இன்று ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார்கள். எம்.ஜி.ஆருக்குப்பின் அ.தி.மு.கவினை வழிநடத்தும் தலைவரான அவருக்கு இது மூன்றாவது தடவையாகக் கிட்டும் ஆட்சி உரிமை. இந்தத் தடவை அவர் தமிழக மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஈழத் தமிழர்களுக்கும் அவரது நியாயமான செயல்பாடுகள், மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுடன் மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறைகள், வழி காட்டுதல்கள் தேவைப்படும் நேரம் இது!
தமது கூட்டணியினரது வெற்றிச் செய்தி வெளியானபோது, அவர் வெளியிட்ட முதல் உரையிலேயே ஈழத் தமிழர்களது பிரச்னைகள் குறித்துத் தமது கருத்தினைக் கூறியிருந்தார்.
“இலங்கைப் பிரச்னை ஒரு சர்வதேசப் பிரச்னையாகும். அதில் இந்திய நடுவண் அரசின் ஓர் அங்கமாக இருக்கும் மாநில அரசான தமிழக அரசு ஓரளவே செயல்பட முடியும். இந்த விடயத்தில் மத்தியில் உள்ள அரசு நினைத்தால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். எனவே போர்க்குற்றம் புரிந்த ராஜபக்ஷே அரசினைச் சர்வதேச போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு செயலில் இறங்கவேண்டும் என நான் வலியுறுத்துவேன்.
ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், கௌரவத்துடனும் வாழ இலங்கை அரசு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் இந்திய அரசு அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இலங்கை அதற்கு உடன்படாவிடில், இந்தியா அதன்மீது பொருளாதாரத் தடையினை விதிக்க வேண்டும்.”
இன்று ஈழத் தமிழர்கள் எதற்காகக் காத்திருக்கிறார்களோ அவை அனைத்தினதும் குரலாக ஒலித்திருப்பதன் மூலம் ஜெயலலிதா அவர்கள் ஒரு வகையில் அவர்களது உணர்வினைப் பிரதிபலித்திருக்கிறார் எனலாம்.
இவ்வாறு எழுதுவதன் மூலம் புதிய முதல்வரை அளவுக்கு அதிகமாகவே புகழ்வதாகப் பொருள் கொள்ள வேண்டாம். காரணம், அவரது முந்தைய செயல்பாடுகள் எவ்வாறு இருந்திருப்பினும், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக - அதாவது ஈழத்தில் இனப்படுகொலை மிக மூர்க்கத்துடன் ஆரம்பமான சமயத்தில் இருந்து - அவரது பேச்சும் செயலும் ஓரளவு நம்பிக்கை அளிப்பதாகவே இருந்து வந்துள்ளது.
எவரைத் தமிழினத்தின் தலைவர் என்றும், தமிழினக் காவலர் என்றும் ஈழத்தமிழர் உட்பட உலகில் தமிழர்கள் அனைவரும் நம்பி இருந்தார்களோ - அந்தத் தலைவர் ‘தனது குடும்பத்தின் தலைவராக மட்டுமே’ செயல்பட ஆரம்பித்த போதே தமிழினம் ஏமாற்றத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது.
சொல்லப்போனால், அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எம்.ஜி.ஆருக்குப் பின்னர், ‘கலைஞர்’ மீது கொண்டிருந்த நம்பிக்கை அளவுக்கு ஜெயலலிதா மீது கொண்டிருக்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நம்பி இருந்த ஓர் இனம் ஒட்டு மொத்தமாக அழிந்து கொண்டிருந்த வேளையில், ஒப்புக்கு சில ‘நாடகங்களை’ அரங்கேற்றி விட்டு, தமது குடும்ப உறுப்பினர்களுக்காகவும், தனக்கு வேண்டியவர்களுக்காகவும் பேரம்பேச நாட்டின் தலைநகருக்குப் படையெடுத்ததில் இருந்த அக்கறையில் கால் பங்கினைத்தானும் இன மீட்சிக்காகக் காட்ட மறந்த ‘கலைஞரை’ நம்பி ஏமாந்தவர்கள் தமிழர்கள். இந்த விடயத்தில் ஜெயலலிதா தமிழர்களை ஏமாற்றவும் இல்லை; தாமே தமிழினத்தின் காவலர் என்று பிரகடனம் செய்யவும் விரும்பியதில்லை.
1991ல் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையும்-அதுவும் அக் கொலையினைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்னும் குற்றச்சாட்டும் எழுந்த சமயத்தில், ஜெயலலிதா முதல் தடவையாக தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்தார். அன்றைய நிலையில், ஓர் மாநில அரசின் முதல்வர், நாட்டின் பிரதமரையே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக- அது உண்மையிலேயே தமிழர் விடுதலைக்காகப் போராடி வந்தாலும் செயல்பட இயலாது. அது மட்டுமல்லாமல் அப்போது அ.தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்தியே தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றிருந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகள் இயக்கத்துக்கு எதிராக அவர் பேசியும், செயல்பட்டும் இருப்பினும் அதனை வைத்தே அவர் ஈழத்தமிழர்களின் எதிரி என வகைப்படுத்துவது சரியாகப் படவில்லை. இந்திய அமைதிப்படை ஈழப் பிரதேசங்களில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டு இலங்கையில் ஓர் இடைக்கால அமைதிநிலை தொடர்ந்த சமயத்தில் தான் அவர் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அக்காலப் பகுதியில் அங்கு பாரிய அளவில் இனப்படுகொலைகள் நடந்ததாகவோ அண்டை நாட்டின் தலையீடு அவசியம் என்னும் நிலை உருவானதாகவோ செய்திகள் ஏதும் இல்லை.
மீண்டும் 2001ல் அவர் இரண்டாவது தடவையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற சமயம், 2002 முதல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. அப்போதும் அண்டை நாட்டின் தலையீடு அங்கு தேவையானதாக அமையவில்லை.
1986ல் ஈழத்தின் யாழ்ப்பாணப் பகுதியில் பெரும் அளவிலான மனித உரிமை மீறல்களும், குண்டுத் தாக்குதல்களும் நிகழ்ந்த சமயம், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் தலையீடு காரணமாக அவ்வருடப் பிற்பகுதியில் இந்திய அரசின் தூண்டுதலால் ‘திம்பு’ப் பேச்சுகள் ஆரம்பமாகியது. அதன் பின் கலைஞரது ஆட்சியின்போது சென்ற 2008 முதல் 2009 வரையில் தொடர்ந்த நான்காம் கட்ட ஈழப் போரே அங்கு வாழ்ந்த தமிழர்கள் பலரைக் காவு கொண்ட ‘இனப்படுகொலைக் களமாக’ மாறிவிட்டிருந்தது.
உண்மையில் அவ்வாறான தருணங்களில் அண்டை நாடொன்றில் வாழும் தனது இன மக்களைக் காப்பாற்றும் கடமையும் வாய்ப்பும் இருந்தும், ராஜிநாமா மிரட்டல்களையும், மனிதச் சங்கிலி ‘விளையாட்டுக்களை’யும் உண்ணாவிரத நாடகங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருந்த தமிழகத் தலைமையைவிடவும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு எந்தவித நம்பிக்கைத் துரோகத்தையும் இழைத்து விடவில்லை!
2011ல்…. இப்போது மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அவர், கடந்த இரு வருடங்களாக ஈழத்தமிழர்கள் மீது காட்டும் பரிவு தொடருமானால், அங்கு எஞ்சியிருக்கும் தமிழர்களாவது இனியேனும் நிம்மதியாகவும், கௌரவத்துடனும் வாழ வழிகிட்டும் என்பதில் சந்தேகமில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அவர் அறிவித்திருந்த 18 அம்சத் திட்டமும், இப்போது வெற்றிச் செய்தி வந்ததும் அவர் அளித்த அறிக்கையும் அவர் ஈழத் தமிழர்களுக்காகத் தன்னால் முடிந்தவரையில் உதவிட முயல்வார் என்னும் நம்பிக்கையினை விதைத்திருக்கிறது.
‘கலைஞர்’ மீது வைத்திருந்த நம்பிக்கையினைப் போன்று இதுவும் பொய்த்துப் போய்விட அவர் அனுமதிக்க மாட்டார் என நம்புவோம்.
நம்புவதைத் தவிர வேறு வழிதான் ஏது?
[www.sarvachitthan.wordpress.com]