‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை' - அண்ணல் அம்பேத்கர்.
18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரின் நூற்பாலைகளில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கொத்தடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர், அன்றைய பெரும் பணக்கார முதலாளிகளால். நூற்பாலை இயந்திரத்தின் கீழே, கர்ப்பிணியாய் இருந்த பெண்கள் குழந்தை பெற்ற சம்பவங்களும் நடந்த காலம் அது. பள்ளி செல்லும் குழந்தைகளும் இயந்திரத்தோடு இயந்திரமாய் மாறிப் போன அடிமை முறை வாழ்க்கைச் சூழலில், நாமெல்லாம் அடிமைகள் என்ற எண்ணத்தோடு உழைக்கும் மக்கள் வாழ்ந்த நிலை மிகவும் கொடூரமானது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணில், பண்ணைகளில் பணிபுரிந்த மக்களை பண்ணையடிமைகளாக வைத்திருக்க முற்பட்டனர் பெரும் நிலம் வைத்திருக்கும் பணக்காரர்கள்.
பண்ணையடிமைகளாக பணிபுரிய விருப்பமில்லாத நம் உழைக்கும் மக்கள் செங்கொடி இயக்கத்தின் கீழ் அணிதிரண்டு அடிமை எண்ணத்தை விட்டொழித்து, அடிமை முறைக்கு எதிராகப் போராடினர் என்பது வரலாறு.
இந்தியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கூட, ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் நிர்வாகத்தின் கீழ் அடிமையாக இருந்தன என்று சொல்கிறது வரலாறு.
இன்றைய அமெரிக்கா கூட அன்று கொலம்பஸ் வருகைக்குப் பின், இங்கிலாந்து நாட்டினர் விலைக்கு வாங்கி, கப்பலில் கொண்டு சென்று பணியமர்த்திய அடிமை மக்களால் அமெரிக்க ஐக்கிய குடியரசாக மாறியது என்பது குறிப்பிடத் தக்கது.
இன்றும் கூட டிஜிட்டல் யுகத்தில் கொத்தடிமை முறை தொடர்கிறது.
செங்கல் சூளைகளிலும், ஒரு சில நூற்பாலைகளிலும் கொத்தடிமைகளாக மக்கள் இன்றளவும் பணிபுரிந்து வருகின்றனர். சில இடங்களில் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர் என எப்போதாவது செய்தி வருவதும் உண்டு.
அடிமை முறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக, பிற மனிதர்கள் பிடித்து வைத்து அல்லது விலைக்கு வாங்கி வேலை வாங்குவதாகும். அடிமை எண்ணம் ஆழமாக வேரூன்றிய நிலையில் மனிதர்கள் அடிமை முறையை ஏற்றுக் கொள்ளப் பழக்கப்படுகிறார்கள்.
பண்ணையடிமை, கொத்தடிமை, ஆண்டான் - அடிமை என்று காலங்காலமாக ஒரு கருத்தியலை கட்டமைத்து வருகிறது ஆளும் வர்க்கம்.
யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதே அண்ணலின் கருத்து. ஒருவன் தன்னை உயர்ந்தவனாகவும், மற்றோரை தாழ்ந்தவராகவும் நினைத்துக் கொண்டால் அவன் ஒரு மன நோயாளி .
ஒவ்வொரு மனிதனின் மூளைக்குள்ளும் ஓர் எண்ணம் இருக்கிறது. அதில் பழங்காலத்திய இருட்டும், பயமும், அடிமை எண்ணமும் கூட இன்றளவும் பதுங்கி இருக்கிறது. அவ்வப்போது வெளிப்படவும் செய்கிறது.
தனியார் நிறுவன மற்றும் அரசுப் பணியாளர்களும், அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலரும் பழங்காலத்திய அடிமை எண்ணத்துடன் வாழ்ந்து வருவதை இன்றளவும் பார்க்க முடிகிறது.
உயர் அலுவலரின் ஆணைப்படி, அலுவலக நடைமுறைகளைப் பின்பற்றி வேலை செய்வது சரி. ஆனால், முதலாளி எது சொன்னாலும் சரி என்றும், கேள்விகள் எதுவும் கேட்க கூடாது என்றும், ஒரு திட்டமிட்ட பிற்போக்குத்தனமான கருத்தியலை அல்லது கட்டமைப்பை படித்த மக்களிடத்தில் கூட உருவாக்கி வைத்திருக்கின்றனர் ஆளும் வர்க்கத்தினர்.
இதுவே நவீன டிஜிட்டல் இந்தியாவின் பண்ணையடிமை, கொத்தடிமை, ஆண்டான் - அடிமை முறை ஆகும்.
இந்த 'அடிமை' எனும் எண்ணம் நம் மனதை ஆட்கொண்டு விட்டால், அது எல்லா தவறுகளையும் ஏற்றுக் கொள்ளச் செய்யும். கேள்வி எழுப்பாது. பகுத்தறிந்து நடக்காது. தான் செய்யும் தவறுகளை எதிர்த்து நியாயமான முறையில் கேள்வி எழுப்புவோரை சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி வாயில் சுடும். எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்தினால் நாடே சுடுகாடாகும் என மக்களை திசைதிருப்பும் இந்த ‘அடிமை' எண்ணம். நம் சொந்த நாட்டு மக்களையே தேசவிரோதிகள், அர்பன் நக்சல் என வசைபாடும் தன்மையது அடிமை எண்ணம்.
தொழிலாளர் நலச்சட்டங்கள் ஆளும் வர்க்கத்தால் நீர்த்துப் போகும்படியாகத் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், தொழிற்சங்கங்கள் நம் தொழிலாளர்களின் மனதில் உள்ள அடிமை எண்ணத்தைப் போக்கி, அவர்களை உழைக்கும் மக்கள் என ஓரணியில் திரட்டும் பணியை செய்து வருகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சங்கங்கள் அமைத்து, யாரும், யாருக்கும் அடிமையில்லை, சுதந்திரமாய் பணிபுரிவோம் என்ற நிலையை உருவாக்க பாடுபட்டு வருகின்றன தொழிற்சங்கங்களும், ஊழியர் சங்கங்களும்.
பழம்பெருமை பேசி பாழாய்ப் போன நம் இந்திய ஒன்றியத்தில், இன்னமும் அடிமை முறையும், அடிமை எண்ணமும் கூட பழம்பெருமையாய் பேசப்படுவது வெட்கக்கேடான ஒன்று.
எதை எடுத்தாலும் எங்கள் மனம் புண்படுகிறது என்று சொல்லும் அடிமை எண்ணம் கொண்டவர்களால், சக மனிதர்கள் கொரோனா தொற்றுநோய் காலத்தில் உணவின்றி அவர்களின் வயிறுகள் புண்பட்டபோதும், நடந்து நடந்து அவர்களின் கால்கள் புண்பட்ட போதும், புலம்பெயர்ந்த தொழிலாளியான பச்சிளங்குழந்தையின் தாய் இறந்ததை அறியாமல் பாலுக்கு அழும் குழந்தையின் வயிறு புண்பட்டதையும் ஏன் உணர முடியவில்லை . அவர்களுக்காக ஏன் பேச முடியவில்லை? ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் முறையை கேள்வி கேட்க முடியவில்லை என்றால், அதற்குக் காரணம் அவர்களின் மனதில் அண்டியிருக்கும் அழுக்கு போன்ற ‘அடிமை எண்ணமே'.
யாருக்கு யார் அடிமை?
அரசியல்வாதிக்கு ஓட்டுப் போட்ட மக்கள் அடிமையா?
ஆண்டான் - அடிமையா?
ஆணுக்குப் பெண் அடிமையா?
முதலாளிக்கு - தொழிலாளி அடிமையா?
அதிகாரிக்கு - பணியாளர் அடிமையா?
அவனே ஒரு எடுப்பு - அவனுக்கு நீ துடுப்பா? என்று கேலி பேசும் அளவுக்கு பல சித்திரங்கள் மக்களின் மனதில் இரணமாய் வரையப்பட்டிருக்கிறது.
அத்தகைய கேலி சித்திரங்களையும், அடிமை எண்ணத்தையும், ‘ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது' என்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாக்குப்படி நின்று வாழ்ந்து காட்டி, உழைக்கும் மக்களின் மனதிலிருந்து அடிமை எண்ணத்தை அழித்தொழித்து, ஆக்கப்பூர்வமான அறிவார்ந்த சமுதாயம் அமைப்போம்.
நம்மைப் போல் நம் சந்ததிகளும் எல்லா கஷ்டங்களையும் அனுசரித்துப் போகட்டும் என்று எந்த தகப்பனும், தாயும் நினைப்பதில்லை.
ஓர் அடிமைக்கு அவன் அடிமை எண்ணத்தோடு வாழ்வதை முதலில் அவனுக்குப் புரிய வை. பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
- சுதேசி தோழன்