தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தற்போது சில அமைப்புகளின் சார்பிலும், ரசிகர் மன்றங்களின் சார்பிலும் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் அரசின் சார்பிலும், பல அமைப்புகளின் சார்பிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதே போன்ற காட்சிகளை கடந்த 1983- ஆம் ஆண்டு தமிழகம் கண்டது. அதற்குப் பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இலங்கையில் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படும் தமிழர்களின் வாழ்நிலை கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. தங்களுடைய வாழ்வு என்பது யாசகமல்ல, கேட்டுப் பெற என்ற அவர்களின் எண்ணத்தின் வெளிப்பாட்டை தங்களுக்கு சாதகமாக்க முயலும் விடுதலைப்புலிகளின் தந்திரமும், இலங்கை அரசின் இனவாதமும் கால் நூற்றாண்டு போரை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாட்டிலும் அகதிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். குண்டு சத்தமன்ற தங்களது தாயக மண்ணை மிதிக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு எப்போது சாத்தியமாகப் போகிறது என்பதை காலம் தான் தீர்மானிக்கப் போகிறது.

இலங்கையில் நடைபெறும் யுத்தங்கள் குறித்து தமிழகத்தில் கடந்த கால்நூற்றாண்டு காலம் பல்வேறு ரீதியான கருத்தோட்டங்கள் நிலவி வருகின்றது. இந்த சூழலில் தனிஈழம் என்ற பிரிவினை கோஷங்கள் இலங்கையில் மட்டுமின்றி தமிழகத்திலும் முன் வைக்கப்படுகின்றது. இராமநாதபுரத்தில் இலங்கை தமிழருக்காக நடைபெற்ற திரைப்படத்துறையினரின் போராட்டத்தில், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பின் அவர்கள் பிணையில் வந்த சம்பவங்களும், அவர்களுக்கு மலர்க் கீரிடம் சூட்டி பாராட்டு என்ற பெயரில் திரைத்துறையில் உள்ள சிலர் மதுரையில் நடத்திய விழாக்களும் மீடியாக்களின் புண்ணியத்தால் பெரிதாக்கப்பட்டது. இலங்கையில் வசிக்கும் அத்தனை தமிழர்களும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி தொடந்து எழுப்படும்படும்போது, எதிப்பவர்கள் இனத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படும் அவலமும் தொடருகிறது.

Bal Thakreஇந்தச் சூழலில் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அரசிற்கும் நடக்கும் யுத்தத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ராணுவ ரீதியான மோதலை கைவிட்டு இருதரப்பினரும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளும் தமிழகத்தில் முன்வைக்கப்படுகின்றன. இப்படியான சூழலில் "தமிழனைக் காக்கத் தேவை ஒரு தாக்கரே?" என்ற தலைப்பில் நண்பர் மு.ஆனந்தகுமார் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக இந்த கட்டுரையை பதிவு செய்ய விழைகிறேன்.

யார் இந்த சிவசேனா?

------------------------------

சிவசேனா குறித்த பார்வைக் குறைபாடு காரணமாக தமிழகத்திற்கு இந்த அமைப்பு தேவை என ஆனந்தகுமார் எழுதியுள்ளார். அப்படி எழுதியவர் தேவை தாக்கரே என்பதைக் கூட முடிவுக்கு கொண்டு வரமுடியாமல் கேள்வியிலேயே தொக்கி நிற்க வைத்துள்ளார்.

மும்பையில் 1966-ல் சிவசேனா துவக்கப்பட்டபோது கட்டவிழ்த்து விடப்பட்ட மதவெறித்தனத்தை 1993- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் நடந்த கலவரங்கள் நாட்டிற்கு அந்த அமைப்பின் முகத்தை அம்பலப்படுத்தியது. மண்ணின் மைந்தர் கோஷம் போல இருந்தாலும் இந்து அல்லாத குறிப்பாக தென்னாட்டவர் மீது சிவசேனா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதும், ஜன-6ந்தேதி முதல் 11-ந்தேதி வரை மும்பையில் நடைபெற்ற கலவரத்தால் லட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டதும் நாடறிந்த சம்பவமாகும்.

இந்த அமைப்பு தான் மும்பையின் முதலாளிகளை அன்ன தாதாக்கள் என்றும், தென்னிந்தியர்களை லுங்கிவாலாக்கள், கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள், கம்யூனிஸ்டுகள் என்றும் கூறியது. மும்பை நகரத்தில் கூட்டம், கூட்டமாக நகரை விட்டு வெளியேறியவர்களில் இசுலாமியர்களும், இசுலாமியர் அல்லாதவர்களும் பெரும்பான்மையானவர்கள். வேலைவாய்ப்புகளில் மராட்டியர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், அவர்களுக்கு தான் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சிவசேனா கூறியது. அதற்குக் காரணம் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ அமைப்பில், வணிகத்தில், ஆலைகளில் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் பல தென்னாட்டவர்கள் குறிப்பாக "தமிழர்கள்" இருந்தார்கள். இதனால் சிவசேனாவின் தாக்குதலுக்கு அவர்கள் உள்ளானார்கள். மறத்தமிழனை மண்ணை விட்டு விரட்டிய தாக்கரே போன்றவரைத் தான், நண்பர் மு.ஆனந்த குமார் தமிழகத்திற்கு தேவை என்கிறார்.

மடைமாற்றம்

இந்திய அளவில் பல்வேறு பிரச்சனைகள் எப்போதும் இல்லாத அளவு முன் எழுந்தன. குறிப்பாக விண்ணை முட்டும் விலைவாசி, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் என பல்வேறு பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி விட்டு இலங்கைப் பிரச்சனையை இந்திய அளவிற்கு முன்னுக்கு கொண்டு வந்தவர்கள் யார் என்ற பிரதிவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் அடிமை நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மன்மோகன் கும்பல் முயற்சி செய்ததை எதிர்த்து மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் விலகிக்கொண்ட நிலையில், கூர்மைப்படுத்த வேண்டிய விவாதக்கருத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை பின்னுக்கு தள்ளியதன் பின்னனி என்ன என்பதையும் ஆராயவேண்டியதுள்ளது.

தனி ஈழம் பற்றி கவலைப்படும் தமிழக புரட்சிவாதிகள், இலங்கையின் போர் மேகத்தின் நிழல் தங்கள் மீது சாயாதிருக்க, தமிழகத்தில் அகதிகளாக 123 முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் சுமார் 72 ஆயிரம் இலங்கைத்தமிழர்களை எத்தனை முறை சென்று சந்தித்துள்ளார்கள்? மாதம் 800 ரூபாய் என அரசு நிர்ணயித்த நிதியில் அவர்களின் வாழ்நிலை முடிந்து போகுமா என்ற ஐயப்பாட்டையாவது என்றாவது வெளிப்படுத்தியுள்ளார்களா? என்ற இயல்பான கேள்விகள் சோப்பு நுரை முட்டை போல விரிந்து பின் உடைந்து போகிறது.

சரி, தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களைப் பற்றி தான் இவர்கள் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் நிலை பற்றியும், தமிழின் நிலை பற்றியாவது கவலைப்படுகிறார்களா? முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்திய ஒருவர், இலங்கைக்கு நிதிஉதவி செய்வது அங்கு அமைதியைத் தராது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார். ஏற்கனவே, ஆயுதம் மூலம் இலங்கைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரமுடியாது என்ற வாதத்தை முன்வைத்தவர்கள் மீது, துரோகி என்ற முத்திரை குத்தியவர்கள் தற்போது போர்நிறுத்தம் தேவையென்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். இந்த அக்கறை என்பது இலங்கைத் தமிழர் மீதானதா? எல்டிடிஇ தமிழர் மீதானதா? என்ற கேள்வி இயல்பாக எழும்புகிறது.

தமிழ்நாடு-தமிழ்

தமிழர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதை விட உணர்வு ரீதியாக அதிகமாக சிந்திப்பவர்கள். இந்த உணர்வை மேலும் கிளற வேண்டும் என்பதற்காக கோயில் மந்திரம் போல ஈழ ரத்தம் எங்கள் ரத்தம், தொப்புள் கொடி உறவு என்ற பதங்கள் பரப்பப்படுகிறது. தற்போது ஈழத்தமிழர்களின் நலனுக்காக போராட்டம் அறிவிப்பவர்கள், மதுரை மாவட்டம் பேரையூர் தாலூகா அருகில் உள்ள உத்தப்புரம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என சாதி இந்துக்களால் அமைக்கப்பட்ட தீண்டாமைச்சுவரை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளியவர்கள் தானே?

மனிதன் என்ற அடையாளம் கூட இல்லாத அந்த தலித் மகன் செய்த பாவம், அவன் இலங்கையில் பிறக்காதது தான், உள்ளுர்த் தமிழனை விட, உலகத்தமிழனுக்குத் தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். தங்கள் வீட்டுப்பிள்ளைகள் (குழந்தைகள்) வாசலில் பெண்ட பீயை எடுத்துப்போட முகம் சுளிப்பவர்களான இவர்களுக்கு மத்தியில் தான், மலம் அள்ளுவதையே தொழிலாகக் கொண்டு ஒரு கூட்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நான் ஏற்கனவே சொன்னது போலவே, அறிவுப்பூர்வமாக சிந்திப்பதற்குப் பதில் உணர்ச்சி வயப்பட்டு சிந்தித்த தமிழன் கண்ட கனவுகள் நிறைவேறி விட்டதா? தமிழ் மொழியில் பெயரை வைத்து விட்டு ஆங்கிலம் பேசிக்கொண்டு அரசு சலுகை வாங்கும் திரை சிற்பிகளின் திருட்டுத்தனத்தை பற்றி சிந்தித்ததுண்டா? மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ் என பல்வகைப்பட்ட தமிழ், தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக இருக்கிறதா? தமிழகத்தில் கடந்த 1956- ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ் அனைத்து மொழிச்சட்டம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கல்லூரி பட்டப்படிப்புகளில் தமிழ் பயிற்று மொழித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, 1967-ல் தமிழை ஆட்சி மொழியாக வளர்ப்பதிலும், பயிற்று மொழியாக வளர்ப்பதிலும் அக்கறை செலுத்தியது. 1970- ல் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி, மாணவர்களின் உரிமை என்ற பெயரில், கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்று மொழியாக வளர்வதற்குத் தடை ஏற்படுத்தியது. அதனால் பயிற்று மொழித் திட்டத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டது.

கடந்த 14.4.1967- ஆம் ஆண்டில் இருந்து தமிழக நீதிமன்றங்களில் தமிழிலேயே தீர்ப்பு எழுத வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பின்னர் 14.11.1976-ல் குற்றவியல் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. எம்.ஜி. இராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த போது மாவட்ட நீதிமன்றம் வரை நீதிமன்ற மொழியாகத் தமிழ் கொண்டு வரப்பட்டது. தற்போது மாவட்ட நீதிமன்றம் வரை தமிழ் நீதிமன்ற மொழியாக இருந்து வருகிறது.

Mumbai bomb blastஆனாலும் தமிழ் முழு அளவில், தலைமைச் செயலகம் வரை ஆட்சி மொழியாக வளரவில்லை. அங்கு இன்னமும் ஆங்கிலம் தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. மாவட்ட நீதிமன்றங்கள் வரை தமிழிலேயே வழக்குகள் நடத்தி தீர்ப்புகள் வழங்கலாம் என அரசு ஆணைகள் இருந்த போதும், இன்னமும் நீதிமன்றங்களில் ஆங்கிலமே வல்லாண்மை செலுத்தி வருகின்றது. தமிழ்ப்பயிற்று மொழித்திட்டம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் ஆங்கிலப்பள்ளிகள் குடிசைத்தொழில் போல் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. கேட்டால் ஆங்கிலம் இருந்தால் தான் பிழைக்கமுடியும் என்று கூறுகிறார்கள். பேரறிஞர் அண்ணா, பயிற்று மொழி குறித்து சட்டமன்றத்தில் கடந்த 29.11.1967 அன்று பேசிய பேச்சு முக்கியமானதாகும். "என்னிடத்திலே அல்லது நான் சார்ந்திருக்கிற அரசினிடத்திலோ ஆங்கிலப்புலமை வேண்டுமா என்று கேட்டால், ஆம் என்று சொல்வோம். அந்த புலமையைப் பெறுவதற்காக ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க வேண்டுமா என்றால், இருக்க வேண்டியதில்லை என்று சொல்வோம். ஏனென்றால், பயிற்று மொழியாக இல்லாமலேயே ஆங்கிலத்தில் புலமை பெற முடியும். ஆகவே, ஆங்கிலத்தில் புலமை பெற அது பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல" என்று கூறினார்.

அப்படிப்பட்ட பயிற்று மொழி தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும். ஏனெனில், தமிழர்கள் என்று கூறிக்கொண்டு உலகத்தமிழர்களுக்காக உருகக்கூடிய தமிழ் அமைப்புகளும், தற்போது தமிழகத்தில் அரசியலில் தாங்கள் தான் சேகுவாராவின் வாரிசு என்பது போல புரட்சிகீதம் படிப்பவர்களும், முதலில் படுத்த படுக்கையாக கிடக்கும் தமிழ் பயிற்று மொழி கோரிக்கையை கொஞ்சம் நிமிர்த்து வைக்கட்டும். சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ருஷ்யா போன்ற நாடுகளில் அவரவர்கள் நாட்டு மொழியே பயிற்று மொழியாக உள்ளது. தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பப்பக்கூடிய கேவலம் தமிழ்நாட்டைத் தவிர வேறு நாட்டிலும் நடக்காத கொடுமை. மலையகத் தமிழ் பற்றி கவலைக்கொள்வீரே கொஞ்சம் எங்கள் பாமரத்தமிழுக்கும் கொஞ்சம் பார்வை செலுத்துவீரோ?

யாருக்கானது தனி ஈழம்?

மின்வெட்டு காரணமாக தான் தோற்கப் போகிறேன் என தனது ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சரின் புண்ணியத்தால் எல்லா ஊரிலும் ஆலைகளின் சக்கரங்களின் சுழற்சி நின்று பல மாதங்களாகிறது. வேலையிழந்த பட்டாளம் பெருங்கூட்டமாய் எங்காவது வேலை கிடைக்காத என்ற ஏக்கத்தோடு நிற்கையில் அவர்களை திசைமாற்ற சாதியவாதிகளும், மதவாதிகளும் முயலும் இந்த தருவாயில் பக்கத்து நாடான இலங்கையில் அன்றாடம் நடைபெறும் யுத்தத்தால் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வேலையற்றவர்களின் கூட்டத்தில் கூட்டமாக சேரப்போகிறது தமிழ்சாதி.

இதற்கு என்ன தான் முடிவு என்ற வினா பழைய பீம்சிங் படத்தின் சுருள் வளையத்தையும், டார்டாய்ஸ் கொசுவர்த்தியின் வடிவத்தினையும் காட்டி நினைவினை பின்னுக்கு தள்ளுகிறது.

இலங்கையில் கடந்த 1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிராக செல்வநாயகத்தால் உருவான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்து 1980- களில் உருவான எல்டிடிஇ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோஸ், இபிடிபி, டெலோ என பல அமைப்புகள், ஆயுதம் தாங்கிய போராட்டத்தினை நடத்தின. முதலில் தனி ஈழம் என்ற முழக்கத்தோடு உருவான இந்த அமைப்புகள், பின்னர் நிலைமைகளை உணர்ந்து, தமிழர்கள் வாழும் பகுதிக்கு கூடுதல் அதிகாரத்துடன் கூடிய புதிய அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையை எடுத்தன. ஆனால் எல்டிடிஇ அமைப்பு, இவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தியதுடன், பலரைக் கொல்லவும் செய்தது. இபிஆர்எல்எப்-ஐச் சேர்ந்த பத்மநாபா, டியுஎல்எல் தலைவர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் சாமி தம்பிமுத்து உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்பின் தலைவர்களை விடுதலைப்புலிகள் இயக்கம் கொன்றொழித்தது.

இன்றைய இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் என்பவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல. ஈழத்தைச் சேர்ந்த சைவ வேளாளர்கள், இஸ்லாமியர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என பல பிரிவினர் உள்ளனர். வேளாளர் 46 சதவீதம் பேரும், தலித்துகள் 42 சதவீதம் பேரும் உள்ளனர். இந்து மதத்தின் கேடு கெட்ட சாதீயம், இலங்கையில் வேளாளர் சமுதாயத்தில் உள்ளதை சமீபத்தில் பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் பலர் சுட்டிக்காட்டினர். தமிழ் தேசியம் பேசிக்கொண்டே, சாதிய சமூக அமைப்பு முறையைப் பேணிக் காத்து, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தலித்துகளை ஒடுக்கினார்கள் என்றும், இன்றும் கூட 109 யாழ் கோவில்களில் தலித்துகள் நுழைய முடியாத நிலை உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஒரு புறம் என்றால், யாழ்ப்பாணத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எல்டிடிஇ எடுத்த போது, அங்கிருந்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்கள் உடைமைகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், தமிழகத்தில் தனி ஈழம் கோரிக்கையை எழுப்புவர்கள் இப்பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில்லை. காரணம் அவர்களிடம் கெட்டிப்படுத்தப்பட்டுள்ளது சாதியம். இறையாண்மை என்றால் என்ன என்று ஏகடியம் பேசுபவர்களிடம் கேட்போம் யாருக்கானது தனி ஈழம்?


ஆதார நூல்கள்:
-----------------------
1) ஜெயந்த் லேலே எழுதிய சிவசேனா
2) நா.திருமலை, கா.மதிவாணன் எழுதிய தமிழுக்காக
3) மார்க்சிஸ்ட் நவம்பர்-2008 இதழ்


- ப.கவிதா குமார்

Pin It