தாவிப்பாயும் குதிரைகளின் குளம்படி ஓசையில் அடர்ந்து படர்ந்த அழகிய வனங்களும், தீப்பொறி பறக்க உரசிக்கொள்ளும் போர்வாள்களின் ஒளியும், செவிகளையும் புலன்களையும் சேர்த்து மிரட்டுகின்ற ஒரு அதிபயங்கரமான தீவிரவாதியின் படம் தான் பழசிராஜா. ஆம் அந்த வெள்ளை அதிகாரியின் வாய் மொழியில் சொன்னால் வெரி டேஞ்சரஸ் மேன். தன் மண்ணையும், மக்களையும் நேசிக்கின்ற தன் நாட்டை சுரண்டிக் கொழுக்கின்ற வந்தேறி அதிகார வர்கத்திடமிருந்து தன் மக்களை விடுவிக்கப் போராடும் மாவீரர்களுக்கு அந்த ஆளும் வர்க்கம் வழங்கும் பட்டம்தான் தீவிரவாதி. அத்தகைய தீவிரவாதிதான் பழசி ராஜா.

கிழக்கிந்தியக் கம்பெனியின் போர்ப் படை வயநாட்டின் குறுநில மன்னரான பழசி ராஜாவின் அரண்மனையைக் கைப்பற்றுகிறது. அங்கேயிருக்கும் செல்வங்களை எல்லாம் கொள்ளையிடுகிறது. காரணம், கருணாக்களைப் போல் காட்டிக் கொடுக்கவும், ஈ.வி. கே.எஸ். இளங்கோவன்களைப் போல் பதவி சுகத்தை அனுபவிக்க அடிமைசாசனம் எழுதிக் கொடுக்க மறுக்கிறார் பழசிராஜா.

வெள்ளையரின் காட்டு தர்பாரை எதிர்த்து, மலைவாழ் மக்களின் துணையோடு களம் அமைத்துப் பரங்கியர் தலைகளைப் பந்தாடுகிறார். அதிர்ந்து போகிற வெள்ளைக் கொக்குகள் பல்வேறு அடிமை மன்னர்களின் படைகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போர் தொடுக்கிறது. அந்த கடும் போருக்கு முகம் கொடுத்து வீரச்சாவைத் தழுவுகின்றனர் பழசிராஜாவும், அவரது தளபதிகளும், நூற்றுக்கணக்கான வீரர்களும்.

அரங்கம் விட்டு வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் புரியும், சும்மா கிடைக்காது சுதந்திரம் என்பது.

ஒவ்வொரு காட்சியிலும், தன் வீரம், நெகிழ்ச்சி, பாசம், கனிவு இயலாமை என்று தனித்தனியாகத் தீனி போட்டிருக்கிறார் பழசி ராஜாவாக வாழ்ந்திருக்கும் மம்முட்டி. வெள்ளையரின் இடத்திற்கே சென்று கனகம்பீரமாக அமர்கிற அந்தக் காட்சியைச் சொல்வதா? தன்னைக் கைதுசெய்து அழைத்துச் செல்ல வரும் ஆங்கிலச் சிப்பாய்களைச் சுருள் வாளால் தூள்பரக்கச் செய்யும் அந்தக் காட்சியைச் சொல்வதா, குழந்தையைப் பறிகொடுத்துத் தவிக்கும் மனைவிக்கு ஆறுதல் கூறும் அந்தக் காட்சியை சொல்வதா, தன்னை நம்பி வந்த வீரர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் வெள்ளையரிடம் சரண் அடையச் செல்கையில் நீங்களும் போங்கள் என்று மிச்சம் இருக்கிறவர்களையும் அனுப்பி வைக்கும் அந்தக் காட்சியைச் சொல்வதா? மாவீரர்களைச் சுற்றியிருப்பவை சூறாவளிகளும், சுனாமிகளும்தான் என்பதை மெய்ப்படுத்தும் காட்சிகள்தான் ஒவ்வொன்றும்.

பழசியின் தளபதியான எடச்சன் குங்கன் பாத்திரத்தில் வரும் சரத்குமார் மிகையில்லா நடிப்பும், இரும்பை உருக்கி வார்த்ததைப் போன்ற உடல்வாகும், அவரது கம்பீரமும் லாவகமாகக் குதிரைமீது தாவி ஏறி, லேசாகத் தட்டி ஓட்டுகின்ற அழகும் பணத்திற்கும் பதவிக்கும் விலைபோகும் கருணா வர்க்கத்தைச் சார்ந்த சுமன், சரத்குமார் கையால் கொல்லப்படுவது விறுவிறுப்பான காட்சி என்றால் அவரது வாள் வீச்சு வியக்கவைக்கும் சூறைக்காற்று. வெள்ளையரின் கூலிப்படைகள் தன்னைச் சுற்றி வளைத்து கைது செய்ய வரும்போது உங்கள் கையால் சாவேன் என்று நினைத்தீர்களா என்று கேட்டு தன்னைத் தானே குத்திக் கொண்டு வீரச்சாவை தழுவும் போது நெகிழவைக்கிறார்.

இன்னொரு தளபதியாக மனோஜ் கே. ஜெயன். காதலி பத்மப்பிரியாவுடன் இவர் நடத்தும் சும்பு வேட்டை நூறு டிகிரி தீப்பிழம்பு. கோவிலுக்கு வருகிற அவரை பூசாரியே காட்டிக் கொடுப்பதுதான் பேரதிர்ச்சி. அதைபிடப் பேரதிர்ச்சி அவரது இறுதிக்காட்சி. மனோஜை தூக்கிவிட்ட அதே மரத்தில் வெள்ளை பரங்கியைத் தனியாளாகக் கொன்று மாட்டிவிடும் பழசிராஜாவின் தீர்ப்பை பரவசத்தோடு ரசிக்கிறது திரையரங்கம்.

பெண் போராளி பத்மப்பிரியா வில்அம்பு, வேல் கம்பு, துப்பாக்கி என சகலத்திலும் முனைப்பு காட்டியிருக்கிறார். மரத்தின் உச்சியிலிருந்து சரிந்து கொண்டே வந்து சண்டையிடும் அவரது பேரார்வம் கூர்மையாக ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.

பழசிராஜாவின் மனைவியாக கனிகா. ராணியாக இருந்தாலும், அவளுக்கும் போர்க்களத்தில் பொறுப்பு இருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு காட்சி. தன்னைக் கைது செய்ய ஆங்கிலேய வீரர்கள் சுற்றி நிற்கையில் தண்ணீர் கேட்கிறார் ராஜா. குவளையை கொண்டு வரும் பாத்திரத்தில் தண்ணீரோடு சுருள் கத்தியையும் மறைத்து வைத்துக் கொடுக்கிறாள் ராணி.

மலையாளத்தில் வசனம் எழுதியிருக்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர். தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். படத்தின் முதல் கதாநாயகன் நமது இசைஞானி இளையராஜாதான். இசைக்கவேண்டிய இடத்தில் மட்டும் பின்னணி இசை கேட்கிறது. மற்ற இடங்களில் மெளனமே இசையாகி மயக்குகிறது.

பழசி ராஜா வீரத்தின் வெளிப்பாடு, உரிமையின் போர்க்குரல்.

(கருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 16, 2009 இதழில் வெளியான விமர்சனம்)

- அன்புத் தென்னரசன்

Pin It