(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண்.7, ஏப்ரல் 9, 1946, பக்கங்கள் 3745-47)

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்:

“மைக்கா சுரங்கத் தொழிலில் பணியிலமர்த்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் சேம நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பணம் கொடுத்து உதவும் ஒரு நிதியை அமைக்க வகை செய்யும் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.”

இந்த மசோதாவின் முக்கியமான வாசகம் விதி 3-இல் அடங்கியுள்ளது; மைக்கா சுரங்கத் தொழிலில் பணியிலீடுபடுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் சேமநலனை மேம்படுத்தும் பொருட்டு மைக்கா ஏற்றுமதி மீது ஒரு வரி விதிக்க உத்தேசிக்கப் பட்டிருக்கிறது. இந்த நிதி எத்தகைய சேமநல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது மசோதாவின் விதி 2-இல் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகக் கூறி அவற்றை அவையில் படிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். நான் மேலே செல்லுவதற்கு முன்னர் விதி 3-இல் குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற ஒரு நிதியைத் தொடங்குவது அவசியம் என்று இந்திய அரசாங்கம் ஏன் தீர்மானித்தது என்பதை அவைக்கு விளக்க விரும்புகிறேன். இவ்வகையில், மைக்கா சுரங்கத் தொழிலிலும், மைக்கா தயாரிப்புத் தொழிலிலும் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் நிலைமை குறித்த அறிக்கைகளிலிருந்து சில பகுதிகளை இங்கு படித்துக் காட்டினால் போதும் என்று நினைக்கிறேன். இந்த அறிக்கை பேராசிரியர் அதர்காரால் தயாரிக்கப்பட்டதாகும். முத்தரப்பு தொழிலாளர் மாநாடு நியமித்த உண்மை நிலை அறியும் குழுவில் ஓர் உறுப்பினர் இவர். ஐயா, உங்கள் அனுமதியோடு இந்த அறிக்கையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் படித்துக் காட்டலாம் என்றிருக்கிறேன்.

ambedkar with friendஇந்த அறிக்கையின் 27 ஆவது பக்கத்தில் பேராசிரியர் அதர்கார் கூறுவதாவது:

“எந்தச் சுரங்கத்திலும் சிறுநீர் கழிப்பிடம் அல்லது மலசலக் கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதை நாங்கள் காணவில்லை. இவ்வாறு சுரங்கங்கள் சட்டம் மீறப்பட்டு வருகிறது. 500 அடிக்குக் கீழே தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இயற்கை உபாதைக்கு உள்ளாக நேர்ந்தால் அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்! நல்ல குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்படாதிருப்பது மைக்கா சுரங்கத் தொழிலில் நிலவும் மிகக் கொடிய சீர்கேடாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தண்ணீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய தாதுப் பொருள்கள் இருப்பதே வயிற்று மந்தம், உணவு செரியாமை, குடல் கோளாறுகள் போன்றவற்றுக்குக் காரணம் என்று மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று பெரிய நிறுவனங்கள் லாரிகள் மூலம் சுரங்கத்திற்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்கின்றன. ஆனால் பொதுவாக, ஐந்து முதல் ஆறு மைல் தொலைவிலுள்ள சேறும் சகதியுமான அழுக்கடைந்த குட்டைகளிலிருந்து பெண்களைக் கொண்டு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் தண்ணீர் அருவருப்பான, அழுக்குப்படிந்த பெரிய மண்மிடாக்களிலும் ஜாடிகளிலும் சேமித்து வைக்கப்படுகிறது. இத்தகைய தண்ணீர் கூடப் போதுமான அளவு கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக அலம்பும் பணிகளுக்குப் பொதுவாக தண்ணீர் கிடைப்பது அரிது. சுரங்கங்களில் குடிநீர் பிரச்சினை மிகக் கடுமையானது; இதில் உடனடியாக கவனம் செலுத்துவது அவசியம்.”

குடியிருப்பு வசதிகளைப் பற்றி அறிக்கை கூறுவதாவது:

“தொழிலாளர்களை குடியிருக்கும் வீடுகளைப்பற்றி வருணிப்பதற்கு சரியான சொற்களே கிடைக்கவில்லை. இவற்றில் பெரும்பாலானவை தற்காலிகமானவை. மூங்கிலையோ அல்லது மரத் தூளையோ ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கும் கூடாரங்கள் போன்றவை இவை. நிரந்தரமான குடியிருப்புகளைப் பொறுத்தவரை அவை இருவகைப்பட்டவை. அவற்றைப் பற்றி இங்கு தனித் தனியாகக் கூறுகிறோம்:

(i) முதல் வகை குடியிருப்புகள் முற்றிலும் மூங்கிலையும் புல்லையும் கொண்டு வேய்ந்தவை. தொழிலாளர்களுக்காக சுரங்க உரிமையாளர் கட்டியிருந்த ஓர் வீட்டை நாங்கள் பார்த்தோம். அதன் கூரை பசும் இலைதழைகளால் ஆனது. அது பார்ப்பதற்குக் கால்நடைத் தொழுவம் போல் காட்சி அளித்தது! அதில் கதவுகளோ, சன்னல்களோ காணப்படவில்லை. பின்னர் சொல்ல வேண்டுமா காற்றோட்டத்துக்கு! நல்லாப்புறமும் திறந்துவிடப்பட்ட ஒரு கூடாரம் போல் அது தோற்றமளித்தது. இந்தக் கொட்டிலில் ஒரு தொழிலாளி, அவனுடைய மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இதர 10 தொழிலாளர்கள் வசித்து வந்தனர். குடும்பத்துக்கு தனி மறைவிடம் கிடையாது. தனித்தனி அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தரையில் புல் பரப்பப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் அதன்மீதுதான் இரவில் படுத்துறங்கி வந்தனர். குடியிருப்பவர்களிடமிருந்து வாடகை எதுவும் வசூலிக்கப்படவில்லை. அந்தக் குடிசையில் ஒரு தொழிலாளி குடும்பத்துடன் குடியேறிய பிறகு சுரங்க முதலாளி அதில் மேற்கொண்டும் 8 அல்லது 10 பேர்களைக் குடியமர்த்தினான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே குடும்பத்துடன் குடியேறிய தொழிலாளி வாடகை எதுவும் தருவதில்லையாதலால் இதை எதிர்த்து குறைபாட்டுக் கொள்ளவோ, முணுமுணுக்கவோ அவனால் முடியவில்லை.

(ii) இனி, ஒரளவு மேம்பட்ட குடியிருப்புகளைப் பற்றிப் பார்ப்போம் - அவற்றின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு; பொதுவாக டர்பன்கள், கலாசிகள், தச்சர்கள் போன்றோரே அவற்றில் குடியிருந்தனர். அவை வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட ஓர் அறை குடியிருப்பு வீடுகள்; அவற்றிற்கு வாடகை ஏதும் கிடையாது. இந்த வீடுகளின் சுவர்கள் சுடப்படாத பச்சைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. அவற்றின் கூரைகள் மரப்பலகைகளால் ஆனவை. அவை கதவுகளுடன் கூடிய அடைக்கப்பட்ட அறைகள். காற்றோட்டம் மிகமிகக் குறைவு. இந்தக் குடியிருப்புகள் சாதாரண தொழிலாளர்களுக்கு உரியவை அல்ல, மாறாக பெரிதும் தேர்ச்சி பெற்ற ஊழியர்களுக்கு உரியவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கூட எத்தகைய கழிவிட வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் அவர்கள் திறந்த வெளிகளில் சென்று தங்களது இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஏற்கெனவே நாங்கள் சுட்டிக்காட்டியதுபோல், இதனால் அவர்கள் மூட்டுவலி, இரத்தச் சோகை போன்ற நோய்களால் பீடிக்கப்படுகின்றனர். சுரங்க முதலாளிகள் என்னதான் நிர்ப்பந்தித்த போதிலும் இந்தக் குடியிருப்புகளில் வசிக்க தொழிலாளர்கள் விரும்புவதில்லை. தங்களுடைய குடிசைகளுக்குப் போய் வருவதற்கு 4 முதல் 6 மைல்கள் நடக்க வேண்டியிருந்தாலும் அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் சுரங்க முதலாளிகள் கட்டித்தந்துள்ள குடியிருப்புகளைவிட அவர்களது சொந்தக் குடிசைகள் எவ்வளவோ மேம்பட்டவையாக உள்ளன.”

மைக்கா சுரங்கங்களில் பரவியுள்ள தொழில் சார்ந்த நோய்களையும் இதர நோய்களையும் பற்றிக் கூறும் பகுதிகளை இப்போது படித்துக் காட்டுகிறேன். இது விஷயமாக அறிக்கை கூறுவதாவது:

“மைக்கா சுரங்கத் தொழிலாளர்களைப் பீடிக்கும் நோய்களை (அ) சுரங்க நடவடிக்கைகளாலும் வேலை நிலைமைகளாலும் ஏற்படும் நோய்கள் என்றும், (ஆ) சுரங்கப் பிரதேசத்தில் நிலவும் இயற்கைச் சூழ்நிலைமைகளால் தோன்றும் நோய்கள் என்றும் வகை பிரிக்கலாம். இது சம்பந்தமாக பீகார் பிரதேசத்திலிருந்து சில தகவல்களைச் சேகரிக்க முடியும். பிரதானமாக இந்தத் தகவல்களிலிருந்து பின்கண்ட பகுப்பாய்வுக்கு நாம் வரமுடியும்:

(அ) முதல் பிரிவில் கீழ்க்கண்ட நோய்கள் அடங்கும்:

(i) சிலிகோசிஸ் - இது நுரையீரலைப் பாதிக்கும் நோய்; தண்ணீர் ஊற்றாமல் படிகக் கல்லைத் துளையிடுவதுடன் இது சம்பந்தப்பட்டது. எண் கோணங்களைக் கொண்ட துரப்பணக் கருவி சுரங்கத்தின் அடியாழம் வரை சென்று இயங்கும்போது, படிகக்கல் தூசி துளை வழியாக மிகுந்த வேகத்துடன் வெளியேறி துரப்பணத் தொழிலாளியின் முகத்தைத் தாக்குகிறது. ஒரு சில விநாடிகளில் படிகக் கல் தூசிப் படலங்கள் துரப்பணத் தொழிலாளியைச் சூழ்ந்து கொள்கிறது. அப்போது அந்தத் தொழிலாளி தூசியைத் தொடர்ந்து சுவாசிக்க வேண்டியிருச்கிறது. சின்னச்சிறு படிகத் துகள்கள் அவனது உடலில் பிரவேசித்து நுரையீரல்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆரம்பத்தில் மார்புச்சளி அறிகுறிகள் தோன்றுகின்றன. இது படிப்படியாக தீவிரமடைந்து சிலிகோசிஸ் நோயாக உருவெடுக்கிறது. இந்த நோயால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனினும் அவர்களது மட்டுமீறிய உழைப்பின் காரணமாக இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் விரைவில் மரணமடைவதிலிருந்து காப்பாற்றுவது அவர்கள் அந்தந்தப் பருவ காலத்தில் வேளாண் துறைக்கு மாறுவதேயாகும். ஒரு துரப்பணத் தொழிலாளி தொடர்ந்து ஓராண்டு முழுவதும் பணியாற்றினால் இந்த நோயால் பீடிக்கப்படுவதிலிருந்து அவன் தப்ப முடியாது; சுமார் ஐந்தாண்டுகளுக்குள் அவன் இறக்கக்கூடும். தன்னுடைய மிகச் சிறந்த துரப்பணத் தொழிலாளிகளில் 16 பேரை கடந்த ஐந்தாண்டுகளுக்குள் தான் இழந்துவிட்டதாக ஒரு முதலாளி கூறினான். கிட்டத்தட்ட எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏராளமான உயிர்களைக் காவுகொள்ளும் இந்த நோயிலிருந்து துரப்பணத் தொழிலாளிகளைப் பாதுகாப்பதற்கு ஒரே வழிதான் உள்ளது; தண்ணீர் ஊற்றாமல் துரப்பணக் கருவிகளைக் கொண்டு துரப்பணம் செய்வதை இந்திய சுரங்கங்கள் சட்டத்தின்படி தடை செய்வதை இந்திய சுரங்கங்கள் சட்டத்தின்படி தடை செய்வதே அந்த வழி. செரஸ்டியன் சுரங்க நிறுவனம் ஒன்றுதான் தானாகவே முன்வந்து ஈர துரப்பண முறையைப் புகுத்தியுள்ளது. குறைந்தபட்சம் இந்த யுத்தத்தின் போதாவது இந்த முறையைப் பின்பற்ற வேறு எந்த நிறுவனமும் முன்வரவில்லை. எனினும் உலர்ந்த துரப்பண முறையை சட்டரீதியாக தடை செய்வதை அனைத்து தொழிலதிபர்களும் ஆதரித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்து, இங்குள்ள தொழிலாளர்களிடையே பரவியுள்ளவயிற்று மந்தம், கீல்வாதம், மார்புச் சளி, முறைக் காய்ச்சல் போன்ற நோய்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியல் முழுவதையும் இங்கு நான் விவரித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. எனினும் அறிக்கையில் கண்டுள்ள பின்கண்ட பத்தியை மட்டும் அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்:

“சேமநல நடவடிக்கைகள் எவற்றையும் இங்கே அறவே காணமுடியவில்லை. உணவகங்கள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள், பொழுதுபோக்கு வசதிகள், அலம்பீடு வசதிகள் என்பவை எல்லாம் இந்த மைக்கா சுரங்கப் பிரதேசத்தில் என்னவென்றே தெரியாது. செரஸ்டியன் சுரங்க நிறுவனம், சாட்டுராம் ஹோரில்ராம் நிறுவனம், இந்திய மைக்கா சப்ளை நிறுவனம் போன்றவை மருத்துவ உதவி ஏற்பாடுகளைச் செய்துள்ளன.”

அறிக்கை மேலும் கூறுவதாவது:

“மருத்துவ உதவி இலவசமாக அளிக்கப்படுகிறது. எனினும் குழந்தைகளும் வயது வந்தவர்களும் படிப்பதற்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.”

மைக்காச் சுரங்கங்களில் வேலை நிலைமைகள் உண்மையிலேயே சகிக்கவொண்ணாதவையாக உள்ளன என்பதையும், இது விஷயத்தில் அரசாங்கம் தலையிட்டு, மைக்கா சுரங்கத் தொழிலாளர்களின் அவல நிலையைப் போக்குவதற்கு ஏதேனும் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையும் காட்டுவதற்கு அறிக்கையிலிருந்து பத்தி பத்தியாக நான் கூறிக் கொண்டே போகலாம்.

இனி, இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு மிகச் சிறந்த மார்க்கம் என்ன என்ற விஷயத்துக்கு வருகிறேன். இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இதனைச் சமாளிப்பதற்கு இரண்டே வழிகள்தான் உள்ளன என எனக்குத் தோன்றுகிறது. ஒருவழி: தொழிலாளர்களுக்கான குறிப்பிட்ட சேமநல நடவடிக்கைகளை வகுத்துத் தந்து, அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பை சுரங்க முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்; இந்தப் பொறுப்பை அவர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்பதை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். இரண்டாவது வழி: இந்த சேமநல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை அரசாங்கம் தானே வரித்துக் கொண்டு, அதற்காக்கும் செலவை சுரங்க முதலாளிகளை ஏற்கச் செய்ய வேண்டும். இவற்றில் முதல் வழி குறைபாடுடைதாக எனக்குத் தோன்றுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவதாக, சேமநல நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில் வெவ்வேறான சுரங்க முதலாளிகளம் வெவ்வேறான தகுதிகளைப் பெற்றுள்ள நிலைமையில் சட்டம் நிர்ணயிக்கும் தரத்தை சிறு சுரங்க முதலாளிகளால் நிலைநாட்டுவது சாத்தியமல்ல. இரண்டாவதாக அடிக்கடி சுரங்கங்களைச் சுற்றிப் பார்த்து தரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மிகவும் விழிப்போடு கண்காணிக்க வேண்டுமானால் அதற்கு ஏராளமான ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்; அரசாங்கம் இதைச் செய்வது என்பது சாத்தியமல்ல. எனவே, பொறுப்பு முழுவதையும் தன் கைகளிலேயே எடுத்துக் கொண்டு, இந்த சேமநல நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவை சுரங்க முதலாளிகள் ஏற்கும்படி செய்வதே இதுபோன்ற விஷயங்களில் சிறந்த வழி என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஐயா, மைக்கா தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சேம நலங்கள் சம்பந்தப்பட்ட இம்மசோதா இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இது அவர்கள் கைக்கொள்ளும் புதிய கோட்பாடு ஒன்றுமல்ல. சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிப்போரின் சுபிட்ச நலனுக்கான அவசரச் சட்டம் ஒன்றை போரின் போது அரசாங்கம் பிறப்பித்ததை அவை அறியும். ஒர் அவசரச் சட்டத்தின் மூலம் இது மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போதைய மசோதாவுக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடுகள் நான் முன்னர் தெரிவித்த அவசரச் சட்டத்திற்கு அடிப்படையாக இருந்த அதே கோட்பாடுகளே ஆகும். எனவே, இந்த மசோதாவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள கோட்பாட்டை மேற்கொண்டு விரிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை, அது உசிதமுமல்ல.

ஐயா, இங்கு நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. இந்தப் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பது குறித்து, இந்நிதியை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறுவதற்கு இந்த மசோதாவின்படி இரண்டு குழுக்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அறிவீர்கள். ஓர் ஆலோசனைக் குழு சென்னை மாகாணத்துக்கும், மற்றோர் ஆலோசனைக் குழு பீகார் மாகாணத்துக்கும் இருக்கும். மைக்கா உற்பத்தியாகும் மற்றொரு பிரதேசம் அல்லது ராஜபுதனம் இதிலிருந்து விலக்கப்பட்டிருப்பதற்கு இந்திய அரசாங்கம் எந்தக் காரணமும் கூறவில்லையே என்று சில உறுப்பினர்கள் எண்ணக்கூடும். ராஜபுதனத்துக்கு மூன்றாவதொரு குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் ஏன் நினைத்தோம் என்பதை அவைக்கு விளக்க விரும்புகிறேன். மைக்கா தொழில் துறையில ராஜபுதனம் இப்போதைக்கு மிகச் சிறிய இடத்தையே வகிக்கிறது. இது குறித்த சில புள்ளிவிவரங்களை அவைக்குத் தருவது உசிதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவிலுள்ள மைக்கா சுரங்கங்களை எடுத்துக் கொள்வோம். இது சம்பந்தமாக 1941 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் என்னிடம் இருக்கின்றன.

1941 ஆம் ஆண்டில் பீகாரில் மொத்தம் 623 சுரங்கங்கள் இருந்தன. இவற்றில் ஆண்டு முழுவதும் பணியாற்றிய சுரங்கங்கள் 297. இதே ஆண்டில் சென்னையில் இருந்த மொத்த சுரங்கங்கள் 108, இவற்றில் ஆண்டு முழுவதும் இயங்கியவை 47; ஆனால் அதே சமயம் ராஜபுதனத்தில் மொத்தம் 62 சுரங்கங்கள் இருந்தபோதிலும் ஆண்டு முழுவதும் செயல்பட்டவை 8 தான். தொழிலாளர்களின் எண்ணிக்கை விஷயத்தை எடுத்துக் கொண்டால், இது குறித்த 1943 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் என்னிடம் உள்ளன. அந்தப் புள்ளி விவரங்கள் வருமாறு: பீகாரில் மைக்கா சுரங்கங்களில் பணியாற்றிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 81,431; இந்த எண்ணிக்கை சென்னையில் 18,379; ஆனால் ராஜபுதனத்திலோ வெறும் 15,000 தான். ஆதலால் ராஜபுதனத்துக்கு ஒரு தனிக்குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதப்பட்டது. இதற்கான காரணம் தெள்ளத் தெளிவானது. இந்த ஆலோசனைக் குழுக்களைப் பராமரிப்பதற்கு ஏராளமாக நிர்வாகச் செலவு பிடிக்கிறது; வெறும் நிர்வாகக் காரியங்களுக்காக நிதியிலிருந்து இவ்வாறு பணம் செலவிடப்படுவதை நான் விரும்பவில்லை; நமது நோக்கத்துக்கு இது எவ்வகையிலும் உதவாது. எனவே, மேற்கொண்டு மற்றொரு குழுவை அமைக்காமல் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதும், பிரச்சினையை வேறு ஏதேனும் வகையில் சமாளிப்பதும் உசிதம் என்று நாங்கள் முடிவு செய்தோம். ஐயா, எனது விளக்கம் தேவைப்படுகின்ற வேறு ஏதேனும் விதி மசோதாவில் உள்ளதா என்பதை நான் அறியேன். இந்த விஷயம் மிக அவசரமானது என்பதையும், இம்மசோதா சட்டப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்பதையும் அவை உணரும் என்று நம்புகிறேன்.

            மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள் சார்பில் ஒரு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன்; இந்த மசோதாவை ஒரு தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதே அந்தத் திருத்தத்தின் நோக்கம். இந்த மசோதாவை ஒரு தெரிவுக் குழுவுக்கு அனுப்ப நான் தயாராக இல்லை, இன்னும் சொல்லப்போனால் அதை எதிர்க்கிறேன்; ஏனென்றால் ஒரு தெரிவுக் குழு கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு இந்த மசோதா சர்ச்சைக்கிடமானதோ அல்லது சிக்கலானதோ அல்ல. எனினும், இந்த மசோதா தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அவை உறுப்பினர்கள் ஆர்வமாக இருந்தால் ஒரு நிபந்தனையோடு இந்தத் திருத்தத்தை ஏற்றுக் கொள்ள எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை; அந்த நிபந்தனை இதுதான்: இம்மசோதாவின் இரண்டாவது வாசிப்பை நான் மேற்கொள்ளும் விதத்தில் இந்தக் கூட்டத் தொடர் முடிவதற்கு முன்னதாக தெரிவுக்குழு தனது பரிசீலனையை முடித்து அவைக்குத் திருப்பி அனுப்ப இணங்க வேண்டும். ஐயா, என் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

            திரு.தலைவர்: தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

            “மைக்கா சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்யக்கூடிய ஒரு நிதியை அமைக்கக் கோரும் இந்த மசோதா பசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.”

            திரு.அகமது .எச்.ஜாபர் (பம்பாய் தென்பிராந்தியம்: முகமதியர் கிராமப் பகுதி): ஐயா, நான் பின்கண்ட திருத்தத்தை முன் மொழிகிறேன்:

            “பின்கண்டவர்கள் அடங்கிய ஒரு தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட வேண்டும்: மாண்புமிகு திரு.அசோகா ராய், மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், செல்வி மணிபென் காரா, திரு.எஸ்.சி. ஜோஷி, பாபுராம் நாராயண் சிங், திரு.ஆர்.வெங்கடசுப்பா ரெட்டியார், திரு.கௌரி சங்கர் சரண்சிங், திரு.வ.கருணாகர மேனன், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, திரு.ஜியோபர்ரி டபிள்யூ டைசன், திரு.மதாந்தாரி சிங், டாக்டர் சர் ஜியா வுத்தீன் அகமது நௌமான் மற்றும் திருத்தத்தை முன்மொழிபவர்; தெரிவுக்குழு பரிசீலனையை முடித்துத் தனது அறிக்கையை 1946 ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்; குழுவின் கூட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினர்கள் பங்குகொள்வது அவசியம்.”

          திரு.தலைவர்: 15ஆம் தேதி என்பது சரிதானா?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இல்லை, இதனால் மிகவும் காலதாமதமாகும்.

*           *           *

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ராஜபுதனத்தை நான் கைவிட்டு விடவில்லை. அதற்கு ஒரு தனிக் குழு அமைக்கப்படும்.

            திவான் சமன்லால்: ஒரு தனிக்குழு அமைக்கப்படும் என்று மாண்புமிகு என்னுடைய நண்பர் கூறியதாகச் சொல்லுகிறார். அப்படி அவர் கூறியது எதுவும் என் காதுகளில் விழவில்லை. “வேறு ஏதேனும் வழிகளில் இது செய்யப்படும்” என்று அவர் கூறியதுதான் என் செவிகளில் விழுந்தது. “ஏதேனும் ஒரு தனிக்குழு அமைக்கப்படும்” என்று இப்போது கூறுகிறார். மிகவும் மகிழ்ச்சி. எது எப்படி இருப்பினும் இந்த மசோதாவைப் பொறுத்தவரையில் ராஜபுதனம் விடப்பட்டு உள்ளது.”

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த நிதியின் உதவியோடு அங்கு சேமநல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

            திவான் சமன்லால்: சென்னையிலிருந்தும் பீகாரிலிருந்தும் பணம் எடுத்து வந்து ராஜபுதனத் தொழிலாளர்களுக்கு உதவப் போகிறீர்களா?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தொழிலாளர்களின் சேமநல நடவடிக்கைகள் சம்பந்தமாக வேறு ஏதேனும் அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கிறோம். இதற்காகும் செலவு இந்த நிதியிலிருந்து சரிக்கட்டப்படும்.

*           *           *

            1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த மசோதாவுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு நீண்ட பதில் எதுவும் அளிக்கும் உத்தேசம் எனக்கில்லை. மூன்று பேச்சாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு மிகச் சுருக்கமாகவே பதிலளிக்க விரும்புகிறேன். என் நண்பர் திரு.டைசன் எழுப்பிய பிரச்சினைக்கு முதலில் வருகிறேன். என் மசோதாவை ஆதரித்து நான் நிகழ்த்திய உரையில் உபரி மைக்கா கையிருப்பு பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. வேண்டுமென்றேதான் இந்த விஷயங்களை என் உரையில் பிரஸ்தாபிக்கவில்லை; ஏனென்றால் இந்த விஷயங்களை என்னுடைய நண்பர் திரு.டைசன் எழுப்புவார் என்பதும், அவற்றுக்கு நான் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். பெரும்பாலும் அவையின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்தேன்.

            ஐயா, இப்பொழுது நிலைமை இதுதான்: பேராசிரியர் அதர்கார் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் சமூக சேமநல நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிலாளர் நலத்துறையும் இந்திய அரசாங்கமும் முடிவு செய்துள்ள போதிலும் உண்மையில் பேராசிரியர் அதர்காரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே தொழிலாளர் இலாகா இந்த முடிவை எடுத்து விட்டது என்பதை இங்கு குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். மைக்கா தொழில்துறை குறித்து நீதிபதி ரியூபன் அளித்துள்ள தமது அறிக்கையில் தொழிலாளர் நலத் துறையின் இந்த முடிவை ஆதரித்து வரவேற்றிருக்கிறார் என்பது பற்றி நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

            உண்மையில், மைக்கா உற்பத்தி மீது அல்லது ஏற்றுமதி மீது பொதுவரி விதிக்கப்பட வேண்டும் என்றும், அந்த வரியில் 12-ல் 5 பங்கு மைக்கா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவரே பரிந்துரைத்துள்ளார். எனவே, இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் நாங்கள் திரு.ரியூபன் அறிக்கையிலிருந்து விலகிச் செல்லவில்லை என்பது தெள்ளத் தெளிவு. நாங்கள் செய்திருப்பதெல்லாம் திரு.ரியூபன் பரிந்துரைத்திருப்பது போன்று ஒரே வரி விதித்து அதனைப் பல்வேறு காரியங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்குப் பதில் சேமநலத் துறைக்கென்று ஒரு தனி நிதியும், தொழில் துறையின் சில குறிப்பிட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்காக ஒரு தனி நிதியும் ஏற்படுத்துவது அவசியம் என்று நாங்கள் நினைத்ததுதான். சேமநல நிதி ஒரு தனி அமைப்பாலும் இதர நோக்கங்களுக்கான நிதி வேறொரு தனி அமைப்பாலும் நிர்வகிக்கப்பட வேண்டியிருக்கம் என்பதே நாங்கள் இந்த முடிவு எடுப்பதற்கு காரணம். ஆக, இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவு திரு.ரியூபனின் அறிக்கைக்கு முற்றிலும் ஏற்புடையதாக இருப்பதை திரு.டைசன் காணமுடியும்.

            கூடுதல் வரிவிதிப்பைப் பொறுத்தவரையில், ஆரம்ப கட்டத்தில் இந்த வரியை மிகக் குறைந்த அளவிலேயே நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம் என்பதை மதிப்பிற்குரிய நண்பர் புரிந்து கொள்வார். ரியூபன் அறிக்கையின் மதிப்பீட்டின்படி இது 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது…

            திரு.ஜியோபரே டபிள்யூ டைசன்: தொழிலாளர் நலத் துறைக்கா அல்லது பொதுவாகவா?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பொதுவாக சேம நல நோக்கங்களையும் இதர நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்குப் போதுமான வருவாய் இந்த வரியின் மூலம் கிட்டுமா என்பது பிந்தைய கட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.

            திவான் சமன்லால்: மாண்புமிகு நண்பர் எவ்வளவு எதிர்பார்க்கிறார்?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: சற்றுப் பொறுங்கள், இந்த விஷயத்தைப் பின்னால் வருகிறேன். உபரி கையிருப்பைப் பொறுத்தவரையில், மன்னர்பிரான் அரசாங்கத்திடமும் அமெரிக்காவிடமும் தேங்கிக் கிடக்கும் மிகையான மைக்கா கையிருப்பைப் ‘பைசல்” செய்து சம்பந்தமாக இந்திய அரசாங்கம் மன்னர்பிரான் சர்க்காருடன் நீண்டகாலமாகவே பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உபரி கையிருப்பை ‘பைசல்’ செய்வதால் மைக்கா தொழிலுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படாத ஓர் உடன்பாட்டுக்கு நாங்கள் வந்துள்ளோம் என்பதைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன; மன்னர்பிரான் சர்க்காருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடு குறித்து தொழில்துறைக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் பத்திரிக்கைக் குறிப்பு ஒரு சில தினங்களில் வெளியிடப்படும். மைக்கா தொழில் துறையின் முழு ஆதரவையும் இது பெற்றுள்ளது என்று கூற முடியும்.

இந்த மசோதாவைப் பொறுத்தவரையில் மைக்காத் தொழில் துறையின் பரிபூரண இணக்கத்துடனேயே இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 1944 ஏப்ரல் 29 ஆம் தேதி கொடர்மாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில்தான் முதன் முறையாக இந்தப் பிரச்சினையை எழுப்பினேன்; அந்த மாநாட்டிற்கு நான்தான் தலைமை வகித்தேன்; மைக்காத் தொழில்துறையின் பிரதிநிதிகள் பலரும் அதில் பங்கெடுத்துக் கொண்டனர். ஒரு சேமநல நிதி அமைக்கும் என் யோசனைக்கு மொத்தத்தில் தொழில் துறையினரின் ஆதரவு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். சுரங்கத் தொழில் சேமநல ஆணையர் தலைமையில் 1945 நவம்பர் 9 ஆம் தேதி தான்பாத்தில் நடைபெற்ற மாநாட்டில் இந்த விஷயம் திரும்பவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அச்சமயத்திலும் மைக்கா உற்பத்தியாளர்கள் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டனர். இறுதியாக, தான்பாத்திலேயே 1945 டிசம்பர் 19 ஆம் தேதி தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் தலைமையில் மூன்றாவது மாநாடு நடைபெற்றது. அப்போது அரசாங்கத்துக்கும் மைக்கா சுரங்க அதிகாரிகளுக்கும் இடையே இறுதி உடன்பாடு ஏற்பட்டது. மைக்கா தொழில்துறையின் மீது ஒரு வரிவிதிக்கும் எங்கள் யோசனை மைக்கா உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் விஷயத்தில் அந்தத் தொழில் துறையினரை எவ்வகையிலும் தன்னம்பிக்கை இழக்கச் செய்துவிடவில்லை என்றே தோன்றுகிறது என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மாறாக, கடந்த சில மாதங்களில் மட்டும் எனக்குத் தெரிந்தவரை மூன்று புதிய மைக்கா உற்பத்தி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ரூ.5 லட்சத்தை அங்கீகாரம் பெற்ற மூலதனமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த மைகான்டிக் அண்டு மைக்கா புராடெக்ட்ஸ் லிமிடெட்டை இதற்கு உதாரணமாக கூறலாம். மற்றொன்று கல்கத்தாவைச் சேர்ந்த சரஸ்வதி மைக்கா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பது; இது ரூ. 5 லட்சத்தை அங்கீகாரம் பெற்ற மூலதனமாகக் கொண்டது. இதுவன்றி, மைக்கா வெட்டியெடுப்பதற்கும், ஒரு மைக்கா தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கும் கிறிஸ்டியன் மைனிங் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்னும் நிறுவனம் உரிமம் கோரி விண்ணப்பித்திருப்பதையும் நான் அறிவேன். இதிலிருந்து வரிவிதிப்பை மைக்கா சுரங்கத் தொழில் துறையினர் ஒரு பாதகமான நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், இந்த வரிவிதிப்பின் சுமையை மைக்கா சுரங்கத் தொழிலால் தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் கருதுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

என்னுடைய நண்பர் திவான் சமன்லால் எழுப்பியுள்ள பிரச்சினைகளைப் பொறுத்தவரையில், ஆரம்ப கட்டத்தில் அவர் கேட்டிருந்த அறிக்கையின் பிரதியை அவருக்கு வழங்க இயலாமற் போனதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதனை அறவே மறந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் இதனால் இந்த விஷயத்தைக் கையாள்வதில் அவருக்கு எத்தகைய சிரமமும் ஏற்படவில்லை என்றே கருதுகிறேன். ஒருக்கால் இந்த அறிக்கை அவருக்குக் கிடைத்திருந்தால் அவரது சொற்பொழிவு இரண்டு மடங்கு நீண்டிருக்கும், அவ்வளவுதான்.

இந்த வரியால் எவ்வளவு வருவாய் கிட்டும் எனறு அவர் என்னிடம் கேட்டிருந்த கேள்வியைப் பொறுத்தவரையில், இது சம்பந்தமாக எத்தகைய திட்டவட்டமான புள்ளிவிவரத்தையும் தருவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது; இதற்கான காரணம் தெள்ளத் தெளிவானது. மைக்கா உற்பத்தி ஒரு நிலையான முறையில் இருந்ததில்லை. எடுத்துக்காட்டாக, 1934 முதல் 1944 வரையிலான புள்ளி விவரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1934ல் உற்பத்தி செய்யப்பட்ட மைக்காவின் மதிப்பு 6,30,525 ரூபாயாக இருந்தது; 1944ல் அது 2,73,01,458 ரூபாயை எட்டிற்று. இதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தத் தொகை வெவ்வேறு ஆண்டுகளுக்கு வெவ்வேறு விதமாக இருந்தது. எனவே, எந்த ஒரு குறிப்பிட்ட புள்ளிவிவரத்தையும் அவைக்கு அளிப்பதில் பயனில்லை. யுத்தப் பிற்காலத்தில் இந்தத் தொழில்துறை தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு ஓரளவு அவகாசம் அளிப்பது அவசியம். எனினும் 1944 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும்போது, வரிவிதிப்பு சற்றேறக்குறைய ரூ.5 லட்சமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடலாம். இது ஒரு பெரிய தொகை அல்ல என்பது கண்கூடு. எனினும் தனிப்பட்ட முறையில் கூறுவது என்றால் ஒரு கோட்பாட்டை நிலைநாட்டுவதற்காகப் போராடி வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். நிதி போதுமானது அல்ல என்று தெரியவந்தால் இத்துறைக்குப் பொறுப்பாக இருக்கக்கூடிய எவரும் முன்வந்து வரி விகிதத்தை அதிகரிக்கலாம்; வேறு வகையில் சாத்தியமில்லாத சமூக நல நடவடிக்கைகளை இதன் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

என்னுடைய நண்பர் மைக்கா கொள்முதல் குழுவைப் பற்றிக் குறிப்பிட்டார். தற்போது நாம் பரிசீலித்துக் கொண்டிருக்கும் மசோதாவுடன் சம்பந்தப்பட்ட விஷயமல்ல இது. எனவே, மைக்கா கொள்முதல் குழுவின் நடவடிக்கைகளினால் எழக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி எதுவும் கூறும் உத்தேசம் எனக்கு இல்லை. எனினும் எனக்குத் தெரிந்தவரை ஒரு விஷயத்தை நான் நண்பருக்குத் தெரிவிக்க முடியும். அது இதுதான்: இந்த நாட்டில் மைக்காத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலதிபர்கள் இது விஷயத்தில் எத்தகைய தீங்கும் விளைவிக்காதது மட்டுமல்ல, சராசரிக்கும் அதிகமான லாபங்களையும் ஈட்டியுள்ளனர் என்றே கூற வேண்டும்.

சுரங்கங்கள் சட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து என்னுடைய நண்பர் திவான் சமன்லால் நீண்டதொரு சொற்பொழிவாற்றினார். சுரங்கப் பணிகளில் குழந்தைகளும் பெண்களும் ஈடுபடுத்தப்படுவது பற்றி அவர் குறை கூறினார். ஏற்கெனவே நான் குறிப்பிட்டது போல், இந்த விவரங்களை எல்லாம் நான் நன்கறிவேன். மைக்கா சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலைமை சம்பந்தமாக திரு.அதர்கார் அளித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் எல்லாக் குறைபாடுகளையும் நீக்குவதற்கு தொழிலாளர் நலத்துறை சட்டங்கள் இயற்ற ஏற்பாடு செய்து வருகிறது. அரசாங்கத்துக்கு அவகாசம் இருக்குமானால், இந்தத் தீங்குகளை எல்லாம் அகற்றுவதற்கு இந்தக் கூட்டத் தொடரிலேயே ஒரு மசோதாவைக் கொண்டு வருவது சாத்தியம் என்று கருதுகிறேன்.

என்னுடைய நண்பர் திரு.ராம் நாராயண் சிங் எழுப்பிய பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இது மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ற ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டார். மைக்கா தொழில்துறை இருக்கிறது. அதில் புரையோடிப் போயுள்ள பல தீமைகளும் இருக்கின்றன, அரசாங்கமும் இருக்கிறது, ஆனால் இது சம்பந்தமாக எத்தகைய நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். ஆனால் ஒரு விஷயத்தை அவர் சொல்ல மறந்துவிட்டார். அதாவது இந்த அவையில் அவர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்பதைக் கூற மறந்துவிட்டார். இந்த விஷயத்தில் அவர் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தி, அரசாங்கத்தினதும் தொழிலதிபர்களதும் உத்வேகத்தைக் கிளர்த்திவிட்டு, அவர்களைத் தூண்டி ஊக்குவித்திருந்தால், அவர் சுட்டிக்காட்டிய தாமதம் நேர்ந்திருக்காது என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. எனினும் எதுவும் நடைபெறாதிருப்பதைவிடத் தாமதமானாலும் காரியம் நடைபெறுவது நல்லதே என்பதை அவர் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன்.

நிதியை நிர்வகிக்கும் விஷயத்தைப் பொறுத்த வரையில் இந்தப் பொறுப்பை மாகாண அரசாங்கங்களிடம் விட்டுவிடலாம் என்று அவர் கூறினார் என நினைக்கிறேன். ஆனால் இந்தக் கோட்பாட்டை என்னால் ஏற்க இயலாது என்று கூறுவதற்கு வருந்துகிறேன். இது மத்திய அரசாங்கத்தின் சட்டம். இதற்கு மத்திய அரசாங்கம் பொறுப்பேற்பதே நியாயம். இந்த நிதி மத்திய சர்க்கார் சட்டத்தின் மூலம் திரட்டப்படுகிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த நிதி திரட்டப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் இந்திய அரசாங்கம் இந்த நிதி முழுவதையும் மாகாண அரசாங்கங்களிடம் ஒப்படைப்பது நியாயமென எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் மாகாண அரசாங்கங்கள் இந்த நிதியை மாகாணத்தின் பொதுவருவாய் இனத்தில் சேர்த்து மனம் போனபோக்கில் என்றில்லாவிட்டாலும் அவற்றின் விருப்பம் போல் செலவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நிதிக்குப் பொறுப்பு மத்திய அரசாங்கமாதலால், நிதி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் திரட்டப்படுவதால், நிதி மத்திய அரசாங்கத்தின் அடைக்கலப் பொருளாதலால், அதனை நிர்வகிப்பது அதன் மறுக்க முடியாத கடமையாதலால், எந்த வகையில் பார்த்தாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய அரசாங்கத்திடம் இருப்பது உசிதமானது மட்டுமல்ல அவசியமானதும்கூட என்பது எனது அசைக்க, மறுக்க முடியாத கருத்து.

இவ்வாறிருக்கும்போது, நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை அநேகமாக என் நண்பர் படித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். எனவே, இந்த நிதியைப் பற்றி அவருக்கு சில விவரங்களைக் கூற ஆசைப்படுகிறேன்; ஏனென்றால் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் சேமநல நிதியை முன்மாதிரியாக வைத்துத்தான் இந்த நிதி நிர்வகிக்கப்படவிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் சேமநல நிதியைப் பொறுத்தவரையில், அதன் நிர்வாகம் ஒரே ஆணையர் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது; அவர் பொதுவாக மாகாண அரசாங்கம் ஒதுக்கித்தரும் ஒரு மாகாண அதிகாரியாக இருப்பார். இன்னும் சொல்லப்போனால், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் சேமநல நிதியை தற்போது நிர்வகித்து வருபவர் பீகார் அரசாங்கம் ஒதுக்கித் தந்த ஓர்அதிகாரியே ஆவார்; இதேபோல் மைக்கா சுரங்கத் தொழிலாளர்களின் சேமநல நிதியை நிர்வகிப்பதற்கும் ஓர் அதிகாரியை ஒதுக்கித் தருமாறு பீகார் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாக இருக்கிறோம்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், குழுவின் இயைபு பீகார் மற்றும் சென்னை மைக்காத் தொழிலைச் சேர்ந்த, ஸ்தல நிலைமை அறிந்த ஸ்தல பிரதிநிதிகளைக் கொண்டதாக இருப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. தவிரவும், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் சேமநல நிதியைப் பொறுத்தவரையில் அதன் ஆலோசனைக் குழுவுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்புமாறு மாகாண அரசாங்கங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மைக்கா ஆலோசனைக் குழு விஷயத்திலும் இதே நடைமுறையே பின்பற்றப்படும். நிதியின் விதிகளில் இதற்கு நாங்கள் வகை செய்வோம். இந்தக் குழுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடுகின்றன; குறிப்பிட்டதொரு நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டு குழுவின் ஆலோசனை நாடப்படுகிறது. உற்பத்தியாளர்கள், சுரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்கள் போன்றோரின் பிரதிநிதிகளும், மாகாண அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம்பெறுகின்றனர். வருடாந்தர வரவு செலவுத் திட்டம் ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்படுகிறது. அவர்களது ஆலோசனை பெறப்படுகிறது. அவர்களது ஆலோசனையை நாடிப் பெற்ற பிறகு தான் இந்த நிதிகளிலிருந்து பல்வேறு காரியங்களுக்குப் பணம் செலவிடப்படுகிறது.

மத்திய அரசாங்கத்தின் எதேச்சாதிகாரம் எதையும் இந்த நிதி நிர்வாகத்தில் காணமுடியாது என்பதை திரு.ராம் நாராயண் சிங் தெரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். மிகப் பெருமளவுக்கு அதிகாரம் பரவலாக்கப்படுவதையும், நிதியின் நிர்வாகத்தில் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாகாண அரசாங்கத்துக்கிடையே மிகப் பரந்த அளவில் ஒத்துழைப்பு நிலவுவதையும் காணலாம். ஐயா, இந்த மசோதா குறித்து நடைபெற்ற விவாதங்களின் போது எழுப்பப்பட்ட விஷயங்களில் நான் பதிலளிக்காத விஷயம் எதுவும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனவே இதற்கு மேல் நான் எதுவும் கூற வேண்டியதில்லை என்று கருதுகிறேன்.

திரு.தலைவர்: ஆக, தீர்மானம் இதுதான்:

“பின்கண்டவர்கள் அடங்கிய ஒரு தெரிவுக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட வேண்டும்: மாண்புமிகு திரு.அசோக ராய், மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் செல்வி மணிபென்காரா, திரு.எஸ்.சி.ஜோஷி, பாபுராம் நாராயண் சிங், திரு.ஆர்.வெங்கடசுப்பா ரெட்டியார், திரு.கௌரி சங்கர் சரண்சிங், திரு.ஏ.கருணாகர மேனன், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, திரு.ஜியோபர்ரி டபிள்யூ டைசன், திரு.மதந்தாரி சிங், டாக்டர் சர் ஜியாவுத்தீன் அகமது, கான் பகதூர் ஹபிக்ஸ் என்.கஜான்பருல்லா, திரு.முகமது நௌமான் மற்றும் திருத்தத்தை முன்மொழிபவர்; தெரிவுக்குழு பரிசீலனையை முடித்துத் தனது அறிக்கையை 1946 ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்; குழுவின் கூட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினர்கள் பங்கு கொள்வது அவசியம்.”

            தீர்மானம் ஏற்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It