அறிய பொருட்களை காட்சிப்படுத்தும் ஓர் இடமே அருங்காட்சியகம். அறிவியல், வரலாறு, புவியியல், பண்பாடு, கலை போன்ற பல்துறை அறிவை மனப்பாடம் செய்யாமலேயே காட்சிகளாக நம் மனதில் பதித்து விடுவதே அருங்காட்சியகத்தின் சிறப்பம்சமாகும். தற்காலத்தில் காணமுடியாத அல்லது நெருங்கி சென்று பார்க்க முடியாதவைகளை எட்டும் தூரத்திற்கு இவை கொண்டு வந்து விடுகிறது. இந்தியாவின் முதல் அருங்காட்சியகமானது 1814 இல் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து வகையான பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. எனவேதான் இதற்கு இந்திய அருங்காட்சியகம் என்றே பெயர் வைத்தனர்.இதன் தொடர்ச்சியாகத்தான் வட்டார அளவில் வாழ்ந்த மக்களின் பண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் 1851 ஆம் ஆண்டு 16.26 ஏக்கர் பரப்பளவில் சென்னை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.

நத்தேல் வெல்ஷ் என்கிற தாவரவியல் ஆய்வாளரின் முயற்சியால்தான் சென்னை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. சென்னை இலக்கிய வட்டத்தின் சார்பில் சுமார் ஆயிரம் புவியியல் பொருட்களுடன் தற்போதைய பள்ளிக்கல்வி இயக்குனகரத்தின் வளாகத்தில்தான் முதலில் அருங்காட்சியகம் இருந்தது. இப்படி சிறிதாக துவக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தற்போது ஆறு கட்டடங்களில் பிரம்மாண்டமாக உருப்பெற்று வட்டாரப் பண்பாட்டை விளக்குவதை தாண்டி உலகளவிலும் தேசிய அளவிலும் சிறப்பு வாய்ந்து திகழ்கிறது.

முதல்கட்டடம் - மானுடவியல் காட்சிக் கூடம்:

இது மனிதப் பண்பாடு, வாழ்க்கை என பல்வேறு தகவல்களை எடுத்துரைக்கிறது. மானுடவியல் காட்சிக் கூடம் 9 பிரிவுகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1. வரலாற்றுக்கு முற்பட்ட கலைக் கூடம் 2. உடற்கூறு மானுடவியல் கூடம் 3. இனக்குழு ஒப்பாய்வியல் கூடம் 4. நாட்டுப்புற பண்பாட்டுக் கூடம் 5. நாட்டுப்புற காட்சி கலைக் கூடம் 6. இசைக் கருவிகள் 7. போர் கருவிகள் 8. சிந்து சமவெளி நாகரிகம் 9. பொம்மல் ஆட்ட கலை காட்சியகம். இந்தக் கூடத்தில்தான் சென்னை பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்து மக்கள் பயன்படுத்திய கற்கருவியும், பூண்டியில் கண்டெடுக்கப்பட்ட கைக் கோடரியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1863இல் இவற்றை ராபர்ட் புருஷ் கண்டறிந்தார்.

அதேபோல் ஜெ.டபிள்யு.பரிக்ஸ் அவர்களால் 1860இல் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால 48 ஈம புதைகுழி பொருட்களும் இங்கு உள்ளது. ஒரிசா மாநிலத்தில் கந்தமால் பகுதியில் மனிதர்களை நரபலி கொடுத்த ஒரு தூண் (மெரியா பரிதூண்) உள்ளது. இவ்விரண்டும் உலகிலேயே இங்குமட்டும் தான் உள்ளது. தென் இந்தியாவிலேயே முதல் பெண் உருவ தெய்வ வெண்கல சிற்பம் இங்கு உள்ளது. இவையனைத்தையும் உள்ளடக்கிய இவ்வரங்கம் பல கோடி செலவு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விரைவில் திறக்கப்பட உள்ளது.

2வது கட்டடம் - முதன்மைக் கூடம்:

இக்கட்டடத்தின் தரை மற்றும் முதல் தளத்தில் கற்சிற்பக் கூடம் அமையப்பெற்றுள்ளது. இந்து, சமண மற்றும் பௌத்த சிற்பங்கள் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் அமராவதி ஆற்றுப்படுகையில் செய்யப்பட்ட சுண்ணாம்பிலான பௌத்த சிற்பம் இங்கு உள்ளது. எழுத்து வடிவங்களின் ஆராய்ச்சிக்கு வித்திட்ட தென் இந்தியாவின் முதல் பிராமி எழுத்து வடிவம் இங்குதான் உள்ளது.

இதைத் தொடர்ந்து விலங்கியல், தாவரவியல் மற்றும் புவியியல் கூடங்கள் அமையப் பெற்றுள்ளது. இதில் கங்காரு. பஞ்சவர்ணக்கிளி, நெருப்புக்கோழி, ஈ.மு கோழி போன்றவையும் குறிப்பாக முழுத்திமிங்கலமும், பெரிய பெண் யானையும் பதப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பிரிட்டன் கியூகார்டனில் உள்ள தாவரவியல் காட்சிக் கூடத்தைவிட சிறப்பான தாவரவியல் கூடம் இங்கு உள்ளது என்று தாவரவியலாளர்களால் சொல்லப்படுகிறது.

3வது கட்டடம் - படிமக்கூடம்:

படிமக் கூடம் என்பது வெண்கல சிலைகளைக் கொண்ட கூடமாகும். தரைத் தளத்தில் சைவ சிலைகளும், முதல் தளத்தில் வைணவ சிலைகளும் இரண்டாம் தளத்தில் சமண, பௌத்த சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண், பெண் ஆகிய இரு உருவம் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையும், திருவாளங்காடு நடராஜர் சிலையும் இவற்றுள் சிறப்பு வாய்ந்தவையாகும்.

பல்லவர் காலத்திலேயே வெண்கல சிற்பங்கள் குவிந்திருந்தாலும், சோழர்கால சிற்பங்களே மிகவும் பிரசித்தி பெற்றவையாகும் இவை இங்கு நிறைந்துள்ளது. இச்சிற்பங்கள் உலகளவில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பழங்கால நாணயங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

4வது கட்டடம் - குழந்தைகளுக்கான கூடம்:

இது சென்னை அருங்காட்சியத்தின் முழுமையின் சிறுவடிவம் என சொல்லலாம். அறிவியல், தொழில் நுட்பத்தை குழந்தைகளுக்கு எளிமையாக விளக்க இக்கூடம் பயன்படும், நாகரிக வளர்ச்சி, பண்பாட்டு உடைகளுடனான பொம்மைகள் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 5வது கட்டடம் - மரபு சார்ந்த கலைக் கூடம்:தென்னிந்திய மரபு சார்ந்த கலைகளை காட்சிப்படுத்தும் வகையில் இக்கட்டடம் இருக்கிறது. ஆனால் கட்டடத்தின் தரைத்தளம் செங்கற்களாலும், மேல்கட்டுமான பணிகள் கருங்கல்லாலும் செய்யப்பட்டதால் கட்டடம் சேதமுற்று தற்போது மூடப்பட்டுள்ளது. புத்தாக்க பணி விரைவில் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் செய்யும் காலம் எப்போதோ?

6வது கட்டடம் - நவீன கால கலைக் கூடம்:

இராஜா ரவிவர்மா ஓவியங்களுக்கு பிந்தைய அனைத்தும் நவீன காலக் கலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முழு அளவு உருவப்படங்களும், முப்பரிமாண காட்சிக் கூடமும், வரலாற்றுக்கு முற்பட்ட குகை ஓவியமும், வரலாற்றுக்கு பிந்தைய ஓவியங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நவீன கால கலைக்கென்று இக்கட்டடம் செயல்பட்டாலும் மரபு சார்ந்த கலைக் கூடம் சேதமடைந்துள்ளதால் அந்த கலை வடிவங்களும் இங்கேயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எட்கர் தர்ஸ்டன் என்கிற சிறப்பான அறிஞர் தென்னிந்தியா குறித்து சிறப்பான புத்தகங்களான தென்னிந்திய இனவரவியல் குறிப்புகள் 1906ல் தென்னிந்திய குலங்களும், குடிகளும் ஆகியவைகளை சென்னை அருங்காட்சியகத்திலிருந்துதான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் சிறப்பம்சம் இவ்வளாகத்தில் தான் இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா நூலகமும், மியூசியம் தியேட்டர் என்கிற நாடக அரங்கமும், பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த பீரங்கிகளும் உள்ளன.

(இளைஞர் முழக்கம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

Pin It