(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண்.9, ஏப்ரல் 12, 1946, பக்கங்கள் 3914.)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): திரு.தலைவர் அவர்களே, பின்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்:

                        “தொழில் நிலையங்களின் உரிமையாளர்கள் தங்கள் தொழில் நிலையங்களில் வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகளை வரையறுத்தக் கூற வேண்டும் என்று கோரும் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.”

ஐயா,

ambedkar 297இது மிகவும் எளிய மசோதா; எனக்குத் தெரிந்த வரை சர்ச்சைக்கு இடமற்ற மசோதா. எந்த ஒரு குறிப்பிட்ட தொழில் நிலையத்திலும் வேலைவாய்ப்புக்காக நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளும் நிபந்தனைகளும் இதற்கென நியமிக்கப்படும் தகுதிவாய்ந்த ஓர் அதிகாரியால் உறுதி செய்யப்பட வேண்டும், அத்தகைய அத்தாட்சி இது சம்பந்தமான ஒரு வகையான பதிவேடாக அமைய வேண்டும் என்பதே இந்த மசோதாவின் குறிக்கோள். வேலைவாய்ப்புக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் வெறுமனே பதிவு செய்வதையும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக விதிக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் நியாயத்தன்மையை மதிப்பிடுவதையும் மசோதா வேறுபடுத்திக் காண்கிறது. வேலைவாய்ப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளும் விதிமுறைகளும் எந்த அளவுக்கு நியாயமானவை என்ற பிரச்சினையில் இந்த மசோதா கவனம் செலுத்தவில்லை. இந்த மசோதாவின்படி, வேலைவாய்ப்புக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒவ்வொரு முதலாளியும் தன் இஷ்டம் போல் நிர்ணயித்துக் கொள்ள உரிமை உண்டு. இந்த மசோதா வேண்டுவதெல்லாம் இதுதான்: ஒரு முதலாளி தனது தொழில் நிலையத்தில் வேலைக்கமர்த்திக் கொள்ளப்போகும் தொழிலாளர்களுக்கு விதிக்கவிருக்கும் நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் வகுத்துக் கொண்ட பிறகு, அவற்றை அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஓர் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்; அந்த அதிகாரி இந்த நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் குறித்துக் கொண்டு அவற்றை ஒரு பதிவேட்டில் பதிவு செய்வார்; இந்த நிபந்தனைகளும் விதிமுறைகளும் உண்மையில் எத்தகையவை என்பதை நிர்ணயிப்பதற்கு இந்தப் பதிவேடுதான் அடிப்படையாக இருக்கும்.

வேறுவிதமாகச் சொன்னால், ஒருவிதமான சான்று விதிமுறையைத்தான் இந்த மசோதா உருவாக்குகிறது என்று கூற வேண்டும். இந்த மசோதா நிறைவேறிய பிறகு என்ன நடைபெறும் என்பதைப் பார்ப்போம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொழில் நிலையத்தில் வேலைவாய்ப்பு சம்பந்தமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்படுமானால் ஆவணச் சான்றைத்தான் சட்டம் அனுமதிக்கும்; அதாவது சான்றிதழ் அளிப்பதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியால் முதலாளிக்க வழங்கப்படும் உறுதிசெய்யப்பட்ட பிரதிதான் ஏற்றுக்கொள்ளப்படும்; வாய்மொழிச் சான்று ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த மசோதாவின் 12 ஆவது விதியை அவை நோக்கினால் இந்த விஷயம் மிகத் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த விதி கூறுவதாவது:

            “இந்த சட்டத்தின்படி இறுதியாக உறுதி செய்யப்பட்ட நிலையாணைகளை மாற்றுவது, கூடுதலாக சேர்ப்பது அல்லது மறுதலிப்பது சம்பந்தமாக எத்தகைய வாய்மொழிச் சான்றும் எந்த நீதிமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.”

இதுதான் இந்த மசோதாவின் உண்மையான நோக்கம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று இதில் புதிய கோட்பாடு எதுவும் அடங்கியிருக்கவில்லை. இத்தகையதொரு சட்டம் ஏற்கெனவே பம்பாயில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த மசோதா செய்வதெல்லாம் அந்த சட்டத்தின் விதிகளை இந்தியாவில் இதர மாகாணங்களுக்கும் விஸ்தரிப்பதே ஆகும்.

இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள பல விதிகள் செயல்முறை சம்பந்தப்பட்டவையே ஆகும்; வேலைவாய்ப்பு சம்பந்தமான விதிமுறைகளும் நிபந்தனைகளும் தொழிலதிபர்களிடமிருந்து கிடைக்கப் பெறும்போது சான்றதிகாரி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவை விரித்துரைக்கின்றன. அவர் சான்றிதழ் வழங்குவதற்கு முன்னர் அந்தத் தொழில் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்து அவர்களது கருத்துகளைத் தெரிந்து கொள்வது முக்கியம். தாம் தெரிவித்துள்ள நிபந்தனைகளும் விதிமுறைகளும் இந்த சட்டத்திற்கு முற்றிலும் இசைந்தவையாக இருந்தும் சான்றதிகாரி சான்றிதழ் அளிக்கவில்லை என்றால் தொழிலதிபர் மேல்நீதிமன்றத்தில் முறையிட்டு, சான்றதிகாரியின் முடிவை தள்ளுபடிச் செய்யச் செய்வதற்கு உரிமை உண்டு.

நம்முன் குறுகிய நேரமே இருப்பதால், இந்த மசோதாவின் ஒவ்வொரு விதியையும் பற்றி விரிவாக எடுத்துக்கூறி, அவையின் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. எனினும் இந்த மசோதா அவசியமானது மட்டுமன்றி, மிக அவசரமானதும் கூட என்று அரசாங்கம் ஏன் கருதுகிறது என்பதை எடுத்துரைப்பது இன்றியமையாதது என்று நினைக்கிறேன். இந்த மசோதா அடுத்தக் கூட்டத் தொடரில் அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் மற்றொரு மசோதாவுடன் மிக நெருக்கமாகப் பின்னி பிணைந்திருக்கும்; அதுதான் உடல்நலக் காப்பீட்டு மசோதாவாகும். இந்த உடல்நலக் காப்பீட்டு மசோதா சலுகைகள் சம்பந்தமாக சில உரிமைகளை தொழிலாளிக்கு வழங்குகிறது; அதேசமயம் உடல்நலக் காப்பீட்டு நிதிக்கு ஓரளவு பணம் செலுத்தும் கடமை பொறுப்பையும் விதிக்கிறது. இந்த உரிமைகளும் கடமைப் பொறுப்புகளும் பல்வேறு தொழில் நிலையங்களில் தொழிலாளிகள் பெறும் ஊதியங்களுடன் பிரிக்க முடியாதபடி இணைந்து பிணைந்துள்ளன. இந்நிலைமையில், நிதிக்கு ஒரு தொழிலாளி தர வேண்டிய பங்கு பற்றித் தகராறுகள் எழக்கூடும். காப்பீட்டு நிதியிலிருந்து ஒரு தொழிலாளி எவ்வளவு பணம் பெறுவதற்கு உரிமை பெற்றுள்ளார் என்பது குறித்துத் தகராறுகள் தோன்றக்கூடும். இத்தகைய தகராறுகளுக்கு இறுதியாகத் தீர்வு காணும் பொருட்டு, தொழிலாளிகள் வேலைக்குச் சேர்ந்த போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் விதிமுறைகளும் எழுத்து மூலமாக பதிவு செய்யப்படுவது அவசியம் என்று அரசாங்கம் கருதுகிறது; அப்போதுதான் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் பற்றிய எத்தகைய குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்ட சான்றை நாங்கள் பெறமுடியும். உண்மையைக் கூறுவதானால், தொழில் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிலைமை குறித்த சில குறிப்பிட்ட விஷயங்களை எத்தகைய ஆட்சேபத்துக்கும், ஐயத்துக்கும், சிக்கலுக்கும் இடமின்றித் தெரிந்து கொண்டாலொழிய காப்பீட்டு நிதியை உருவாக்குவது மிகவும் கடினம் என்று நாங்கள் உணர்ந்தோம்.

இந்தக் கருத்துகளுடன் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று முன்மொழிகிறேன்.

*           *           *

1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண்.9, ஏப்ரல் 12, 1946, பக்கம் 3926.) திரு.தலைவர் அவர்களே, இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எனது தீர்மானம் இப்போது நாம் செவிமடுத்த இத்தகைய விவாதத்தை எழுப்பும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. அதிலும் குறிப்பாக மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் டாக்டர் சர் ஜியாவுத்தீன் அகமதின் உரையைக் கேட்டு என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அவர் தமது நண்பகலுணவுக்கு சீரணிக்க முடியாத எதையோ சாப்பிட்டு விட்டதன் விளைவுதான் அவரது இந்த உரையோ என்று அஞ்சுகிறேன்; ஏனென்றால் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்பதில் அளவற்ற ஆர்வமுடையவர் டாக்டர் ஜியாவுத்தீன் அகமது என்பதை நாம் அனைவரும் அறிவோம்; இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாளர் சட்டங்களை தாமதிக்காமல் கொண்டு வருவது அவசியம் என்று இந்த அவையில் பல சந்தர்ப்பங்களில் அவர் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் இன்றோ இதற்கு நேர்மாறான முறையில் பேசியிருக்கிறார். எனினும் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு என்னுடைய நண்பர் திரு.சித்திக்கி மிகச் சரியான முறையில் பதிலளித்திருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; இதற்குமேல் இந்த விஷயம் குறித்து அவையில் பேச வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.

அவர் தெரிவித்த கருத்துகளில் ஒன்றுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். இந்த மசோதா சம்பந்தமாக போதிய முன்னறிவிப்பு தரப்படவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் குறித்த உண்மை நிலைமை இதுதான்: இந்த மசோதா இடம்பெற்ற நிகழ்ச்சி நிரல் வெள்ளிக்கிழமை 6 ஆம் தேதியன்றே மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா சட்டமன்ற நடவடிக்கைகளில் முதல் இடத்தைப் பெற்றிருந்தது. அது மட்டுமன்றி 1946 ஏப்ரல் 12 ஆம் தேதி வெள்ளியன்று இது முதல் விஷயமாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நிகழ்ச்சி நிரலின் அடிக்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆறுநாள் முன்னறிவிப்பு போதுமானதல்ல என்று எவ்வாறு கருத முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த மசோதாவைப் பொறுத்த வரையில், 15 நிமிடங்களுக்குள் இதற்கு அவையின் ஒப்புதலைப் பெற்றுவிட முடியும் என்று நம்பினேன். ஆனால் இந்த மசோதா சம்பந்தமாக இப்போது ஏறத்தாழ 1 மணி 5 நிமிடங்கள் செலவிட்டுள்ளோம். எனவே, இந்த மசோதாவை அவசரகதியாக அவையில் நிறைவேற்ற நான் முயற்சிப்பதாக எவரும் எப்படிக் கூற முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய நண்பர் திரு.இன்ஸ்கிப்த் எழுப்பிய பிரச்சினையைப் பொறுத்தவரையில், தங்களுடைய கட்சிக்காரர்களைக் கலந்தாலோசிக்க போதிய முன்னறிவிப்புத் தரப்படவில்லை என்று கூறினார்; இந்த மசோதாவின் முந்தைய வரலாற்றை அவர் முற்றிலுமாக தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் அல்லது மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இந்த மசோதா 1944 ஆம் ஆண்டிலேயே நிரந்தரத் தொழிலாளர் குழு முன்வைக்கப்பட்டது. அந்தக் குழு இம்மசோதா மிக அவசியமானதென்றும், இது எத்தகைய சர்ச்சைக்கு இடமற்றதாதலால் அவசர சட்ட வடிவத்தில் அதனை அரசாங்கம் நிறைவேற்றலாம் என்றும் ஒருமனதாகப் பரிந்துரைத்தது. ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இதன் பின்னர் இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் இவ்விஷயம் மீண்டும் விவாதிக்கப்பட்டது.

தற்போது அவை முன் வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா தொழிலாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வடிவத்தில் இல்லை என்று அவர் மற்றொரு பிரச்சினையை எழுப்பினார். இது முற்றிலும் தவறான கருத்து என்று அவருக்குக் கூற விரும்புகிறேன். முத்தரப்பு மாநாட்டில் இந்த மசோதா எந்த வடிவத்தில் முன்வைக்கப்பட்டதோ அதில் எத்தகைய மாற்றத்தையும் அரசாங்கம் செய்யவில்லை.

சிறு தொழிற்சாலைகளுக்கு இந்த மசோதா எந்த அளவுக்குப் பொருந்தும் என்று என்னுடைய நண்பர் பேராசிரியர் ரங்கா ஒரு பிரச்சினையை எழுப்பியிருந்தார். நண்பர் திரு.கிவில்டும் இதனையே வலியுறுத்தி இதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார். இந்த மசோதாவிலுள்ள விதி 1-இன் 3ஆவது துணை விதியைப் படிக்கும் எவரும் இந்த மசோதா நூறும் அல்லது அதிகமான தொழிலாளர்களை வேலைக்கமர்த்திக் கொண்டுள்ள தொழில் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்; ஏனென்றால் அந்தத்த அரசாங்கம் அவ்வப்போது அரசினர் செய்தி இதழில் வெளியிட்டு இதனை எவ்வகையான தொழில் நிலையத்துக்கும் விஸ்தரிக்க சர்க்காருக்கு அதிகாரம் இருக்கிறது என்று இந்தத் துணைவிதி கூறுவதைப் பார்க்கலாம். ஆக, நூறு பேருக்கும் குறைவான தொழில் நிலையங்களுக்கு இதனை பயன்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கம் தன் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. எனவே, நூறுபேரும் அதற்கும் மேற்பட்டவர்களை பணியிலமர்த்திக் கொண்டுள்ள தொழில் நிலையங்களுக்குத்தான் இந்த மசோதா பிரதானமாகப் பொருந்தும்; இந்த எண்ணிக்கைக்கும் குறைவானவர்களை வேலைக்கமர்த்திக் கொண்டுள்ள தொழில் நிலையங்களுக்கு இது பொருந்தாது என்ற அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். 

திவான் சமன்லால்: நான் ஒரு நிமிடம் குறுக்கிடலாமா? பக்கம் 2, விதி 2 (இ) (ii)- இல் தொழில் நிலையம் என்பதற்கு சொற் பொருள் விளக்கம் கூறும்போது “ தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 2-இன் (I) விதியின்படி வரையறுத்துக் கூறப்பட்டுள்ள தொழிற்சாலைகளையே இது குறிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரையறுத்துக் கூறப்பட்டிருக்கும் தொழிற்சாலை என்பது தொழிற்சாலைகள் சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டிருக்கும் தொழிற்சாலையையே குறிக்கும் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் 20 பேர் பணிபுரியும் ஒரு தொழிற்சாலை இங்கு கூறப்பட்டிருக்கும் “தொழில் நிலையத்துக்கு” அளிக்கப்பட்டுள்ள பொருள் வரையறைக்குள் வராது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆனால் 20 பேர் பணிபுரியும் ஒரு தொழிற்சாலைக்குக் கூட அரசாங்கம் இதனைப் பயன்படுத்தலாம்.

திவான் சமன்லால்: பயன்படுத்தலாம்; ஆனால் பயன்படுத்த வேண்டும் என்பதை அது குறிக்காது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நூறு பேர்களைக் கொண்ட தொழிற்சாலையுடன் நாங்கள் ஆரம்பிக்கிறோம்.

திரு.லெஸ்லி கிவில்ட்: இதற்கும் குறைவாக ஏன் ஆரம்பிக்கக் கூடாது?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இதற்கும் குறைவான எண்ணிக்கையிலிருந்து அரசாங்கம் தொடங்குவதை தடுக்கக் கூடியது எதுவும் இல்லை.

திவான் சமன்லால்: இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் இருபது பேர் மட்டுமே பணிபுரியும் தொழிற்சாலைக்குப் பொருந்தும் என்றால், இந்த மசோதாவின்படி இதேபோன்ற ஒரு தொழில் நிலையத்துக்கும் ஏன் பொருந்தக்கூடாது?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இருபது பேர் பணியாற்றும் தொழிற்சாலைகள் மீது கூட இந்தக் கடமைப் பொறுப்பை அரசாங்கம் சுமத்துவதைத் தடுக்கும் எதுவும் இந்த சட்டத்தில் இல்லை. இப்போதைக்கு ஒரு தொடக்கத்துக்கு அடிபோடுவோம் என்றுதான் நினைத்தோம். தவிரவும், ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் இதனை விஸ்தரிப்பது என்றால், நிர்வாக அமைப்பு மிகவும் பரந்ததாக இருக்க வேண்டும். சான்றதிகாரிகள் மற்றும் மேல் முறையீட்டமைப்புகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்க வேண்டும். இத்தகைய ஒரு நிர்வாக அமைப்பை தற்போது எந்த மாகாண அரசாங்கத்தாலும் வழங்க இயலாது. எனவே, மிதமான அளவில் இப்பணியைத் தொடங்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்; இத்தகைய விஸ்தரிப்பு அவசியப்படும் போது அதனைச் செய்யும் அதிகாரத்தை எங்கள் கையில் வைத்திருக்கிறோம்.

இந்தத் தீர்மானம் குறித்து நிகழ்த்தப்பட்ட உரைகளின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகளில் விளக்கம் தேவைப்படும் வேறு எந்த விஷயமும் இல்லை என்றே கருதுகிறேன்.

எனவே, ஐயா என் தீர்மானத்தை முன்மொழிகிறேன்:

திரு.தலைவர்: தீர்மானம் இதுதான்:

“திருத்தப்பட்ட இந்த மசோதா ஏற்கப்பட வேண்டும்.”

தீர்மானம் நிறைவேறியது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It