இந்து சமூக அமைப்பு சகோதரத்துவத்தை ஏற்கிறதா? கிறித்துவர்களையும், முஸ்லிம்களையும் போலவே இந்துக்களும் மனிதர்கள் கடவுளால் படைக்கப்பட்டனர் என்று நம்புகிறார்கள். கிறித்துவர்களும், முஸ்லிம்களும் இதை முழு உண்மையாக ஏற்கிறார்கள். இந்துக்கள் இதை உண்மையின் ஒரு பகுதியாகக் கருதுகிறார்கள். முழு உண்மையில் இரு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி மனிதர்கள் கடவுளால் படைக்கப்பட்டனர் என்று கூறுவது. இரண்டாவது பகுதி கடவுள் தன் தெய்வீக உடம்பின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு மனித இனங்களைப் படைத்தார் என்பது. இந்துக்கள் இரண்டாம் பகுதியை முதற்பகுதியை விட முக்கியமானதென்றும், அடிப்படையானதென்றும் கருதுகின்றனர்.

இறைவன் தன் உடம்பின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்னும் கோட்பாட்டை இந்து சமூக அமைப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது. தூய பவுல் (குt. கச்தடூ) அல்லது யாத்திரிகத் தந்தையர் கூறிய கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. பிராமணன் சத்திரியனின் சகோதரனாக மாட்டான். காரணம், பிராமணன் கடவுளின் வாயிலிருந்தும், சத்திரியன் தோளிலிருந்தும் படைக்கப்பட்டுள்ளனர். சத்திரியன் வைசியனுக்குச் சகோதரனாக முடியாது. காரணம், சத்திரியன் தோளிலிருந்தும் வைசியன் தொடையிலிருந்தும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு வர்க்கத்தினர் இன்னொரு வர்க்கத்தினரின் சகோதரனாக முடியாது. அவ்வாறே ஒரு வர்க்கத்தினன் இன்னொரு வர்க்கத்தினரின் பாதுகாவலனாகவும் இருக்க முடியாது.

தெய்வீக உடம்பின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு வர்க்கத்தினர் படைக்கப்பட்டுள்ளனர் என்னும் கோட்பாட்டின் விளைவாக, அந்தந்த வர்க்கத்தினர் தனித்தனியாகவும் தனித்தன்மையுடனும் இருக்க வேண்டுமென்பதுதான் கடவுளின் விருப்பம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்த நம்பிக்கைதான் ஒரு வர்ணத்தினர் சக இந்துக்களிலிருந்து தனித் தனியாகவும் வேறுபட்டு வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. உபநயனம் அல்லது உடம்பில் பூணூல் அணிவதுபற்றிய மநு ஸ்மிருதியின் விதிகளை ஒப்பு நோக்குக:

2:36 “கருத்தரித்த எட்டாம் ஆண்டில் பிராமணனுக்கும், பதினோராம் ஆண்டில் சத்ரியருக்கும் பனிரெண்டாம் ஆண்டில் வைசியருக்கும் உபநயனம் செய்விக்கப் பெறுதல் வேண்டும்.''

2:41 “வர்ண ஒழுங்கின்படி, மேலுடை முறையே கருப்புமான், புள்ளிமான், வெள்ளாட்டுக் கிடாவின் தோலாலும், கீழாடை சணல், நிலமலர்ச் செடித் தண்டு அல்லது சணல்நாரினாலும் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.''

2:42 “பிராமணனின் அரைக்கச்சை மூஞ்சாப்புல்லின் மூன்று இழைகளாலும், சத்திரியனின் அரைச்கச்சை வில்லின் நாண் இழைகளாலும் வைசியனின் அரைக்கச்சை சணல் நார் போன்ற இழைகளாலும் வைசியனின் அரைக்கச்சை சணல்நார் இழைகளாலும் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.''

2:43 “மூஞ்சாப் புல் கிடைக்கவில்லை என்றால், குசா, அஸ்மாந்தகா, பால்பகா இழைகளால் மூன்று முடிச்சு அல்லது குடும்ப வழக்கத்திற்கேற்ப அய்ந்து முடிச்சுகள் போட வேண்டும்.''

2:44 “பிராமணனின் பூணூல் பருத்தி இழையால் வலப்புறம் முறுக்கி முப்புரியாக அமைதல் வேண்டும். சத்திரியனுக்குச் சணல் நார் இழைகளும், வைசியனுக்கு வெள்ளாட்டு ரோம இழைகளும் பயன்படுத்தப் பெறுதல் வேண்டும்.''

2:45 “புனித சட்டத்தின்படி, பிராமணன் வில்வம் அல்லது பலாமரக்கொம்பையும், சத்திரியன் ஆல் அல்லது கருங்காலி மரக் கொம்பையும், வைசியன் பில்லு அல்லது அத்தி மரக் கொம்பையும் ஏந்திச் செல்லுதல் வேண்டும்.''

2:46 “பிராமணன் தலை முடிவரை நீண்ட கொம்பையும், சத்திரியன் தன் நெற்றிமட்டக் கம்பையும் வைசியன் மூக்குவரை நீண்ட கொம்பையும் ஏந்துதல் வேண்டும்.''

2:48 “விரும்பிய கொம்பினை ஏந்தி சூரியனை வழிபட்டு, அக்னி வலம் வந்த பின் வலக்கரம் நீட்டி மாணவன் யாசித்தல் வேண்டும்.''

2:49. “பவதி (வீட்டுத் தலைவி) என்னும் சொல்லைத் தொடங்கி (பவதி பிஷாந்தேகி என்று) பிராமணனும், சத்திரியனும் அச்சொல்லை (பிஷாம்பவதி தேகி என்று) நடுவில் இட்டும், வைசியன் அச்சொல்லை (தேகி பிஷாம் பவதி என்று) இறுதியில் வைத்தும் யாசித்தல் முறையாகும்.''

இவற்றைப் படிப்போர் இத்தகைய வேறுபாடுகள் இருப்பதற்கான காரணங்களை அறிய முயலலாம். இவை வேத பாராயணத்திற்குரிய பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பவருக்குரிய விதிகளாகும். ஏனிந்த வேறுபாடுகள்? பிராமணப் பையனின் கற்கும் வயது சத்ரியனைவிட, வைசியனை விட ஏன் வேறுபட வேண்டும்? – தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 97

Pin It