ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் திருவிழா நடைபெறுவது போல வருடத்திற்கு ஒரு முறை கல்வி வியாபாரிகளின் திருவிழா ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் நடைபெறுகிறது. சமுதாயத்தை மேம்படுத்த அரசுகளாலும், அதன் பின்பு உயரிய சேவை நோக்கோடு சில சமுதாய நிறுவனங்களாலும் ஆரம்பித்து நடத்தப்பட்ட கல்வி இன்று கடைச் சரக்காகி கூறு போட்டு அனைத்தையும் மோசடியாக ஏமாற்றி விற்கும் வணிகர்களின் பிடியில் சிக்கி படாதபாடு படுகிறது. ஒரு குழந்தையை நர்சரி பள்ளியில் சேர்ப்பதில் அட்மிஷன் ஃபீஸ் என்று ஆரம்பிக்கும் கல்வி நிறுவனங்கள் கல்லூரிப் படிப்பு முடியும் வரை யூனிபார்ம், புத்தகம், தேர்வு, கணிப்பொறி கட்டணம் என்று விதம் விதமான பெயர்களில் பல விதமான வழிகளில் படிப்பவர்களிடம் செய்யும் முகம் தெரியாத வழிப்பறியின் அளவு கணக்கிட முடியாதது. தனியார் கல்வி நிறுவனங்கள் இன்னும் கட்டணம் வசூல் செய்யாதது கழிப்பறைக்கு மட்டும்தான்.
ஆசிரியர்

வழக்கறிஞர் காமராஜ்

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

சமூக விழிப்புணர்வு,
74, 4வது தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.
தொலைபேசி எண்: 94434 23638
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சென்ற இதழ்கள்:
ஜனவரி-06,

மார்ச்-06,
மே-06,
செப்டம்பர்-06,
நவம்பர்-06,
மே-07
இந்தப் புற்றீசல் நிறுவனங்களில் சிறுவர்கள் படிக்கும் நர்சரி பள்ளிகளின் பெரும்பான்மையானவை நிலைமை தான் மிக மோசம். இவையில் பாதிப் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமலும், போதிய இடவசதி இல்லாமலும் அடிப்படை வசதியில்லாத இடங்களிலும் நடத்தப்பட்டு குழந்தைகளைக் கொத்தடிமைகளைப் போல நடத்துகின்றன. மீதமுள்ள பள்ளிகள் நட்சத்திர ஓட்டலைப் போல தங்கள் வரவேற்பறைகளை வைத்துக் கொண்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் உயர்தர பொய்யைச் சொல்லிக் கொண்டு தினமும் இரண்டு ஷிப்டு முறைகளில் பள்ளி நடத்திக் கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறு நர்சரி பள்ளியில் ஆரம்பிக்கும் வழிப்பறி கலைக் கல்லூரி, அறிவியல் கல்லூரி, பொறியியல், மருத்துவம் என்று அனைத்திலும் வேர்விட்டு கிளை பரப்பி ஆலமரமாய் நிற்கிறது.

இத்தகைய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பணத்தை எதிர்பார்த்து இயங்குவதால் அரசின் விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு சட்டங்களைக் காலில் போட்டு மிதித்து அதிகாரிகளின் துணையுடன் கேள்வியும் இன்றி, கேட்பாரும் இன்றி தங்கள் சாம்ராஜ்யத்தை நிலை நாட்டி வருகின்றனர். யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களைத் தொடங்கலாம். அரசின் ஏதாவது ஒரு அனுமதியைப் பெற்றுக் கொண்டோ, பெறாமலோ பல விதமான பொய்களை, மெய்களாக கூறி பல வழிகளில் பெற்றோர்களைச் சுரண்டலாம் என்னும் நிலை நிலவுகிறது. அடியாள் வேலை பார்த்தவனும், கட்டப்பஞ்சாயத்து செய்தவனும் இன்று நாட்டில் அரசியல்வாதி ஆகிவிட்டது போல், இன்று குறுக்கு வழியில் குபேரனானவர்களும், கறுப்புப் பண உலகின் பேர்வழிகளும் கள்ளச்சாராய வியாபாரிகளும் நாட்டில் கல்வித் தந்தை ஆகிவிட்டனர். பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் கல்வித்தரம் உயராமல் இவர்களின் வங்கி இருப்பும், கட்டடங்களும் மட்டுமே உயர்ந்துள்ளன.

இவர்களின் நிலை இப்படி இருக்க, இன்னொரு புறம் அரசினால் நடத்தப்படும் பள்ளிகளின் நிலை மிக மோசமாக இருக்கிறது. போதிய இடவசதி இன்மை, ஆசிரியர்கள் சரியான விகிதத்தில் இல்லாமை, ஏனைய கல்வி மேம்பாட்டு வசதிகளின் குறைபாடு என்று நிலவி வரும் சூழலில் தனியார் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் மட்டும் சேரும் அவலம் உருவாக்கப்பட்டு விட்டது. இன்று அரசு கல்வி நிறுவனங்களை விரல் விட்டு எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதனையும் மீறி அரசுப் பள்ளிகள் ஒருசிலவற்றைத் தவிர பிற பள்ளிகளும், பெரும்பான்மையான கல்லூரிகளும் நல்ல தேர்ச்சி விகிதமே எட்டியுள்ளன. நாட்டில் இப்பொழுதுள்ள தலை சிறந்த கல்விமான்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்து முன்னேறியவர்களே என்பதனை அரசு பள்ளிகளில் படித்தால் கேவலம் என்று எண்ணி தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் உணர வேண்டும்.

இவ்வாறு இரு சூழல்கள் நம் நாட்டில் நிலவுகிறது. ஒரு புறம் பெற்றோர்களையும் அரசையும் ஏமாற்றி செல்வத்தில் கொழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள். இன்னொருபுறம் தத்தளிக்கும் அரசின் கல்விச் சாலைகள். அரசு கல்வியில் நிலவும் இந்தச் சீர்கேட்டினை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எத்தனையோ பெரயளவுத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கும் அரசு, மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், கல்வி மேம்பாட்டிற்காகவும், பல நூறு கோடிகளை ஒதுக்க வேண்டும். அதே போல மதம் பிடித்த யானையைப் போல தறிகெட்டு அலையும் கல்வி நிறுவனங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இது இன்றைய நிலையில் மிக மிக உடனடித் தேவை. இதில் எவ்வித பாரபட்சமும், பாராமுகமும் காட்டப் படக் கூடாது. ஏனென்றால் நாளைய சமுதாயத்தை உருவாக்குவதில் முதன்மைப் பங்கு வகிக்கும் கல்வியை அரசு கண்டும் காணாமலும் இருப்பது ஏற்க முடியாது.

மேற்படி கல்வி நிறுவனங்களைச் சீரமைக்க முடியாத பட்சத்தில் அரசே கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான் ஒரே வழி. அரசால் கல்வி நிறுவனங்களை நடத்த முடியுமா என்றால்?

நாடெங்கும் உள்ள மதுக் கடைகளையே எடுத்து நடத்தும் அரசுக்கு இதுவும் முடியும்.
Pin It