சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர். தமிழ்நாட்டில் தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றதும் இந்த இடம் தான். குடைவறை மற்றும் குகை ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற சித்தன்னவாயில் என்ற ஊரின் பெயர் கால ஓட்டத்தில் சித்தன்னவாசல் என்று ஆனது. சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி. 7 ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சுற்றிலும் பச்சைப் பட்டுப் போர்த்திய வயல்வெளிகள், சிற்றோடைகள், எப்போதும் காய்ந்து விடாத கண்மாய்கள் என குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசலின் ஓவியங்கள் சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைக் கொண்டு தீட்டப்பட்டவை. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் அஜந்தா எனும் ஊரில் குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்களைப்போல் தனிச்சிறப்பும் பழமையும் மிக்கவை சித்தன்னவாசல் ஓவியங்கள்.

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ தூரத்தில் மணப்பாறை சாலையில் அமைந்துள்ள இவ்விடத்தைத் தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகின்றன. புதுக்கோட்டையில் இருந்து அரைமணிக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் சிறப்பு, சமணர் படுக்கைகள், மிகப்பழமையான கல்வெட்டுகள், ஓவியங்கள் என அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவைகள் அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200 அடி உயரமுடைய இக்குன்று சாலையில் இருந்து போனதும், செங்குத்தான அந்த மலையின் ஓரத்திலிருந்து படிக்கட்டுகளுடன் தொடங்குகிறது. ஒரு புறம் ஏறி மறுபுறம் அடைந்தால் முதலில் வருவது சமணர் படுக்கைகள், அங்கிருந்து கீழே இறங்கி அரை கி.மீ தூரம் போனால் குகைக்கோயிலும், மெய்மறக்கச் செய்யும் அழகிய ஓவியங்களும் நம்மை வரவேற்கின்றன. சித்தன்னவாசலில் கி.மு 2ஆம் அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடங்கி 10ஆம் நூற்றாண்டுவரை சமணம் தழைத்தோங்கியுள்ளது.

குன்றின்மேல் ‘ஏழடிப்பட்டம்’ என்ற இயற்கையாகவே அமைந்த ஒரு குகைக் கோவில் உள்ளது. மலையின் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு, பாறையில் ஏழு காலடித்தடங்கள் செதுக்கப்பட்டுள்ளன. காதில் ரீங்காரமிடும் காற்று, தனிமை அமைதி என மனதை மயக்குகிறது. இக்குகை ஒரு அறைபோன்று தோற்ற முடையது. கல் தலையணையோடு 17 படுக்கைகள் அமைந்துள்ளது. பெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. இப்படுக்கையை சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப்பழமையான எழுத்துரு வடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைத்துள்ளது.

சாலையில் இருந்து நூறு அடி தூரத்தில் ‘அறிவர் குகைக் கோயில்’ உள்ளது. இங்கு சமண ஆச்சாரியார்களின் சிலைகளும், விதானத்தில் வியக்கவைக்கும் ஓவியங்களும் காணப்படுகிறன. மூலிகை வர்ணங்களால் இங்கு தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள், அஜந்தா குகை ஓவியங்கள், இலங்கை சிகிரியா மற்றும் பாக் குகை ஓவியங்கள் இவற்றின் காலத்திலும், வரைமுறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது.

அறிவர் கோவில் மலை உச்சியில் ‘நவ்வாச்சுவை’ எனும் ஒரு சுனை உள்ளது. மலையை செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டும். இருக்கும் ஒரு அடி இடத்தில் நமக்கான பாதை அமைத்து தந்துள்ளது தொல்லியல் துறை.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு புகைபடிந்து கிடந்த இக்குகையும், ஓவியங்களும் 1990 களில் புதுப்பிக்கப்பட்டன. மலைகளில் செதுக்கப்பட்ட முனிவர்களின் சிற்பங்களும், கோலம் போன்ற வட்ட வடிவத்தில் பாறையில் செதுக்கப்பட்ட புதைகுழியின் தடங்களும் நம்மை பிரமிக்கவைக்கிறது. உதாரணத்திற்கு, அன்னப்பறவையின் வாழ்க்கை முறை ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது. தன் இணையைப் பிரிந்த அன்னப்பறவை ஒன்று கூழாங்கற்களை விழுங்கிவிட்டு உயரப்பறந்து தன் இறக்கைகளை அசைக்காமல் இறுக்கிக்கொண்டு, பாறை மீது விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி ஒவ்வொன்றும் உயிரோவியமாக அதன் காதலை நம்மிடம் மௌனமாய் பேசுகிறது. சுற்றுலாத்தலமாக இருந்தாலும், தொல்லியல்துறையும், அரசும் போதிய கவனம் செலுத்தவில்லை. குன்றின் அருகிலேயே நடைபெறும் கல்குவாரி வெடியின் அதிர்வால் ஓவியங்கள் நாளுக்குநாள் உதிர்ந்து வருகிறது. சிந்தன்னவாசலைப் பொறுத்தவரை காலத்தின் அடிப்படையில் அதன் முக்கியத்துவத்தைப் பார்க்கவேண்டும். சித்தன்னவாயில் கம்பீரம் காப்பாற்றப்படவேண்டும்.

நேரமாகிவிட்டது.... எழுந்து போங்கள் என்று விரட்டுகிற செயற்கைப் பூங்காக்களுக்கு மத்தியில் வரலாற்றின் பரிசாக சித்தன்னவாசல் போன்ற சிறப்பிடங்களின் வாசல்கள் நம்மை வரவேற்று காத்துக்கிடக்கின்றன. வளமையும், பழமையுமான இந்த தொன்மைச்சிறப்பிடத்தைப் பார்க்காத கண்கள் நிச்சயமாக பரிதாபமானவை.

(இளைஞர் முழக்கம் மார்ச் 2011 இதழில் வெளியானது)

Pin It