இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம். “உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாகி விட்டது. அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்" என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.
தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவிசெய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.
அதற்கு சிவன், "நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது" என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.
கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து விட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம். அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு 'காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்' என்று கூறினாராம். அதன்படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.
கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறுபேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும்(தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.
ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா?
(தந்தை பெரியார் - நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" பக்கம் 40-41)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கந்தசஷ்டி
- விவரங்கள்
- பெரியார்
- பிரிவு: பெரியார்