ஈழத்தமிழருக்காக, மனமுவந்து குரல் கொடுங்கள்!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்!

இலங்கையிலுள்ள தமிழர்கள் 45 இலட்சம் பேர் ஆவார்.

இவர்களுள் 30 இலட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்கள் பழங்காலந்தொட்டே இலங்கையில் இருப்பவர்கள். 15 இலட்சம் பேர், 1820க்கும் 1930க்கும் இடையில் கூலித் தொழிலாளர்களாக, இந்தியாவி லிருந்து வெள்ளையரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வாரிசுகள். இலங்கை மலை யில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியவர்கள். தொடர்வண்டி இருப்புப் பாதை அமைத்தவர்கள், இவர்களே.

இந்த 45 இலட்சம் பேரின் தாய்மொழி தமிழ். இவர்களுள் அதிகம் பேர் இந்துக்கள்; சிறுபான்மையினர் இஸ்லாமியரும், கிறித்துவரும். இவர்களின் தாய் மொழியான தமிழுக்கும், இவர்களின் மதங்களுக்கும் இரண்டாம் நிலை இடத்தையே சிங்களவர் அளித் துள்ளனர்.

வெள்ளையர் 1948இல் இலங்கையிலிருந்து வெளியேறினர். உடனேயே 1949இலேயே இந்திய வம்சா வளித் தோட்டத் தொழிலாளத் தமிழர்களைக் குடியுரிமை அற்றவர்களாகவும், வாக்குரிமை அற்றவர்களாகவும் சட்டப்படியே ஆக்கினர், சிங்களவர். இந்த மாபெரும் அநீதியை அப்போதே இந்திய அரசு எதிர்த்திருக்க வேண்டும்; அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால், “அது இலங்கை அரசின் பிரச்சனை; இந்திய அரசு அதில் தலையிட முடியாது” எனப் பிரதமர் பண்டிதநேரு, தென்னாட்டுத் தலைவர்கள் இராஜாஜி, காமராசர் ஆகியோர் கூறினர்; அன்று பொறுப்பை உதறிவிட்டனர்.

இன்று தமிழரின் கோரிக்கை என்ன?

“இலங்கை அரசின் ஆட்சி மொழியாகத் தமிழும் இருக்க வேண்டும். இலங்கை ஆட்சி - அதிகாரத்தில் தமிழர்களுக்கு விகிதாசாரப் பங்கு உரிமை வேண்டும். புத்தமதம் மட்டுமே அரசு ஏற்பு மதம்; சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சிமொழி என்பது மாற்றப்பட வேண்டும்” எனக்கோரி, அமைதி வழியில், ஈழத் தமிழர் தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் போராடினார். அவரோடு செய்யப்பட்டஒப்பந்தங்களை இலங்கை அரசினர் மீறினர்; கிழித்துப் போட்டனர்.

அந்த அநீதி கண்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்; ஆயுதம் ஏந்தினர். 30 ஆண்டுக் காலம் இலங்கை அரசுடன் போராடினர். இலங்கை அரசின் கொடுமை தாங்காமல் வெளியேறித் தந்தை ஓரிடம், தாய் ஓரிடம், மக்கள் ஓரிடம் எனப் பிரிந்து பிரிந்து தூர அயல்நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் 10 இலட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றனர். இலங்கை மண்ணிலேயே இன்னும் சில இலட்சம் பேர் அகதிகளாகித் துன்பப்படுகின்றனர்.

இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக் கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகள், பிரபாகரன் தலைமையில் வீரம் செறிந்த போராட்டத்தை 30 ஆண்டுகள் நடத்தினர்.

ஈழத் தமிழரை அடக்கி ஒழிக்க, 1987இல் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார் பிரதமர் இராஜீவ்காந்தி.

அவர், 1991இல் தமிழ்நாட்டு மண்ணில் கொலையுண்டார். “அவரைக் கொன்றவர்கள் விடுதலைப்புலிகள் தான்” எனக் குற்றஞ்சுமத்தி, அதனாலேயே இந்திய அரசினரும், இந்திய ஆளுங்கட்சியான காங்கிரசும் இலங்கை அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்தனர்.

“விடுதலைப்புலிகளை அழித்து ஒழிக்க வேண்டும்” என இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சா எடுத்த அழிப்பு நடவடிக்கைகளுக்கு எல்லா உதவிகளையும் இந்திய அரசே முன்வந்து செய்தது. இராஜபக்சா அரசு 2007-2009இல் 20,000 தமிழீழ விடுதலைப்புலி வீரர்களைக் கொன்றது.

கடைசிக் கட்ட நான்காவது போரில், 2009 மே மாதத்தில், “போர் நடக்காத பகுதிக்கு 3 இலட்சம் தமிழர்களை வரவழைத்து, முள் கம்பி வேலி முகாம்களில் அடைத்து வைத்துத் துன்புறுத் தியது; தமிழ்ப் பெண்களைப் பதைக்கப் பதைக்க இலங்கை இராணுவத்தினர் கற்பழித்தனர்; தமிழிளை ஞர்களைக் கடத்திச் சென்று கொன்றனர்.

இவ்வளவு கொடுமைகளையும் கண்டும் கேட்டும் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுக் கொதித்தெழ வில்லை. இந்திய அரசு அண்டை நாட்டில் நடந்த இந்த மனிதக் கொலையைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. இந்திய நாடாளுமன்றத்தினர் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இவையெல்லாம் சரியானவையா என, அருள்கூர்ந்து, மனதாரச் சிந்தியுங்கள்.

21ஆம் நூற்றாண்டைய இனப்படுகொலை

20ஆம் நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போரில், 60 இலட்சம் யூதர்களை இட்லர் கொன்று குவித்தான். சுரங்கங்களில் யூதர்களை அடைத்து வைத்து நச்சுக் காற்றைச் செலுத்திக் கொன்றான். வெட்டவெளியில் அம்மணமாக ஓடவிட்டு, முதுகில் சுட்டுக்கொன்றான். அப்போது, 1945இல் அப்படிக் கொன்று குவித்த படைத்தலைவர்களுக்கு, இப்போது, 1980-90களில் கொலைக் குற்றத் தண்டனை அளிக்கப்பட்டது.

நேற்று 2009 மே 17, 18இல் கம்பி வேலி முகாமிலும், முள்ளிவாய்க்கால் பகுதியிலும் இருந்த 2 இலட்சம் ஈழத் தமிழர்களை - வெட்டவெளியில் இரசா யனக் குண்டுகளைப் பொழிந்து பதைக்கப் பதைக்கக் கொன்றுவிட்டார் இராஜபக்சே. இந்த மானிடக் கொலைக்கு, அவருக்குத் தண்டனை எங்கே?

இந்திய எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலுள்ள இந்த மாபெரும் மானிடக் கொலையை, அன்றே, இந்திய நாடாளுமன்றம் கண்டித்திருக்க வேண்டும். அந்த மனித இனக் கொலையைத் தடுத்து நிறுத்தும்படி, இந்திய நாடாளுமன்ற மாண்புமிகு உறுப்பினர் கள், இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்ய வேண்டும் என்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து, எல்லாக் கட்சி - எல்லா மாநில நாடாளுமன்ற மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அதன் வழி, நாடாளுமன்றம், இந்திய அரசுக்குத் தாங்க முடியாத அழுத்தம் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடைபெறவில்லையே! இது நியாயம் தானா?

உண்மையை உலகமே கூறுகிறது; இந்திய நாடாளுமன்றம் கூற வேண்டும்!

இப்போது, அய்.நா. பொதுச் செயலாளர் அமைத்த ஆய்வுக்குழு ஆய்வு செய்து தந்த அறிக்கை, இராஜபக்சா அரசு செய்த இனப்படுகொலை பற்றிய ஆவணப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

மற்றும் இரசாயனக் குண்டுகளை வீசித் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் காட்டுகிற வீடியோ ஆவணப் படங்களை அய்ரோப்பிய யூனியன் நாடாளுமன்ற மும், இங்கிலாந்து நாடாளுமன்றமும் பார்த்து - அங்கு நடந்த இனப்படுகொலைக் கொடுமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இவை அசைக்க முடியாத ஆவணச் சான்றுகள்.

1.     இலங்கை அதிபர் இராஜபக்சாவும், இலங்கை இராணுவத்தினரும் தங்கள் நாட்டுக் குடிமக்களான ஈழத் தமிழர்களைக் குண்டுவீசிக் கொன்ற குற்றவாளிகள்தான் என, உலகக் குற்றவியல் நீதிமன் றத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என, இந்திய அரசு கோர வேண்டும் என்றும்;

2.     ஈழத் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் இரண்டும் ஒரே அரசியல் உறுப்பாக இணைக்கப்பட்டுத், தமிழீழத் தமிழர்களுக்குத் தன்னுரிமை வழங்கும் அரசியல் தீர்வை இலங்கை அரசு உடனே காண வேண்டும் என, இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்;

இந்திய நாடாளுமன்றத்திலுள்ள மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும், கட்சி வேறுபாடு, மாநிலம் மற்றும் மொழி வேறுபாடு கருதாமல்-“மானிட உரிமைக் காப்பு”, “மனிதக்கொலைக்கான ஒரு தீர்ப்பு” என்கிற மேலான நோக்கத்தோடு, மனமுவந்து, இவற்றை இந்திய நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டில் உள்ள 7 கோடித் தமிழ் மக்கள் சார்பாக அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே!

ஈழத் தமிழருக்கு நியாயம் கிடைத்திட,

மனம் உவந்து குரல் கொடுங்கள்!

மானிடக் கொலைக்கு நீதி கோரி உதவிடுங்கள்!

மானிட உரிமையைக் காத்திட உதவுங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It