“சென்ற ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு சென்னை பார்ப்பனரல்லாத மாணவர், தங்கள் சொந்த பணத்தைக் கொண்டு ராவ்பகதூர் வி. ரெங்கநாதன் செட்டியார் கட்டிய வெங்கடேஸ்வரர் ஹாஸ்டலில், சென்ற கார்ப்பரேஷன் தேர்தல்களில் வெற்றி பெற்ற நமது டாக்டர் சி.நடேச முதலியார்,திரு. பி.டி. குமாரசாமி செட்டியார், பி. ரெங்கநாதஞ் செட்டியார் முதலியவர்களுக்கும் பனகால் ராஜா, மதன கோபால் நாயுடு, ஆரியா முதலியவர்களுக்கும், சென்ற தேர்தல்களில் நமது ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றதற்காக சிற்றுண்டி வழங்கினர். 90 பேர் இருக்கும் ஹாஸ்டலில் 25 பேர்தான் நம்மவர். அந்தோ! பார்ப்பனரல்லாதாரின் தருமம் இப்படியும் வீணாக வேண்டுமா? அப்படியிருந்தும், அன்று பார்ப்பனப் பிள்ளைகள் நமது தலைவர்களை அவமானப்படுத்த எண்ணங்கொண்டு, வார்டனிடமும், செட்டியாரிடமும் சென்று இந்த கொண்டாட்டத்தை தடை செய்யச் சொன்னார்கள். அவர்கள் மறுத்து விடவே, ஹாஸ்டலை விட்டு எல்லாப் பார்ப்பன மாணவர்களும் தலைவர்கள் வரும் சமயத்தில் வெளியேறினர். ஆனால் மாலை 8 மணிக்குத் திரும்பி வந்து விட்டனர்” என்று ஒரு நிருபர் எழுதியுள்ளார்.
சென்னையில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் நகரக் கார்ப்பரேஷன் தேர்தலில் பார்ப்பனரின் பலமான சூழ்க்ஷிக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியானது சென்னையில் உள்ள பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கெல்லாம் பெரிய உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது. அதன் பலனாக சென்னையில் பார்ப்பனரல்லாத ஒரு தர்மப் பிரபுவான ராவ் பகதூர் வி. ரெங்கநாதம் செட்டியார் அவர்களால் கட்டப்பட்ட வெங்கிடேஸ்வரர் ஹாஸ்ட்டல் என்கிற ஒரு விடுதியில் வசிக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் மகிழ்ச்சியேற்பட்டு, வெற்றிபெற்ற தலைவர்களுக்குத் தங்கள் மகிழ்ச்சியையும் மரியாதையையும் காட்டிக் கொள்வதற்காக, வெற்றி பெற்ற கனவான்களையும் மற்றும் உள்ள சில தலைவர்களையும் தங்கள் விடுதிக்கு விஜயம் செய்து தங்கள் மரியாதையைப் பெற்று ஆசிர்வதித்துப் போகும்படி வேண்டிக் கொண்டார்கள்.
பார்ப்பனரல்லாதாரால் கட்டப்பட்ட அந்த விடுதியில் 90 பிள்ளைகள் வசித்தாலும் அதில் 65 பிள்ளைகள் பார்ப்பனப் பிள்ளைகளாயும் 25 பிள்ளைகள் மட்டும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளாயிருந்தும் மேற்படி 65 பார்ப்பனப் பிள்ளைகளும், பார்ப்பனரல்லாதாரின் தர்மத்தால்தானே இந்த விடுதியில் நாம் வசிக்கிறோம் என்கிற நன்றி அறிதல் இல்லாமல், இம்மாதிரி பார்ப்பனரல்லாத தலைவர்களுக்குக் காட்டும் மரியாதையை ‘நாங்கள் சகிக்க மாட்டோம், அவற்றை நடக்கவும் விடமாட்டோம்’ என்று பல சூழ்ச்சிகள் செய்து, அவற்றில் வெற்றி பெறாமல் போனதினால் தலைவர்கள் வரும் சமயம் பார்த்து வெளியேறினார்களாம். இந்தப் பார்ப்பன மாணவர்கள் உண்மையிலேயே யோக்கியமும் நன்றியறிதலும் சம உணர்ச்சியும் போர் வீரத் தத்துவமும் உடையவர்களானால் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தாங்களும் இந்த மகிழ்ச்சியில் கலந்து தங்களுக்குப் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற வித்தியாசமும் துவேஷமும் இல்லை என்று காட்டிக் கொண்டிருக்க வேண்டும்; அப்படிக்கில்லாவிட்டால் மனிதத் தன்மையை உத்தேசித்தாவது சும்மா இருந்திருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்ப்பது போல் தாங்கள் வெளியேறினது எவ்வளவு அல்ப புத்தியையும் நன்றி கெட்டத் தன்மையையும் காட்டுகிறது.
நம் நாட்டுப் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் தங்களுக்குக் கொஞ்சம் கூட பார்ப்பனரல்லாதார் மீது துவேஷ புத்தி இல்லையென்றும் பார்ப்பனரல்லாதார்தான் இவற்றைக் கிளப்பி விட்டுக் கொண்டு வருகிறார்கள் என்றும் தினமும் பிதற்றி வருகிறதை நாம் பார்க்கிறோம். ஆனால், இப்போது இந்த சம்பவத்தைக் கொண்டே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் துவேஷம், பொறாமை, வயிற்றெரிச்சல், குடி கெடுக்கும் தன்மை, நன்றி கெட்டதனம் ஆகியவைகள் பார்ப்பன மூளைகளிடமிருந்தே இருந்து வருகிறதா? பார்ப்பனரல்லாதாரிடம் இருக்கிறதா? என்று கேட்கிறோம். அவர்கள் இவ்வளவு தூரம் தங்களின் துவேஷத்தைத் தைரியமாய் வெளிக்காட்டிய பிறகும், நாம் இனியும் சும்மாயிருப்பது சுத்தப் பயித்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம்.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் ‘அறிவிரி’ அதாவது பாலர் வகுப்பிலிருந்தே பிள்ளைகளுக்குப் பார்ப்பனர்களின் அட்டூழியத்தையும் கொடுமையையும் அவர்களால் நாம் அடைந்த கதியையும் பாடப் புத்தகமாய் வைத்து சொல்லிக் கொடுக்கும் படியும், சென்னையில் மற்ற பொது மாணவர்கள் ஆரம்பித்தது போல ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் ஸ்தாபித்து, அதில் தங்கள் வகுப்பார் முன்னேற்றத்திற்கு வேண்டிய கவலை செலுத்தி வரும்படி செய்ய வேண்டியது இது சமயம் மிகவும் அவசியமாயிருக்கிறது. மாணவர்கள் இது சமயம் அரசியலில் பிரவேசிக்காமலிருக்க வேண்டும் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் அவர்கள் தங்கள் சமூக விஷயங்களிலும் சுயமரியாதை விஷயங்களிலும் முன்னேற வேண்டியது அடிமைக் கல்வியை விட முக்கியமானதென்றே சொல்லுவோம். ஆதலால் சென்னை மாணவர்களைப் பின்பற்றி மற்றும் வெளியிடங்களிலுள்ள மாணவர்களும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதோடு சென்னை மாணவர்களை மிகுதியும் போற்றுகிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 15.08.1926)