தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப் பற்றியும்,இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும், சென்ற 11-ந் தேதி இந்தியாவெங்கும் பொது தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண்டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம். ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக்கூடாதா ரென்றும், தங்களுடைய வேதங்களையே படிக்கக்கூடாதாரென்றும், தங்களு டைய தெய்வங்களையே கண்டு வணங்கக்கூடாதென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார் இக்கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது பலன் உண்டாகுமா?
இதையறிந்த தென்னாப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா? அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார் களா? என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால் வீணாக ஓர் நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமேயென்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.
(குடி அரசு - தலையங்கம் - 18.10.1925)