Ambedkar

அரசியல் அமைப்புக் குழுவின் ஒவ்வொரு வளர் தருணத்திலும் ‘அடிப்படை உரிமைகள்' என்ன என்பதையும், அவற்றிற்கான அவசியத்தையும் நான் வலியுறுத்தியுள்ளேன். தேர்தல் என்பது எவ்வாறு நடக்கிறது; அரசின் நிர்பந்தமின்றி வெளிப்படையாக நடக்கின்றதா என்று அறிந்து கொள்வதை ‘ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமையாக' நான் வரையறை செய்துள்ளேன். ஆனால், நாட்டில் நடக்கும் தேர்தலுக்கும் ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும், இதை தனிமனிதனின் அடிப்படை உரிமையாகக் கொள்ளக்கூடாது எனவும் இங்கு வாதிடப்படுகிறது.

‘வாக்குரிமை' ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமையாக உள்ளபோது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை அடிப்படை உரிமைகள் என்ற பிரிவில் வகைப்படுத்துவதே சரியானதாக இருக்கும்.

ஒரு மனிதன் ஏதோ ஒரு காரணத்திற்காக, தன்னுடைய வாக்குரிமையை இழக்கிறான் என்ற நிலை ஒரு பகுதியில் அல்லது மாநிலத்தில் ஏற்படுமானால், அங்கு அந்த மனிதனின் "அடிப்படை உரிமைகள்' மறுக்கப்படுவதாக நமது அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது.

தேர்தல் பற்றிய கண்காணிப்பு, வரையறை செய்தல், நெறிப்படுத்துதல், கட்டுப்பாடு விதித்தல் ஆகிய அதிகாரங்களை மய்ய அரசே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தேர்தல் காலங்களில், அந்த அதிகாரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்து விடுகிறது. இந்த தேர்தல் ஆணையம் நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டுமா? அல்லது தற்காலிக அமைப்பாக இருக்க வேண்டுமா? என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது.

நான் சொல்கிறேன்: ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவை அய்ந்து ஆண்டுகள் நிறைவடையும் முன்னரே நீக்கப்படலாம். அந்த நேரத்தில் மீண்டும் புதிதாக வாக்காளர் சேர்க்கை, தேர்தல் அறிவிப்பு, கண்காணிப்பு போன்றவற்றின் அவசியம் கண்டிப்பாக ஏற்படும். இது இன்றைக்கு உங்களுக்கு சரியென படாமல் இருக்கலாம். ஆனால், பின் வரும் காலங்களில் இத்தகைய சூழல் வெகு சாதாரணமாக உருவாகும்.

எனவே, தேர்தல் ஆணையர் என்பவர் ஒரு நிரந்தர அமைப்பை உடையவராக இருக்க வேண்டியது மிகுந்த அவசியமாகிறது. இதைத் தவிர, மேலும் சிறப்பு அலுவலர்கள் தேவைப்பட்டால், தேர்தல் காலங்களில் நமது குடியரசுத் தலைவரின் ஆலோசனையின் பேரில், சம்மந்தப்பட்ட மாநில அரசின் அலுவலர்களையும், உயர் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

நமது நாட்டின் மக்கள் ஒரே தன்மை வாய்ந்தவர்களாக நாடு முழுவதும் இல்லை. மக்கள் மனதில் மாநிலம் சார்ந்த உணர்வு பெரும்பாலும் மேலோங்கியுள்ளது. சில மாநிலங்களில், பல மொழி பேசுபவர்கள், அருகில் உள்ள மாநிலத்தில் உள்ளவர்கள் என பல பிரிவினர் சேர்ந்து வாழ்கின்றனர். இத்தகைய மக்களை தேர்தல் ஆணையம் என்னும் மத்திய அமைப்பு தன்னுடைய கட்டுப் பாட்டில் முழுமையாகக் கொண்டுவருவது என்பது நடைமுறைக்குச் சற்றும் சாத்தியமற்ற ஒன்றாகும். இங்கு, தேர்தல் ஆணையம் என்பது மத்திய அமைப்பாக இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இணை தேர்தல் ஆணையங்கள்' உருவாக்கப்பட்டு, இவ்வமைப்புகள் மய்ய அமைப்பின் தொடர்பிலும், அதனுடைய கட்டுப்பாட்டிலும் செயல்பட வேண்டும்.

மிகுந்த பொறுப்பும், கடமையும், தடங்கலற்ற அதிகாரமும் கொண்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் அமைய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தலைவர், நமது நாட்டின் உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு உள்ளது போல மிகுந்த சுயேச்சையான அதிகாரத்தையும் தனக்குக் கீழ் அலுவலர்களையும் பெற்றிருத்தல் மிகுந்த அவசியம். இந்நிலை ஏற்பட்டால்தான், தேர்தல் ஆணையம், ஆளும் மய்ய மாநில அரசுகளின் அதிகார குறுக்கீடு இன்றி தன்னுடைய கடமையை ற்ற முடியும்.

அதே நேரத்தில், இந்தப் பதவிக்கு, ஒரு முட்டாளோ, குரூர சிந்தனை கொண்டவரோ, சனநாயகத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டவரோ வருவாரேயானால் அங்கு தனிமனிதனின் அடிப்படை உரிமை கேலிக்குரியதாகிவிடும். இதைத் தவிர்க்க, நமது நாட்டின் குடியரசுத் தலைவர், சில உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அந்தக் குழு, தேர்தல் ஆணையத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்களாக சிலரின் பெயர்களைப் பரிந்துரை செய்ய வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் மீண்டும் ஒரு குழுவிடம் தரப்பட்டு அதிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு இறுதியாக தரப்பட்ட தொகுதியில் இருந்து ஒருவரை நமது குடியரசுத் தலைவர் முடிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையில் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுவதால், தவறுக்கு இடமின்றி மிகச் சரியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அங்கீகாரம் பெற வேண்டும். இதனால் மிக உயர்ந்த பதவிக்குத் தகுதியானவர் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

(‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13 பக்கம் : 722) 

Pin It