மத்திய ஆஸ்திரேலியாவில் உப்புக்கல் சேகரங்களில் நூறு கோடி ஆண்டுகள் பழமையான நுண்ணுயிரிகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. சாதகமான சூழ்நிலையில் இவை விழித்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இக்கற்கள் மனிதத் தலைமுடியைக் காட்டிலும் மிக நுண்ணிய காற்று அறைகளில் வசிக்கின்றன. நூறு கோடி ஆண்டுகளுக்கு முன் இன்று உள்ளதை விட முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை காணப்பட்ட பூமியில் உப்பு நிறைந்த கடல் மற்றும் தடாகப் பகுதிகளில் அக்காலத்தில் இவை வாழ்ந்து வந்துள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் நுண்ணுயிரிகளுடன் கூடிய உப்புக்கல் சேகரங்களில் இதுவே மிகப் பழமையானது. ஆஸ்திரேலியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட இவற்றில் ஒளி நுண்ணியல் (light microscopy) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஆய்வுகள் இந்தக் கற்கள் உடையாமல் அவற்றுக்குச் சேதம் ஏற்படாமல் நடத்தப்பட்டன.
இந்த நுண்ணுயிரிகள் உயிருடன் உள்ளனவா என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்யவில்லை. ஆனால், முன்பு இதே போன்ற உப்புக்கற்களில் உறங்கிக் கொண்டிருந்த சில நுண்ணுயிரிகளை வேறு சில விஞ்ஞானிகள் உயிர்ப்பித்ததாகச் செய்திகள் வந்தன. அவ்வாறென்றால் இந்த நுண்ணுயிரிகளையும் நீண்ட உறக்கத்தில் இருந்து எழுப்பிவிட வாய்ப்பு உண்டு.
இருபத்தைந்து கோடி ஆண்டுகளுக்கு முன் பெர்மியன் காலத்தில் வாழ்ந்த நுண்ணுயிரிகளை விஞ்ஞானிகள் முன்பு கண்டுபிடித்திருந்தனர். ஆனால் அன்று படிகங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தி ஆய்வுகள் நடந்தன. உறிஞ்சு குழாயைப் பயன்படுத்தி உப்புப் படிகங்களுக்குள் இருந்த காற்றறைகளில் வாழ்ந்து வந்த நுண்ணுயிரிகளை ஆய்வாளர்கள் சேகரித்தனர். ஆஸ்திரேலியாவில் பிரவுன் ஃபார்மேஷன் (Browne Formation) என்ற பகுதியில் இருந்தே இப்போது ஆய்வுகளுக்குத் தேவையான உப்புக்கற்களை விஞ்ஞானிகள் சேகரித்தனர். இப்பகுதிகளில் மிகப் பழமையான காலத்தைச் சேர்ந்த ஏராளமான உப்புக்கல் சேகரங்கள் உள்ளன.
ஆல்காக்கள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் இக்கற்களுக்குள் வாழ்கின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 0.5 முதல் 5 மைக்ரான் வரை அளவுள்ளவையே நுண்ணுயிரிகள். ஆனால் கற்களுக்குள் இருந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகள் எந்தப் பிரிவை, குடும்பத்தைச் சேர்ந்தவை என்று விஞ்ஞானிகளால் இதுவரை உறுதிபடக் கூற இயலவில்லை.
உப்புக்கற்களில் காணப்படும் இதுபோன்ற நுண்ணுயிரிகள் பொதுவாக மிகக் கடுமையான சூழலிலும் வாழும் திறன் பெற்றவை. சுற்றிலும் நீரற்ற நிலையில் கூட இவற்றால் தங்கள் உடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி நீண்ட காலம் வாழ முடியும். இதனால்தான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இவற்றால் சாதகமான சூழ்நிலையில் விழித்தெழ முடிகிறது.
சமீபத்தில் ஆய்வாளர்கள் 10.1 கோடி ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த பாக்டீரியாக்களுக்குப் புத்துயிர் கொடுத்தனர். இந்த ஆய்வுகள் வருங்காலத்தில் அளவற்ற வாய்ப்புகள் கொண்ட ஒன்று. செவ்வாய், பாறைக்கூட்டங்கள், மற்ற பகுதிகளில் முன்காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்களில் இதுபோன்ற தூங்கிக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகள் மறைந்திருக்கலாம்.
செவ்வாயில் இவற்றைக் கண்டுபிடிக்க அங்கு அனுப்பப்படும் ஊர்தி வாகனங்களுக்குக் கற்களைக் கண்டுபிடிக்க முடிந்தால், அந்நிய கிரக உயிரினங்களோடு தொடர்புடைய ஆய்வுகளில் அது ஒரு திருப்புமுனையாக அமையும். இது குறித்து நாசா மிகத் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இறுதியாக செவ்வாய்க்குச் சென்றிறங்கிய நாசாவின் பெர்சீவியரன்ஸ் (Perseverance) ஊர்தி நுண்ணுயிரிகள் ஆய்விற்காக அங்கிருந்து பாறைத் துண்டுகளைச் சேகரித்து வருகிறது.
ஆனால் வரலாற்றுக்காலம் முதல் உப்புக்கற்களுக்குள் சிறைபட்டிருக்கும் இத்தகைய நுண்ணுயிரிகள் விழித்துக் கொண்டு பரவ ஆரம்பித்தால் அது மனிதர்களுக்கும் மற்றவற்றிற்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சில விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். வடதுருவப் பகுதியில் தரைக்கடியில் இருந்த உறைபனிப் பாறைகளில் வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த வைரசுகள் (அல்லது வைரஸ்கள்) உள்ளன என்றும், இவை அக்காலத்தில் மிகப்பெரிய கொள்ளைநோய்கள் பரவக் காரணமாக இருந்தன என்றும் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இதைவிட கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையுடையவை இப்போது கண்டறியப்பட்டுள்ள உப்புக்கற்களில் உறங்கிக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகள் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவை பற்றிச் சரியான ஆய்வுகள் எவையும் நடத்தப்படவில்லை என்பதால், இவை ஆபத்தானவையாக மாறினால் அது பூமிக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்