thoovana fallsமுந்தைய பகுதி: தூவானத்தின் தூறல்கள் - 1

ஆற்றில் கால் வைத்தவுடன் சில்லென்று ஏறியது அதன் குளிர்தன்மையினால்..!

'வடஇந்தியாவின் காற்றழுத்தத்தை ஈடுகட்ட, இந்தியப் பெருங்கடலில் வீசும் ஈரக்காற்றை மேற்குத் தொடர்ச்சி மலை தடுத்து, மழை மேகமாய் மேலே எழுந்து, வெப்பம் குறைந்து, மழையாய்ப் பொழிந்து , வனத்தினை நனைத்து, உயிர்களை செழிக்க வைத்து, நிலத்தினைக் குளிர்வித்து, மீண்டும் ஊற்றாய் உருவெடுத்து, கிளைகளை சேர்த்து, தன்னோடு வரும் செடி கொடிகளை அள்ளிக்கொண்டு, இரவு பகலாய் ஓடி வந்து, தூவானத்தில் அருவியாய் கொட்டி அமராவதி அணையை அடையும் நீரல்லவா இது..! ஆதலால் அப்படித்தான் குளிரும்..!' என மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன்.

பிறகு மெதுவாக கண்ணன் முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து வழுக்கும் பாறையில் காலூன்றி, மூங்கில் குச்சிகளை பிடித்துக் கொண்டும், நீரின் ஓட்டத்தை சமாளித்து ஒவ்வொரு அடியாக நடந்து சென்றோம். சில இடங்களில் பாறை இடுக்குகளில் இடுப்பளவு நீரில் செல்ல நேர்ந்தது. ஆற்றின் வேகம் நம்மை அடித்துச் செல்லும் அளவு இல்லையென்றாலும், கீழே விழுந்தால் பாறைகளினால் அடிபடும் அபாயமும், உடைமைகள் நனைவதும் மற்றும் அடித்துச் செல்வதும் கண்டிப்பாக நடக்கக்கூடியது. ஆதலால் மிகக் கவனமாக கடந்து சென்றோம். மிக அதிகமாக வெள்ளம் வரும்போது இரு கரைக்கும் கயிறு கட்டி அதை பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்வோம் எனக் கூறினார்.

பாதி தூரம் ஆற்றைக் கடந்து ஒரு பெரிய பாறையில் நின்று, அருவியை புகைபடம் எடுத்துக் கொண்டு, மீதி தூரம் கடந்து செல்ல நேரிட்டது. இப்போதுதான் இடுப்பளவு பள்ளத்தில் இறங்கி ஏறும் போது, ஆடை முழுவதும் நனைந்துவிட்டது.

பின்னர் ஆற்றைக் கடந்த நிம்மதியுடன் மணல் திட்டு மற்றும் சிறு சிறு பதிந்த பாறைகளின் வழியே நடந்து சென்றோம். இந்த இடங்களில் சில வாரங்களுக்கு முன்பு ஆளுயரத்திற்கு நீர் சென்றதை , அடித்துச் சென்ற குப்பைகள் கிளைகளில் மாட்டிக் கொண்டிருந்ததை வைத்து கணிக்க முடிந்தது.

thoovanam falls hutஇறுதியாக அருவிக்கு சற்று முன்னர் இடதுபுறம் சென்று தங்கும் விடுதியை அடைய வேண்டும். அவ்வாறு செல்லும் போது அருவியின் சாரல் நம்மை மெல்ல நனைத்தது. கூடவே சில தூறலும் போட விரைவாய் சென்று அறையை அடைந்தோம். கண்ணனும், விஜயும் எங்களை தாழ்வாரத்தில் சற்று நேரம் காத்திருக்கச் சொல்லி அறையை மின்னல் வேகத்தில் சுத்தம் செய்து, சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்தனர். காத்திருக்கும் அவ்வேளையில் அருவியின் அருகே சென்று அதன் சாரலில் நனைய ஆசை வந்து, அங்கே சென்றோம்.

மெல்லிய தூறல், மூங்கில் மரங்களின் இருட்டு, வெண்பனிபோல் அருவியின் சாரல், பிரமாண்டமான சப்தம் என இயற்கையை அதன் இடத்தில் இருந்து கொண்டு ரசித்தது மனதை சிலிர்க்க வைத்தது. ஆங்காங்கே யானையின் சாணம் தென்பட்டது. இருக்கும் இடம் சற்று ஆபத்து எனத் தெரிந்து கொண்டு அறையை அடைந்தோம். அதுவரை தூறல் போட்ட மழை, கொட்டத் தொடங்கியது.

இப்பயணத்தின் முன்பதிவின் போதே இக்கதையின் தலைப்பை "தூவானத்தின் தூறல்கள் " என உறுதிப்படுத்தினேன். அதற்கேற்றவாறு இங்கே தங்கும் போது தூறல் வந்தால் மிக நன்றாக இருக்கும் என எண்ணினேன். இம்மழையைக் கண்டதும் அது உண்மையாக மாறியதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.

அவர்களிருவரும் சென்று சமையலுக்குத் தேவையான விறகுகளை சில நிமிடங்களில் கொண்டு வந்து சேர்த்தனர். இரவில் சப்பாத்தி, சாதம், பருப்புக்குழம்பு, காய்கறிகள் என ஏற்கனவே கூறியிருந்ததால் சமையலுக்குத் தீவிரம் காட்டினர். அசைவ உணவு வேண்டுமெனில் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருந்தால் இங்கு மீன்பிடி வலைகள் மூலம் அருவியின் அருகே மீன் பிடித்துச் சுட்டுத் தருவார்கள் .

அதன் பிறகு அருவியில் குளிக்க ஆசை வந்து, மீண்டும் அங்கு சென்றோம். அருவியின் ஓரத்தில் கிளையருவி கொட்டிக் கொண்டிருந்தது. அதனருகே செல்லும் போது, பாறையில் உதிர்ந்து அழுகிய நிலையில் இருந்த அரசமரத்தின் பழங்கள் வழுக்கி விட்டது. விழுந்ததில் பின்புறம் அடிபடாமலிருக்க கையை ஊன்றினேன். சுதாரித்து மீண்டும் எழுந்து அடுத்த அடி வைத்து மெதுவாய் சென்று அருவியில் மேனி நனைக்க , மிகவும் சில்லென்று உணர்வு உரோமங்களை குத்திட்டு நிற்கச் செய்தது. பிறகு மெதுவாய் தலை நினைத்து குளியல் ஆரம்பமானது.

இருபது நிமிடங்களுக்குப் பின்னர், அறைக்குச் சென்று ஈரத் துணிகளை மாற்றிவிட்டு, அருவியை ரசித்துக் கொண்டே அமரும் வேளையில் சூடான தேயிலை நீரை கண்ணன் எங்களுக்கு அளித்தார்.

அந்தி சாய்ந்து வெளிச்சம் குறையத் தொடங்கியது. ஒருபுறம் இருள் சூழும் நேரத்தில் செவ்வானம் தோன்ற, விஜய் புகைப்படமெடுக்க அருவியின் அருகே ஓடிச் சென்றார். நமது கால்கள் சும்மா இருக்குமா என்ன? கேமராவுடன் ஓடிச் சென்று, செவ்வானத்தின் கருக்கலில் மரங்கள் காணாமல் போக, கொட்டும் அருவியின் அழகு கண்ணைப் பறித்தது.

அக்காட்சியை புகைப்படம் எடுக்க, படம் சரியாய் வரவில்லை. படத்தில் வட்டவடிவில் ஏராளமான வெண்புள்ளி தெரிந்தது. அருவியின் சாரல், லென்ஸில் பட்டு இவ்வாறு ஆகிறதோ என ஒவ்வொரு புகைப்படத்திற்கும் துணியை வைத்து துடைக்க, மீண்டும் மீண்டும் அவ்வாறே வந்தது. வைத்திருந்த ஒரு கேமராவும் அவ்வளவுதானா என எண்ணம் தோன்றியது எனக்கு...!

thoovanam riverஅதன் பிறகு பிளாஷ் இல்லாமல் படம் எடுக்க மிகச் சரியாய் வந்தது. காரணம் புரிந்தது மகிழ்ச்சியும் வந்தது. எவ்வாறெனில், பிளாஷ் வரும் போது, பறந்து வரும் அருவியின் சாரல் எதிரொளித்து இவ்வாறு தெரிகின்றது. செவ்வானத்தை இருள் மெதுவாய் மறைக்க, அறையை நோக்கி விரைவாய்ச் சென்றேன்.

இரவு உணவு தயாராய் இருந்தது. சுடச் சுட சப்பாத்தி, சாதம் & சாம்பார் கூட்டு என மழைக்கு இதமாய் உணவருந்தினோம். நாவிற்கு மிகவும் நெருக்கமான சுவையாய் இருந்தது, நமது வீட்டில் சமைப்பது போன்று..!

கண்ணனிடம் "நீங்கள் வீட்டிலும் சமைப்பீர்களா” என்று கேட்கும் போது, "இல்லை இதுமாதிரி சமயங்களில் இங்கு வந்து சமைப்பது மட்டுமே” என்றும், “எப்போதாவது கோடை காலங்களில் வற்றிய ஆற்றின் நடுவே முகாமிட்டு இரவில் சிக்கன் சமைத்து சாப்பிடுவோம்" எனக் கூறினார்.

மழை தொடர்ந்து பெய்ந்து கொண்டிருந்தது. பயணக் களைப்பும், உண்ட உணவும் கண்ணில் தூக்கத்தை வரவழைத்தது. பின்னர் நாங்கள் அறையினுள் தூங்கச் சென்றோம். கண்ணனும் விஜயும் வெளியே உள்ள தாழ்வாரத்தில் படுத்துக் கொண்டனர்.

வனத்தின் இரவு ஓசையான பூச்சிகளின் ரீங்காரங்கள்; தூரத்தில் ஊளையிடும் விலங்குகள்; காற்றில் அசையும் மரங்கள் என அனைத்தையும் அருவியின் சப்தம் ஓரங்கட்டியது.

அருவியின் ஓசை ரஹ்மானின் இசை போன்று ஒரு இசைக்கலவையாய் இருந்தது. கொட்டும் மழை, பாறையைத் தீண்டும் நீர், உருண்டோடும் பாறை, அடித்துச் செல்லும் காட்டாறு என பிரமாண்ட ஓசையாயிருந்தது.

நள்ளிரவில் திடீரென முழிப்பு. கை விரலில் ஏதோ ஊசி குத்துவதைப் போன்ற வலி. சட்டென எழுந்து விளக்கை அணைக்கையில், தெறித்து ஓடியது ஒரு எலி ..! வீடு முழுவதும் மரத்தினால் உருவாக்கி இருப்பதால், சிறுதுளையிட்டு குளியலறைக் கதவு வாயிலாக உள்ளே வந்துள்ளது. மீண்டும் வந்து கடித்து விடுமோ என எண்ணி தூக்கம் வராமல் விடிய விடிய புரண்டு படுத்ததில் அதிகாலை வருவதே நீண்டு கொண்டிருந்தது.

இதற்காகத்தான் ஒரு பெரிய பெட்டி, தகரத்தினால் செய்து அதனுள் போர்வை , தலையணை, பாய் மற்றும் இதர பொருட்களை உள்ளே வைத்துப் பூட்டி விடுகின்றனர்.

மேலும் இங்கு சூரிய சக்தியில் இயங்கும் மூன்று விளக்குகள் மட்டுமே உள்ளது..! ஆதலால் மொபைல் மற்றும் கேமரா சார்ஜ் செய்திட வசதி இல்லை. இங்கு மட்டுமில்லை, ஆலம்பட்டி அலுவலகத்திலும் இதே நிலை தான்..!

இங்கு பெரிய பிளாஸ்டிக் தொட்டி வைத்து, தேவையான நீரை அருவியின் உயரத்திலிருந்து குழாய் மூலம் சேகரித்துக் கொள்கிறார்கள். இந்த நீர் குளிக்க மற்றும் சமைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அதிகாலை வந்தவுடன் ஜன்னலைத் திறந்து அருவியை நோக்கும்போது, இரவில் பெய்த மழையின் காரணமாக நீரின் அளவு சற்று மிகுதியாயிருப்பது போன்று தோன்றியது.

பிறகு அவர்களும் எழுந்து காலை உணவைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.

கண்ணனிடம் அருவியில் நீரின் அளவு கூடியுள்ளதா? என கேட்க, "ஆம்" என்றனர். எவ்வாறு கணிக்கின்றீர்கள் எனக் கேட்டபோது, "அருவியின் உச்சியில் உள்ள சிறுசிறு திட்டுகளில் வழியும் நீரின் அளவைப் பொறுத்து கணிக்கலாம்" என்றனர்.

"அருவியின் உச்சிக்கு அழைத்து செல்வீர்களா" என கேட்டபோது, " போகலாம்" எனக் கூறினார்.

காலை உணவை வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் எனக் கூறி விட்டு தூவானம் அருவியின் மேல் பகுதிக்குச் சென்றோம். அருவியின் இடதுபுறத்தில் மேட்டில் ஏறி, பிறகு சிறிய பாதையில் செல்லும் போது சில நிமிடங்களில் மேற்பகுதியை அடைந்தோம்.

வழியில் சில தூரம் வாய்க்கால் போன்று வெட்டப்பட்டிருந்தது. “எதற்காக?” என்று கேட்கும்போது, "சில ஆண்டுகளுக்கு முன்பு, கீழே உள்ள மலைக் கிராமங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் நோக்கில் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்திற்குப் பிறகு மலையின் அமைப்பு மேடாய் அமைந்திருப்பதால் மழைக் காலங்களில் நீர் செல்ல முடியாமல் கீழே வடிந்தது. பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது" என்றனர். இம்முயற்சி மிகவும் பாராட்டக்கூடியதாய் இருந்தது.

அருவியின் மேலே பம்பார் ஆறு, மிக அகலமாய் குறைவான ஆழத்தில் பாறைகளுக்கிடையே தவழ்ந்து வந்து, திடீரென உண்டாகும் 40 அடி செங்குத்தான பள்ளத்தில் விழுவதினால் உருவாவதே தூவானம் அருவி.

thoovanam falls 2சூரியன் வரும் போது அழகான வானவில்லை அருவியின் முன் இட்டுச் சென்றது. மிகப் பெரிதாய் வானத்தில் தெரியும் வானவில்லைப் பார்த்த எனக்கு, அருவியின் முன் முப்பது அடி தூரத்தை விட்டமாய்க் கொண்ட சிறிய வானவில் அதிசயமாகத் தோன்றியது...!

பொதுவாக சூரிய ஒளி மழைத்துளிகளில் படும்போது எதிரொளிப்பாகி, நிறப்பிரிகை அடைகிறது. அதுவே வானவில்லாக சூரியனுக்கு எதிர்ப்புறத்தில் தோன்றுகிறது. இங்கு மழைத்துளிகளுக்குப் பதில், அருவியின் சாரலில் சூரிய ஒளி படுவதால் இவ்வாறு தெரிகிறது.

நீர் அதிகமாக வரும் போது வலது புறத்தில் பெரிய அருவியாகவும், இடது புறத்தில் இரண்டு கிளை அருவியாவும் கொட்டுகிறது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பேய் மழையில் நான்கு நாட்களில் அமராவதி அணையை நிறைத்துள்ளது எனில், இதில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு சென்றுள்ளது.

அதன் பிறகு அருவி கொட்டும் இடத்திற்கருகே சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பாறையின் மேலே அமர்ந்தோம். இன்னும் சில தூரம் உள்ளே செல்லலாம் என எண்ணி நடக்கும் போது, மிகவும் கழிமுகமாக இருந்தது.

sivalingam at keralaபிறகு திரும்பி வந்து ஒரு மரத்தின் இலையைக் காட்டி, இதை அடுப்பில் போடும் போது உப்பைப் போன்று படபடவென்று வெடிக்கும் என்றனர். உடனே மரத்தின் சில இலைகளைப் பறித்து வைத்துக் கொண்டேன். மேலும் வேங்கை மரத்தின் பட்டைகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது எனக் கூறினார். ஆனால் வேங்கை மரம் பட்டை ஏதுமின்றி மொழுமொழுவெனக் காட்சியளித்தது. ஆம், அனைத்தும் சுரண்டப்பட்டிருந்தது..!

காலைப்பசி வயிற்றைக் கிள்ளியபோதுதான் தெரிந்தது, நேரம் எட்டைத் தாண்டியது. பிறகு சென்ற வழியிலே திரும்பி வரும்போது, இரு மரங்கள் பின்னிக் கொண்டிருந்ததை காண முடிந்தது. இது மரங்களுக்கும் நேசங்கள் உண்டு என்பதை வெளிப்படுத்துமாறு வளர்ந்து கொண்டிருக்கிறது.

அறைக்கு வந்ததும் பறித்த இலைகளை அடுப்பிலிட்டு சோதனை செய்தேன். உப்பைத் தீலியிலிட்டதைப் போல் படபடவென வெடிப்பு சத்தம்..! சோதனையில் வெற்றியும் உண்மையும்..!

moonar forestதயாராய் இருந்த சப்பாத்தி, காய்கறி, பருப்புக்கூட்டு என உண்டுவிட்டு கிளம்புவதற்குத் தயாரானோம்.

மீண்டும் ஆற்றைக் கடக்கும் நிகழ்வு வயிற்றில் கலக்கத்தை உண்டு பண்ணியது. ஏனென்றால், நேற்றைக் காட்டிலும் இன்று நீரின் அளவு கூடுதலாகும். ஆகையால் எவ்வாறு கடக்கப் போகிறோம் என அச்சம் தொற்றிக்கொண்டது.

பிறகு அவர்கள் அறையை சுத்தம் செய்யும் பணியில் விரைவாகச் செயல்பட்டு, 15 நிமிடங்களில் அறையை விட்டுக் கிளம்பினோம்.

தங்கும் விடுதியை சுற்றிய கற்சுவர்கள், விறகடுப்பு, வாசலில் மனதைக் கவரும் வண்ணமிகு மலர்ச்செடிகள், பக்கவாட்டில் தக்காளி, மிளகாய்ச் செடிகள் என கிராமத்தில் இருப்பதைப் போன்று காணப்பட்டது. இம்மரவீடானது ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொருமுறை முழுவதும் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் உறுதிக்காக மீண்டும் கட்டப்படுகிறது.

தூவானத்தின் அருவியை விட்டு விடை பெறும் நேரம் வந்தது. ஆற்றின் பக்கவாட்டில் நடந்து வந்து கடக்கத் தயாரானோம். பெரிதாய் நீரின் அளவு உயர்ந்துவிடவில்லை. நேற்று போல் மெதுவாய் ஒருவர் பின் ஒருவராய் பயமின்றி ஆற்றைக் கடந்தோம். பின்னர் காலணிகளை அணிந்து கொண்டு புகைப்படக் கருவியை மாட்டிக்கொண்டு மெதுவாய் பயணம் ஆரம்பித்தது. நேற்று ஆற்றைக் கடக்கும் போது விஜயின் செருப்பு அடித்துச் செல்லப்பட்டது. அவரும் அதைப் பிடித்துவிட வேண்டும் என அங்கும் இங்கு வேகமாய் சென்று முயன்றார். பலனின்றி இறுதியாக அடித்துச் செல்லப்பட்டது. அவரது காலில் பெரிய காயமும் ஏற்கனவே இருந்தது. என்னவென்று கேட்டபோது, "சில தினங்களுக்கு முன் காட்டு மாடு ஒன்று துரத்தியபோது தலை தெறிக்க ஓடி, மரக்கட்டை ஒன்றில் தட்டி விழுந்தபோது இவ்வாறானது" என்று கூறினார்.

இந்நிலைமை நமக்கு இப்போது வந்தால் எவ்வாறு ஓடுவது என்ற அச்சமும் உண்டானது. அதற்காகத்தான் அவர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன், காட்டு மாடு, யானைகள் ஏதாவது இருக்கிறதா என கண்டறிந்து அதற்கேற்றவாறு முன்னேறிச் செல்கின்றனர்.

moonar forest 1அருவியை விட்டு வெகுதூரம் வந்ததால் அதன் ஓசை மெல்ல குறையத்தொடங்கி ஆற்றின் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. சில தூரம் சென்ற பிறகு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இருவர், ஒரு வனக்காவலரின் உதவியோடு எதிரே வந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான இடங்களை எப்படியாவது கண்டறிந்து வந்துவிடுகிறார்கள் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றோம்.

நேற்று வரும்போது இறக்கமான பாதைகளை இன்று செங்குத்தாக ஏற நேரிட்டது. ஒரு மணி நேர பயணத்திற்கப்பால் நேற்று பட்டாம்பூச்சி பார்த்த இடத்திற்கருகில் பத்து நிமிடம் இளைப்பாறினோம். மீண்டும் செங்குத்தாகப் பயணம் தொடங்க, இதயத்துடிப்பு அதிகமாகியது.

சில நிமிடங்களில் விஜய் ஒரு மரத்தைக் காட்டி பறக்கும் பல்லியைக் காட்டினார். மரத்தில் ஆங்காங்கே பறந்து மெதுவாய் மேலே சென்று கொண்டிருந்தது. புகைப்படம் எடுக்கும் சில நொடிப்பொழுதில், மேலே சென்றது. பறக்கும்போது இதன் பக்கவாட்டு மெல்லிய சதைப்பகுதி, இறக்கையாக செயல்படுகிறது. இதன் தாடைப் பகுதியை அடிக்கடி வெளியே நீட்டி முன்னேறிச் சென்றது . இருப்பினும் அதனை என்னால் சரியாய் படம் எடுக்க முடியவில்லை.

அப்போது கண்ணன் "இப்பல்லியைக் காண பல புகைப்படைக்காரர்கள் வரும்போது, எவ்வளவு தேடினாலும் காண்பது அரிதாய் இருக்கும். இப்போது எதிர்பாராத விதமாகப் பார்த்திருக்கிறோம், அதிர்ஷ்டம் தான்" எனக் கூறினார்.

அதன் பிறகு கல்லூரி மாணவ மாணவிகள் என ஆறேழுபேர் வனக்காவலரோடு எதிரே வந்து கொண்டிருந்தனர். இப்போதே அவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் என கேட்டுக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். கண்ணன் மெதுவாக என்னிடம் " இவர்கள் தூவானம் அருவி வரை செல்வது கடினமே; பாதியிலே நடக்க முடியாமல் திரும்பிக் கூட வந்துவிடுவார்கள்" எனக் கூறினார்.

பிறகு ஆலம்பட்டி அலுவலகத்தை சிறிது நேரத்தில் அடைந்தோம். மணி பதினொன்றைத் தொட்டது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் உடுமலைப் பேருந்து உண்டு. ஆனால் மாலை ஐந்து மணிக்கே சென்னைக்கு ரயில் என்பதால் அடுத்த பேருந்தில் செல்லலாம் என சிறிது நேரம் களைப்பாறினோம்.

அரைமணி நேரமாக புளியமரத்தில் நிழலடியில் அமர்ந்து காற்று வாங்கி, நேற்றைய பொழுதை அசை போட்டுக் கொண்டிருந்தேன். இங்கிருந்து பார்க்கும்போது தூங்கும் காடுகளாய் காட்சியளித்து, அதனுள்ளே செல்லும்போது இத்தனை அற்புதங்களை உள்ளடக்கியதா ..! என எண்ணத் தோன்றுகிறது.

திடீரென ஒரு யோசனை...! தூவானம் அருவியை அதன் அருகில் புகைப்படம் எடுத்தோம். அதை சாலையிலிருந்து பார்க்கும் தூரத்துக் காட்சியை எடுக்க வேண்டும் என எண்ணி, ஒரு வனக்காவலரின் மோட்டார் சைக்கிளில் மூணாறு செல்லும் திசையில், இரண்டு கிலோமீட்டர் சென்றோம். அங்கேயும் சில குறிப்பிட்ட இடங்களைத் தேர்வு செய்து அடர்ந்த வனத்தினுள் கொட்டிக் கொண்டிருக்கும் அருவியை புகைப்படம் எடுத்தேன்.

thoovanam falls 3நேற்றிரவு அவ்விடத்திலா தங்கினோம் என்ற சந்தேகமும் வந்தது. பிறகு ஆலம்பட்டி அலுவலகத்தை அடைந்து உடைகளை மாற்றிவிட்டு, புறப்படத் தயாரானோம். அப்போது தேநீர் வாங்கி குடித்துக் கொண்டிருக்க, அவ்வழியே சென்ற மறையூர் மக்கள் இருவர் கடையை நோக்கி வந்தனர். அவர்களும் தேநீர் சொல்லிவிட்டு எங்களிடம் பேச ஆரம்பித்தனர். எங்களின் நேற்றைய பயணத்தைக் கூற அவர்களும் வியப்பாய் பாராட்டினர். கூடவே ஏன் நன்னாரி தேனீர் அருந்தாமல் சாதாரண தேநீர் அருந்துகிறீர்கள் எனக் கேட்டனர். "தேநீர் எங்கு வேண்டுமானாலும் குடிக்கலாம், இங்கு நன்னாரி கலந்த தேநீர் மிகுந்த சிறப்பு. அதுமட்டுமில்லாமல் உடலுக்கு மிகவும் நல்லதென எடுத்துக் கூறினர். நானும் “நேற்று குடித்தோம்” என்று கூற அவர் “இன்றும் குடிக்க வேண்டுமல்லவா" எனக் கூறினார்.

நன்னாரி என்பது படரும் கொடி வகை தாவரம் எனவும், அதன் வேரானது உடலுக்கு குளிச்சியையும், சிறுநீர் போக்கைக் கூட்டுவதற்கும், குருதியைத் தூய்மைப்படுத்துவதற்கும், மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் பயன்படுகிறது என்று கூறினார்.

இவ்வளவு பயன்களை உள்ளடக்கியதா என வியப்பில் ஆழ்த்தியது..! எனக்குத் தெரிந்தது நன்னாரி சர்பத் மட்டுமே ...! அது முழுக்க முழுக்க நன்னாரி வேரைக் காய்ச்சி, அதனுடன் இனிப்பு மற்றும் நிறமிகள் சேர்த்து விற்கப்படுகிறது.

கூடவே கடையிலிருந்த வனச்சரக அலுவலகப் பெண்மணியொருவர், சிறிதளவு நன்னாரி வேரை எனக்குக் கொடுத்தார். “வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்” என்று மறையூர்க்காரர் கூற, நானும் வாயிலிட்டு மென்றேன். குளிர்ச்சியும், நன்னாரியின் மணமும் என்னை மயக்கியது..!

இங்கு, நன்னாரி வேரை நன்றாகக் காய்ச்சி, அதனுடன் கரும்பு சர்க்கரை சேர்த்து தேநீர் தயார் செய்கின்றனர்.

“மூட்டை மூட்டையாய் இவ்வேர்களை எங்கள் வீட்டில் வைத்து, வரும் விருந்தினர்களுக்கு பை நிறைய கொடுத்தனுப்புவோம்” என்று தனது அனுபவங்களை என்னிடம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் பேருந்து வர, அவர்களிடம் விடைபெற்று உடுமலை சென்றோம். பேருந்தில் எனக்கு இடம் இல்லாததால், நின்று கொண்டே சின்னாறு வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு வந்தேன்.

udumalai wind millஇரண்டு நாட்கள் கைபேசி , இணைய வசதியின்றி இயற்கையோடு இணைந்திருந்த தருணங்களை எண்ணி, மலை மற்றும் மழைப் பயணத்தின் முடிவில் இருந்தேன்.

உடுமலை வந்ததும் மதிய உணவு மாலை 4 மணியளவில் சாப்பிட்டுவிட்டு, ரயிலுக்குக் காத்திருந்தோம். பிறகு ரயிலேறி பயணத்தின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டு நேரம் கரைந்தது. அந்தி சாயும் வேளையில் கதிரவன் வானில் செய்த வண்ணமாயங்களை பின்னோக்கிப் பார்த்துக் கொண்டே சென்றேன். ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருந்த காற்றாலை என்னை மிகவும் கவர்ந்தது.

ரயிலின் வேகத்தில் ஒவ்வொரு காற்றலையும் என்னை வேகமாகக் கடந்தது. முன்னோக்கி சற்று பார்த்து, அதற்கேற்றவாறு திட்டமிட்டு எடுக்கும்போது நினைத்த மாதிரி அவற்றை சிறப்பாகப் படம் எடுக்க முடிந்தது. காற்றாலையின் அச்சைப் பற்றி அதன் இறக்கைகள் சுழலுவதுபோல, எனது நினைவுகளும் சில தினங்களுக்கு தூவானத்தைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது

கூடவே "தூவானம் தூவத் தூவ மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன் " என்ற பாடல் வரிகளும் மனதில் ஆழமாய் ஒட்டிக் கொண்டு முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது..!

உங்களது எண்ணமும் இதைப் போன்று சுற்றி வர, பருவமழை முடிவில் தூவானத்திற்குச் சென்று வாருங்களேன்…!

- ப.சிவலிங்கம்

Pin It