பல தேசிய இனங்கள், பல மாநிலங்கள், எண்ணற்ற சமூகப்பிரிவினர் என்றுள்ள இந்திய நாட்டில் ஒரு குடும்பத்தினர் எவ்வாறு தேர்தலில் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யமுடிகிறது? இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் (இடதுசாரி கட்சிகள் மற்றும் பி.ஜே.பி. தவிர்த்து) எவ்வாறு குடும்ப அல்லது தனிநபர் ஆதிக்கத்தின் கீழ் உள்ள கட்சிகளாக இருக்க முடிகின்றது? இக்கட்சிகளில் எதிலும் உட்கட்சி ஜனநாயகம் அறவே இல்லை என்பதும் இக்கட்சிகளின் தலைமைகளே கட்சியின் நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் முதல் வேட்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் வரை அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளன என்பதும் அனைவரும் அறிந்ததே. இது, காங்கிரஸ் கட்சி இந்திய மக்களாட்சி முறைக்கு வழங்கியுள்ள கொடைகளில் ஒன்றாகும்! இந்நிலையில் இக்கட்சிகளின் மூலம்தான் நடுவண் மற்றும் மாநில ஆட்சிகள் நடைபெறுகின்றன என்கின்றபோது இந்நாட்டின் குடியாட்சி முறை மீதே கேள்வி எழுகின்றது.

     இவ்வாறான ஒரு சூழலில்தான், தமிழகத்தில் அடுத்து வர இருக்கின்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேச்சு தற்சமயம் தொடங்கிவிட்டது. எந்தந்த கட்சிகள் எந்தக் கூட்டணியில் பங்கேற்கப் போகின்றன என்பது இதில் முக்கியமான விடயமாக உள்ளது. அதனடிப்படையில்தான் தேர்தல் முடிவும் அமையக்கூடும் என்பதே இதற்குக் காரணம். அடுத்ததாக, இத்தேர்தலில் பணபலம் ஆற்றவிருக்கின்ற பங்கும் அனைவராலும் பேசப்படுகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலும் பல இடைத்தேர்தல்களும் பண பலத்தின் மூலம் தேர்தல் முடிவை நிர்ணயிப்பது குறித்து நன்கு தெளிவுப்படுத்திவிட்டன. இத்தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட மிக அதிகளவில் பணபலம் பயன்படுத்தப்படவிருக்கின்றது என்பது அனைவரின் கணிப்பாக உள்ளது. இதற்கு, அலைக்கற்றை ஊழல் முக்கிய காரணமாகும். 

பணபலம் உள்ளிட்ட சட்டவிரோத முறைகளை பயன்படுத்தி தேர்தலில் பங்கெடுப்பதை தடுப்பதிலோ அல்லது அவற்றின் அடிப்படையில் அமையும் தேர்தல் முடிவுகளை சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என்று ஆக்குவதிலோ தேர்தல் ஆணையம் எந்த நம்பத்தகுந்த பணிகளையும் இதுவரை மேற்கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக, பலர் மக்களாட்சி முறை மீதே நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இந்நிலையை மாற்றுவதற்கு வழியே இல்லை என்ற எண்ணத்தில் அந்த விரக்தி மனநிலைக்கு சென்றுள்ளனர். 

      உலக அரசியலமைப்பு சட்டங்களிலேயே நீண்ட அரசியலமைப்பு சட்டம் என்று கூறப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அச்சட்டத்தின்படி மக்களாட்சி முறையில் ஆட்சி நடத்த வேண்டிய அரசியல் கட்சிகளின் அமைப்பு, நிர்வாகம் மற்றும் உட்கட்சி ஜனநாயகம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மக்கள் பிரதிநித்துவ சட்டத்திலும் இக்கட்சிகளின் உட்கட்சி நிர்வாகம் குறித்து எந்த விதிமுறைகளும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில் பதிவு செய்யப்படும் ஒரு சங்கத்திற்கு இருக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துகூட‌ சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளும் கட்சிகளின் நிர்வாகம் குறித்தோ அக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகத்தை உறுதி செய்தோ எந்த சட்டமும் இயற்றப்படவில்லை என்பது இங்கு இணைத்துப்பார்க்க வேண்டிய ஒன்றாகும். 

 இப்பிரச்சினைகளுக்கும் அவற்றோடு நெருங்கிய தொடர்புடைய நடைமுறையில் உள்ள தேர்தல்முறை குறித்தும் மாற்றுதேர்தல் முறை குறித்தும் ஆராய வேண்டியிருக்கின்றது. 

     இந்தியாவில் தொடக்கம் முதல் பின்பற்றப்பட்டுவரும் தேர்தல் முறை என்பதில் நாடு மற்றும் மாநிலங்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒருவரை மட்டும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பது என்பதும் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் நாடாளுமன்றத்தில் மற்றும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கின்றது. இந்த ஒரு தொகுதி -ஒரு பிரதிநிதி; முறையில், ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலில் வருபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இது உலகத்தில் குடியாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது உருவாக்கப்பட்டதாகும். இதனையே குடியாட்சி தேர்தல் முறையின் ஒரே முறை என்பது போன்றும் இதற்கு மாற்றான வேறு சிறந்த முறை எதுவும் இல்லை என்பது போன்றும் பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட குறைபாடுகளுக்கும் இத்தேர்தல் முறைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் இம்முறைக்கு மாற்றான தேர்தல் முறைகள் குறித்தும் அவற்றின் தேவை அல்லது பொருத்தப்பாடு குறித்தும் இந்நாட்டின் ஜனநாயகம் குறித்து தம்பட்டம் அடித்துகொள்ளும் இந்திய ஊடகங்கள் முறையான தகவல்களை மக்களுக்கு அறவே தெரிவிப்பதில்லை. 

இம்முறையின் குறைபாடுகள் :

இம்முறையில் வாக்காளர்கள் அனைவரின் வாக்குகளுக்கும் பிரதிநித்துவம் கிடைப்பதில்லை. வெற்றி பெற்ற வேட்பாளரைத் தவிர மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுக்கும் அவ்வாக்குகளை அளித்த வாக்காளர்களுக்கும் எந்த மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இதனால் “வென்றவருக்கே எல்லாம்” என்ற முறையாக இம்முறை உள்ளது. அவருக்கு அல்லது அவர் எந்த கட்சியில் போட்டியிட்டாரோ அந்த கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு மட்டுமே பிரதிநித்துவம் கிடைக்கிறது. உதாரணத்திற்கு, அவர் 30% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தபோதிலும் முதலில் வந்துவிட்டதால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு வாக்களிக்காத மற்ற 70 சதவீத வாக்குகளுக்கு எந்த பிரதிநித்துவமும் கிடைப்பதில்லை. இவ்வாறு வெற்றி பெற்றவருக்கு எதிராக பெரும்பான்மைக்கும் மேலாக, பலசமயங்களில் 70 சதவீதத்தினர் அளவிற்கு கூட, வாக்களித்திலுள்ளனர் என்பது அறவே கவனிக்கப்படுவதில்லை.

வெற்றி பெற்றவருக்கு அடுத்ததாக வருபவர் முதலாமவரைக் காட்டிலும் 10 வாக்குகள் மட்டும் குறைவாக பெற்ற போதிலும் அவர் பெற்ற வாக்குகள் முழுவதும்கூட மதிப்பிழக்கின்றன. இவ்வாறு வெற்றி பெற்றவருக்கோ அல்லது அவரது கட்சிக்கோ அளிக்கப்பட்ட வாக்குகளைத்தவிர மற்ற வாக்குகள் மதிப்பிழக்கின்றன. அவற்றிற்கு பிரதிநித்துவம் அளிக்கப்படுவதில்லை. அந்த வாக்காளர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகள் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகின்றது. இந்தப் பெருங்குறையை நிவர்த்தி செய்வதற்கு இம்முறையில் வழியே கிடையாது. 

     இந்தத் தேர்தல் முறையில்தான், 35 சதவீதத்திற்குள் வாக்குகள் பெறும் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் அமர்கின்றன. அதாவது அந்த கட்சிகளின் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 35 சதவீத அளவிற்குள் வாக்குகள் பெறுவது போன்றேதான், அந்த கட்சிகள் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் அமரும்போது அக்கட்சிகள் தமிழ்நாடு அளவிற்கு பெற்ற வாக்குகள் என்று பார்க்கும் பொழுதும் அவை பெறும் வாக்கு சதவீதம் மேற்குறிப்பிட்ட 35 சதவீத அளவிற்குள் உள்ளது. 

     அதேபோன்றுதான் இந்திய அளவிலும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தின் தலைமையை பிடிக்கும் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய கட்சிகள் வாக்களித்த வாக்காளர்களில் 20 சதவீதம் அல்லது 25 சதவீதம் வாக்குகளை மட்டுமே, (கவனிக்கவும், நாட்டின் மொத்த வாக்காளர்களில்கூட அல்ல) பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்று விடுகின்றன. எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிட்டது போன்று, இம்முறை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி இந்திய மொத்த வாக்குகளில் 10 சதவீத வாக்குளை மட்டுமே பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை நடந்த எந்தத் தேர்தலிலும் வாக்களித்த வாக்காளர்களின் 50 சதவீத ஓட்டுகளைப் பெற்றதில்லை என்று கடந்த தேர்தல்கள் குறித்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 

 2. அடுத்து இம்முறையில் பணபலம் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் அளவிற்கு மோசமான நிலைமை உருவாகியுள்ளது. மிகச்சிறிய சதவீத எண்ணிக்கையிலான விளிம்பு நிலை வாக்குகளின் மாற்றமே வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும் என்றிருக்கும் நிலையில், பண பலம் குறிப்பிடத்தக்க பங்காற்றி, அச்சிறுசதவீத ஓட்டுகளை மாற்றி விழச் செய்து ஒட்டுமொத்த தேர்தல் முடிவையே மாற்றி விடுகின்றன. இதற்கு உதாரணம் காட்ட வேண்டிய தேவை இல்லை. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலும் இடைத்தேர்தல்களும் காட்டுவதுபடி தேர்தலில் பணத்தினைக் கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்ற நிலை உருவாகியுள்ளதை அனைவரும் அறிவர்.

உதாரணத்திற்கு ஒரு கட்சி அல்லது கூட்டணி 35 சதவீதம் ஆதரவைக் கொண்டுள்ளது என்றும் எதிர்நிலையில், மற்றொரு கட்சி அல்லது கூட்டணி 40 சதவீதம் ஆதரவைக் கொண்டுள்ளது என்றும் வைத்துக்கொள்வோம். முதலில் குறிப்பிட்டுள்ள கட்சி அல்லது கூட்டணி பணபலம் மிக்கதாகவும் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவதற்கு தடையற்ற சூழல் நிழவுகிறது என்றும் வைத்துக்கொள்வோம். இந்நிலையில், இக்கட்சி அல்லது கூட்டணி, எதிர்கட்சி அல்லது கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பறிக்க வேண்டுமானால் அதற்கு கிடைக்கக்கூடிய வாக்கு சதவீதத்தில் மூன்று சதவீத வாக்குகளை விலை கொடுத்து வாங்கி விட்டால் போதுமானது. ஒரு சதவீதம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிடலாம். எதிர்க்கட்சி அல்லது கூட்டணிக்கு வாக்களிக்கக்கூடிய இவ்வாக்காளர்களை குறிவைத்து, அவர்களது வாக்குகளுக்கு பணம் கொடுத்து வாங்கிவிட முடியுமானால், வெற்றி பெறக்கூடிய கட்சி அல்லது அணி தோல்வி அடைகிறது. இப்படிதான் பணபலம் தேர்தல் முடிவை தீர்மானிக்கிறது. 

ஊடக பலத்தை கொண்டுள்ள கட்சிகள் பொருட்கள் விளம்பரம் போன்று தங்கள் கட்சிகளை விளம்பரம் செய்து தேர்தல் சந்தையில் முன்னணியில் உள்ள கட்சிகளாக பொதுமக்களுக்கு தங்களை காட்டிக்கொள்கின்றன. அடுத்து, பணத்தைக் கொண்டு வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஆக, தேர்தல் ஒரு வியாபாரமாக நடந்து முடிந்து விடுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், ஆனால் அதன்மூலம் வெற்றி பெற்றவரை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதுதான் நிலைமை. இவ்வாறு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவரின் தேர்தல் வெற்றியை தேர்தல் ஆணையம் கேள்விக்கு உட்படுத்திய ஒரு முன்னுதராணம் கூட கிடையாது. ஆக எல்லாருக்கும் வெற்றி பெற்றவர் பணம் கொடுத்து வெற்றி பெற்றது தெரியும். அது சட்டப்படி செல்லாது. எனினும் அவரது வெற்றி சட்டத்தின் கீழ் ரத்து செய்யப்படுவதில்லை!. 

அடுத்ததாக, இம்முறையில் பெரிய கேடு கூட்டணி முறையாகும். கூட்டணி ஆட்சி முறை என்பது வரவேற்க வேண்டிய மாற்றம். ஆனால் தேர்தலுக்காக கூட்டணி அமைத்து இடங்களைப் பங்கிட்டு கொண்டு போட்டியிடுவது என்ற ஏற்பாடு, கொள்கைகளில் உடன்பாடு இல்லாத கட்சிகள் கூட கூட்டணியில் பங்கு பெறலாம் என்ற நிலை உருவாகிறது. உதாரணத்திற்கு, கடந்த தேர்தலில் ஈழப்போரை முதன்மைப்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்போருக்குக் கார‌ணமான காங்கிரஸ் கட்சியோடே தேர்தல் கூட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொள்கைகள் அல்லது திட்டங்கள் அடிப்படையில் கட்சிகளின் கூட்டணி என்பது போய், தேர்தல் வெற்றிக்காக மட்டுமே கூட்டணி என்ற அளவிற்கு மாறிவிட்டது. 

எந்தத் தொகுதியிலும் தனித்து வெற்றி பெற முடியாத அளவிற்கு, ஆனால் அதேசமயம் வாக்காளர் ஆதரவை மாநிலம் முழுவதும் கணிசமான அளவிற்கு பரவலான முறையில் கொண்டுள்ள கட்சிகளான பா.ம.க., ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்கிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களிடம் உள்ள வாக்குகளை இடங்களாக மாற்றுவதற்கு தங்களது கொள்கையை அல்லது மக்கள் பிரச்சினைகளில் தங்களது நிலைபாடுகளை விட்டுவிட்டு தி.மு.க அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை உள்ளது. 

அடுத்ததாக தேர்தலில் சாதி ஆதிக்கம். இடதுசாரிக் கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் உள்ள அதிக அளவில் உள்ள வாக்காளர்களின் சாதியை கணக்கில் கொண்டே வேட்பாளர்களை களமிறக்குகின்றன. இவ்வகையில், சாதி என்பதும் ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. 

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை 

மேற்குறிப்பிட்ட முறைக்கு மாற்றான விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை, தற்சமயம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு ரஷ்யா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இம்முறைதான் உள்ளது. பிரேசில், வெனிசுலா போன்ற வளர்முக நாடுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறையின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இலங்கை கூட இம்முறையில்தான் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது. 

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் வகைகள்: 

1. ஒரு நாடு ஒரே தொகுதியாக அமைந்துவிடுகின்றது. கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துவிடுகின்றன. கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடங்கள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, நாட்டின் சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 100 எனக் கொண்டால் ஒரு சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பெற்ற ஒரு கட்சிக்கு அது பெற்ற ஓட்டு சதவிகிதத்திற்கு ஏற்ப ஒரு இடம் கிடைத்துவிடும். 

இம்முறையில் மக்கள், தங்களது பிரதிநிதிகளை தங்கள் விருப்பம் போல் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. கட்சிகள்தான் முடிவு செய்கின்றன. இது, இம்முறையில் உள்ள குறைபாடாகும். 

2. இம்முறையின் இரண்டாவது வகையில், ஒரு நாட்டின் அல்லது மாகாணத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பிரதிநிதிக்கு என்ற முறைக்கு மாறாக, ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் பல பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில், வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர். நிர்ணயிக்கப்படும் வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிக்கப்படுகின்றனர். இதன்மூலம் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தின் ஒரு பகுதி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் மாகாணம் அல்லது நாடு அளவில் மொத்தமாக பெற்ற வாக்கு விகிதங்களுக்கு ஏற்ப அந்த கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் இடங்களுக்கு அந்த கட்சிகளின் மூலம் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தின் மீதி உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். இம்முறையே விகிதாச்சார பிரதிநிதித்துவம் முறை பின்பற்றப்படும் பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, நேபாளத்தில் இம்முறையின் கீழ்தான் தேர்தல் நடத்தப்பட்டு அரசியலமைப்பு அவையும் இடைக்கால அரசாங்கமும் உருவாக்கப்பட்டுள்ளன. 

இம்முறையின் பயன்கள் : 

1.   இம்முறையில் அனைத்து வாக்குகளும் மதிப்பு பெறுகின்றன. அவற்றிற்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகின்றது. முந்தைய முறையில், வெற்றி பெற்ற வேட்பாளரைத் தவிர மற்ற வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் முழுமையும், (அவை மொத்தமும் 70 சதவிகித வாக்குகள் கூட இருக்க நேரிடலாம்) பிரதிநிதித்துவம் பெறமுடியாமல் மதிப்பிழக்கின்ற நிலையில், இம்முறையில் சிறுசதவிகித வாக்குகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு உறுதி செய்கிறது. உதாரணத்திற்கு, ஒரு கட்சி மாகாண அளவில் ஒரு சதவிகித வாக்காளர்களை மட்டுமே ஆதரவாளர்களாக கொண்டிருந்தாலும், அவர்கள் மாகாணம் முழுவதும் சிதிறியிருந்தாலும் கூட அக்கட்சியும் கூட பிரதிநிதித்துவம் பெற்றுவிட முடியும்.    

2.   இம்முறையில் கட்சிகள், தாங்கள் பெற்ற வாக்குகள் விகிதத்திற்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் பெறுகின்றன. தற்போதைய முறையில் உள்ளது போன்று 30 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று விட்டு 50 அல்லது அதற்கு அதிகமான சதவிகித இடங்களை பெறுகின்ற நிலைமை தடுக்கப்படுகின்றது. 

3.   இம்முறையில் பணபலமோ அல்லது சாதி பலமோ வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வகையில் முக்கிய பங்காற்றிட முடியாது. தற்போதைய முறையில் உள்ளது போன்று அவற்றினால் பெறப்படும் வாக்குசதவிகிதம் மூலம் ஒரு தொகுதியின் இறுதி வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது போன்று, இம்முறையில் இறுதி தேர்தல் முடிவையே தீர்மானிக்க முடியாது. சாதிக்கட்சிகள் இம்முறையில் தங்களது சாதி ஆதரவின் அடிப்படையில் பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடும் என்றாலும், மாகாணம் முழுவதும் சிதறிக்கிடக்கின்ற சாதிகளும் சிறிய சாதிகளும் எளிதில் பிரதிநிதித்துவம் பெற முடியும் என்ற பயனும் உண்டு. 

4.   கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் பங்கேற்பது என்பது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. கட்சிகள் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த பலத்தில் மட்டுமே பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்றன. அதனால் தங்களது கொள்கைகளோடு ஒத்துப்போகின்ற கட்சிகளோடு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெறக்கூடும். இப்பொழுது உள்ளது போன்று கொள்கையற்ற அல்லது ஒத்த திட்டங்கள் இல்லாத தேர்தலுக்கான கட்சிகளின் கூட்டணி என்பது இருக்கப் போவதில்லை. 

5.   கட்சிகளின் உட்கட்சி ஜனநாயகம் உறுதி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்கு விகிதங்களுக்கு ஏற்ப இடம் கிடைக்கின்ற நிலையில், அவ்வாக்குகளை திரட்டுகின்ற கட்சியின் பிரதிநிதி தனக்கு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் உரிமையை வலியுறுத்துவார். அப்பொழுது கட்சித்தலைமை அவரது உரிமையை நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு கட்சியும் தனது உட்கட்சித்தேர்தலை நடத்தி அதன் அனைத்து மட்ட பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அவர்களிடத்தில் நடத்தப்படும் தேர்தல் மூலமே, கட்சியின் தேர்தல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். குடும்ப அல்லது தனிநபர் ஆதிக்கத்தில் உள்ள கட்சிகள் அழிந்துவிடும். 

6.   ஒவ்வொரு கட்சியும் தான் பிரதிநிதித்துவம் செய்கின்ற நலன்களை சார்ந்த வாக்காளர்கள் முன்னிட்டு தனது கொள்கையை திட்டத்தை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகிவிடும். கட்சி பெறும் வாக்குகள் பிரதிநிதித்துவம் பெறுவது உறுதியாகிவிடுவதால் வாக்காளர்களும் தங்களது நலன்களை சரியாக பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி எது என்பதையும் தெரிந்து கொண்டு வாக்களிப்பர். தற்போது உள்ளது போன்று வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சிகளுக்கு வாக்களித்துவிடுவது என்ற மனப்பாங்கில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 

7.   அதிகாரத்திற்கு திரும்பத்திரும்ப வரும் கட்சிகள், தாங்கள்தான் அதிகாரத்திற்கு அடுத்து வரக்கூடிய கட்சிகள் என்று காட்டியும் மக்களிடம் நிலைபெற்ற கட்சிகளாக காட்டியும் வாக்குகளைப் பெற்றுவிடுகின்றன. இதன்மூலம் ஊதிப்பெருக்கப்பட்ட கட்சிகளாகத்தான் காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் உள்ளனவே தவிர, மக்களின் உண்மையான தெரிவின் அடிப்படையில் இக்கட்சிகளின் ஆதரவு தளம் இருப்பதில்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில், மேற்படி கேடு களையப்படுவதோடு கட்சிகள் அவற்றின் உண்மையான ஆதரவு தளத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறுகின்றன. 

8. அடுத்ததாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் என்பதற்கு எளிதான ஏற்பாட்டில் உறுதி செய்யமுடியும். கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது பிரதிநிதிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினரை மேற்குறிப்பிட்ட சமூகப்பிரிவினரின் பிரதிநிதித்துவத்திற்கு ஒதுக்க வேண்டுமென்று சட்டத்தில் எளிதாக ஏற்பாடு செய்யமுடியும். மேற்படி சமூகப்பிரிவினரும், தங்களது நலன்களை சரியாக பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு வாக்களித்து, எளிதில் பிரதிநிதித்துவம் பெற்றுவிடமுடியும். கட்சிகள் ஒவ்வொன்றும் எவ்வாறு தங்களது நலன்களுக்கு மதிப்பளிக்கின்றது என்பதை, அவை அப்பிரிவினருக்கு அளிக்க முன்வரும் பிரதிநிதித்துவத்திலிருந்தே அப்பிரிவினர் தெரிந்துகொள்ளவும் முடியும். 

ஆனால் இந்தியாவில் உள்ள தற்போதைய தேர்தல் முறையை மாற்றிவிட்டு மேற்குறிப்பிட்டபடியான விகிதாச்சார தேர்தல் முறைக்கு மாறுவது என்பது நடக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள ஆளுங்கட்சிகளோ எதிர்க்கட்சிகளோ இந்தத் தேர்தல் முறைக்கு மாறுவது குறித்து அறவே வாய் திறப்பதில்லை. இந்தத் தேர்தல் முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படுமாயின் காங்கிரஸ் கட்சி இந்தியாவையும் தி.மு.க தமிழ்நாட்டையும் இன்னும் 200 ஆண்டுகளுக்கு கூட ஆண்டு கொண்டிருக்கமுடியும். இந்தத் தேர்தல் முறையால் மிகவும் பாதிக்கப்பட்ட, இந்தியா முழுவதும் பரவலான முறையில் ஆதரவுத்தளத்தினை கொண்டுள்ள அதேசமயத்தில் தனித்து வெற்றி பெறமுடியாத நிலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் இந்த முறையை மாற்றுவதின் தேவை குறித்தும் விகிதாச்சார பிரதிநிதித்துவமுறையின் அவசியம் குறித்தும் பேசியுள்ளது. 

     இம்முறையில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிரப்பப்படும் நிலைமை உருவானால், குறைந்தது 100 கட்சிகளுக்காவது அங்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும். அப்பொழுது, ஒரு குடும்பத்தின் ஆட்சி நடத்தப்படமுடியுமா? கொள்ளையடிப்பதற்குத் தங்களுக்குள் துறைகளை பிரித்துக்கொண்டு ஆட்சி செய்வது என்பதான ஒரு கூட்டணி ஆட்சி முறை தொடர முடியுமா? பொருளாதார சீர்திருத்தம் என்று மட்டும் தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆனால் ஆட்சியில் அமர்ந்த பிறகு அனைத்து பொது சொத்துக்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் தாரை வார்த்து விடுவதற்கு மக்கள் தங்களுக்கு வாக்களித்து அனுமதி வழங்கிவிட்டது போன்று செயல்படும் அரசியல் கயமைத்தனம் நிலவுமுடியுமா? அனைத்து அதிகாரங்களையும் டெல்லியில் வைத்துக்கொண்டு பல லட்சம் கோடிக் கணக்கில் வரிகளாகவும் வருமானங்களாகவும் எடுத்துக்கொண்டு செல்லும் அதே வேளையில், மக்களின் கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்பு மற்றும் பிற அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுதல் ஆகிய எவற்றிற்கும் எந்த பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாத ஒரு நடுவண் ஆட்சி முறை தொடர முடியுமா? இந்தியா என்ற ஆங்கிலேயன் உருவாக்கிய இயந்திரம் உண்மையான மக்களாட்சி முறையில் நிலைத்து இயங்க முடியுமா? எனவே இப்போதைய தேர்தல் முறையை மாற்ற, அகில இந்திய கட்சிகளாகட்டும் அல்லது அகில இந்திய கொள்ளையில் பங்குபெற தற்போது வாய்ப்பு பெற்று வருகின்ற மாநில கட்சிகளாகட்டும் அவை ஒரு போதும் சம்மதிக்கப் போவதில்லை. 

இந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும், இருக்கின்ற நிலைமையில் எந்த அடிப்படையான மாற்றமும் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதில் உறுதியாக உள்ள, தேர்தலில் மாறி மாறி வெற்றிபெற்று வருகின்ற கட்சிகள் அனைத்தும், போராட்ட இயக்ககங்களைப் பார்த்து தேர்தலில் போட்டியிடுங்கள் என்று அழைப்பதற்கான காரணம் என்ன என்பது. இந்நிலையில், அரசியலில் அடிப்படையான மாற்றங்களைக் கோரும் இயக்கங்கள் இத்தேர்தலில் பங்கேற்று தங்களுடைய ஆற்றலையும் முயற்சிகளையும் வீணடிக்கக்கூடாது என்பதுடன் இத்தேர்தல் முறைக்கு அங்கீகாரம் அளித்து இத்தேர்தலுக்கும், அதில் தேர்ந்தெடுக்கப்படும் கட்சிகளுக்கும் கூடுதல் சட்டத்தகுதி கிடைக்க காரணமாகவும் இருக்கமுடியாது.

எகிப்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அதிபர் மற்றும் சட்டமன்றம் என்ற முறைதான் உள்ளது. ஆனால் அடிப்படையான குடியாட்சி முறை மாற்றத்தைக் கோருகின்ற எந்த நாட்டு மக்களும் தேர்தலை நம்பவில்லை. தெருவில் வந்து போராடுவதன் மூலம்தான், சர்வாதிகாரி பென் அலியை (அவரும் தேர்தலில்தான தோந்தெடுக்கப்பட்டுள்ளார்) ஆட்சியிலிருந்து விரட்ட முடியும் என்பதை துனிசிய நாட்டு மக்கள் எடுத்துக்காட்டினர். அதைத்தான் பாடமாக எடுத்துக்கொண்டு எகிப்திய மக்கள் அங்கும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக கொடிய, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏவகமான ஆட்சி செய்த சர்வாதிகாரி முபாரக்கை விரட்ட போராடிவருகின்றனர். இவை ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் பாடமல்ல. நமக்குச் சொல்லும் பாடமும் இதுதான். தேர்தல் ஒன்று நடத்தப்படுவதாலாயே ஒரு நாட்டில் மக்களாட்சி இருப்பதாகக் கூற முடியாது. 

இப்பொழுதிருக்கும் மோசடியான ஒரு தேர்தல் முறையில் பங்கேற்க மறுக்கும் நக்சல்பாரி அமைப்புகள், தமிழ்த்தேசிய சக்திகள்  தரப்பில் நியாயம் இருப்பதுதான் உண்மை. ஏனெனில், இந்தத் தேர்தல் முறையில், அதில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் பெற்ற வாக்குகளுக்கு ஏற்ப உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறுவதில்லை என்பதோடு மாத்திரமல்லாமல் அவ்வாறு கிடைக்கப்பெறும் பிரதிநிதித்துவத்திற்கு அளிக்க வேண்டிய விலை அதிகமானது என்பதுடன் அப்பிரதிநிதித்துவத்தால் கிடைக்கப்போகும் பயனும் பெரிதாக ஒன்றுமில்லை என்ற நிலை இருப்பதும்தான். 

தங்களுடைய கடின உழைப்பாலும் பல இடர்களுக்குப் பிறகும் கிடைக்கப்பெற்ற மக்களுடைய சிறு ஆதரவினை பெற்றுள்ள இயக்கங்கள், எவரது துணையுமின்றி, தங்களது அரசியல் இலட்சியங்களுக்கு எந்தக் கேடும் ஏற்படாத வகையில், தேர்தலில் போட்டியிட்டு சுயபலத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக தங்களது இயக்கத்தினரை அமரச்செய்வதற்கும், அதன்மூலம் எதிர்காலத்தில் தங்ளது அரசியல் இலட்சியங்களுக்கு ஆதரவாக மக்களை அணிதிரளச் செய்வதற்கும் தேர்தலைப் பயன்படுத்தமுடியும் என்பதற்கு ஏதுவானதாக தற்போதைய தேர்தல் முறை உள்ளதா என்பதை சீர்தூக்கி கருத்தில் கொள்ள வேண்டும். அதன்பிறகு, தேர்தல் களத்தில் தங்களது ஆற்றலை செலவு செய்ய உத்தேசித்துள்ள சக்திகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அவ‌ர்க‌ள‌து ஆற்ற‌ல் விர‌ய‌மாகாம‌ல் இருக்கும்.

- சு.அருணாசலம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It