அய்யப்பன் மார்கெட்டில் புல்லட் மீதமர்ந்து வெற்றிலை மென்று கொண்டு ஒரு சிங்கத்தைப் போல காத்திருக்கிறான்.
தான் தங்கி இருக்கும் லாட்ஜை விட்டு வெறி கொண்ட சிறுத்தையை போல கீழே இறங்குகிறான் கோஷி. கீழே இறங்குகையில்... முன் வாசலில் வேப்பிலை கட்டி இருக்கும் கொடியை உருவி... அந்த கயிறை இருப்பில் கட்டி இருக்கும் வேட்டிக்கு மேலேயே பெல்ட்டை போல இறுக்கி கட்டுகிறான்.
காட்சியின் வீரியம் புரிந்திருக்க வேண்டும். இது கடைசி 15 நிமிடக் காட்சியின் ஆரம்பம்.
அய்யப்பனா.......கோஷியா... போதும் போதும் என்றாகி விட்டது. படம் முழுக்க அவர்களுக்குள் இருக்கும் ஈகோவும்.. சண்டையும்.. ஒரே ஒரு ஒற்றைப்புள்ளியில் படம் ஆரம்பிக்கையில் ஆரம்பித்தது. யார் நல்லவன் யார் கெட்டவன் என்ற எவ்வித நூல் இழையும் இல்லை. கோஷியும் கெட்டவன் தான். ஐயப்பனும் கெட்டவன் தான். தன்னளவில் தனக்கான பக்கத்தில் ஆக சிறந்த மனிதர்கள் தான் இருவரும். இருவருக்கும்...மனைவி உண்டு. பிள்ளைகள் உண்டு.
வாழ்வின் எதிர் வினைகள் எவ்வினையில் ஆரம்பித்தது என்று தெரிய ஒரு நொடி பொழுது முனங்கல் கூட போதுமானதாக இருக்கிறது. ஒரே ஒரு புறக்கணிப்பு...... அலட்சியம்..... அவமானம்...... சம்பந்தப்பட்டவனை கொலைகாரனாக கூட ஆக்கி விடும். தான் என்ற கொம்பு எப்போது வெளி வருகிறதோ அப்போது.. கொலை செய்தாவது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மனித மனம் வந்து நிற்கிறது. விளிம்பு நிலை சிந்தனையில் எந்தவொரு முகமும் சுலபமாக எதிரி முகத்தை எதிர் கொள்கிறது. எதிர்வினைக்கு ஒரு பொய் போதும். ஒரே ஒரு நக்கல் சிரிப்பு போதும்.
இப்படி ஒரு படம் தமிழில் சாத்தியமா என்றால்......இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எந்த கதாநாயகன் முன் வருவார் என்று தெரியவில்லை. கேரளா நேட்டிவிட்டி படம் நெடுக கொடி நாட்டுகிறது. ஜன்னலைத் திறந்து வைத்து வீதியில் இருப்போரைக் காண்பது போலத்தான் காட்சி அமைப்புகள். முதல் முறையாக கோஷியை அத்தனை தூரம் காட்டுக்குள் நடக்க வைத்து... மலைவாசி மக்களின் எடையை சுமந்துணர வைக்கும்...இடம்... புல்லட்டின் பட பட சத்தத்துக்கு சமம். அய்யப்பனுக்கு கோபம் வரும் போதெல்லாம் ஒரு மத யானை நிமிர்ந்தெழுகிறது. செருப்பை கழற்றி விட்டால்... அதன் பிறகு... பின்னால வரும் பி ஜி எம்.... நம்மை அய்யப்பன் பக்கம் சாய்த்து விடுகிறது. சொல்லி அடிப்பது என்பது அது தான். இறங்கி தூக்குவது என்பது அது தான். ஒரு பேயாட்டத்துக்கான முன்னோட்டமாக வரும் அந்த ஹம்மிங்... இசை... நமக்குள் யானை முளைக்க வைத்து விடும். கிடுக்கி பிடி போட்டு நெஞ்சோடு எதிரியை பின்னால் இருந்து அணைத்து விட்டால்.. பிடிக்குள் சிக்கியவன் கோஷி மாதிரி ஹீரோவாக இருந்தாலும் நெஞ்செலும்பு உடைந்து... மூச்சடைத்து....செத்து போவான். அத்தனை பின்புலம் வாய்ந்த சண்டைக்காரன் அய்யப்பன்.
ஆதிவாசிகள் இருக்கும் அட்டப்பாடியில் தான் முழு படமுமே. அட்டப்பாடியை காட்டும் போதெல்லாம்.. அணத்தும் குரல் ஒன்று பின்னணியில் வந்து நம்மை கொன்று குவிக்கிறது. வனங்களின் ஒப்பாரியை கேட்கும் போதெல்லாம் நமக்குள் படபடக்கும் அதீதத்தை வரி கொண்டு விளக்க முடியவில்லை. அது ஒரு தொன்று தொடர்ச்சி. அது ஒரு ஆத்மார்த்தம். அங்கே விரவிக் கிடக்கும் தனித்த ஏக்கத்தில்....... தூரத்தில் சுள்ளி பொறுக்கும் ஒரு கிழவியின் உடலசைவில்....... மலைகளின் ராகம் கண்டெடுக்கப்படுகிறது.
ஆனைக்கட்டி...... அட்டைப்பாடி..... மன்னார்காடு... என்று வீட்டில் இருந்து கணுவாய் தாண்டி திரும்பினால் தெரியும் மலையில்தான் படம். தமிழகத்தையும் கேரளாவையும் பிரிக்கும் ஆனைக்கட்டி சிறுபாலத்தைக் காணும் போதெல்லாம்... கோஷியும் அய்யப்பனும் நமக்கு மிக அருகில் இருக்கிறார்கள்.
கோஷி.... பணம் உள்ளவன்.. மனம் உள்ளவனும். அவன் அத்தனை சொல்லியும் அவன் ஈகோவை கிளறி விட்டதில் அவனும் சினம் கொண்ட சிறுத்தையாகிறான். மாறி மாறி தன் தன் வழிகளில் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பவர்கள்.... அதே நேரம் தோல்வியும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவில் முடிவு கட்டிக் கொள்ளத்தான் இப்போது மார்க்கெட்டில் மோதிக் கொள்கிறார்கள். இந்த சண்டையை நோக்கி தான் மொத்தப் படமும் நகர்ந்திருக்கிறது.
இப்படி ஒரு சண்டை சினிமாவில்... மிக அரிதாகவே நிகழும். இந்தப் பக்கம் கோஷி.... பிரித்விராஜ். அந்தப்பக்கம் அய்யப்பன்....பிஜு.
இருவருக்குமே டூப் போட்ட மாதிரி தெரியவில்லை. அடிபட்டு உடைத்து விழும் பொருட்கள் வேண்டுமானால் டம்மியாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் விழுகின்ற அடியில் கால்வாசியாவது நிஜமாக விழுந்திருக்கும். மாற்றி மாற்றி அடித்துக் கொள்வது என்பது அடித்துக் கொள்வது மட்டுமல்ல. அது கொலை வெறி தாக்குதல். ஒருவன் தான் உயிரோடு இருக்க முடியும் என்ற வெற்றி மயக்கம். ஊரே வேடிக்கை பார்க்க ஒரு நீயா நானா சண்டைக்காட்சி அரங்கேறுகிறது. அரேனாவில் அமர்ந்திருக்கும் மன்னனைப் போல காவல் துறையும் விட்டு விடுகிறது. அவர்களும் படம் முழுக்க விலக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு முடிவு வேண்டும் என்பதில் அவர்களும் முனைப்பாக இருக்கிறார்கள்.
கீழே விழுந்து ஜட்டி தெரிய உருளுகையில் ப்ரிதிவிக்கு ஹாட்சாப். நல்ல நடிகன் தன் கதாபாத்திரத்துக்கு எப்படியும் உயிர் கொடுத்து விடுவான். இமேஜ்......வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்வதில்லை. கோஷி எப்படி இருப்பானோ அப்படித்தான் இருக்கிறார். பிஜுவுக்கு இது செம மாஸ். வெற்றிலையை போட்டு மென்றாலே யானை ஊருக்குள் புகுந்து விட்டது என்று அர்த்தம். எவர் காட்டிலும் அவர் தான் யானை.
சரி சமமாக அடித்துக் கொண்டாலும்.... தான் என்பதை தெரிவிக்க வெற்றி தேவையாய் இருக்கிறது. வெற்றி என்பதை கிடுக்கி பிடியில் அய்யப்பன் தக்க வைக்கும் போது முன்னொரு முறை மாதிரி இல்லாமல்... லாவகமாக முன்பு அய்யப்பன் அப்படி கோஷியின் ஒரு பிடியை லாவகவமாக தளர்த்தி விட்டு தப்பிப்பது போலவே கோஷியும் தப்பிக்கிறான். அய்யப்பனுக்கு அத்தனை சண்டையிலும் ஆச்சர்யம். இந்த வித்தை எப்படி இவனுக்கு தெரிந்தது என்பது போல. ஆனால் அடுத்த முறை சேற்றில் மாற்றி மாற்றி உதைத்துக் கொண்டு விழுந்து புரளுகையில்... அதே பிடியை போடுகையில்.. கோஷியினால் தப்பிக்க முடிவதில்லை. மாற்றுக்கு மாற்று அய்யப்பனிடம் இருக்கிறது.
அய்யப்பன் பிடி இறுகுகிறது. கோஷிக்கு மூச்சு திணறுகிறது.
அதற்குள் பெரிய போலீஸ் படை வந்து விட...மேற்கொண்டு சண்டை தடுக்கப்படுகிறது. இந்த படத்தில் சஸ்பென்ஸ்.... அடுத்த காட்சி நுட்பம்... கிளைமாக்ஸ்... என்று எதையும் மறைக்க வேண்டியது இல்லை. திரைக்கதை தான் மாஸ்டர் செய்கிறது. பிஜு பிரித்வியின் நடிப்பு தான்... பிளாஸ்டர் செய்கிறது. தன்னால் பறி போன அய்யப்பனின் போலீஸ் வேலையை தானே வாங்கி தந்து விடுவதில்... ஒரு படி மேலே சென்று ஹீரோவாகி விடுகிறான் இந்த கோஷி.
ரெண்டேமுக்கால் மணி நேரம்.. நம்மை சீட்டின் நுனியில் அமர விட்டு இறுதி சண்டையில் எழுந்து யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல்..... மாற்றி மாற்றி நம்மையே அடித்துக் கொண்டு..... நமக்குள்ளிருக்கும் ஈகோவை உணர்கையில்.. அய்யப்பனும் கோஷியும் நமக்குள் இருக்கிறார்கள் என்று புரிகிறது.
படம் முடிந்து டைட்டில் போடுகையில் பின்னணியில் ஒலிக்கும் அந்த பாடல்.....ஊன் உருக உயிர் உருக...... தான் ஆட தன் சதை ஆட.. மலை உச்சியில் ஒரு சாமானியன் ஒரு கடவுளாக பேயாட்டம் போடுகிறான். காற்றில் கலந்த விடும் மென்னிசை காதுக்குள் இறை செய்கிறது.
கிழக்காத்த சந்தன மேரம் வெகுவாகப் பூத்துருக்கு
பூப்பறிக்க போகிலாமோ விமானத்த பார்க்கிலமோ..
லாலேலே லாலா லே லாலே லே லா லே
லாலேலே லாலா லே லாலே லே லா லே
தெக்காத்த சந்தன மரம் வெகுவாகப் பூத்துருக்கு
பூப்பறிக்க போகிலாமோ விமானத்த பார்க்கிலமோ..
லாலேலே லாலா லே லாலே லே லா லே
லாலேலே லாலா லே லாலே லே லா லே
பிரிதிவி யாரென்று அறியாத.... பிஜு யாரென்று அறியாத... சினிமா வாத்தியங்கள் தெரிந்திராத...."அப்போல்லாம் நாலு மணிக்கெல்லாம் சோறு வெச்சு... ஆறு மணிக்கெல்லாம் கொட்டாயில் போய் காத்திருந்து சினிமே பார்த்திருக்கு" என்று சொல்லும் அட்டப்பாடியை சேர்ந்த ஒரு ஆடு மேய்க்கும் முது மனுஷியின் குரல்.. இது. இது மலை அரசியின் குரல். உள்ளே புகுந்து உள்ளம் ததும்பும் இயற்கையின்.... ஆரிராரோ..... ஓவென அழுவதைத் தவிர இப்போது எனக்கு வேறு வார்த்தையில்லை.
இசை ததும்பும் மலை மேல் சொற்கள் நிற்பதில்லை...மாறாக தவழ்கிறது.
படம் : அய்யப்பனும் கோஷியும்
மொழி : மலையாளம்
இயக்குனர் : சஷி
வருடம் :2020
- கவிஜி