2017-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸின் பிறந்த தினமான மே ஐந்தாம் தேதியன்று வெளியாகி இருக்கிறது அமல் நீராடின் இயக்கத்தில் சி.ஐ.ஏ (C.I.A. - Comrade in America). தலைப்பில், அதன் வடிவமைப்பில், நிறத்தில் திரைப்படத்தின் கொண்டாட்டம் தொடங்கி விடுகிறது. காலங்காலமாக கம்யூனிச அரசுகளை வீழ்த்துவதையும் அதற்கான சதி வேலைகளில் ஈடுபடுவதையுமே லட்சியமாகக் கொண்டது சி.ஐ.ஏ. அதன் பெயரை ஒரு இடதுசாரிக் கட்சியின் நிறத்தில், தன்மையில், குறிப்பாக லத்தீன் அமெரிக்க இடதுசாரிக் கட்சியின் கொடி போல வடிவமைப்பதிலேயே தொடங்கி விடுகிறது பகடி.
கதைச் சுருக்கம்
இடதுசாரிக் கட்சியில் தீவிரமாகச் செயல்படும் அஜியின் மீது (அவனது தந்தை கேரள காங்கிரஸில் செயல்படுபவர்) ஒரு அமெரிக்க வாழ் மலையாளப் பெண் (படிக்க கேரளம் வந்தவர்) காதல் வயப்பட, அது வீட்டாருக்குத் தெரிந்து அவள் அவசர அவசரமாகத் திருப்பி அழைக்கப்பட்டு, திருமண ஏற்பாடு நடக்கிறது. அவள் அஜியிடம் “அமெரிக்கா வந்து என்னைக் காப்பாற்று” என்கிறாள்.
இடதுசாரியான அஜியிடம் பாஸ்போர்ட் இல்லை. பாஸ்போர்ட்டை சிரமப்பட்டு வாங்க, அத்தனை குறுகிய காலத்தில் அமெரிக்க விசா கிடைக்க சாத்தியமே இல்லை என்கிறார்கள். அதுவும் அஜிக்கு விசா தருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
கள்ளத்தனமாக நுழையும் பாதையின் வழியாக அஜி அமெரிக்காவுக்குள் நுழையத் தீர்மானிக்கிறான். தோழர்களும், குடும்பத்தாரும் அவன் நேரடியாக அமெரிக்காதான் போகிறான் என நம்பிக் கொண்டிருக்க, மெக்ஸிக்கோ வழியாகப் பல இன்னல்களுக்கு இடையே நுழைகிறான் நாயகன். ஒரு வழியாக நாயகியையும் சந்திக்கிறான். நாயகியோ சந்தோஷமாக அவளுடைய திருமணத்துக்காகத் தயாராகி, திருமண வரவேற்பில் நிற்கிறாள். அஜியைப் பார்த்து “நீ வர மாட்டன்னு நினைச்சேன்” என்கிறாள். அதற்கு அஜி, “உன்னைத் தேடி வந்த இந்தப் பயணம் எனக்கு நிறைய அனுபவத்தைக் கற்றுத் தந்தது. அது வாழ்க்கை முழுவதும் எனக்குப் பயன்படும்” என்று சொல்லிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஊர் திரும்புகிறான்.
போதையில் ஒரு தரிசனம்
அஜி அமெரிக்கா போவதைப் பற்றி அவனுடன் மார்க்ஸ், லெனின், சேகுவேரா மூவரும் இரவில் விவாதிக்கின்றனர். அஜி குடித்துவிட்டு, கட்சி அலுவலகத்தில் உறங்கும் ஒரு ராத்திரியில்தான், அவர்களோடு வாதம் செய்கிறான். மார்க்ஸ் “நீ காதலுக்காக இப்படி அமெரிக்காவுக்குப் போக வேண்டுமா?” எனக் கேட்கிறார். அஜி அதற்கு “நீங்கள் ஜென்னிக்கு எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்களை நானும் வாசித்திருக்கிறேன்” என்கிறான். மார்க்ஸ் வெட்கப்படுகிறார். சேகுவேரா அவனை ஆதரிக்கிறார். காதலுக்காக அப்படித்தான் போக வேண்டுமென்கிறார். பகடி செய்து தீர்க்கிறார்கள். மலையாள சினிமாவின் பிரத்யேகத் தன்மை அதன் நகைச்சுவையும், பகடியுமே. அது நேர்த்தியாக இந்தச் சினிமாவில் வந்திருக்கிறது. இந்தக் காட்சிகளே படத்தின் திருப்புமுனையாக அமைக்கின்றன.
சில இடங்களில் சருக்குதல்
இரண்டாவது பாதியில் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழையும் அந்தப் பயணம். வெறும் விக்கிபீடியா தகவல்களாகத் தொகுக்கப்பட்டதைப் போல இருக்கிறது. துயர்மிகு அந்தப் பயணத்தின் வலி உணர்த்தப் படவில்லை.
தமிழர்களைச் சரியாகச் சித்திரித்தல்
சமீப மலையாள சினிமாக்களின் நற்போக்குகளில் ஒன்று தமிழர்களை ‘நல்ல விதமாக’ சித்தரிப்பது. அண்மையில் வெளியான ரஞ்சித்தின் ‘புத்தன் பணம்’ திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரமாக ஒரு தமிழ்த் தாயும், மகனும் உண்டு. கடைசி வரை அவர்களைச் சிதைக்காமலே காட்டி இருந்தார்கள். சி.ஐ.ஏ.விலும் ஓர் ஈழத்தமிழர் கதாபாத்திரம் உண்டு. மோசமில்லாமல் சித்தரித்திருக்கிறார்கள். பழைய போராளியான அவர், இயந்திரத் துப்பாக்கியை எடுத்து அஜி சரமாரியாகச் சுடும்போது (கேரள இடதுசாரிகள் துப்பாக்கியை போலீஸிடம் மாத்திரமே பார்த்திருப்பார்கள்) வெறுமனே வேடிக்கை பார்க்கிறார் என்பது போன்ற சில அபத்தங்கள் இருக்கின்றன.
கதைக்கருவிற்கு வலுவூட்டும் இசைத் தொகுப்பு
வாத்தியங்களை உரக்க வாசிப்பதில் பிரியம் கொண்டவராய் இருந்தாலும், இசையமைப்பாளர் கோபி சுந்தர் இந்தப் படத்தில் சில அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக, கள்ளத்தனமாக மெக்ஸிக்கோவுக்குள் நுழையும் அந்தப் பயணத்தில் ஒரு ஸ்பானியக் குரலோடு, பின்பு இந்தி, மலையாளம் என குரல்கள் மாறும் ‘வானம் திளைதிளைக்கன்னு’ என்ற அருமையான பாடலைத் தந்திருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் வரும் டைட்டில் பாடலில் தமிழ் வரிகளெல்லாம் புரட்சி குறித்து ஒலிக்கின்றன.
திரையில் தொடர் புரட்சி
மலையாளச் சினிமாவில் கம்யூனிசத்தைக் கருவாக க் கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம்தான் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை முறையில் அரசியல் இயக்கங்கள் பின்னிப் பிணைந்தே உள்ளன. வாழ்வின் கதைகளைத் திரைக்கு மாற்றும் மலையாளத் திரையில் கம்யூனிசம் கதைக்கருவாக இடம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல. 2017 ஆம் ஆண்டு மட்டுமே மலையாளச் சினிமாவில் கம்யூனிசத்தைக் கருவாகக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. அதுவும் கம்யூனிசம் எனும் மையக் கருவை தாங்கி வந்துள்ளன. மூன்று படங்களுமே ஏறக்குறைய ஒரு மாத இடைவெளியில்தான் திரையரங்குகளுக்கு வந்துள்ளன. அவற்றில் ‘ஒரு மெக்சிகன் அபரதா’ கல்லூரியில் உள்ள கம்யூனிச இயக்கத்தைப் பற்றிப் பேசியது. ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் அடிப்படையில் என்னை வெகுவாக ஈர்த்த ‘சகாவு’, ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ ஆகியவற்றை இப்போதைக்கு கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்.
- கலைவாணி இளங்கோ