்று சொல்லு கிறார்களே இவைகள் உண்மையாய் இருந்தாலும் சரி பொய்யாயிருந்தாலும் சரி இந்தக் காரணத்தாலோ அல்லது இப்படிச் சொல்லுவதாலோ நாம் பின்னமடைந்து இருக்கிறோம் என்பதையும் யாராவது மறுக்க முடியுமா?
ஏமாந்து போகக்கூடாது
ஆகவே, இந்த நிலைமையிலிருந்து விடுதலையாகி முற்போக் கடைய வேண்டுமா? வேண்டாமா? இதற்கு என்ன வழி என்பதை இப்பொழுது “வகுப்பு துவேஷம் தோல்வியுற்றது” என்று பிதற்றும் எந்த மேதாவியாவது இதுவரை சொன்னாரா? அல்லது செய்து காட்டினாரா? ஒன்றுமில்லாமல் எதையோ தனக்கே புரியாமல் கூட்டத்தில் ‘கோவிந்தா’ போட்டுக் கொண்டு இருந்து விட்டும் இப்போது பார்ப்பனர்கள் கை உயர்ந்த தாக கனவு கண்டு கொண்டும் “வகுப்பு வாதம் தோற்றது”, “ வகுப்பு துவேஷம் தோற்றது” என்று சொல்லுகிற வார்த்தைகளை பார்ப்பனரல் லாதார் கேட்டு ஏமாந்து போகக்கூடாது. நாம் சுயமரியாதையைக் கோரு வதும் அதற்கான நமது கொள்கைகளும் செய்கைகளும் வகுப்பு வாத மானாலும் சரி, வகுப்பு துவேஷமானாலும் சரி, நாஸ்திகமானாலும் சரி, ராஜ துரோகமானாலும் சரி வேதத் துரோகமானாலும் சரி நரகசித்தியாவதானா லும் சரி, நமது கோரிக்கை கை கூடும் வரை உழைக்க வேண்டியதேயல் லாமல் அவர் என்ன சொல்லு கிறார்? இவர் என்ன சொல்லுகிறார்? சட்டம் என்ன சொல்லுகிறது? என்பவைகளைக் கவனிக்கவே கூடாது என்று எச்சரிக்கிறோம்.
நமது எண்ணம் நல்ல எண்ணமா? கெட்ட எண்ணமா? நமது சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்கும் பாடுபடுகிறோமா? அல்லது யாரிடத் திலாவது துவேஷத்தினாலாவது துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினாலாவது மற்றவர்களுடைய நியாயமான சுதந்திரத்தைப் பிடுங் கிக் கொள்ள வேண்டுமென்றாவது பாடுபடுகிறோமா என்பதான இவை களை மாத்திரம்தான் நாம் நன்றாய் கவனமாய் நடுநிலையிலிருந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டுமே அல்லாமல் மற்றபடி யோசிப்பது நமது வெற்றிக்கு இடையூறாகும்.
எந்த விதத்திலும் நமது திட்டங்களை மாற்றக் கூடாது.
எனவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் நமது சுயமரியாதைத் திட்டங்களையும் முன்னேறும் பிரயத்தனங்களையும் கைவிட்டு விடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறோம். இன்னும் 3 ´ பொறுத்துதான் அனேகமாய் சட்டசபைத் தேர்தல் வரும். ஒரு சமயம் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் மத்தியில் ஒரு தரம் கலைத்து மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் வந்தாலும் வரும். எப்படி ஆனாலும் அதைப் பற்றி கவலையுமில்லை. அதற்காக நாம் இப்போது கவலைகொள்ள வேண் டிய அவசியமுமில்லை. நமது சுயமரியாதையின் கொடிய எதிரியான பார்ப்பனியத்தைச் சுட்டு வீழ்த்துங்கள் ! அதைக் கொன்று குழி தோண்டிப் புதையுங்கள்! புதைத்தவுடனே அக்குழியில் இருந்தே உண்மையான சுயராஜ்ஜியம் முளைக்கும். அது எந்த வகுப்பாருக்கும் இடைஞ்சலா யிருக்காது, சர்க்காருக்கும் இடைஞ்சலாயிருக்காது. பேராசைக்காரருக்கு மாத்திரம் கொஞ்சம் அதிருப்தியாயிருக்குமே அல்லாமல் வேறில்லை. அதுவும் நாம் உண்மையாய் வேலை செய்வதைக் கண்டால் தானாகவே சரி பட்டுப்போகும். ஆதலால் பார்ப்பனர்கள் பத்திரிகைகளையும் அவர்க ளது திண்ணைப் பிரசாரங்களையும் வயிறு வளர்ப்புப் பத்திரிகைகளையும், வயிற்றுச் சோத்து தேசபக்தர்களின் ஆரவாரங்களையும் கண்டு ஜஸ்டிஸ் கட்சியார் மருண்டு தங்கள் கொள்கைகளுக்கு பொது மக்களிடம் செல் வாக்கு இல்லையென்றோ தங்களுக்கு பொது மக்கள் ஆதர வில்லை யென்றோ நினைத்துத் தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள நினைப் பார்களானால் அது தற்கொலைக் கொள்கையேயாகும். ஜஸ்டிஸ் கட்சியார் பாமர மக்களை திருப்தி செய்ய என்று வேறு எப்பேர்ப்பட்ட கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டாலும் நமது சுயமரியாதையின் எதிரிகளான பார்ப்பனர்கள் அதையும் ஒழிக்கத்தக்க மற்றொரு கொள்கை ஆரம்பிக்கக் கூடிய தந்திர சக்தி வாய்ந்தவர்கள் என்பதையும் நினைப்பூட்டுகிறோம். சுயமரியாதைக்கும் சமூக சமத்துவத்திற்கும் இன்னும் தீவிரமான திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமே அல்லாது இதிலிருந்து கொஞ்சமும் பின் போகக் கூடாது.
கதரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
ஜஸ்டிஸ் கட்சி திட்டத்தில் பார்ப்பனரல்லாதாருக்கே மிகுதியும் உதவத்தக்க கதர் திட்டத்தையும் இன்றியமையாததாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதையும் வற்புறுத்துகிறோம்.
நமது கடமை
பாமர மக்களிடை இவைகளை சரியானபடி பிரசாரம் செய்யவும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் பிரசாரங்களால் நமது பாமர மக்கள் ஏமாறாதிருக் கவும் தகுந்த பிரசாரங்கள் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் எவ்வளவுக் கெவ்வளவு அசார்சமாயிருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமது காரி யம் குந்தகப்பட்டுப் போகும் என்பதை அழுத்திக் கூறுகிறோம். மற்றபடி அரசியல் விஷயமாய் அரசாங்கத்தோடு ஒத்துழையாமை செய்வதாகவோ அரசாங்கம் நடைபெறாமல் முட்டுக்கட்டை போடுவதாகவோ பார்ப்பனர் கள் சொல்லுவதை அடியோடு புரட்டு என்றே சொல்வோம். ஆகையால் அவைகளை நாமும் சொல்ல வேண்டியதில்லை. இவைகளைப் பற்றி மகாத்மா காந்தி நடத்துவதாய்ச் சொன்னால் மாத்திரம் கவனிக்கலாமே ஒழிய சுயநலக் கூட்டத்தால், பாமர மக்களை ஏமாற்றுவதற்கென்றே காங்கிரஸ் பெயர் வைத்து செய்யும் புரட்டுகளுக்கும் ஏமாற்றுப் பிரசாரங்களுக்கும் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. கூடுமான வரை அப்புரட்டுகள் வெளியாவதற்கு தைரியமாய் பிரசாரம் செய்ய வேண்டும். ஜில்லாக்கள் தோறும் ஒவ்வொரு வாரப் பத்திரிகைகள் ஏற்பட வேண்டும். எந்த விதத்திலும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே அவைகள் நடைபெற வேண்டும்.
வைதீக விஷயத்திலும், லௌகீக விஷயத்திலும், அரசியல் விஷயத்திலும் பார்ப்பனர் செய்யும் புரட்டுகளை தைரியமாய் வெளியிட வேண்டும். ஒவ்வொரு மிராசுதாரர்கள் அதன் நஷ்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். போலித் தலைவர் களையும், போலி தேசீயப் பத்திரிகைகளையும், வயிற்றுச் சோற்று தேச பக்தர்கள் யோக்கியதையையும் துணிந்து வெளியாக்க வேண்டும். இவைகளையெல்லாம் செய்யாமல் தேர்தல்கள் சமயத்தில் 1000, 10000, 50000 செலவழிப்பதில் ஒரு பயனும் உண்டாகாது. பார்ப்பனப் பிரசாரங்களையும், பார்ப்பனப் பத்திரிகைகளை யும், பார்ப்பனத் தலைவர்கள் தந்திரங்களையும், பார்ப்பன மடாதிபதிகள் மகந்துக்கள் செய்யும் செலவுகளையும் பார்த்தாவது நாம் விஷயங்களை அறிந்துக் கொள்ள வேண்டாமா? எதை ஆதாரமாக வைத்து பாமர ஜனங் கள் ஒரு அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள் என்பது தெரியாதா? எதை ஆதாரமாய் வைத்து பாமர ஜனங்களின் ஓட்டுப் பெறுகிறார்கள் என்பது தெரியாதா? வெற்றியும் தோல்வியும் எதைப் பொறுத்திருக்கிறது என்பது தெரியாதா? இந்த விஷயங்களை அறிந்தவன் உண்மையான தொண்டனா யிருந்தால் ஒருக்காலும் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் பாமர ஜனங்களுக்கு உண்மையைப் புகட்டுவதிலேயே கண்ணுங் கருத்து மாயிருப்பான். ஆதலால் நாம் செய்ய வேண்டிய வேலையெல்லாம் நமது தற்கால கொள்கைகளை மக்களிடம் பரவச் செய்வதற்கு முயல வேண்டி யதே அல்லாமல் மக்களைத் திருப்திச் செய்யவோ அவர்களை ஏமாற்றவோ தகுந்தபடி கொள்கைகளை மாற்றுவதல்ல என்பதை வலியுறுத்துவதுடன் கொள்கைகளை மாற்றுவது சமூகத் தற்கொலையாகும் என்பதை மறுபடியும் எச்சரிக்கை செய்கிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 21.11.1926)